நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.
எனக்கு இன்னொரு முறை தூக்கிவாரிப் போட்டது. நானோ அவர் இயக்கம் மாறி வந்துவிட்டார் என்று எண்ணி நீங்கள் எந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்ன அவர் நாகப்படையில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காவே தான் வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு விபரங்களைக் கூறுகிறேன். உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தின் தலைவர். நாங்கள் நாகப்படை இல்லை டெலோ என்று கூறப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்கிறேன்.
அதற்கு எந்த சலனமும் இன்றி, எந்த இயக்கமானால் என்ன பயிற்சிபெற்று இராணுவத்தை அடிப்பதுதானே நோக்கம் என்று பதில் சொல்கிறார்.
பின்னாளில் அவரும் ரெலோ இயக்கத்தின் விசுவாசமான போராளியாக மாறியிருந்தார். அவர் மட்டக்களப்பில் தையல் தொழி செய்துவந்தவர். ரெலோ இயக்கத்தின் சீருடைகளைத் தைக்கும் பொறுப்பு அவரிடமே இருந்தது. உத்திர்ப் பிரதேசத்தில் இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சியின் போது மனோகரன் என்ற இயக்கப்பெயரை வைத்துக்கொண்டவர் பின்னதாக ரெயிலர் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
கிழக்கு மாகணத்தில் இராணுவ ஒடுக்குமுறை நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தததால் இயக்கங்களிடையேயான முரண்பாடு கூர்மையடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பற்றி வாத்தி என்று சொல்லப்படுகின்ற மட்டக்களப்பின் ரெலோவிற்கான அரசியல் பொறுப்பாளர் வான் ஒன்றில் வந்து தமிழீழம் எடுக்கப் போகிறோம் வருகிறீர்கள் என்று கேட்டதால் நாங்கள் வானில் ஏறிக்கொண்டு இந்தியப் பயிற்சிக்கு வந்தோம் என்று ரஜனி என்ற போராளி என்னிடம் கூறியது நினைவிருக்கிறது.
மறு நாள் ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்குப் பயணமாக வேண்டும். அதற்கான புகையிரத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எங்களைச் சென்னைக்குக் கூட்டிச் செல்வதற்கு குலம் என்ற குட்டிமணியின் இளைய சகோதரர் வருகிறார். புகையிரதத்தில் பயணச்சீட்டுக்களை எங்களுக்கு வாங்கித் தந்த குலம் எங்களோடு பயணம் செய்யவில்லை. தனியாக வேறு பெட்டியில் சென்று பயணம் செய்தார். தமிழ் நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்த அவர் எதிர்காலத்தில் தனக்கு சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என முன்கூட்டியே உணர்ந்திருந்தாரா என்ற சந்தேகம் இப்போது எனக்கு ஏற்படுகிறது.
என்னுடன் பயணம் செய்த ஏனையவர்களை கவனித்துக்கொள்ளுமாறு குலம் என்னிடம் கூறிவிட்டு அவர் தனது பெட்டியில் சென்று அமர்ந்துகொள்கிறார். ராமேஸ்வரத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு புகையிரத்த்தில் வேறு பயணிகள் இருந்திருக்கவில்லை. அதனால் இயக்கத்திற்கு வந்தவர்கள் பாட்டுக்களைப் பாடி ஆடி மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது தேவன் என்ற ஒருவரும் என்னுடன் பயணித்தார். அவர் என்னிடம் வந்து இதெல்லாம் எமது கொள்கைகளுக்கு ஒப்பானதா, நாம் களியாட்டம் நடத்துவதற்கா வந்திருக்கிறோம் என்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.
இயக்கத்தின் கொள்கைக்கு இது உவந்ததா என்று கேட்கிறார். எனக்கே இயக்கத்தின் கொள்கை தெரிந்திருக்கவில்லை அதில் வேறு அவர் வந்து என்னிடம் கேட்டபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நீண்ட பயணத்தின் பின்னர் சென்னையை அடைகிறோம். சென்னையில் எக்மோர் என்ற புகையிரத நிலையட்த்திலிருந்து, விடுதலை இல்லம் என்ற ரெலோ இயகத்தின் இருப்பிடம் ஒன்றை அடைகிறோம். அது தங்கத்துரையின் சகோதரியின் வீடு. அதற்குப் பின்புறம் உள்ள குடிசை ஒன்றில் தான் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் வசித்துவந்ததாக அபோது எமக்குச் சொன்னார்கள்.
பின்புறத்திலிருந்த குடிசையையே நாம் பயன்படுத்தினோம். அந்த வீடு தங்கத்துரையின் அக்காவின் கணவரின் வீடு. தங்கத்துரை அந்த வீட்டைக் கட்டும் போது அங்கு தொழிலாளியாக வேலை செய்தார் என்பதையெல்லாம் பலர் பேசிக்கொண்டார்கள்.
விடுதலை இல்லத்தில் நாங்கள் சென்றடைந்த சற்று நேரத்தில் சிறி சபாரத்தினத்தின் மருமகன் சில புகைப்படங்களை எமக்குக் காட்டினார். தமிழ் நாட்டில் நடைபெற்ற சில வைபவங்களில் சிறி சபாரத்தினம் கலந்துகொண்ட படங்களைக் காட்டி இவர்தான் சிறி சபாரத்தினம் என அறிமுகப்படுத்தினார். சில மணி நேரங்களின் பின்னர் சிறி சபாரத்தினம் அங்கு வந்தடைந்தார். அங்கி வந்ததும் எமது நலன்கள் மற்றும் வசதிகள் குறித்து விசாரித்துக்கொண்டார்.
எம்முடன் வந்த ஒருவர் தனியாக சிறி சபாரத்தினத்துடன் பேச வேண்டும் என்றார். அதற்கு அனுமதித்த அவர் தனியாக அவரைக் கூட்டிச் சென்று பேசினார். அதன் பின்னர் கண்ணாடி அணிவது குறித்த எனது பிரச்சனையை அவருக்குச் சொல்வதற்காக அவருடன் பேச அனுமதி கோரினேன். நான் சுதன் எனக்கு எழுத்தந்த கடிதத்தைக் காட்டினேன். அது முழுமையாக நனைத்து எழுத்துக்கள் அழிந்திருந்தன. நான் கடிதத்தைக் காட்டியதும் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். விட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறீர்களா எனக் கேட்டார். எனக்கு முதலில் சென்றவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டதால் நானும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போக விருபுகிறேன் என அவர் எண்ணியிருக்கலாம்.நான் எனது ‘மூக்குக் கண்ணாடி’ பிரச்சனையை தெரிவிக்கிறேன்.
திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்ற அச்சத்தில் கண்ணாடியை நான் அணிந்திருக்கவில்லை. நான் எனக்குக் கண் சரியாகத் தெரியாது என்று அவரிடம் சொன்னதும், நாங்கள் கண் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கலாம் என்றார். நானோ என்னிடம் கண்ணாடி இருக்கிறது ஆனால் பயன்படுத்தவில்லை, இலங்கையிலிருந்து நான் சந்தித எல்லோருமே கண்ணாடியோடு இராணுவப் பயிற்சிக்குப் போக வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றேன்.
அதனால் கண்ணாடி அணியவே எனக்குப் பயமாக இருக்கிறது என்றேன்.
அதற்கு அவர் கண்ணாடி அணிந்து கொள்வது ஒரு பிரச்சனையே அல்ல. நீங்கள் கண்ணாடியோடு பயிற்சிக்குப் போகலாம் என்றார். என்னைப் பொறுத்தவரை முதலாவது பெரும் தடை நீங்கியது போன்ற நிமமதி ஏற்பட்டது.
இந்த முகவுரையெல்லாம் முடிந்தபின்னர் நாம் அனைவரும் வளசரவாக்கம் என்ற இடத்திலிருந்த குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப்பட்டோம்.
இரண்டொரு நாட்களில் சிறி சபாரத்தினம் அங்கு வருகிறார். அவர் அங்கு வரும் வேளை நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம். சிலரை அவர் உறக்கத்திலிருந்து தெரிந்தெடுத்து எழுப்பினார். அவர்களின் நானும் ஒருவன்.
அப்போது அவருடன் அங்கு வந்த யூசி என்றழைக்கப்பட்ட ஒருவரும் வருகிறார். அவருடன் எங்கள் அனைவரையும் செல்லுமாறு கூறுகிறார்.
அவர் எங்களைப் பறங்கி மலைக்கு அருகாமையிலுள்ள வீடொன்றிற்குக் கூட்டிச் செல்கிறார். மிகவும் வசதியான பங்களா போன்ற வீடும் அதுனுடன் இணைந்த காணியுமாக அந்த வீடு சென்னையின் வறுமைக்கு மத்தியில் உயர்ந்து நின்றது. அங்கிருந்தே எமக்கு முன்னையவர்கள் பயிற்சிக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அங்கு சென்றதுமே அங்கு பத்துப் பேர் வரை ஏற்கனவே தங்கியிருந்தார்கள். இன்னும் சில மணி நேரங்களில் போலிஸ்காரர்கள் அங்கு வருவார்கள் என்றும், புதிதாக வந்தவர்கள் பொலிசைக் கண்டதும் மொட்டை மாடியிலிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்றாகள்.
எமக்கு முன்பதாகச் சென்ற தாஸ் குழுவில் 140 பேர்வரை பயிற்சிக்கு அங்கிருந்தே அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் தங்கியிருந்த 15 பேரும் பயிற்சிக்கு அவர்களுடன் செல்வதற்காக பஸ் நிலையம் ஒன்றில் காத்திருந்திருக்கிறார்கள்.
அவர்கள் பயிற்சிக்குப் போவதற்குக் காத்திருந்த வேளையில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவ்வழியே வருவதற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது. எம்ஜிஆர் இன் வாகனம் வருவதற்கு முன்பதாக வேவுபார்க்கும் வாகனத்தில் வந்தவர்கள் அங்கு காத்திருந்த 15 பேரையும் கண்டு சந்தேகம் கொண்டுள்ளனர்.
அதனால் அவர்களை விசாரித்த வேவுபார்க்கும் பிரிவினர், 15 பேரிடமும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைக் கூறியதும் தமிழ் நாட்டு உளவுத்துறைக்கு சந்தேகம் அதிகரித்திருக்கிறது.
விசாரணையின் பின்னர் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைவிசாரணையின் பின்னர் விடுதலை செய்துவிட்டனர்.
அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து இயக்கங்களுக்குப் போராளிகளாகச் செல்கின்றவர்களுக்கு சட்டத்தின் விதிமுறைகளிலிருந்து எழுதப்படாத விதிவிலக்கு காணப்பட்டது.
இந்திய மத்திய அரசு பயிற்சியளிக்க ஆரம்பித்த காலப்ப்குதியான அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் இற்கு இப் பயிற்சி குறித்து தெரிந்திருக்கவில்லை. 15 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததிலிருந்தே இந்திய மத்திய அரசு பயிற்சி வழங்குவது எம்.ஜி.ஆர் இற்கே தெரியவந்தாக எமக்கு அவர்கள் கூறினார்கள்.
ஆக, மத்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சியை மறைப்பதற்காக 15 பேரும் தொடர்ந்து ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள் என்று பொலிசாருக்குக் காட்டுவதற்காக அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்கவைத்திருந்தனர். புதிதாகச் சென்ற நாம் போலிஸ் அங்கு வரும் போது மேல் மாடியில் தண்ணீர்த் தொட்டிக்குள் ஒளிந்துகொள்ள வேண்டும்.
அங்கு தங்கியிருந்த வேளையில் சிறி சபாரத்தினம் பெரிய நந்தன் என்பவருடன் எங்களை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.
அங்கிருந்து ஒரிரு நாட்களில் எங்களை மீண்டும் கொட்டிலுக்கு இடம் மாற்றினார்கள். அங்கு எம்மை ரெலோவின் இராணுவப் பொறுப்பாளராகவிருந்த ரமேஷ் கான் என்பவர் வந்து சந்திதார்.
பயிற்சி பெற்று இலங்கை இனவெறி இராணுவத்திற்கு எதிராகப் போராடுவதற்காக எம்மோடு இருந்தவர்களில் பலர் உலகத்தை இன்னும் புரிந்து கொள்ளாத இளைஞர்கள். குடும்பம், நண்பர்கள், பாசம், நட்பு என்ற அனைத்தையும் இழந்து புதிய இனம்தெரியாத உலகத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.
முகாமில் சமையல் முறை வந்தபோது எம்முடனிருந்த ஒருவர் முட்டைக் கோதுகளை உடைத்து அங்கேயே போட்டுவிட்டு சமையலை ஆரம்பித்திருந்தார். அதனைகண்ட ரமேஷ் இதைச் சுத்தம் செய்வது உனது அம்மாவா என்றதும், அந்த இளைஞர் அழ ஆரம்பித்துவிட்டார்.
இவ்வாறன பல சம்பவங்கள் இன்றும் மனதை உறுத்தும் வரலாற்றுப் பதிவுகள்.
தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடைந்து அமைதியாக சொந்த மண்ணில் வாழ்வதற்காகவே நாங்கள் போராடுவதாகக் கருதினோம். அதற்காகவே இளம் வயதின் சுகபோகங்களை துறந்து ஆயுதப்பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்றோம். எம்மைப் பொறுத்தவரை இவையெல்லாம் சிக்கலான அரசியல் பரிமாணங்களைக் கொண்டது என்று தெரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுத்தது.
நாங்கள் அங்கு எமது தகவல்கள் அடங்கிய பத்திரம் ஒன்றை நிரப்பிக் கொடுக்க்கவேண்டும்.அது பெயர் முகவரி போன்ற அடிப்படை விபரங்கள் அடங்கிய கேள்விக் கொத்தாக அமைந்திருந்தது. அதன் அடிப்பகுதியில் நாம் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. நாம் அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும்.
அந்த வேளையில் மட்டக்களப்பைச் சார்ந்த சுந்தரராஜன் சற்று விபரமறிந்தவராக இருந்தார். அவர் இயக்கக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று ரமேஷை நோக்கிக் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித ரெலோவின் இராணுவப் பொறுப்பாளரான ரமேஷ் இயக்கத்தின் கொள்கை கட்டுப்பாடாக மூன்று விடயங்களை முன்வைக்கிறார். 1.திருமணம் செய்யக்கூடாது. 2. புகைப்பிடிக்கக்கூடாது. 3. சொலவதைச் செய்யவேண்டும். இவை மூன்றும் தான் இயக்கத்தின் கொள்கையும் கட்டுப்பாடும் என்கிறார்.
அதனைக் கேட்ட சுந்தரராஜன் தனக்குக் கொடுக்கப்பட்ட பேனாவால் இவை மூன்றுமே இயக்கத்தின் கொள்கை எனக் கேட்டு அறிந்துகொண்டேன் என எழுதிவிட்டு தனது கையொப்பமிட்டார்.
ரமேஷ் ஒவ்வொரு பத்திரமாக பார்த்துக்கொண்டிருந்த போது சுந்தராஜன் எழுதியைக் கண்டதும் ‘யாரடா சுந்தரராஜன்’ என சத்தமிட்டார். உடனே சுந்தரராஜன் எழுந்து நின்றார். சுந்தரராஜனக் கண்டதும் ரமேஷ் வழமைக்கு மாறாக அடக்கிவாசிக்கத் தொடங்கினார். ஏன் இப்படி வெட்டி புதிதாக எழுத வேண்டும் என்று கேட்டார்.
இயக்கக் கொள்கைகளைக் கேட்டு அறிந்துகொண்டதாலேயே அப்படி எழுதினேன் என்கிறார் சுந்தரராஜன். அதனை ஏற்றுக்கொள்ளாத ரமேஷ் புதிய பத்திரத்தை நிரப்புவதற்காகக் கொடுக்கிறார்.
புரட்சிகர அமைப்பு ஒன்று மக்கள் இராணுவத்திற்காக ஆட்சேர்ப்பது என்பதை விட ஒரு அரச இராணுவத்தின் ஒழுங்குகளே கடைப்பிடிக்கப்பட்டன.
சில தினங்களின் நாங்கள் அனைவரும் முன்னதாகவே ஒழுங்கு செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகளில் பயிற்சிக்கான இறுதிப்பயணத்தை மேற்கொள்கிறோம். பஸ் வண்டி எங்கு செல்கின்றது என்பது எமக்குத் தெரியாது. எமது வண்டியில் சிறீ சபாரத்தினமும் பிரயாணம் செய்கிறார். சுந்தரராஜன் எனக்கு அருக்கில் அமர்ந்திருக்கிறார், சிறீ சபாரத்தினம் எமக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார்.
இரவிரவாக பஸ் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாமோ ஈழக் கனவில் மிதந்துகொண்டிருக்கிறோம்.
பஸ்சிலிருந்த வீடியோவில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இவற்றின் மத்தியில் உறக்கம் மெதுவாக எம்மை ஆட்கொண்ட போது சிறீ சபாரத்தினம் அமைதியின்றிஎழுந்து பஸ்சினுள் அங்குமிங்கும் நடமாடத் தொடங்கினார். பல தடவைகள் பஸ்சின் சாரதியிடம் சென்று பேசுவதும் பின்னர் இருக்கையில் வந்து அமர்வதுமாக சில கணங்கள் நகர்ந்தன. எமக்கு எதோ நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. திடீரென பஸ் சாரதியை ‘கெட்ட வார்த்தைகளால்’ சிறீ சபாரத்தினம் திட்டத் தொடங்கினார்.
பஸ் சாரதி பாதை மாறிச் செல்வதாகக் கருதிய சிறீ சபாரத்தினம் இவ்வாறு திட்டுகிறார் என்பது உறக்கத்திலிருந்து எழுந்த எமக்குத் தெரியவந்தது. எனக்கும் சுந்தரராஜனுக்கும் பெரும் அதிர்ச்சியாகவிருந்தது. எம்மைப் பொறுத்தவரை இயக்கம் என்றால் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொள்ளாமல் தோழமையுடன் நடந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்ப்பிருந்தது.
எது எவ்வாறாயினும் திட்டமிட்டபடி பஸ் குறித்த இடத்தை அதிகாலை நான்கு மணிக்கும் முன்னதாகவே அடைந்திருந்தது. அங்கு சென்றதும் தான் நாம் பெங்களூரை அடைந்திருக்கிறோம் என்று தெரியவந்தது. அங்கு ரமேஷ் எமக்காகக் காத்திருந்தார். அங்கிருந்து மீண்டும் நாம் புகையிரதம் ஒன்றில் பயணம் செய்யவேண்டும்.
முன்னயவை:
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 4) : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 3) : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம்) 2 : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன்
தொடரும்..
கிளின்டன், மிகவும் அழகாக சம்பவங்களை எழுதுகிறீர்கள். மனதைத் தைக்கும் சம்பவங்கள். எனது அண்ணனும் ரெலோ இய்க்கத்தில் இருந்து இறந்த்து போனவர். சிறீ அண்ணாவை பற்றி பெருமையாக சொல்லுவார்.நீங்கள் துசணம் கதைத்தார் என்று சொல்ல ஆச்சரியமாக இருக்கிறட்கு.
Thivya,
Sorry to hear that your brother’s died while in TELO. There were lot of young boys died and achieved nothing. I think your brother was right partly. Sri Sabaratnam was a very good human being, but not a good leader.
சபாரட்னத்தின் வண்டவாளம் இவ்வாறு இருக்க அவரின் பெயரில் எத்தனை ரெலோ இன்னும் இயங்குகிறது. தமிழீழ விடுதலை என்ற சொற்களை பெயரில் வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அரசியல் மக்களை ஏமாற்றுவதற்கே. பல படுகொலைகளின் பொறுப்பாளியான சபாரட்னம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விட்டார்.
Sakivara
I think you never met LTTE Kittu. I met Kittu few times and he’s qualified to finish PhD in foul language. Don’t judge a person by using language. Anyone attitude will change by circumstances. But I’m totally agree with your rest of the comments //தமிழீழ விடுதலை என்ற சொற்களை பெயரில் வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அரசியல் மக்களை ஏமாற்றுவதற்கே//
தமிழ் இனத் துரோகி கருணாநிதியின் கைப்பிள்ளை தானே இந்த ஸ்ரீசபாரத்தினம்.
what happen to you mr.clington
Nothing happen to me. I write exactly what happens when I was there. I was not expect these type of attitude when I joined. In later part I realized using foul language was very common in every movements – specially TELO & LTTE. If you’re Trinco Subash, I hope now days you’ve realized the mistakes we’ve made during that period.
I am happy to be alive and say that I am a Sengunthar like Sri Sabaratnam. I am also tall. I am also born in December 1950.
Vow ! that’s really great sir, I salute you.
no not that subash his friend ,carry on
Friend,
Could you please tell me how many murders Supbas had committed when he was active in the movement
குட்டிமணி தங்கதுரை பிடிபட்ட பிறகு சிறீயும் பிரபாவும் சேர்ந்தே கொஞ்ச காலம் ரெலோவை நடத்தினார்கள். அப்போது பிரபா கொலை செய்ய முயற்சித்த சிலரை சிறீ காப்பாத்தியுள்ளார். இரண்டுபேரும் நல்லநண்பர்கள். பிரபா தன்னை கொலை செய்வார் என சிறீ கடைசிவரை நம்பவில்லை.
Sekar! சேர்ந்து நடத்தினார்களா?செலவழித்திருந்தார்களா?சிறீ காப்பாற்றிய ‘சிலர்’ என்பது யார்? துப்பாக்கி தூக்கியவர்கள் துப்பட்டா போடவரவில்லை;துளைத்தெடுக்கத்தான் வந்தார்கள்.தற்செயலாக வெடித்ததும்,தாக்குதலாக வெடித்ததும் நம்பிக்கையில் வராது.
கிளின்டன் சபாரட்னத்திற்கு தலைக்கு மேல் ஒளிவட்டம் கட்ட முயற்சிக்கிறீர்களா? ரெலோவிற்குள் ஏன் உள்முரண்பாடுகள் எழுந்தன? தாஸ் குழுவினரை எந்த தேவையின் அடிப்படையில் படுகொலை செய்தார்கள்? கிட்டுவிற்கும் சபாரத்தினத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு மனிதன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கும் அவனது வாழ்வியல் பண்புகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அடுத்தவர் மனம் புண்படும்படி பக்குவமடைந்த மனிதர்களால் பேச முடியாது.
இயக்கத்தலைமைகளை அதி திறமை படைத்த மனிதா்கள் என்று நம்பி வணங்கிய மடயா்கள்தான் பின்பு அவா்களும் நம்மைப்போன்றே சாதாரண உணா்ச்சிகள் கொண்ட மனிதா்கள் என்று உணா்ர்ந்த பின்பு அவா்களைத்தூற்றுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பாராவையாளா்களாக இருந்து தீா்ப்புகளை வளங்குவதில் நாம் வல்லவா்களல்லவா?? பிரபாகரனை பப்பாவில் ஏற்றிவிட்டு தலைவரே எல்லாவற்றையும் நடத்திவைப்பார் என்று கூறி ஓடி ஒளிந்துகொண்ட பரம்பரை இப்போது எதிரியுடன் மனித அவலத்தை விற்று பிளைக்க தொடங்கிவிட்டார்கள்.
இங்கே கிளின்ரன் இந்த தொடரை எழுதுவதன் காரணம் ஒன்றே ஒன்றுதான் அதாவது தானும் தன்னைப்போன்ற ஆயிரமாயிரம் அப்பாவி இளைஞா்களும் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் நம்பி ஏமாந்த கதையை நம்முடன் பகிர்வது, இதில் சிறிசபா நல்லவரா நாகரீகமானவரா என்பதல்ல முக்கியம் அவா்கூட ஒரு சூழ்நிலைக்கைதியாகவும் பொருத்தமற்ற இடத்தில் பொருத்தமற்ற மனிதராக இருந்து மறைந்துவிட்ட கதையையே அவா் கூறமுற்படுகின்றார்.
நம்மவா்கள் தாங்கள் இயக்கங்களை இயக்குவதாக நம்பினார்கள் ஆனால் நாம் எல்லோருமே அன்னியா்களின் அரசியல் இலாபங்களுக்காக இயக்கப்பட்ட கொலைக்கும்பல்களாக மாறிய கதையே எமது விடுதலை இயக்க சரித்திரம்.