பல மணி நேரங்களாக அப்பகுதியில் உலாவிய சிங்கள இனவெறிக் கூட்டம் இராணுவ மேயரின் தலையீட்டால் போலிசின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. இனப்படுகொலை நிகழ்ந்து ஓய்ந்துவிட்டிருந்த சில நாட்களுக்கு உள்ளாகவே மீண்டும் காடையர் கூட்டம் ஒன்று கொழும்பில் உலாவியதன் பின்னணி குறித்து பின்னதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். கோட்டை புகையிரத நிலையத்தில் இராணுவத்தின் கைக்குண்டு ஒன்று வெடித்ததை புலிகள் கொழும்புவரை வந்துவிட்டார்கள் என்று வதந்தியாகப் பரப்பப்பட்டது. இதனை நம்பிய சிங்களக் காடையர்கள் புலிகளை எதிர்கொள்ள என கிராமங்களிலிருந்து கொழும்பிற்கு வந்து தமிழர் குடியிருப்புக்களைத் தேடி அலைந்திருக்கிறார்கள்.
ஒருவாறாக இந்த நாடகம் முடிந்ததும் நான் மீண்டும் முகாமிற்குச் செல்லப் புறப்பட்ட போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வானொலி அறிவிக ஆரம்பித்தது. எது எவ்வாறாயினும் நான் முகாமிற்கு செல்வதில் உறுதியாகவிருந்தேன். அக்காவின் குடும்பத்தினர் என்னைக் காணாது அச்சத்திலிருப்பார்கள் என்பது எனக்கு எல்லாவற்றிலும் முதன்மையான பிரச்சனையாக இருந்தது.
நான் புறப்பட்டபோது நண்பர்கள் தடுக்கிறார்கள். நான் முகாமிற்குச் செல்வதில் உறுதியாகவிருந்தேன். இறுதியில் என்னைத் தனியே அனுப்புவதற்குத் தயங்கிய நண்பர்கள் அவர்களும் உடன் வருவதாக முடிவெடுத்தனர்.
நாம் ஐந்துபேர் ஒருவர் பின் ஒருவராக வீட்டிலிருந்து கால் நடையாக முகாமிற்குப் புறப்படுகிறோம். முன்னால் சென்றவர் சிங்களம் பேசத்தெரிந்தவர். யாராவது ஒருவருக்கு ஏதாவது நடந்தாலும் மற்றவர்கள் நிற்காமல் பயணத்தைத் தொடர்வது என்ற முடிவிற்கு வந்தே பயணத்தைத் தொடர்ந்தோம். பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் என்ற அனைத்து தடைகளையும் மீறி அபாயகரமான நடைபயணத்தின் பின்பு முகாமை ஒருவாறு அடைகிறோம்.
நாங்கள் முகாமிற்குச் சென்ற பின்னர் தான் காடையர் கும்பல் முகாமிற்கும் சென்றது என்றும் பாதுகாப்புப் படைகள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் கலைந்து சென்றுவிட்டனர் என்றும் அறிகிறோம்.
எங்களைப் போன்றே அதே அன்று முகாமிலிருந்து வீடுகளைப் பார்க்கச் சென்ற ஐந்து பேர்வரை தெருக்களில் கொல்லப்பட்டதாக அறிந்துகொண்டு அதிர்ச்சியடைந்தோம்.
முகாம் வாழ்க்கை முடிந்து கப்பலில் காங்கேசந்துறை துறைமுகத்தில் நாங்கள் அனைவரும் வந்து இறங்கினோம்
காங்கேந்துறையில் நடேஸ்வராக் கல்லூரியில் எமக்கு உணவு வழங்கப்பட்டது. அங்கு உதவி செய்ய வந்தவர்கள் நீங்கள் எப்போ மீண்டும் கொழும்பிற்கு செல்ல உத்தேசம் எனக் கேலியாகக் கேட்டார்க. அப்போதெல்லாம் கொழும்பு சென்று தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கும் யாழ்ப்பாணத்தவருக்கும் இடையே தகுதி கலந்த இடைவெளி ஒன்று காணப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு வந்து வீட்டிற்கு சென்ற முதல் நாளிலிருந்தே இனிமேல் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டு இயக்கத்தில் இணைந்துகொள்வதே ஒரே வழி எனத் தீர்மானிக்கிறேன். என்.எல்.எப்.ரி இயக்கத்தைச் சேர்ந்த விசுவானத்த தேவரைச் சந்திக்கச் செல்கிறேன். அப்போது அவர் அங்கு இருக்கவில்லை. அவருக்குப் பதிலாக இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்றொருவர் நின்றிருந்ததார். நான் கிளிநொச்சியில் இராணுவப்பயிற்சிக்கு இடம் தயார் செய்துவிட்டீர்களா எனக் கேட்கிறேன். இராணுவப் பயிற்சி பெற்று தாக்குதல் நடத்திய புலிகளால் நீங்கள் யாழ்ப்பானம் திரும்பி வந்துள்ளீர்கள். இங்கு வந்த அனைவருக்கும் புலிகளிடம் தீர்வு உள்ளதா என அவர் என்னைத் திரும்பக் கேட்டார். நான் புலிகளை விடுங்கள் உங்களிடம் என்ன தீர்வு உள்ளது எனக் கேட்கிறேன்.
எனது கேள்விக்குப் பதில் சொல்லாத அவர் ‘உங்களைப் போன்றவர்களுக்குப் புலிகள் தான் சரியான அமைப்பு நீங்கள் அவர்களிடமே சென்று இணைந்துகொள்ளுங்கள்” என்றார்.
அத்துடன் எனக்கு என்.எல்.எப்.ரி உடனான உறவு முடிந்துவிடுகிறது.
இப்போது மீண்டும் விடுதலை இயக்கம் ஒன்றைத் தேடியலையும் படலம் ஆரம்பமாகிவிட்டது.
கொழும்பிலிருந்து வந்தது இரண்டாவது நாளே என்.எல்.எப்.ரி அமைப்பு பயிற்சியளிக்கவில்லை என்பதால் முரண்பட்டு விலகிக் கொள்கிறேன். அடுத்த சில நாட்களிலேயே வேறு இயக்கத்திற்கான தேடுதல் வேட்டையில் புலிகள் இயக்கத்தில் அல்பேர்ட் என்ற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது. எமது ஊரில் எமது வீட்டிற்கு அருகாமையிலிருந்த அல்பேர்ட் சில வருடங்களின் முன்னமே இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும் எமக்கெல்லாம் அதுபற்றித் தெரிந்திருக்கவில்லை.
அவரோடு சில காலங்களை ஆங்காங்கு சந்திப்புக்களோடு கடத்துகிறோம். அவ்வேளையில் திருனெல்வேலியில் ரெலா அமைப்பை உருவாக்கியிருந்த சேர்ந்த ஒபரோய் தேவன் என்ற போராளியை புலிகள் கொலை செய்ததாகத் தகவல்கள் வருகின்றன.
அக்கொலை குறித்து அல்பேர்ட்டிடம் ஆட்சேபம் தெரிவிக்கிறேன். அதற்கு ஒபரோய் தேவன் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால் கொலைசெய்தோம் என்றார். அவர் இயக்கத்திற்காகத் தானே திருடினார் என்றும் அப்படியான வேலைகளை நீங்களும் செய்கிறீர்கள் தானே எனக் கேட்டபோது அல்பேர்ட் அதிகமாகக் கேள்விகள் கேட்கக்கூடாது என அதட்டும் பாணியில் சொல்கிறார். இதனால் எனக்கு வெறுப்பு மட்டுமே எஞ்சியது. இனிமேல் புலிகள் இயக்கத்திற்குச் செல்வதில்லை என முடிவிற்கு வருகிறேன்.
இதன் பின்னர் ஏனைய இயக்கங்கள் குறித்துப் பேசுசுக்கள் தொடர்கின்றன. ஒபரோய் தேவனைப் போன்றே புளட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரனையும் தாங்கள் ஒரு நாள் கொலை செய்வோம் என அல்பேர்ட் கூறுகின்றார்.பின்னதாக 1985 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்த வேளையில் புளட் இயக்கத்தினுள் புலிகளின் உளவாளிகள் என்ற பெயரில் புளட்டில் சிலரைக் கொலைசெய்ததாகத் தகவல்கள் வருகின்றன. அல்பேர்ட்டின் உறவினர் உட்பட எனது ஊரைச்சேர்ந்த வேறு சிலரும் அல்பேர்ட் அனுப்பிய புலி உளவாளிகள் என்ற சந்தேகத்தில் புளட் கொலை செய்ததாக அறிந்துகொண்டோம். அப்போது மறுபடி அல்பேர்ட் எனது நினைவுகளுக்கு வருகிறார். நான் புளட்டிற்குச் சென்றிருந்தால் ஊருக்குச் சென்று போராடாமலேயே என்னைக் கொலைசெய்திருப்பார்கள் என்று அப்போது எண்ணிய போது ஒருவகையில் அல்பேர்ட் எனக்கு உதவியதாகத் தோன்றியது.
இதே காலப்படுகுதியில் உடுப்பிட்டிப் பகுதியிலிருந்த வழக்குரைஞர் ஒருவர் இளைஞர்களை ஆயுதப்பயிற்சிக்கு அனுப்புவதாகத் தகவல்கள் வருகின்றன. நண்பர் ஒருவரூடாக அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்குச் சென்றோம். லெபனானிற்குப் பயிற்சிக்கு அனுப்புவதாக அவர் கூறுகின்றார். இறுதியில் அவர் புளட் என்று தெரியவந்த போது அல்பேர்ட் எனது நினைவுகளுக்கு வருகின்றார். அல்பேர்ட் உமாமகேஸ்வரனை ஒரு நாள் கொலை செய்வோம் என்ற்ய் கூறிய ஞாபகத்திற்கு வருகிறது. நாம் விடுதலைக்காகவே இராணுவப் பயிற்சிக்குப் போக அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தபோது இயக்க மோதல்களைத் தோற்றுவிக்கும் இக்கொலைகள் காரணமாக நான் புளட்டிற்குச் செல்ல விரும்பவில்லை.
ஜனநாயக முன்னணியில் எம்மோடு வேலைசெய்த ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொள்கிறார். அப்போது தான் அவர் சொல்கிறார் புதியதொரு இயக்கம் ஒன்றின் தொடர்பு கிடைத்ததாகவும், அவர்களது சின்னம் கூட பல அர்த்தங்களைக் கொண்டதாகக் கூறுகிறார். பனை மரம். கப்பல், கடல் போன்றவற்றைக் கொண்ட சின்னம் அவர்களது என்றும் ,மிருகங்கள் எதுவும் அச்சின்னத்தில் காணப்படவில்லை என்றும் சொல்கிறார். அத்தோடு தாமதிக்காமல் இராணுவப்பயிற்சிக்கு ஆட்களை அனுப்பிவிடுவதாகவும் கூறுகிறார்.
விசுவாந்த தேவருடன் வேலை செய்த நாட்களில் இயக்கங்கள் குறித்தும் அவர்களிடையேயான பிரச்சனைகள் குறித்தும் பல விடயங்களைப் பற்றி சொல்லித்தந்தார். அதனால் எனது நண்பர் கூறிய சின்னத்தைக் கொண்ட ரெலோ என்ற இயக்கத்தைப்பற்றியும் அறிந்து வைத்திருந்தேன்.
ரெலோ இயக்கத்தில் எமது தொடர்பாளர் எம்மை யாழ்ப்பாணத்திற்கு அருகாமையிலுள்ள நல்லூர் என்ற இடத்திற்கு ஒருவரை வந்து சந்திக்குமாறு கோருகின்றார். நல்லூருக்குப் போகும் போது வீரகேசரி பத்திரிகை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு சட்டைப்பைக்குள் பேனா ஒன்றையும் செருக்கிக்கொண்டு வருமாறு கோருகின்றனர்.
நல்லூர் கோவிலின் தேர் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் நாங்கள் நின்றிருக்க ஒருவர் சைக்கிளில் வந்து இயக்கத்தில் சேர்வதற்கு நின்றிருந்த எங்கள் நால்வரையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றார். அவர் மீண்டும் வந்து தேருக்கு அருகாமையில் வருமாறு அழைக்கின்றார். அங்கே கண்களை பலதடைவை சிமிட்டியபடி ஒருவர் காத்திருக்கின்றார். அவர் பெயர் சிவபெருமான் என்று பின்னதாக அறிந்துகொண்டேன்.
சிவபெருமான் என்பவர் இப்போது தனது நேர்காணலை ஆரம்பித்துவிட்டார். எங்களை நோக்கிய முதலாவது கேள்வி எமக்கு ஏன் தமிழீழம் வேண்டும் என்பதே. எம்மோடு வந்த ஒருவர் எங்களுக்கும் என்று ஒன்று வேண்டும் தானே என்றார். அதற்கு குறுக்குக் கேள்விகேட்ட சிவபெருமான் என்ன வேண்டும் என்றார். தமிழீழம் என்றதும் பதிலில் திருப்தியடைந்த சிவபெருமான் எமது இருப்பிடங்கள் குறித்து விசாரிக்கிறார்.
நான் அச்சுவேலி என்கிறேன். கொழும்பில் இன வன்முறைகளிலிருந்து தப்பி வந்ததால் நான் எனது அண்ணனின் ஜின்சையே அணிந்திருந்தேன்.
அதில் ஸ்றீகர் அடையாளமொன்று இருந்தது. அதை வைத்து நான் சிவகுமார் என்பவரோடு தொடர்புடையவரா எனக் கேட்கின்றார். நான் அவர் எனது அண்ணன் தான் என்கிறேன். பின்னதாக அவர் எனது அண்ணனின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது.
சிவபெருமான் வெகுவிரைவில் எம்மைத் தொடர்புகொண்டு இயக்கத்திற்கு அனுப்புவதாக உறுதியளிக்கிறார்.
நான் தமிழீழமே கிடைத்துவிட்ட உணர்வில் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட கனவுகளோடு வீடு சென்ற உறங்கச் செல்கிறேன். நான் எங்கு சென்றேன் யாரைச் சந்திதேன் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது.
மறு நாள் நான் எங்கும் செல்லவில்லை. விரைவில் பயிற்சிக்கு அனுப்புவதற்கான அறிவித்தல் வரும் என்ற எதிர்பார்ப்பில் கனவுகளோடு அன்றைய நாளைக் கடத்துக்கிறேன். மதியம்கடந்த வெம்மையான பொழுதில் யாழ்ப்பாண நகரத்திற்குச் சென்ற அண்ணன் வீடு திரும்புகிறார். அவர் என்னை மறுபடி மறுபடி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். பின்னதாக அம்மாவிடம் சென்று ஏதோ கிசுகிசுவென்று பேசுவது கேட்டது. பின்னர் எனது அறைக்கு வந்த அம்மா, எனக்கு அடித்து கீழே தள்ளிவிழுத்தி திட்டுகின்றார். நான் சுதாகரித்துக்கொள்வதற்குள் அண்ணன் பேச ஆரம்பிக்கிறார். நீ இயக்கத்திற்குப் போக முடியாது, எங்கு சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன் என கோபத்தோடு திட்டுகிறார்,
நான் இயக்கத்திற்குப் போக முனைந்தது குறித்து சிவபெருமான் எனது அண்ணனிடம் சொல்லிவிட்டார் என்பது தெரிய வந்தது. வீட்டில் எல்லோரும் கூடிவிட்டார்கள். என்னை இனிமேல் இயக்கத்திற்குப் போகமாட்டேன் எனச் சத்தியம் செய்யக் கேட்டார்கள். நானும் அவ்வாறே செய்கின்றேன்.
சிவபெருமானை நினைக்க எனக்கு வெறுப்பும் கோபமுமாக இருந்தது. அதன் பின்னர் நண்பர்களுக்குக் கூட வீட்டிற்கு வர அனுமதியில்லை. நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தேன்.
தொடரும்…
1983 களின் பின்னரான பல இளைஞர்-யுவதிகளின வாழ்வு பற்றிய ஒரு சித்திரமாக விரிகிறது. தொடருங்கள்… விஜய்