இப்போது வீட்டை விட்டு வெளியே சென்று இயக்கங்களோடு இணைந்துகொள்வதற்கான வழிமுறையைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கமாக இருந்தது. அந்தக் காலத்தில் இளைஞர்கள் பலர் வெளி நாடுகளுக்குச் சென்றனர். பிரித்தானியாவிற்கு அகதிகளாகவும் பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காகவும் முகவர்கள் ஊடக பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். எனக்கோ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாக்விருந்தது. ஆக, நான் அம்மாவிடம் சென்று லண்டனுக்குப் போக விரும்புவதாகச் சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதற்கான ஏற்பாடுகளை உடனேயே ஆரம்பித்துவிடுவதாகவும் சொன்னார்கள்.
இப்போ, நான் லண்டனுக்குப் போகவேண்டுமானால் எதாவது தொழில் நுட்பப் பயிற்சி வகுப்புக்களுக்குச் செல்லவேண்டும் என்று வீட்டாரிடம் கூறியதில் அவர்கள் என்னை வெளியில் செல்ல அனுமதித்தார்கள். இதே வேளை ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சின்ன நந்தன் என்று அழைக்கப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய எனது பாடசாலை நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் சின்ன நந்தன் என்பவருடன் நான் இயக்கத்திற்கு பயிற்சிக்குச் செல்ல ஆர்வமாய் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்போது நான் வீட்டுக்காவலிலிருந்து தப்ப வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது.
அதேவேளை என்னைச் சந்தித்த பாடசாலை நண்பர் சின்ன நந்தனை இருபாலை பஸ் நிலையத்தில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார். தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் பதிவு செய்யப்போவதாக நான் வீட்டில் கூறிவிட்டுப் புறப்படுகிறேன்.
திட்டமிட்டப்படி சின்ன நந்தனைச் சந்திக்கிறேன். அவர் வரும்போதே புலிகள் வெளியிட்ட நூல் ஒன்றுடன் எடுத்து வந்திருந்தார். அந்த நூலின் பின்புறத்தில் பிரபாகரன் இயந்திரத் துப்பாக்கியோடு நிற்பதான படம் ஒன்று காணப்பட்டது. அந்தப் படத்தைக் காட்டி இப்படி தனி நபரை முக்கியத்துவப்படுத்தும் செயற்பாடுகள் எல்லாம் எப்படி விடுதலைப் போராட்டமாகும் என்று கேள்வியெழுப்பினார்.
நான் ரெலோ இயக்கத்தில் இணைய முற்பட்டு எனக்கு நடந்தவற்றைக் கூறுகிறேன். அவர் இனிமேல் அப்படி ஒன்றும் நடக்காது என்று சொல்கிறார்.
நான் பயிற்சி எடுத்துப் போராட வேண்டும் என்கிறேன். விரைவில் என்னைப் பயிற்சிக்குக் கூட்டிச் செல்வதாக உறுதியளித்தபின்னர் சின்ன நந்தன் விடைபெறுகிறார். அதன் பின்னர் அவரை நான் சந்திக்கவில்லை. அதன் பின்னர் இரண்டு நாட்களின் பின்னர் பிரித்தானியாவில் வசிக்கும் ஹெலன் என்பவர் எந்து வீட்டிற்கு வந்து மறு நாள் இயக்கத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு சொல்கிறார். ஒக்டோபர் மாதம் 7ம் திகதி 1983ம் ஆண்டு இது நடைபெறுகிறது.
மறு நாள் 8ம் திகதி யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு வருமாறு அவர் தகவல் சொல்லிவிட்டுப் போகிறார். மறு நாள் யாழ்ப்பாண நகரத்திற்குச் சென்ற நான் அங்கு சின்ன தாஸ் என்பவரைச் சந்திக்கிறேன். அவர் என்னை யாழ் நகருக்கு அருகாமையில் அமைந்திருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். நான் அங்கு சென்ற வேளை அங்கு ஏற்கனவே பல இளைஞர்கள் பயிற்சிக்குச் செல்வதற்காகக் காத்திருந்தனர்.
அங்கி எவ்வைகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இரவு வேளைகளில் காவலுக்கு எம்மில் சிலரை நிறுத்தி வைப்பார்கள். இராணுவமோ போலிசோ அங்கு வந்தால் அங்கிருந்த நாம் ஓடிவிட வேண்டும் என்றும், தற்செயலாகக் கைதானால் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் என்று கூற வேண்டும் என்று எமக்குச் சொல்லித்தரப்பட்டது.
அங்கு நான் சென்ற மறு நாள் சிவபெருமான் வருகிறார். எனது அண்ணனிடம் அவர் நான் இயக்கத்திற்குப் போவதாக தகவல் கொடுத்தது தவறு என நான் வாதிட்டேன். எனது அண்ணனே சிங்களவர்களுக்கு எதிராகப் பேசியதால் பெருமையாக என்னைப்பற்றிப் பேசியதாக அவர் கூறினார்.
எங்களில் ஐந்து பேரைத் தெரிவுசெய்து பாசையூர் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கூறினார்கள். அங்கிருந்து படகு மூலமாகவே தமிழ் நாட்டிற்கு செல்வது வழமை. எமது முகாமிலிருந்து சென்று யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் காத்திருக்குமாறும் அங்கு ஒருவர் வந்து எங்களை அழைத்துச் செல்வார் என்றும் கூறினர். நாங்கள் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தோம் யாரும் வருவதாகத் தெரியவில்லை. பய உணர்ச்சி ஒரு புறத்திலும் விரக்தி மறுபுறத்திலுமாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். இறுதியில் எமது தற்காலிக முகாமிற்கே திரும்புவதாகத் தீர்மானிக்கிறோம். கச்ச்சேரியிலிருந்து யாழ்ப்பாண நகரத்திற்கான பஸ் ஒன்றில் நகரில் வந்து இறங்கினோம். அங்கு நடந்து செல்கையில் எனது உறவினர் ஒருவர் என்னைக் கண்டுவிட்டார்.
நான் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நாள் என்னை பயிற்சிக்கு அனுப்புவார்களா இல்லை வீட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்வார்களா என்ற சந்தேகம் குடிகொண்டிருந்தது. மீண்டும் திரும்பிவர நேரிட்டால் வீட்டு வாசற்படிக்குக்கூட என்னைச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் வீட்டில் இயக்கத்திற்குப் போவதாகக் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
அதே நேரம் எனது நண்பர் ஒருவரிடம் இயக்கத்திற்குப் போவதாகக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு இரவு நேரமாகும் வரை நான் வீட்டிற்குத் திரும்பி வராவிட்டால் கடிதத்தை வீட்டு வாசலில் போட்டுவிடும்படி கூறினேன். நான் நள்ளிரவு அண்மித்த வேளைவரை திரும்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட நண்பர் கல்லொன்றில் எனது கடிதத்தை இறுகக் கட்டி எனது வீட்டுக் கதவை நோக்கி வீசியெறிந்துவிட்டுச் சென்றுவிடார். நள்ளிரவில் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டார் கடிதத்தைக் கண்டிருக்கிறார்கள். அதுவரைக்கும் என்னை இராணுவமோ போலிசோ கைது செய்துவிட்டதாகப் பயந்துகொண்டே உறங்கமல் காத்திருந்திருக்கிறர்கள்.
அதே வேளை பாதுகாப்பு அச்சம் காரணமாக ஊராருக்கும் உறவினர்களுக்கும் நான் இயக்கத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட்டதை மறைத்திருக்கிறார்கள். நான் வீட்டாருடன் கோபப்பட்டுக்கொண்டு மன்னாரில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவே சொல்லிவைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் தமிழீழப் போராட்டம் பல குடும்பங்களின் கனவுகளைச் சிதைத்து போலவே எனது குடும்பத்தினரும் எனது இல்லாமையின் வலியை உணர்ந்திருப்பார்கள் என்பதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் என்னைச் சந்தித்த உறவினர் நான் மன். நாரில் எனது அக்காவீட்டிலிருப்பதாகவே எண்ணியிருந்தார். அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்கு வரச்சொல்லி எனது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டிருந்தார். என்னோடு வந்தவர்களுக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் என்னை விடுவதாக இல்லை. இறுதியில் என்னை விடுங்கள் நான் இயக்கத்தில் இணைந்துவிட்டேன் என்றதும் நான் கேட்காமலேயே என். அது கையை விடுவித்துவிட்டு தனது வழியில் சென்றுவிட்டார்.
நான் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் கண்டதாகவும் எனது உறவினர் எனது வீட்டிற்குச் சென்று அறிவித்திருக்கிறார். அண்ணன் உடனடியாகவே சிவபெருமானைத் தொடர்புகொண்டு வேறும் சில நண்பர்களுடன் பஸ் நிலையதிற்கு வந்திருக்கிறார். அங்கே பல மணி நேரமாக எனது அண்ணன் காத்திருந்திருக்கிறார். பின்னதாக சிவபெருமான் என்னைச் சந்தித்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகவேண்டாம் என்றும் அங்கு என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
பாசையூருக்குச் சென்று அங்கிருந்து தமிழகத்திற்குச் செல்வதற்காக மீண்டும் தற்காலிக முகாமில் காத்திருக்கிறோம். இரவு வேளைகளில் தவணை முறையில் காவலுக்கு நிற்கவேண்டும். பல முகமறியாதவர்களை அப்போது முதல்தடவையாகச் சந்திக்கிறேன். ஒவ்வொருவரின் விடுதலை உணர்வுகளையும் துயரங்களையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்வோம். என்னுடன் அங்கு காவலுக்குப் நின்றிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் ஏன் நான் இயக்கத்திற்கு வந்தேன் என்று கேட்கிறார். நான் கொழும்பில் ஆரம்பித்து எனது தமிழீழக் கனவில் முடிக்கிறேன். அவரோ இரண்டுவரிக் காரணம் வைத்திருந்தார்.
அவரது அண்ணன் கடை வைத்திருந்தர். பாடசாலை முடித்ததும் தான் கடைக்குத் தான் நெரே செல்லவேண்டும் என்றும் அங்கு அவரது அண்ணனுக்கு உதவியாக இரவு நெடு நேரம் வரை வேலை செய்யவேண்டும் என்றும் சொன்னார். அவ்வேளைகளில் ஒவ்வொரு சிறிய தவறுகளுக்கும் அண்ணன் அடிப்பதாகவும். அந்த வதையிலிருந்து விடுதலையடைந்து அண்ணனுக்கு பாடம்படிப்பிதற்காகவே இயக்கத்தில் சேர்ந்ததாகச் சொன்னார். விடுதலை, தேசியம் என்ற எது தொடர்பாகவும் அவர் இயக்கத்தில் சேரவில்லை என்கிறார்.
எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் போராடி வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்கத்தில் சேர்ந்த எனக்கு இன்னும் எத்தனைபேர் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இயக்கத்தில் சேர்ந்திருப்பார்கள் என்ற அச்சம் மேலிடுகிறது.
எது எப்படியாயினும், இந்தியா சென்று பயிற்சி எடுத்துக்கொண்ட காலப்பகுதியிலும், பின்னதாகவும் என்னோடு காவலுக்கு நின்றிருந்தவர் உணர்வு பூர்வமான நேர்மைக விடுதலைக்காக உழைக்கும் போராளியாகவே திகழ்ந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றிய எனது அனுமானம் தவறானது என வருத்தப்பட்டதுண்டு.
பிறகு நாங்கள் அந்த முகாமில் தங்கியிருக்கும் போதே சாரி சாரியாக இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பப்படுவதற்காகவே இளைஞர்கள் கூட்டிவரப்பட்டனர்.
அப்போது அங்கு ரெலோ இயக்கதின் தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவர் வருகிறார். சுதன் என்ற பெயருடைய அவர் ஏனையவர்கள் மத்தியிலிருந்து என்னை அழைக்கிறார்.
உன்னை யார் இயக்கத்திற்கு தெரிவு செய்தார்கள் என்கிறார். நான் சொல்வதற்கு முன்னமே மற்றவர்கள் முந்திக்கொண்டார்கள். சிலர் என்னை சிவபெருமான் தான் தெரிவுசெய்தார் என்று சொல்கின்றனர். சுதன் நீயெல்லாம் இயக்கத்திற்குப் போக முடியாது என்கிறார். அதிர்ந்துபோன நான் மௌனமாகிறேன். சுதன் கேட்கிறார், கண்ணாடி இல்லாமல் பார்க்கமுடியுமா, துப்பாகியால் குறிபார்த்துச் சுட முடியுமா என்றெல்லாம் கேட்கிறார். இது வெளிநாட்டு இராணுவப் பயிற்சி அங்கு கண்ணாடியோடு எல்லாம் சென்று இராணுவப்பயிற்சி பெறமுடியாது என்கிறார்.
இறுதியில் இலங்கையில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்றும் இந்தியாவிற்குப் போக வேண்டாம் என்றும் சொன்னார். நானோ பயிற்சி எடுத்துப் போராடுவதே எனது நோக்கம் நான் பயிற்சிக்குச் சென்றே ஆகவேண்டும் என்கிறேன்.
நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் சுதன் கடிதம் ஒன்றை எழுதித்தருகிறார். கடிதத்தை ஒரு உறையில் போட்டு இந்தியா சென்றதும் தலைவர் சிறீ சபாரத்தினத்திடம் அதனைக் கொடுக்கச் சொல்கிறார்.
மறு நாள் எனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் பயிற்சி எடுப்பதற்காக என்று அதே முகாமிற்கு வந்து சேர்கிறார். இதனை அறிந்த சுதன் மீண்டும் என்னிடம் வருகிறார். நான் கண்ணாடி அணிந்திருப்பதாலும், அண்ணனும் தம்பியும் ஒரே இயக்கத்தில் சேர்ந்திருப்பதாலும் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார். நான் மீண்டும் மறுக்கிறேன். பின்னதாக அவர் என்னுடைய நேரடியான சகோதரர் அல்ல ஒன்றுவிட்ட சகோதரர் என்பதை அறிந்துகொண்டதும் இறுதி முடிவாக பயிற்சிக்கு அனுப்புவதாக ஒத்துக்கொள்கிறார்கள்.
இரண்டொரு நாட்களில் வான் ஒன்று எமது முகாமிற்கு முன்னால் நிறுத்தப்படுகிறது. பயிற்சிக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் தயார் என்றும் எங்களில் சிலரை வானில் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள்.
வான் பாசையூரை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. எனக்கு எனது முதல்கனவின் ஆரம்பப்பகுதி நிறைவேறியது போன்ற நிறைவு.
பாசையூர் கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட எங்களை ஏற்றிச்செல்ல ட்ரோலர் படகு ஒன்று தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் அதில் ஏறிகொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். படகு இரவு முழுவதும் கடலின் அமைதியைக் கலைத்துக்கொண்டு பயணித்தது. எனது தேசத்தின் மண் கண்களிலிருந்து மறைந்தது. உறக்கம் வரவில்லை. இரவு முழுவதும் பலரும் பலதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள்.
தொடரும்..
முன்னைய பதிவுகள்:
ங்யூஅங்….. பழைய காலத்தை பிளாஷ் பாக்கில கொண்டு வருகுது கிளிங்ஸ்.. மனதை கிள்ளும் வசனங்கள்.. முழு உண்மையையும் பக்க சார்பில்லாமல் சொல்லுங்க..
தமிழ், தமிழர் , தமிழ் தேசியம் என்பவற்றின் ஆளுமை இன்மையே போராளி இயக்கங்களின் மலினமான செயல் பாட்டுகளுக்கும் அதன் அழிவுக்கும் காரணமாயின. இதில் சாதியம் பிரதேசவாதம் என்பனவும் அடங்கும். தமிழ் தேசிய ஆளுமை வீழ்ச்சி என்பது தமிழ் அரசியல் வாதிகளினதும் தமிழ் புத்தியீவிகளினதும் ஆளுமை வீழ்ச்சியின் வெளிப்பாடே காரணமாகும்.