புகையிரத நிலையத்தில் நாங்கள் குழுக்களாக நாங்கள் காத்திருக்க பயணச்சீட்டுக்கான ஒழுங்குகள் நடைபெறுகின்றன. பயணச் சீட்டுக்களை ஒழுங்கு செய்தபின்னர் எம்மை பதுப்பத்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து புகையிரத் நிலையத்தில் காத்திருக்கச் சொல்கிறார்கள்.
அப்போது அங்கே புகையிரத நிலையத்தில் சேகர் என்ற மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் எம்மை ஒழுங்கு படுத்தும் பொறுப்பிலிருந்தார். அவருக்கு யாரோ சுந்தரராஜன் குறித்து சொல்லியிருக்கிறார்கள். சுந்தரராஜன் சென்னையிலிருக்கும் போது கெட்டவார்த்தைகளால் ஒருவரைத் திட்டியதைக் காரணமாகக் காட்டி சேகர் அவரை அழைக்கிறார். நீ கெட்டவார்த்தை எல்லாம் பாவிப்பதாக் கேள்விப்பட்டேன் என சுந்த்ரராஜனை நோக்கி சேகர் கேட்கிறார்.
அதற்கு சுந்தரராஜன் கெட்டவார்த்தை பயன்படுத்தக் கூடாதா என்கிறார். பதிலளித்த சேகர், இல்லை இயக்கம் என்றால் கட்டுப்பாடு தேவை இப்படியான வார்த்தைகளைப் பய்ன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார்.
சுந்தரராஜனோ இப்போ சற்றுமுன்னர் பஸ்சில் பிரயாணம் செய்யும் போது இயக்கத் தலைவரே சாரமாரியாகக் கெட்டவார்த்தைகளால் திட்டியதைக் கேட்டோம், நீங்கள் மட்டும் என்ன கட்டுப்பாடுபற்றி பேசுகிறீர்கள் எனக் சேகரை நோக்கிக் கேட்க, உரையாடல் அதற்கு மேல் நகரவில்லை.
இருள் கவ்வியிருந்த பின்னிரவைக் கிழித்துகொண்டு சூரியக் கதிர்கள் உலகைக்காட்டின. எமக்கோ இன்னும் உலகம் புரிந்திருக்கவில்லை. இராணுவப் பயிற்சிக்காக வெளியூர் செல்கிறோம் என்பது மட்டும்தான் எமக்குத் தெரிந்திருந்தது.
மதியம் கடந்த பின்னரே புகையிரதம் அங்கு வந்து சேரும் என்பதை அப்போதுதான் அறிந்துகொள்கிறோம். அதுவரை எமது குழுக்களோடு புகையிரத நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்பதால் நாமும் எமது குழுக்களோடு ஆசனங்களில் அமர்ந்துகொள்கிறோம்.
பல விடயங்களைப் பேசிக்கொண்டே மாலை நேரத்தை அண்மித்த வேளையில் புகையிரதம் வந்து சேர்கிறது.
நாங்கள் ஈழப் போருக்கான பயணத்தைத் தொடர்வதற்காக புகையிரதத்தில் ஏற்றப்படுகிறோம், ஒவ்வொரு புகையிரதப் பெட்டிக்குள்ளும் நான்கு ஐந்து இளைஞர்களே அமர்ந்து கொள்ளுமாறே பயணச் சீட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. எனது பயணச் சீட்டில் மோகன் என்ற பெயரே பதிவாகியிருந்தது. எமது அடையாளத்தை மறைப்பதற்கான முன்னேற்பாடாகவே நான் புரிந்துகொண்டேன். எமது உடை மற்றும் அனைத்துப் பொருட்களையும் முன்னரே பெற்றுக்கொண்டு பத்திரப்படுத்தி வைத்துவிட்டார்கள்.
நாங்கள் புகையிரதத்தில் ஏறியிருந்தோமே தவிர எங்கு செல்கிறோம் என்பது எமக்குத் தெரிந்திருக்கவில்லை. தாய் நாட்டின் விடுதலைக்காக எங்கோ செல்கிறோம் என்பதே எமக்குத் தெரிந்திருதது.
உணர்ச்சி மிகுந்த அந்தக் காலத்தில் துடிப்பான ஈழத் தமிழ் இளைஞர்கள் கண்களில் உறுதி மிகுந்த ஒளியோடு புகையிரதத்தின் வரவிற்காகக் காத்திருக்கிறோம்.
என்னோடு ஹென்றி என்பவர் உட்பட மேலும் இருவர் ஒரே பெட்டிக்குள் அருகருகே அமர்ந்துகொண்டோம். அப்போது புகையிரதம் வெறிச்சோடி வெறுமையாகக் காட்சியளித்தது. ரயிலின் ஓ வென்ற நீண்டு விரிந்த வெறுமைக்குள் எமது விடுதலை புதைந்திருப்பதைப் போன்ற உணர்வு துளைத்தது.
அப்போது நான் ஏற்கனவே சந்திதிருந்த பெரிய நந்தன் என்பவருடன் சிறீ சபரத்தினம் ரயில் பெட்டிக்ள் எம்மை நோக்கி வருகிறார். பெரிய நந்தனே எமக்குப் பொறுப்பானவர் என அறிமுகம் செய்கிறார்.
சந்தோசமாக பயிற்சிக்கு சென்று வாருங்கள் நான் உங்களை வந்து சந்திகிறேன் என சிறீ சபாரத்தினம் எம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
சற்று நேரம் கடந்ததும், பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ரயிலில் ஏறிக்கொள்கிறார்கள். அவர்கள் பேசிய மொழி எமக்குப் விளங்கவில்லை. அப்போது தான் புரிந்து கொண்டோம், தமிழில் மற்றவர்களிடம் பேசி எமது ‘இரகசியங்களை’ வெளியே சொல்லக் கூடாது என்பதற்காகவே தமிழ் நாட்டைத் தவிர்த்து பெங்களூரில் எமது ரயில் ஆரம்பிக்க செய்தார்கள் என்பதே அவர்களின் நோக்கம் என்று.
யாரும் எமது பயணத்தைப் பற்றிக் கேட்டால் நாம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும் தேசிய படையணிப் பயிற்சிக்காகச் செல்கிறோம் என்றும் சொல்லவேண்டும் எனப் பணிக்கப்பட்டிருந்தோம். எமக்கு அருகில் பெங்களூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அமர்ந்துகொண்டது. நட்பாக உரையாடலை ஆரம்பித்த அவர்கள் நாம் எங்கே செல்கிறோம் எனக் கேட்டார்கள். எனக்கு அருகில் இருந்த பப்பா என்பவர் பதிலளிக்கிறார். சொல்லித் தந்தபடி ஆங்கிலத்தில் அப்படியே ஒப்பிவிக்கிறார். அவர்கள் வியப்பாகப் எம்மைப் பார்த்தார்கள். படையணிப் பயிற்சிக்கு பயணப் பெட்டிகளோ பொதிகளோ இன்றி வெறும் கையோடு அமர்ந்திருந்த எம்மை விசித்திரமாக அவர்கள் நோக்கியதில் வியப்பில்லை.
அதிலும் மூன்று நாள் பயணம். அது கூட எமக்குச் சொல்லப்படவில்லை. கன்டீனிலிருந்து என்ன உணவு வேண்டும் என்று ஒருவர் வந்து கேட்டார். நாம் எதுவும் வேண்டாம் என்றதும், எங்களுடைய உணவு ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார்.
புகையிரதம் இந்திய மண்ணில் வெளிகளையும் காடுகளையும் சேரிகளையும் அசட்டைசெய்யாமல் கடந்து செல்கிறது. இரவு அண்மித்த வேளையில் எமக்கு முன்னால் அமர்ந்திருந்த குடும்பம் போர்வைகளைத் தயார் செய்து உறங்குவதற்கு ஆயத்தமாகிறது. எம்மை நோக்கி நீங்கள் போர்திக்கொள்வதற்கு எதாவது கொண்டுவந்தீர்களா என்றதும், நாங்கள் கைகளை விரிக்கிறோம். அவர்கள் எங்கள் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
புகையிரதப் பயணம் மூன்று நாட்கள் நீளமானது. அது கூட எமக்குச் சொல்லப்படவில்லை. இதனால் மற்றவர்கள் சந்தேகம் கொள்வது சற்று இயல்பானதாகவே தெரிந்தது.
முன்னயவை:
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 6) : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 4) : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 3) : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம்) 2 : கிளிங்டன்
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன்
தொடரும்..
முடிவு தெரிந்த தொடர் மர்ம நாவல் படிப்பது போல் இருக்கிறது.