தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் (2)

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் ‘ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.

கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமற்ற வெற்று முழக்கங்களின் பின்புலத்திலுள்ள ஆபத்துக்கள் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நோக்கமாகக் கொண்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் போல இவை தோன்றினலும், இவற்றின் பின் விளைவுகள் ஆபத்தானவை. இவர்கள் தெரிந்துகொண்டே திட்டமிட்டு இவ்வாறான சுலோகங்களை முன்வைத்திருந்தால் இவற்றை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த மாட்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்தைப் பிழைப்பாக நடத்தும் மக்கள் விரோதிகளுக்கு இரண்டு தேவைகள் உண்டு. முதலாவதாக தமது முகவர் போலச் செயற்படும் கட்சி ஒன்றின் தேவை. இரண்டாவதாக மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதியின் இருப்பு. இதில் முதலாவது தேவையைக் கஜேந்திரகுமார் நிறைவு செய்கிறார். ஆக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் முழக்கங்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளின் தேவையை ஒட்டியே முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவோடு ஓடிப்பிடித்து விளையாடுவோம் என்றும், ராஜபக்சவைப் பிடித்துத் தூக்கில் போட்டு வெடிகொழுத்துவோம் என்றும் கேலிகூத்தான வாக்குறுதிகள் மட்டுமே புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

அமெரிக்கா போன்ற நாடுகள், மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போராட்டத்தையும், போர்குணமும் சமூகப்பற்றுமுள்ள போராளிகளையும் அழித்துக்கொண்டிருப்பதைக் குறித்து இவர்கள் மூச்சுவிடுவதில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று கஜேந்திரகுமார் குழு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது. மக்களுக்குத் தேர்தல் ஊடாகப் போலி நம்பிக்கைகளை வழங்கும் அமைப்பு முறையை நிராகரித்து தேர்தலைப் புறக்கணிக்குமாறு பல்வேறு அரசியல் சக்திகள் கருத்தை முன்வைத்தன. தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறும் கஜேந்திரகுமார் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் என்ன?

தமிழ்ப் பேசும் மக்கள் கஜேந்திரகுமார் கேட்டுகொண்டதன் அடிப்படையில் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் மகிந்த மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பார் என்பது உறுதி.

மொத்தத் தமிழ்ப் பேசும் மக்களும் மகிந்தவை எதிர்த்து வரலாறு காணத அளவில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்த போது தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் தெளிவற்றது. மகிந்தவின் இருப்பிற்கான புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் தேவைக்கான குரலாகவும் இதனைக் கருதலாம்.

சரி, அப்போது மகிந்தவை ஆட்டம்காண வைத்த தேர்தலைப் புறக்கணித்தது ஏதோ ஒரு வகையில் நியாயமானால் ஏன் இப்போது பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து ஒற்றையாட்சி மீது மக்களின் வெறுப்பை உணர்த்துமாறு கோரக்கூடாது.

புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை என்பது அவர்களுக்கே தெரிந்திருந்தது, இன்று அவை சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலை இலங்கையின் ஒற்றையாட்சிப் பாசிசப் பாராளுமன்றத்திற்குச் செல்வதை ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற மற்றொரு கோமாளித்தனத்தை புலம்பெயர் குழுக்கள் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டன.

இதற்கு மிகப் பொருத்தமான தெரிவாக கஜேந்திரகுமாரைத் தவிர வேறு யாரையும் கண்டுபிடித்திருக்க முடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் மலையளவு வேறுபாடிருப்பதாக இணையங்களில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. வேறுபாடு என்பது அவர்கள் முன்வைக்கும் சுலோகங்களின் மட்டுமே காணப்படுகின்றது, நடைமுறையில் இரண்டு கட்சிகளுமே ஒரே விடையத்தைத்தான் கூறுகின்றன.

வேறுபாடுகளை விட ஒற்றுமையே இவர்கள் மத்தியில் அதிகம்:

– அழிக்கும் சர்வதேசத்தைப் பிடித்து வேண்டியத்தைப் பெற்றுத்தருவோம் என மக்களை ஏமாற்றுதல்.

– ஏனைய தேசிய இனங்களிலிருந்தும் உலகின் ஜனநாயக சக்த்திகளிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்துதல்.
– இலங்கை அரசின் பாசிசப் பாராளுமன்ற அமைப்பு முறையை நம்பக் கோருவது.

– மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளாது தேர்தல் காலத்திற்காக மட்டும் வெற்று முழக்கங்களைத் தயார்படுத்திக் கொள்வது.(இரண்டு கட்சிகளும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுன்னாகத்தில் அழிப்பு நடைபெற்றது.)

– அழிவுகளையும் பின்விளைவுகளையும் சிந்திக்காமல் வெற்று முழக்கங்களால் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்க முனைவது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

இவர்கள் தமது பெயரை தமிழ்த் தேசியச் சாம்பார் என மாற்றிக்கொள்ளலாம். உப்புப் புளியற்ற இந்தச் சாம்பாரில் சுவையற்ற அத்தனை அம்சங்களும் கலந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இருப்பதால் அதிலிருந்து விலகிச் செல்லப் போவதில்லை என்று வட மாகண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் லண்டனில் முழங்கினார். இனக் கொலையாளிகள், போர்க்குற்றவாளிகள் போன்றவர்களிலிருந்து கடை நிலைத் திருடர்கள் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூண்கள். இவர்கள் அனைவரும் சுயாதீனமாகச் செயற்பட வசதியளிக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயலம் என்று கூறிக்கொள்கின்றனர்.

Sumanthiranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழி நடத்துபவர் எம்.ஏ.சுமந்திரன். சுமந்திரன் சம்பந்தன் இணைந்து உருவாக்கும் திட்டங்களுக்கு நேரடியாக முரண்படாமல் ஒவ்வொருவரும் தாம் வேண்டியதைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆக, அதுவே ஜனநாயகம் என அந்த அமைப்பில் அழைக்கப்படுகின்றது.

a) மாறும் சுலோகங்களின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க இணக்க அரசியல்: சம்பந்தன் சிங்கக் கொடியோடு தோன்றி தமிழ்த் தேசியத்தை நல்லிணக்கத்திற்கு விற்றுவிட விக்னேஸ்வரன் நெற்றிப் பொட்டும் திருநீறுமாக ஒரு நாடும் இரு தேசமும் என்பார். அதே விக்னேஸ்வரன் இனப்படுகொலை நடந்தபின்னரே நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாகக் கூறிவிட்டு பின்னர் இனப்படுகொலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார். கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கிறது என்பார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சியின் முழக்கங்களைக் கூட எப்போதும் உறுதியாக முன்வைத்ததில்லை.

தமது வசதிக்கேற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். இவை எல்லாவற்றின் பின்னாலும், இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசுடன் இணைந்தே தமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

b)சுயநிர்ணைய உரிமையத் தேடித்தேடி நிராகரித்தவர்கள்:

இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடைசெய்கிறது. பிரிந்து செல்லும் உரிமையை அது தடைசெய்யவில்லை. தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவது சட்டப்படி இலங்கையில் குற்றமல்ல. நிலைமை இவ்வாறிருந்த போதிலும் தாம் சுயநிர்ணைய உரிமை கோரப்போவதில்லை எனத் தமிழ்த் தேசியத்தின் தலையில் அடித்து சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமது கட்சியின் பெயரில் தேசியம் என்று பெயரை வைத்துக்கொண்டுள்ள கூட்டமைப்பு விதேசிகளின் அசைக்க முடியாத கூட்டு என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

c) சுயநிர்ணைய உரிமை விற்பனை செய்யப்பட்டுவிட்டது: இரண்டு முக்கியமான அழிவு நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலாவதாக இலங்கைப் பாசிச அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டே தாம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது. இரண்டாவதாக அவ்வாறு உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்தியாவுடனும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தயவை நாடவேண்டும் என்கிறது. இவற்றையெல்லாம் அவர்கள் மூடிமறைக்கவில்லை. வெளிப்படையாகவே மேற்கொள்கிறார்கள். இவர்கள் கேட்கும் உரிமைகளில் சுயநிர்ணையம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமை உள்ளடங்கவில்லை.ஆக, சில்லரை உரிமைகளுக்காக சுயநிர்ணைய உரிமையையும் நான்கு தசாப்தப் போராட்டத்தையும் அன்னியர்களிடமும் இலங்கை அரசிடமும் மொத்த விற்பனை செய்துவிட்டனர்.

தொடரும் …

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள்