ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த குழுவினரால் உருவாக்கப்பட்டு இலங்கைக்குள் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சம உரிமை இயக்கத்தினரால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்து சம உரிமை இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னிலை சோசலிசக் கட்சி என்ற ஜேவிபி இலிருந்து பிளவடைந்த பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர். வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், நவசமாசக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.








