இலங்கையில் யுத்தம் நின்று விட்டாலும் அங்குள்ள அப்பாவி தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, அங்கு வாழும் சிங்கள இன மக்களுக்கு இணையாக தமிழ் மக்கள் வாழ வழியேற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்திய அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவி தமிழ் மக்கள் படும் துன்பங்களையும் வேதனைகளையும் வார்த்தைகளால் விளக்க முடியாது என்று நிவாரணப் பகுதிகளை நேரில் பார்த்த வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் தெரிவித்துள்ளனர். உணவு பொருட்களை பெறுவதற்கும் கழிவறைகளுக்கு செல்வதற்கும் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.







