03.03.2009.
மார்க்ஸிய கோட்பாட்டின் எழுச்சி காரணமாகவே சாதியத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தர்ஹா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ந.இரவீந்திரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்த போதிலும் அவரை தாழ்த்தப்பட்டவனாகவே பார்க்கின்ற நிலைமை இன்னமும் முடிவுக்கு வந்ததாகக் காண முடியவில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
இலக்கிய உலகில் “துரைவி’ என அழைக்கப்பட்ட அமரர் துரைவிஸ்வநாதனின் 78 ஆவது பிறந்த தினத்தையொட்டி கலை இலக்கிய நண்பர்களால் கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் உள்ள பழைய நகர மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட நினைவுப் பேருரை நிகழ்வில் “சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ எனும் பொருளில் நினைவுப் பேருரையை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது துரைவியின் மகன் பீ.வி. ராஜ் பிரசாத் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
விரிவுரையாளர் இரவீந்திரன் தமதுரையில் தொடர்ந்து கூறியதாவது;
“சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ இத்தலைப்பு தொடர்பிலான புத்தகமொன்றை வெளியிடுவதற்காகத் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் பேசுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறதென்று யாராவது கேட்டால் எனக்குத் தகுதியில்லை என்பது உண்மை. ஆனால், அரசன் நிர்வாணமாக போகும் போது அதை சொல்லும் தைரியம் யாருக்குமில்லாத வேளையில் ஒரு சிறுவன் சொன்னானே. அந்த சிறுவனுக்குள்ள தைரியம் எனக்குள்ளது.
ஏற்கனவே சாதியமும் மார்க்ஸியமும் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளேன். அவை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. இது தொடர்பில் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சாதியம் தற்போது அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகும். இச்சாதியம் தொடர்பான பாகுபாடுகள் நீண்ட காலமாக நமது சமூகத்தில் காணப்பட்டாலும் 1980களில் “தலித்’ சமூகம் பற்றிப் பேசப்பட தொடங்கப்பட்டது. இது தொடர்பில் கோ.கேசவன், நா. முத்துக் கோபன் ஆகியோர் ஆய்வுகள் செய்து நூல்கள் வெளியிட்டுள்ளனர்.
பிறப்பு அடிப்படையிலேயே ஒருவனின் அடையாளம் தீர்மானிக்கப்படுகின்றது தலித்தாகப் பிறந்த ஒருவன் அதி உயர் பதவியில் அமர்ந்தால் கூட அவர் அமர்ந்த ஆசனம் கழுவி தூய்மைப்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்தாலும் அவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கின்றான்.
இந்த “சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ எனும் உரைக்கு நானிட்ட உப தலைப்பு “தமிழர் வாழ்வியல் பார்வை’ ஏனெனில் இத்தலைப்பைப் பேசும் போது தமிழர் வாழ்வியல் பற்றியும் பேச வேண்டி ஏற்படுகிறது.
நிலவுடைமை சமூகத்துக்கான கருத்துடைமையே சாதியம். சாதியம் என்றால் தீண்டாமை. 80களுக்கு முன் காணப்பட்ட நிலவுடைமை சமூகத்தினுடைய எச்ச சொச்சமே சாதியம். சாதியம் பல்வேறு சமூக முறைக் கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழக் கூடியது என சாதியம் பற்றி ஆய்வு மேற்கொண்ட அறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசிய தோற்றம் பிராமண தேசியமாகவே ஆரம்பிக்கின்றது. அதன் நலனையே முன்னெடுக்கும் வகையிலுள்ளது. காந்தி, நேரு போன்றவர்களால் கூட அதை முற்றாகத் தவிர்க்க முடியாது போனது. அவர்கள் கூட தாராளவாத அரைப் பிராமண தேசியக் கொள்கையையே முன்னெடுத்தார்கள்.
அம்பேத்கரே இதற்கு எதிர் தேசியமாகத் தனித் தேசியத்தை முன்னெடுத்தார். கல்வி கற்றோர் உயர் பதவி வகிப்போர் பிராமணராக இருப்பதைக் கண்டே பெரியார் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டார்.
இலங்கையில் உருவான தமிழ்த் தேசியம் வேளாளர் தேசியமாகவே அமைந்தது. இங்கு எதிர் தேசியமாக எதுவும் அமையவில்லை. இலங்கையின் கம்யூனிஸ்ட்கள் எதிர் தேசியத்தை முன்னெடுக்காமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம். மற்றையது பண்ணை முதலாளித்துவ எதிர்ப்பு. இதனால், இங்கு எதிர் தேசியம் உருவாக்கப்படவில்லை என்றார்.
இந்நிகழ்வில் ஜானாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர், “மல்லிகை’ ஆசிரியர் டொமினீக் ஜீவா, எழுத்தாளர் கே.எஸ். சிவகுமாரன், தினக்குரல் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கவிஞர் மேமன் கவி நன்றியுரை வழங்கினார்.