பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை சென்றார். மன்மோகன் சிங்குடன் அவர் ஆலோசனை நடத்தினார். உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவும் அதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரவும் மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.
மேலும், காலியாக உள்ள சில அமைச்சர்கள் பணியிடங்களை நிரப்ப புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், மன்மோகனை சோனியா சந்தித்து பேசியதும் முக்கியத்துவம் பெறுகிறது. உணவுபாதுகாப்பு மசோதா மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டணி அரசில் மேற்கொள்ளப்படும் கடைசி அமைச்சரவை மாற்றம் இதுவாகும். ஊழல் புகார் காரணமாக மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சாலும், சிபிஐ விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பாக அஸ்வனி குமாரும் பதவி விலகினர். அதே போல் கூட்டணியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்களும் ராஜிநாமா செய்து விட்டனர்.








