பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான யுத்தமொன்றை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல் மற்றும் ஊடக சுதந்திர அடக்குமுறை ஆகியன இடம்பெறலாம் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இதுவோர் வழமையான நிலை எனவும் இதனை ஓர் அசாதாரண நிலையாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல சிங்கள ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதப் பிரச்சினை நிலவும் காலப்பகுதியில் பொதுமக்களது அடிப்படை உரிமைகளுக்கு பங்கம் ஏற்படக் கூடும் எனவும், அதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்ர். வெள்ளை வான்களின் மூலம் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதொன்றென அவர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத கொள்கைகளை கைவிட்டு, ஆயுதங்களை களைந்தால் மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து சிந்திக்க முடியும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் முனைப்புடன் காணப்படுவதாகவும், எனினும் இந்தத் தீர்வுத் திட்டம் கொழும்பு 7 இல் வசிப்போருக்கோ அல்லது மேற்குலக நாடுகளுக்கோ தேவையான வகையில் அமையப் பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.