ஜே.வி.பியின் பிளவுற்ற குழுவைச் சேர்ந்த விரசாமி லலித் குமார யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுள்ளார். நேற்று 11/12/2011 அன்று லலித் குமார கடத்தப்பட்ட வேளையில் ஆவரங்கலைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரும் அவரோரு கடத்தப்பட்டுள்ளார். இருவரும் பயணம் செய்த துவிச்சக்கர வண்டி இன்று யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னை நாள் ஜே.வி.பி உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே லலித் கடத்தப்பட்டுள்ளார். சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாண இராணுவ அதிகாரியால் அவர் எச்சரிக்கப்பட்டிருந்தாக இனியொருவிற்குத் தெரிவித்திருந்தார்.
லலித்தின் கடத்தல் தொடர்பாக மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தைச் சார்ந்த உதுல் பிரேமரத்ன யாழ்ப்ப்பாணப் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். தவிர, கோதாபய ராஜபக்சவிற்கு விலாசமிடப்பட்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லலித் குமார் கடத்தப்பட்டது இனம் தெரியாதோரால் அல்ல. மகிந்த பாசிச அரசின் இராணுவத்தாலோ அல்லது அதன் துணைக் குழுக்களாகத் தொழிற்படும் கட்சிகளாலோ தான் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் இது குறித்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் தம்மைத் தயார்படுத்துவதாக உதுல் இனியொருவிற்குத் தெரிவித்தார்.
சிங்கள மக்களுடன் இணைந்து கூட வட கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத அவல நிலைக்குள், திறந்தவெளி இராணுவச் சிறைக்குள் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். இராணுவத் துணைக்குழுக்களால் மக்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். வட கிழக்கில் மகிந்க பாசிச அரசு திட்டமிட்ட நிலப்பறிப்பை மேற்கொண்டு வருகின்றது.
இருவரின் கடத்தல் சம்பவத்தை ஆரம்பமாக முன்வைத்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்கும், இராணுவ ஒடுக்குமுறைக்குமான பிரச்சார இயக்கம் ஒன்றை முன்னெடுபட்து குறித்த குரல்கள் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.