தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்கவில்லை என கூறி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை நோக்கி காசிமேடு மகளிர் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த மீனவப் பெண்கள் 100 பேர் பேரணியாக இன்று காலை சென்றனர்.
சிதம்பரம் வீட்டை நெருங்கும் முன் மீனவப் பெண்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினரின் தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதனிடையே பல்வேறு அமைப்புகளும் போராட்டம் அறிவித்துள்ளதால் சிதம்பரம் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







