பிரித்தானியத் தேர்தலில் 36.9 வீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று பழமைவாதக் கட்சி (conservative) ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 71.4 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர். அதன் பின்னர்அதிக எண்ணிக்கையான 66.1 வீதமானவர்கள் வாக்களித்துள்ள தேர்தல் இம் முறை நடைபெற்ற தேர்தலே எனப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆக, மொத்த மக்கள் தொகையில் 24.39 வீதமானவர்களே பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என வாக்களித்துள்ளனர். அதாவது 24.39 வீதமான மக்களின் விருப்பத்துடன் 75.61 மக்களின் இணக்கமின்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பழமைவாதக் கட்சி. மொத்த சனத்தொகையில் கால்வாசிக்கும் குறைவானவர்கள் எண்ணிக்கையைக் கொண்டவர்களின் தெரிவு மக்களின் தெரிவல்ல என்றால் அதுதான் ஜனநாயகம் என்கின்றனர்.
இது ஜனநாயகமல்ல சர்வாதிகாரம் என்பதனால் தான் புதிய ஜனநாயக முறைமையை சோசலிச நாடுகள் அறிமுகப்படுத்தின. அங்கெல்லாம் மக்களின் அடிமட்டம் வரையான நேரடிப் பங்களிப்புடன் நடைபெற்ற தேர்தல் ஊடாக பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர். மேற்கு நாடுகளில் சிறுபான்மையினரின் ஆட்சியை முன்வைக்கும் பாராளுமன்ற ஜனநாயக முறையைச் சோசலிச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் சோசலிச நாடுகளின் தேர்தல் முறையைச் சர்வாதிகாரம் என மேற்கு நாடுகள் பிரச்சாரம் மேற்கொண்டன.
மன்னராட்சியின் கோரத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளின் தேசிய முதலாளிகள் சேர்ந்து அமைத்துக்கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமூகத்தின் தேவையாகவிருந்தது. இன்று அது காலாவதியாகிவிட்டது. பல்தேசியப் பெரு முதலாளிகள் தமது அடியாட்களை பிரதிநிதிகளாக நியமித்துக்கொள்ளும் சடங்கு பாராளுமன்றத் தேர்தலானது. சிறுபான்மையினரின் ஆட்சி ஜனநாயகம் என அழைக்கப்பட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்றைய பிரித்தானிய ஊடகங்கள், பழமைவாதக் கட்சிக்கும் அதன் அரசியல் நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கியுள்ளனர் எனக் கூறுகின்றன. மொத்த மக்கள் தொகையில் கால்வாசிப்பேர் கூட ஏற்றுக்கொள்ளாத பழமைவாதக் கட்சியின் ஆட்சி மக்களுக்கானதல்ல.
அப்பாவித்தனமான மக்கள் இதன் பின்னணியிலுள்ள உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அதிக எண்ணிக்கையான பாராளுமன்ற ஆசனங்களை கையகப்படுத்திய கட்சியை மக்கள் ஆதரவு பெற்ற கட்சி என்று நம்ப ஆரம்பிக்கின்றனர்.
இந்த அடிப்படை உண்மைகளுக்கு அப்பால், ஆளும் பழமைவாதக் கட்சி 331 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. அதாவது, வாக்களித்தவர்களில் 36.9 வீதமானவர்களின் வாக்குகள் 331 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
தொழிற்கட்சிக்கு (Labour) 30.5 வீதமானவர்கள் வாக்களித்து 232 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்தில் தமது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தின. இரண்டும் அவர்களின் நலன்களுக்காகவே செயற்பட்டுவரும் கட்சிகள்.
பழமைவாதக் கட்சியுடன் ஒப்பிடும் போது தொழிற்கட்சி தொழிற்சங்கங்களின் ஆதரவில் தங்கி நிற்கும் கட்சி. நீண்டகாலப் போராட்ட அனுபவங்களைக் கொண்டது. நேரடியாக பெரும் பண முதலைகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத கட்சி. பிரித்தனியாவில் மக்கள் மத்தியில் எழுச்சிகள் மற்றும் போராட்டங்கள் தோன்றும் போது அவை புரட்சியாக மாறிவிடாமல் ‘சிதைத்து’ வாக்க்குகளாக மாற்றும் திறமை கொண்டதால் தொழிற்கட்சியைப் பல்தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கின்றன.
எது எவ்வாறாயினும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரன மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக தொழிற்கட்சி மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கவும் சில சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முன்வரும். இதனால் தொழிற்கட்சிக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் குறிப்பிடத்கக்க ஆதரவு உண்டு.
கடந்த ஐந்து வருட டேவிட் கமரன் ஆட்சியென்பது, பல் தேசிய வியாபார நிறுவனங்களின் பொற்காலம். சிறு வியாபாரிகளும், உழைக்கும் மக்களும் அரசிற்கு வரிப்பணம் செலுத்தும் போது பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பித்துக்கொண்டமை கடந்த ஐந்து வருடங்களில் வெளிப்படையாகவே நடந்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உட்பட அமசோன், கூகிள், ஸ்ரர்பக் போன்ற நிறுவனங்கள் அரசின் ஆதரவுடன் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
அதே பல்தேசிய நிறுவனங்களின் நிதி உதவியுடன் 24.39 வீதமன மக்களை மீண்டும் ஏமாற்றுவது என்பது பழமைபாதக் கட்சிக்கு பெரும் சுமையாக இருக்கவில்லை.
டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சி ஆட்சியமைக்கும் தகமையைப் பெற்றதும், லண்டனிலுள்ள அக்கட்சியின் நண்பர்களான பல்தேசிய வியாபார நிறுவனங்கள் கொண்டாடின.
நேற்று அதிகாலை கண்விழித்த பிரித்தானிய உழைக்கும் மக்களில் பலர் டேவிட் கமரனும் அவருடைய கும்பலும் மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டனர் என்பதை அறிந்து அதிச்சியடைந்ததனர். பிரித்தானிய உழைக்கும் மக்கள் கமரன் கும்பலின் தாக்குதலை மேலும் ஐந்து வருடங்களுக்கு எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டு துயரடைந்தனர். பல பில்லியன்களை பல்தேசிய நிறுவனங்கள் சுருட்டிக்கொள்ள சமூகநலத் திட்டங்களைக் குறைப்பதன் ஊடாக 12 பில்லியன் பவுண்ஸ் பணத்தை மக்களிடமிருந்து பழமைவாதக் கட்சி கொள்ளையடித்ததை யாரும் மறந்துவிடவில்லை.
பழமைவாதக் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக தொழிற்கட்சியிடம் காத்திரமான எந்தத் திட்டமும் இருந்திருக்கவில்லை. தொழிற்கட்சிக்குப் பழமைவாதக் கட்சியிலும் குறைவான வாக்குகள் கிடைத்தமைக்கும், 1987 இற்குப் பின்னர் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றமைக்கும் இதுவே காணமானக் கருதப்படுகின்றது.
சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்த தொழிற்கட்சியின் பிரதமர் ரோனி பிளேயருக்கு எதிரான மக்ககள் மத்தியிலிருந்த அச்ச உணர்வு பழமைவாதக் கட்சிகு எதிராக தொழிற்கட்சியை மக்கள் முன்னால் நிறுத்தவில்லை. மாறாக, பழமைவாதக் கட்சியின் மற்றொரு அரசியல் வடிவமாகவே தொழிற்கட்சி மக்களின் எண்ணங்களில் பதிந்திருந்தது.
தேர்தலின் இறுதி நாள்வரைக்கும் தொழிற்கட்சியும், பழமைவாதக் கட்சியும் ஒரே அளவிலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் எனக் கருத்துக் கணிப்புக்கள் கூறின. தேர்தல் பிரச்சாரங்களின் இறுதிக் கட்டட்தில் தொழிற்கட்சியின் பிரதமர் வேட்பாளரான எட் மிலிபாண்ட் தான் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரானவர் அல்ல என்றும் பிரித்தானிய வங்கியான எச்.எஸ்.பி.சி பழமைவாதக் கட்சிக்கு எதிராக தமது சார்பிலிருப்பதாகவும் கூறியமை உழைக்கும் மக்கள் மத்தியில் எட் மிலிபாண்டின் முகமூடியைக் கிழித்தது.
தவிர, வெளி நாட்டவர்களுக்கு எதிரான பழமைவாதக் கட்சியின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மிலிபாண்ட், வெளி நாட்டுக் குடியேறிகளை மட்டுப்படுத்த வேறு திட்டங்கள் இருப்பதாகக் கூறினார். இவை அனைத்தும் எட் மிலிபாண்டின் ஆதரவுத் தளத்தை கேள்விகு உள்ளாக்கியது. இதனால் கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக எட் மிலிபாண்ட் தலைமை தாங்கிய தொழிற்கட்சி வாக்குகளை பழமைவாதக் கட்சியிடம் பறிகொடுத்தது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று 56 ஆசனங்களக் கைப்பற்றியதுடன் மட்டுமன்றி, வாக்களித்தவர்களில் 50 வீதமானவர்கள் அக்கட்சிக்கே வாக்களித்தனர். மொத்த சனத்தொகையில் 71 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் கடந்த தேர்தலில் 40 ஆசனங்களைக் கையகப்படுத்திய தொழிற்கட்சிக்கு 1 ஆசனம் மட்டுமே கிடைத்திருந்தது.
பிரித்தானியா முழுவதும் போட்டியிட்ட கட்சிகளில் பல்தேசிய நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிராகவும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பெரு வியாபாரிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்ட ஒரே கட்சி ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியே. வெளி நாட்டுக் குடியேறிகள் பிரித்தானியாவின் பிரச்சனையல்ல, பல்தேசியக் கொள்ளையே பிரதான பிரச்சனை என்று வெளிப்படையாகக் கூறிய ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு இங்கிலாந்திலும் ஆதரவு கிடைத்தது.
தவிர, ஸ்கொட்லாந்தைத் தனி நாடாக்குமாறு பொதுசன வாக்கெடுப்பில் பிரச்சாரம் செய்த ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி, ஸ்கொட்லாந்து மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளமை பிரிந்து செல்வதற்கான ஆதரவாகவும் கருதப்படுகின்றது. ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் கூட, இங்கிலாந்தின் பல்தேசிய நிறுவனங்கள் ஸ்கொட்லாந்தைக் கொள்ளையடிப்பதாக அக்கட்சியின் முழக்கங்களில் கூறப்பட்டது.
ஆக. மக்களின் உணர்வுகளோடு இணைந்து சென்ற ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி அந்த நாட்டு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றமை வியப்புக்குரியதல்ல.
டேவிட் கமரன் தனது வெற்றியின் பின்னர் குறிப்பிட்ட போது, தேர்தல் வெற்றி தனது அரசியல் திட்டத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்கிறார். மாற்று வழிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் டேவிட் கமரனுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழிகள் மக்களுக்கு இருந்திருக்கவில்லை.
ஆக, புதிதாக ஆரம்பமாகும் ஐந்து வருடங்களில் பழமைவாதக் கட்சியின் ஆட்சி பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆட்சியாக அமையும். உழைக்கும் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படும். வெளி நாட்டவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்.
பிரித்தானியவிற்கு வரும் புதிய குடியேறிகளே அங்குள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், அவர்களை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் கூறும் பிரித்தானிய சுதந்திரக் கட்சி (UKIP) தேசிய வெறியை (சீமான்,வை.கோ,பொதுபல சேனா போன்று) பரப்பி வருகின்ற பாசிச நிறுவனமாகும். தேர்தலில் ஒரு ஆசனத்தை மட்டுமே கையகப்படுத்தியிருந்த போதும், பிரித்தானியா முழுவதும் 12.6 வீதமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
எதிர்கால டேவிட் கமரன் ஆட்சி UKIP இன் கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே 2020 தேர்தலில் வெற்றிபெறும் நிலை ஏற்படுத்தலாம். இதனால் புதிய ஆட்சியில் புதிய சட்டங்களை வெளி நாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக எதிர்பார்கலாம்.