தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம். ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் சந்திப்பை இனிமையாக்குவதற்கும் மேலாக – தேயிலைத் தோட்டங்களைப் பற்றி நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும் நிறைய இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது, “பச்சை ரத்தம்’ என்ற ஆவணப்படம்.
கொத்துக் கொத்தாக அடிமைகளாக வாங்கப்பட்டு, பிரபுக்களுக்கு விசுவாசமாக உழைத்து, ஆலைகளில் தொழிலாளர்களாக நசுங்கி, இன்று உழைப்பிற்கான கூலியை ஓரளவிற்காவது உரத்துக் கேட்கின்ற தொழிலாளர்களின் வரலாற்றில் – ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் பஞ்சமேயிருக்காது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கையும் இதற்கு விதிவிலக்கல்ல. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – நூற்றாண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்விற்காகவும், பணிப் பாதுகாப்பு கோரியும் போராடி வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலுக்காக இலங்கை சென்ற மக்கள், அங்கு காலூன்ற முயன்றபோது, மீண்டும் தமிழகத்திற்கே விரட்டியடிக்கப்பட்டனர். நிராதரவாக திரும்பிய மக்களை ஆதரித்து அரவணைத்திருக்க வேண்டிய தமிழக அரசு, அவர்கள் தலித்துகள் என்பதாலேயே அவர்களுடைய கோரிக்கைகளைப் புறந்தள்ளியதாக, வலுவான வாதத்தை முன் வைக்கிறது “பச்சை ரத்தம்’ படம். தமிழகத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து தமிழகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளிகளின் நெடுந்துயரப் பயணமும், வலிகளும் ஆவணப்படம் நெடுகிலும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் பெற்றிராத 1840களில் தொடங்குகிறது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊசலாட்டம் மிகுந்த வாழ்க்கை. இலங்கைத் தீவை ஆண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள், மலைப் பகுதிகள் நிறைந்த அங்கு காபி பயிரிட விரும்பினர். கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்திலுள்ள இலங்கையின் மலைகள், காபி பயிரிடுவதற்கு உகந்த இடம் என்று உணர்ந்த பிரிட்டிஷ்காரர்கள் தீவை செம்மைப்படுத்த விழைந்தனர்.
இதற்காக, திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், வடஆற்காடு போன்ற மாவட்டங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக ஆட்களை ஓட்டிச் சென்றனர் கங்காணிகள். பஞ்சத்தோடும், பட்டினியோடும் போராடிக் கொண்டிருந்த மக்களை இடம்பெயர்த்துவது, கங்காணிகளுக்கு எளிதான வேலையாக இருந்தது. அவ்வாறு கூட்டங்கூட்டமாக ராமேஸ்வரம் நோக்கி நடந்தே வந்தனர் மக்கள். இதற்கு “ஆள்கூட்டி வருதல்’ என்று பெயராம். அப்படி இலங்கைக்கு பயணப்பட்ட ஆதிலட்சுமி என்ற கப்பல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடலில் மூழ்கியதாகப் பதிவு செய்கிறது “பச்சை ரத்தம்’ படம்.
உயிரை ஏந்திக் கொண்டு கடல் கடந்த மக்களை, தீவில் நிறைந்திருந்த அடர் கானகம் வெகுவாகவே அச்சுறுத்தியது. காட்டைக் கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் கடும் மழைக்கும், குளிருக்கும் பலியாகினர். 1841 ஆம் ஆண்டிலிருந்து, 1849 ஆம் ஆண்டு வரையில் இப்படி 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது வரலாறு. பலியானவர்களை இழுத்துச் சென்று, விலங்குகள் தின்று தீர்த்தபின் எஞ்சியவை எலும்புகள். எலும்புகள் உடைந்து நிறைந்த அப்பாதையே சுண்ணாம்புப் பாதை என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறது இப்படம்.
கடல், அடர் காடு என கடும் ஆபத்துகளையும் கடந்து கண்டியைச் சென்றடைந்த மக்கள், புதர் மண்டிக் கிடந்த இலங்கைத் தீவை செப்பனிடத் தொடங்கினர். உலகம் முழுவதை யும் சந்தைக் காடாகப் பார்க்கும் வெள்ளை வியாபாரிகளுக்கு, இலங்கைத் தீவை தங்கள் உழைப்பால் தங்கப் புதையலாக திருப்பிக் கொடுத்தனர் – தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளிகள்.
அதைத் தொடர்ந்து, 1881இல் 2 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கராக பரவியது காபி பயிரி. இலங்கையின் பொருளாதார ஏற்றத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்த இந்த காபி பயிர், நோய் தாக்குதலுக்குள்ளானதால் தேயிலையை பயிரிடத் தொடங்கினர் பிரிட்டிஷார். உழைப்பிற்கு சலிக்காத தொழிலாளர்களின் கரங்கள், பிரிட்டிஷாரின் விருப்பங்களை நிறைவேற்றியபடியே இருந்தன. அதன்படி, 1878இல் 4 ஆயிரத்து 700 ஏக்கராக இருந்த தேயிலைத் தோட்டங்கள், 1971 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. இலங்கைத் தீவிற்கு பெருமளவு அந்நிய செலாவணியையும், பொருளாதார ஏற்றத்தையும் பெற்றுத் தந்த தேயிலைத் தோட்டத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே சென்றது.
1911இல் 5 லட்சத்து 50 ஆயிரம் பேராக இருந்த தோட்டத் தொழிலாளர்கள், 1971இல் 11 லட்சத்து 74 ஆயிரம் பேராக உயர்ந்தனர். ஆனால், தோட்டத் தொழிலாளர் களின் கனவுகள் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் நிலை மட்டும் உயரவே இல்லை. விளைவு, புலம்பெயர்ந்த மலையக மக்கள் தங்களின் உரிமையைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போலவே இங்கும் தொழிலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டது. அவர்களின் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இனவெறியின் தொடக்கப்புள்ளி அப்போதே தொடங்கியது. உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாயினர் மலையக மக்கள். அவர்களின் குடியிருப்புகள் அந்நாளிலேயே முள்வேலியிட்டு முகாமிடப்பட்டிருந்தன. புதர் மண்டிக் கிடந்த காட்டு பூமியை, பயிர் விளையும் பூமியாக மாற்றித் தந்த மக்களை – பறத்தமிழர்கள், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று ஏளனப்படுத்தி மகிழ்ந்தது சிங்களப் பேரினவாதம். தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு விடியலும், பேரினவாதத்தின் கொடுமைகளை சுமந்து கொண்டே விடிந்தன.
1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற டி.ஏ. சேனநாயக்கா முதல், 2011 ராஜபக்சே வரைக்கும் வந்த தலைவர்கள் தமிழர்களை கருவறுக்கவே முயல்கின்றனர் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம். சுதந்திரத்திற்குப் பிறகு முதலில் ஆட்சியமைத்த சிங்கள அரசு, மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. அதன் பின்னர் அம்மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அடுத்த 1964 இல் வந்த சிறீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், மலையக மக்களை மீண்டும் தமிழ் நாட்டிற்கே திருப்பி அனுப்பத் துணிந்தது. அடுத்து வந்த சட்டமும் மலையக மக்களை கட்டாயமாக நாடு கடத்தியது. உழைப்பிற்கு கூலி பெற்று, குழந்தைகளின் பசியமர்த்தி, வசிப்பதற்கு ஓர் இடம் தேடி என எளிய கனவுகளை சுமந்து கொண்டு, கடலிலும், காட்டிலும் பாதி உயிர்களை, உறவுகளை இழந்து, தீவில் இறங்கிய மக்களிடம் உயிர் சுண்டும் அளவிற்கு உழைப்பைப் பறித்துக் கொண்டு, அவர்களை சக்கையாய் திருப்பி அனுப்பத் தொடங்கினர் சிங்கள நாட்டின் தலைவர்கள். நடப்பதை நம்ப முடியாமல் திக்கித்து செயலிழந்தனர் மக்கள். 1974களில் தலைமன்னாருக்கு மலையக மக்களை கொண்டு வந்து சேர்த்த ரயில் பெட்டிகள் “அழுகைப் பூக்கள்’ என்று அழைக்கப்பட்டதாக விவரிக்கிறது “பச்சை ரத்தம்’ படம்.
சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை முன்வைத்தபோது, மலையக மக்களை இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியாமல் தடுத்தது, தமிழ் தலைவர்களின் பிழைப்புவாதம். மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டபோதும், வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும் வீரிய குரலெழுப்பாத தொண்டைமான், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் சட்டப் பேரவையில் பெயருக்காக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அது பிரச்சனையில் வெந்து கொண்டிருந்த மக்களுக்கு முணுமுணுப்பாகக்கூட கேட்கவில்லை. மறுபுறமோ தொப்புள் கொடி உறவுகள் என்று சொந்தம் கொண்டாடும் ஈழத் தமிழர்கள்கூட, மலையக மக்களுக்கு ஆதர வுக்கரம் நீட்டவில்லை. மலையக மக்களுக்காக குரல் கொடுத்த பொதுவுடைமைக் கட்சி, நாளடைவில் சிங்கள வெறியின் கோர முகத்திற்கு முன்பு கூலிகேட்டும், உரிமைக் குரல் எழுப்பியும் குரலை அடக்கிக் கொண்டது.
இத்தகைய காயங்களை சுமந்து கொண்டு, இலங்கையிலிருந்து நிராதரவாகத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களை ஆரத்தழுவி ஆதரித்திருக்க வேண்டும்தானே தமிழக அரசு? ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட தொழில் ஆதலால், வால்பாறை, தேனி, மேகமலை, மூணாறு, மாஞ்சோலை என தேயிலைத் தோட்டங்களை காட்டிவிட்டு தன் பணிக்குத் திரும்பின அரசு எந்திரங்கள். இலங்கையில் முள்வேலியிடப்பட்ட முகாம்களில், சேரிகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு, தமிழகத்தில் மாட்டுக் கொட்டகை யும், மண் வீடும் காத்திருந்தன. எதிர்த்து குரல் உயர்த்தினால், எட்டி உதைக்க ஆயிரம் கால்கள் நீண்டன. அன்று அடங்கிய குரல் இன்று வரை மலை முகடுகளுக்குள்ளாகவே எதிரொலித்து அடங்கி விடுகிறது. இதில் அரசு தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் நிலைமை, சற்றுத் தாழ்வில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
மற்ற தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கூலி உயர்வு இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. மாதக் கணக்கில் சம்பளம் கிடையாது. ஊசியாக இறங்கும் குளிரிலிருந்து தப்பிக்க குறைந்தபட்ச உடையோ, அட்டைக் கடிகளிலிருந்து தப்பிக்க காலணிகளோ இம்மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வலிகளெல்லாம் இம்மக்கள்தம் இயல்பாக மாறிப்போனதுதான் மிச்சம். போதாத குறைக்கு ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர். வாழ்க்கையின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒதுங்க இடம் கிடைக்காத அவல நிலைக்கு தள்ளப்பட்டது, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு என அலைக்கழிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், வாழ்க்கையில் பெரும்பாடுகளை இருமுறை அனுபவித்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். ஆக, மனித இருப்பின் அடிப்படை இரண்டு நூற்றாண்டுகளாகியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என நெக்குருகிச் சொல்கிறது, “பச்சை ரத்தம்’ ஆவணப்படம்.
எண்ணற்ற பேட்டிகள், வலிமையான வசனங்கள், தொழிலாளர்களின் சோகத்தோடு பயணிக்கும் பின்னணி இசை ஆகியவை “பச்சை ரத்தம்’ படத்திற்கு வலு சேர்க்கின்றன. பொருந்தாத பின்னணிக் குரல், கூர்மையற்ற படத் தொகுப்பு என ஆவணப்படம் முழுக்க வறட்சி தென்பட்டாலும், தான் எடுத்துக் கொண்ட கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உண்மையான உழைப்பை கொட்டி யிருக்கிறார், ஆவணப்படத்தின் இயக்குநர் தவமுதல்வன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஒரு பாடமாகப் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த “பச்சை ரத்தம்’!
குறும்படம் வேண்டுபவர் தவமுதல்வனை தொடர்புகொள்ளுங்கள்
பேச : 0 98658 80160