Thursday, May 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காக கொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம்: தோழர் சி.கா.செந்திவேல்

இனியொரு... by இனியொரு...
09/11/2009
in அரசியல்
0 0
12
Home அரசியல்

senthilveelஇலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச  கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.

இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதும் தமிழ் மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமையும் உண்மையே. ஆனால் அத்துடன் யுத்தம் போராட்டம் என்பனவற்றோடு சம்மந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் விரிவு பெற்றுச் செல்வதற்கு அடிப்படையாக அமைந்த இன முரண்பாட்டு விரிசலும் பேரினவாத ஒடுக்கு முறையும் தொடரவே செய்கிறது. அதாவது இரத்தம் சிந்தும் யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறதே தவிர இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் தொடரவே செய்கிறது. அவ்வாறே பொருளாதார நெருக்கடிகளும் அவற்றின் பாரிய சுமைகளும் அனைத்து மக்கள் மீதும் பாரிய சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளன.

இனியொரு : அவ்வாறாயின் “மகிந்த சிந்தனை” அரசாங்கம், நீங்கள் கூறும் அரசியல் யுத்தத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்று கருதுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் அவர்களது பாரம்பரிய பிரதேசங்கள் மீதும் ஆயுத அடக்கு முறையைப் பேணிவருவதானது அரசியல் யுத்தத்தின் ஒரு பிரதான பகுதியாகும். அதே போன்று வடக்கில் மூன்று லட்சம் மக்களை முட்கம்பி முகாம்களில் அடைத்து வைத்து தண்டனைக் கைதிகளை விட மோசமாக நடாத்தி வருவதும் அரசியல் யுத்த அடிப்படையிலேயேயாகும். அத்துடன் இன்றுவரை அதிகாரப் பகிர்விற்கான எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்காமலே காலத்தைக் கடத்திச் செல்வதும் அரசியல் யுத்தமாகவே உள்ளது. “கிழக்கின் உதயம்” “வடக்கின் வசந்தம்” என்பன அரசியல் தீர்வை மறுக்கும் வெறும் கண்துடைப்புக்கள் மட்டுமேயாகும்.

இனியொரு : போருக்குப் பின்பான தென்னிலங்கைச் சூழல் எவ்வாறு காணப்படுகிறது? சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் மனநிலை எத்தகையதாக உள்ளது?

தோழர் செந்திவேல் : போரின் வெற்றியும் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டமையையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பொதுவான வரவேற்பைப் பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாகும். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழர்கள் நாட்டைப் பிரித்து தனித் தமிழ் ஈழத்தை அமைக்க முற்பட்டுள்ளனர் என்ற அச்சம் முன்பிருந்தே இருந்து வந்துள்ளமை. இரண்டாவது, புலிகள் இயக்கம் சிங்களக்குடி மக்கள் மீதும் அவர்களது பிரதேசங்களிலும் தொடுத்து வந்த ஆயுதத் தாக்குதல்கள். இவற்றின் காரணமாக மகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தையும் அவர்கள் கூறி நின்ற பயங்கரவாத ஒழிப்பு என்பதையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ளவே செய்தனர். அதேவேளை தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு நியாயமானதாக வழங்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதியினர் விரும்புகின்றனர் என்பதும் நிராகரிக்கக் கூடியதொன்றல்ல. இருப்பினும் போரின் வெற்றி ஊடாக தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தி தொடர்ந்தும் பதவிகளில் இருந்து வருவதைக் குறிக்கோளாகக் கொண்டே ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் செயல்பட்டு வருகின்ற பிரதான போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. போரின் வெற்றி கொடுத்துள்ள மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதாகவே உள்ளது. இப்போரின் மூலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசு யந்திரத்தின் கோரக்கரங்கள் சிங்கள மக்கள் மீது தமது வலிமையைக்காட்டி அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும் போதே அவற்றின் தாக்கத்தையும் வெற்றிக் கொண்டாட்டங்களின் எதிர் விளைவுகளையும் மக்கள் காண்பர்.

இனியொரு : தென்னிலங்கைச் சூழல் அவ்வாறெனில் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்து வருகின்றது என்பதைக் கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : பொதுவாகவே தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தின் தோல்வியானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்ட பிரிவினர் புலிகள் இயக்கத்தின் மீதான அனுதாபமாகவும் கடுமையான விமர்சனமாகவும் மக்கள் பார்க்கின்றனர். அதே வேளை தங்களை இவ்வாறு ஒரு மோசமான அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டார்களே என்ற வெறுப்பும் ஆத்திரமும் இருக்கவே செய்கிறது. வவுனியா மெனிக் தடை முகாமிலிருந்து அறுபது வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்காக வெளியே வந்த ஒரு முதியவரைச் சந்தித்தபோது மேற்கூறிய போக்கின் அம்சங்களை அவர் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர் ஒரு முது மொழியையும் கூறிவைத்தார். பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து விட்டோம். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கின் தமிழ்த் தேசிய இனம் முழுவதற்கும் பொருந்தக் கூடிய ஒரு எதிர்மறைக் கூற்றாகவே கொள்ளமுடியும்.

இனியொரு : இந்நிலைக்கு யார் யார் காரண கர்த்தாக்கள் என நீங்கள், எவ்வாறு மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் ஊடாகக் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இது தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளாக மட்டும் பார்க்கக் கூடாது. அது நமது நாட்டின் சமூக அமைப்பினதும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆனால் இதில் தனிநபர்களாகவும் ஆளும் தரப்பு தலைமையாளர்களாகவும் இருந்து வந்தவர்களின் பங்கினையும் பாத்திரத்தையும் நிராகரித்து விடமுடியாது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இன்றைய பேரினவாத நச்சு விருட்சத்திற்கான விதைகள் நாட்டப்பட்டு தகுந்த வழிகளில் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வளர்க்கப்பட்டது. அதற்குரிய சூழலையும் நல்ல பசளையும் வழங்கியவர்கள் கொலனித்துவ ஏகாதிபத்திய வாதிகள் அதனை வளர்த்து ஆளும் வர்க்கப் பலாபலன்களைப் பெற்று வந்தவர்கள் நிலவுடைமை வழிவந்த சிங்கள பௌத்த மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர். மறுதரப்பில் தமிழர் மேட்டுக்குடியினர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி உயர்வர்க்க அரசியலையே நடாத்தி வந்தனர். மேற் கூறிய இரு தரப்பினரும் சிங்கள தமிழ் உழைக்கும் மக்களின் அபிலாஷகளைக் கவனத்தில் கொள்ளாது விட்டது மட்டுமன்றி அவற்றிலிருந்து தேசியவாதக் கூக்குரல்களின் மூலம் மக்களைத் திசைதிருப்பியும் கொண்டனர். அவற்றின் எதிர் விளைவுகளையே தமிழ் மக்கள் நேரடியாகவும் சிங்கள மக்கள் மறைமுகமாகவும் அனுபவித்து வருகின்றனர் என்பதே யாதார்த்தமாக உள்ளது.

இனியொரு : இன முரண்பாட்டையும் அதன் காரணமான பேரினவாத ஒடுக்குமுறையையும் அடையாளம் காணும் நீங்கள் அதற்கு எதிரான தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கிறீர்கள். இது ஏன் என்பதை விளக்கிக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : நாங்கள் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை அடையாளம் காண்பதும் எதிர்ப்பதும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயேயாகும். எந்தவொரு தேசிய வாதத்திற்கும் அதாவது பெருந்தேசியவாதமாகிலும் குறுந்தேசிய வாதமாகிலும் அவற்றுக்கு வர்க்க அடிப்படைகள் இருந்து வருகின்றன. அவற்றை மறைத்துக் கொண்டு தேசியவாதம் பேசுவது தவறான நிலைப்பாடு மட்டுமன்றி அபாயகரமானதுமாகும். இதுவே இலங்கையின் துயரமாக கடந்த நூற்றாண்டிலும் இன்றும் தொடர்ந்து வருகின்ற யதார்த்தமாக உள்ளது. எனவே தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காக கொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம் என்பதே நமது நிலைப்பாடாகும்.

இனியொரு : அவ்வாறாயின் தமிழ்த் தேசியவாதம் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்து நிற்கவோ போராடவோ இல்லை என்று கூற முற்படுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : எதிர்த்து நிற்கவில்லை என்றோ போராடவில்லை என்றோ கூறமுற்படுவது முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முற்படும் முட்டாள் தனமாகும். நாம் கூறுவதும் ஏற்கனவே சுட்டிக் காட்டி வந்ததும் என்னவெனில் தமிழ்த் தேசிய வாதம் என்றுமே முற்போக்கான திசையில் பயணித்து அதற்குரிய பாதையில் உரிய கொள்கைகளை வகுத்து senthilveelமுன்செல்லவில்லை என்பதையேயாகும். நமது கண்ணோட்டத்தில் தேசியவாதம் என்பது முதலாளித்துவ அடிப்படைகளைக் கொண்டதும் மக்களைத் தவறான வழிகளில் இட்டுச் செல்லக் கூடியதுமாகும். நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போன்று இலங்கையில் இன்று சிங்கள தமிழ் முஸ்லீம் தேசியவாதங்கள் யாவும் மேற்கூறிய அடிப்படைகளிலேயே முன்னெடுக்கப்படுகிறது. இவற்றால் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்படுவது மட்டுமன்றி இன மொழி மத பிரதேச நிலைகளின் ஊடாக ஒருவரோடு ஒருவரை மோத வைக்கவும் முடிகிறது. இந்தப் போக்கின் ஊடாகவே தமிழ்த்தேசிய வாதப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது தவறானதும் பிற்போக்கானதுமாகும். அதுவே இன்றைய அவல நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இனியொரு : அப்படியானால் தேசியவாதத்தில் முற்போக்கான கூறுகளோ அவற்றை முன்னெடுக்கும் நிலைப்பாடுகளோ இல்லை என வாதிடுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : இல்லை அப்படி வாதிடுவது அறிவீலித்தனமாகும். தேசியவாதத்திற்கு சில அடிப்படைகள் இருப்பது போன்று குறிப்பிட்ட தூர எல்லைகளும் உண்டு. எனவே பிற்போக்கான கூறுகளைக் கொண்ட தேசிய வாதத்தால் அவ் எல்லைகளைச் சென்றடையவோ அன்றி அதனைத் தாண்டிப் பயணிக்கவோ முடியாது. ஆனால் முற்போக்கான கூறுகளைக்கொண்டுள்ள தேசிய வாதத்தால் முன்னோக்கிச் சென்று அதன் எல்லைகளைத் தாண்டியும் சோசலிசப் பரப்புக்குள்ளும் பிரவேசிக்க முடியும். அத்தகைய தேசியவாதம் எதிரியார் நண்பன் யார் என்பதைக் கண்டு பொது எதிரியை எதிர்ப்பதில் ஏனைய சக்திகளுடன் ஏற்படுத்தவே செய்யும்.

இனியொரு : நீங்கள் கூறும் முற்போக்கான கூறுகளுடனும் எல்லைகளைத் தாண்டும் பாதையிலும் தமிழ்த் தேசிய வாதம் பயணிக்கவில்லை என்று கூறினால் அது பழைய பாராளுமன்றத் தலைமைகளுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ்ப் போராளி இளைஞர் இயக்கங்கள் நீங்கள் கூறும் முற்போக்கான தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதையிட்டு என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுத்ததாக நீங்கள் கூறும் தமிழ்ப் போராளி இயக்கங்கள் சில ஆரம்பத்தில் முற்போக்கான கூறுகளை அடையாளம் காட்டுவனவாகத் தோற்றம் தந்தனவே தவிர அவர்களது கொள்கை கோட்பாடுகளில் தெளிவின்மையும் ஊசலாட்டங்களும் இருக்கவே செய்தன. தமிழ் மக்களிடையே காணப்பட்ட உள் முரண்பாடுகளிலும் சிங்கள மக்களைப் பார்த்த பார்வைகளிலும் இந்தியாவை அனுகிய முறையிலும் அவர்களின் நிலைப்பாடு தெளிவற்றதாகி விரைவாகவே பிற்போக்கான நிலைகளுக்கு சென்றடைந்தது. இந்தியாவையோ அன்றி மேற்குலகத்தையோ தாங்கள் பயன்படுத்துவதாகக் கூறி இறுதியில் இவர்களே அந்நிய சக்திகளால் பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்களாகினர். ஆதலினால் அவர்கள் பெயரளவில் ஆரம்ப நிலையில் முன்வைத்த முற்போக்கானவை என்று கூறப்படும் சகலவற்றையும் தமிழ்த்தேசிய வாதத்தில் இருந்து வந்த பிற்போக்கான கூறுகளுடன் சமரசமாகி அதற்குள் மூழ்கிப் போகினர். இறுதியில் ஒருவரோடு ஒருவர் மோதியதுடன் வழமையான தமிழ் தேசிய பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்துடன் புதிய முகவர்களாகவும் மாற்றமடைந்தனர். இவர்கள் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுடன் சமரசமாகிக் கொள்ளவும் செய்தனர்.

இனியொரு : நீங்கள் மேற்கூறியது போன்று பல தமிழ் இளைஞர் இயக்கங்கள் சீரழிந்து கொண்டமை போல் அல்லாது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்த் தேசியத்தை வித்தியாசமாக முன்னெடுத்து வந்தது என்று கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய வாதத்தின் பிற்போக்கான கூறுகளில் பெரும்பாலானவற்றைக் தங்களுடன் கொண்டிருந்தனர். அவர்கள் தமிழீழக் கோரிக்கையை பழைமைவாதப் பிற்போக்குவாத தமிழ்த்தேசியப் பாராளுமன்றத் தலைமையிடம் இருந்தே கையேற்றிருந்தனர். அதேபோன்று சகல பழைமை வாதக்கருத்தியல் நடைமுறைகளையும் உள்ளுரக் கொண்டிருந்தனர். சில விடயங்களில் குறிப்பாக சாதிய முரண்பாட்டில் தாம் முற்போக்கானவர்கள் போன்று காட்ட முற்பட்டனரே தவிர தமிழ் மக்கள் மத்தியில் அந்த முரண்பாட்டை உரியவாறு அனுகவோ தீர்க்கவோ முற்படவில்லை. அப்படிச் செய்வது தமது பலத்திற்கு பலவீனமாகிவிடும் என்றே நம்பினர். மேலும் அவர்கள் இறுதிவரை நம்பியது அமெரிக்க மேற்குலக சக்திகளையேயாகும். உலகில் எங்காவது தேசிய விடுதலையை நேர்மையாக விரும்பிய மக்களும் விடுதலை இயக்கங்களும் ஏகாதிபத்தியங்களை நம்பிக்கையான நண்பர்களாகக் கொண்டுள்ளனரா என்பதைக் காணத்தவறினர். புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த கீழ் மட்டத்தைச் சேர்ந்த சிலரிடம் தனிப்பட்ட முற்போக்கான சிந்தனைகளோ நடைமுறைகளோ ஏகாதிபத்திய எதிர்ப்போ இருந்திருக்கக் கூடும். ஆனால் தலைமையின் நோக்கிலும் போக்கிலும் தமிழ்த்தேசிய வாதத்தின் பிற்போக்கான அம்சங்களே மேலோங்கி இருந்தன. தமிழ்த்தேசிய வாதத்தின் ஆண்ட பரம்பரை அகங்காரம் புலிகள் இயக்கத்திடம் வாரிசுரிமையாகப் பெறப்பட்டிருந்தது. இதனைத் தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கு அம்சங்களை அகங்காரமாக முன்னெடுத்த அமிர்தலிங்கத்திடமும் அவரின் தொடர்ச்சியாகப் பின்பற்றிய பிரபாகரனிமும் காணக்கூடியதாக இருந்தது. அமிர்தலிங்கம் ஆயுதம் தரிக்காத பிரபாகரன். பிரபாகரனோ ஆயுதம் தரித்த அமிர்தலிங்கம் என்பதாகக் காண்பது பொருத்தமானதாகும். இதன் ஊடாக புலிகள் இயக்கத்தின் பிற்போக்கான தமிழ்த் தேசிய வாதத்தினை அடையாளம் காணலாம். ஆதலால் முப்பது வருடகாலத் தமிழர்போராட்ட வரலாற்றின் ஊடாகக் காணமுடிவது பாராளுமன்றப் பாதையில் இருந்து ஆயுதப் போராட்டத் தடத்திற்கு மாறிய பின்பும் பிற்போக்கான தமிழ்த்தேசியமே முனைப்பாக இருந்து வந்துள்ளது என்பதேயாகும்.

இனியொரு : தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதி நேர நம்பிக்கையான அமெரிக்காவின் தயவை எதிர்பார்த்திருந்த நிகழ்வை நீங்கள் ஏலவே கூறிய கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

தோழர் செந்திவேல் : விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும் மேற்குலகையும் அரவணைத்து நிற்கின்றது என்ற கண்ணோட்டம் முன்பிருந்தே பரவலாக இருந்து வந்த ஒன்று தான். அதற்கு அந்நாடுகளில் வசித்து வரும் தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத்தினர் ஒரு காரணமாவர். அதற்கு அப்பால் யூதர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற எண்கருபோன்ற ஒன்றை தமிழீழமாக உருவகப்படுத்தி அதனை அமெரிக்க மேற்குலக ஆதரவோடு வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை புலிகளின் கொள்கை வகுப்பாளர்களிடமும் தலைமையிடமும் உறுதியானதாக இருந்து வந்தது. அதற்கான ஒரு வலுவான ஆதாரமாகவே போர்க்களத்தின் இறுதி நாட்களில் அவர்கள் அமெரிக்காவின் ஓபாமா நிர்வாகத்திற்கு விடுத்த பணிவான வேண்டுகோள் அமைந்திருந்தது. இதற்கு மேல் அவர்களது அமெரிக்க விசுவாச நிலைபற்றிக் கூற அதிகம் தேவை இல்லை.

இனியொரு : தமிழ் ஈழக் கோரிக்கை சாத்தியமற்றது. அது அந்நிய ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தை ஏற்கனவே நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைத்து வந்த நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் இது பற்றி அண்மைக்காலத்தில் மட்டும் எதிர்க் கருத்து முன்வைத்தவர்கள் அல்லர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்தியா முன்னின்று பங்காளதேசத்தை பாகிஸ்தானிடமிருந்து பிரித்தெடுத்து தனிநாடாக்கியமை போன்று இலங்கையிலும் தமிழீழத்தை உருவாக்கலாம் கருத்து நிலை உருவாக்கப்பட்டது. அதனை இந்தியாவின் மூலமாகவோ அல்லது மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் ஊடாகவோ வென்றெடுக்கலாம் என்ற பெரு நம்பிக்கை ஊட்டப்பட்டது. அவ்வேளை இதனுள் உள்ளடங்கியுள்ள அந்நிய ஊடுருவல் பற்றிய அபாயத்தை முன்னெச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டி தமிழீழம் சாத்தியம் அற்ற ஒன்று என்றும் எடுத்துக் கூறினோம். ஆனால் தமிழ்த்தேசிய வாதத் தலைமைகள் தமது பாராளுமன்ற ஆசனங்களை அதிகரிக்கும் நோக்கில் இன மொழி உணர்ச்சிகளை முறுக்கேற்றி இளந் தலைமுறையினருக்கு தமிழீழக் கனவை ஊட்டினர். அவர்களும் யூதர்களையும் இஸ்ரேலையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமிழீழ மாயையைக் கட்டியெழுப்பினர்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கை பற்றி அன்று நீங்கள் எதிர்க்கருத்தைக் கொண்டிருந்த போதிலும் அதனை மக்கள் மத்திக்கு எந்தளவிற்கு பரப்புரை ரீதியாகக் கொண்டு சென்றீர்கள்?

தோழர் செந்திவேல் : எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழீழம் என்ற கருத்து நிலை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட சூழலில் மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் அதன் அரசியல் பிற்போக்குத் தனத்தையும் சாத்தியமற்ற தன்மைகளையும் மக்கள் முன் பரந்தளவில் பரப்புரை செய்தோம். அன்று தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான எமது மாக்சிச லெனினிசக் கட்சி தமிழ் மக்களிடையே கணிசமான செல்வாக்குடைய கட்சியாகக் காணப்பட்டதும் , தொழிற்சங்கப் போராட்டங்களும் காரணம். அறுபதுகளின் நடுக் கூறில் இருந்து எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை கட்சியின் தலைமையில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜனப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்த சூழலாகும். அக்கால கட்டத்தில் தமிழீழம் சாத்திய மற்றது என்பதை வலியுறுத்தி பல கூட்டங்கள் கருத்தரங்குகள் விவாதங்களை எமது கட்சி முன்னெடுத்து வந்தது. அதில் இரண்டு சந்தர்ப்பங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும். முதலாவது விவாதம் ஆனைக்கோட்டையில் பாரதி சனசமூக நிலையத்தினர் ஒழுங்கு செய்த விவாத மேடையில் இடம்பெற்றது. தமிழீழம் சாத்தியம் / சாத்தியமில்லை என்பதே தொனிப்பொருளாகும். சாத்தியம் எனக் கூறி ம.க.ஈழவேந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி சார்பான குழுவும் சாத்தியம் இல்லை என்பதை முன்வைத்து சி.கா.செந்திவேல் தலைமையிலான மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சார்பான குழுவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குத் தலைமை தாங்கிய அவ்வூர் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் மேற்படி விவாதத்தில் முன்வைக்கப்பட்ட தர்க்க நியாயங்களின் படி தமிழீழம் சாத்தியமற்றது எனவாதிட்ட குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர் என அறிவித்தார். இதனால் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படவும் செய்தது. அடுத்த விவாதம் சுன்னாகம் சந்தை மைதானத்தில் தோழர் நா.சண்முகதாசனுக்கும் அன்றைய உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.தருமலிங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றது. இதற்கு பிரபல கல்வியாளரும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபருமான ஒரேற்றர் சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அவ்விவாதத்தில் தோழர் சண் தமிழீழம் என்பது தமிழ் மக்களுக்கு கண்ணாடியில் நிலாவைக்காட்டி ஏமாற்றுவது போன்றதாகும் எனச் சுட்டிக் காட்டி அதன் சாத்தியமற்ற அம்சங்களைச் கோடிட்டுக் காட்டியிருந்தார். இவ்விரண்டு விவாதங்களும் 1975ஆம் ஆண்டில் இடம்பெற்றன. அதாவது தமிழீழப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பாகவே அதன் சாத்தியமின்மையையும் அந்நிய சக்திகளின் தலையீடுகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

இனியொரு : இவ்வாறு நீங்களும் உங்கள் கட்சியும் தமிழீழக்கோரிக்கையை நிராகரித்த சூழலில் எத்தகைய தீர்வை தமிழர் பிரச்சினைக்கு முன்வைத்தீர்கள்?

தோழர் செந்திவேல் : எமது கட்சி தமிழ் மக்களின் இனமொழி பண்பாட்டுத் தனித்துவங்களை ஏற்றுக்கொண்டு பிரதேச சுயாட்சி அமைப்பின் மூலம் இனப்பிரச்சினையை வளரவிடாமல் தடுத்து நிறுத்தி தீர்வு காணலாம் என்பதையே வற்புறுத்தி வந்தோம். பிரதேச சுயாட்சிக் கொள்கையை கம்யூனிஸ்ட்கட்சி முன்பிருந்தே பின் பற்றி வந்தது. தமிழரசுக்கட்சி சமஷ்டிக் கொள்கையை முன்வைத்த காலத்தில் 1954ல் கம்யூனிஸ்ட் கட்சியின் வல்வெட்டித்துறை மாநாடு பிரதேச சுயாட்சிக் கொள்கைத்திட்டத்தை நிறைவேற்றியது. இதுவே முழுக் கட்சியின் கொள்கையாகவும் பின்பற்றப்பட்டது. அக் கருத்து பரவுவதை தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தீவிர உணர்வுப்பிரசாரத்தால் முறியடித்தன. பிரதேச சுயாட்சியை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இனவாதத்தை வளர்க்காது முன்னெடுக்க வேண்டும் என்பதையே பொதுவாகவே இடதுசாரிகள் அனைவரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பாராளுமன்ற அதிகாரத்திற்குப் போட்டியிட்டு வந்த இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சிகள் சிங்கள பௌத்த அத்தகைய தீர்வு ஏற்படுவதை நாசப்படுத்தியே வந்துள்ளமை தான் வரலாறாகும்.

இனியொரு : இலங்கையின் இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினையில் நேர்மையாக நடக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகிறதே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : பொத்தாம் பொதுவாக இடதுசாரிகள் என்று கூறப்படுவது வலதுசாரித் தமிழ்த்தேசியவாத சக்திகளது குற்றச் சாட்டாகும். இந்த நாட்டில் இடதுசாரி இயக்கம் பொதுவாகவே அறுபதுகளின் நடுக் கூறுவரை இனப்பிரச்சினையில் நேர்மையாகவே நடந்து வந்துள்ளன. மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட வேளையிலும் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்னும் பிற தமிழ் முஸ்லீம் மலையக மக்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளின் போதும் இம் மக்களின் பக்கமே இடதுசாரிகள் உரத்துக் குரல் கொடுத்து வந்தனர். அவ்வேளைகளில் எல்லாம் இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கவோ ஆதரவு தரவோ தமிழர் தலைமைகள் முன்வரவில்லை. அதன் பின் இடதுசாரிகள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத வழியில் செயல்படத் தொடங்கிய காலம் முதல் தேசிய இனப்பிரச்சினையில் சறுக்கல்களையும் ஊசலாட்டங்களையும் கடைப்பிடித்து பேரினவாத சக்திகளின் முன் குரலற்றவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது நிலைப்பாட்டிற்கு அப்பால் நேர்மையான இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினையில் உறுதியாகவும் நேர்மையாகவும் வழிநடந்து வந்துள்ளனர் என்பது திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டினை கனடாவின் மின்ரொபா பல்கலைக்கழகப் பேராசிரியரான ரவி வைத்தீஸ்பரா ஆய்வு செய்த நூல் ஒன்று பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனியொரு : உங்களுடைய கட்சி தேசின இனப்பிரச்சினையில் முன்வைத்த கொள்கை நிலைப்பாடும் நடைமுறை வேலைகள் பற்றியும் சுருக்கமாகக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : எங்களுடைய கட்சியான புதிய ஜனநாயக கட்சி 1978ஆம் ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. அது தோற்றம் பெற்ற சூழலானது பௌத்த சிங்களப் பேரினவாதம் ஜே.ஆரின் தலைமையில் ராணுவ ஒடுக்குமுறையாக முன்தள்ளப்பட்ட காலப்பகுதியாகும். அதேபோன்று தமிழ்த் தேசியவாத தலைமையிடம் இருந்து ஆயுதப்போராட்ட இளைஞர் இயக்கங்கள் தமிழீழக் கோரிக்கையை தமதாக்கி முன்னெடுத்து வந்த காலமுமாகும். இந்நிலையில் எமது கட்சி ஒடுக்கப்படும் அனைத்து உழைக்கும் மக்களின் கட்சி என்பதால் தேசிய இன ஒடுக்கு முறையையும் எதிர்த்தே நின்றது. அதேவேளை பிரிவினையின் அடிப்படையிலான தமிழீழக் கோரிக்கையை சாத்தியமற்ற ஒன்று என்றும் பிற்போக்கானதென்றும் நிராகரித்துக் கொண்டது. இதன் காரணமாக தேசிய இனப்பிரச்சினையில் சுய நிர்ணய உரிமை பற்றிய வரையறைகளை வளர்த்தெடுப்பதில் தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை யதார்த்தத்தின் வாயிலாகவும் கட்சி தனது நிலைப்பாட்டை முன்வைத்து வலியுறுத்தி வந்தது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சுயாட்சியை கட்சி வலியுறுத்தியது. அத்தகைய சுயாட்சி அமைப்பின் கீழ் முஸ்லீம் மக்களின் தனித்துவங்களையும் தன்னடையாளங்களையும் பேணரக் கூடிய சுயாட்சி உள்ளமைப்பை ஒரு அலகாகக் கொள்ளல் வேண்டும் என்பதையும் முன்வைத்தது. அவ்வாறே மலையக மக்களுக்கான சுயாட்சி உள் அமைப்புகளை சுயாட்சி அலகுகளாக மலையகப் பிரதேசத்தில் உருவாக்குவதையும் கட்சி முன்வைத்தது. இத்தகைய சுயாட்சியானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சி தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் வலியுறுத்தி நின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

இனியொரு : இவ்விடத்தில் உங்கள் கட்சி முன்வைத்துள்ள தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருந்து வருகின்றது என்ற வரையறை எந்தளவுக்கு சரியானது என்பதை விளக்க முடியுமா?

தோழர் செந்திவேல் : தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக வளர்ச்சி பெற்றுள்ளது என்ற எமது நான்காவது தேசிய மாநாட்டின் வரையறுப்பானது இலங்கையின் சமூக முரண்பாடுகளினதும் அவை தோற்றுவித்த பாரிய பிரச்சினைகளிலிருந்தும் பெறப்பட்ட ஒன்றாகும். அதாவது இலங்கையின் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டின் வளர்ச்சியையும் முனைப்பையும் மழுங்கடிக்கும் வகையில் இனமுரண்பாடு யுத்தமாக்கப்பட்டும் அரசியல் தீர்வு இன்றியும் தொடரப்படுகிறது. சகல முனைகளிலும் தேசிய இனப்பிரச்சினை கூர்மையாக்கப்பட்டுள்ள சூழலிலேயே அது பிரதான முரண்பாடாகியது. வெறுமனே புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையிலான போராட்டத்தால் மட்டும் அது பிரதான முரண்பாடாகவில்லை. அவ்வாறு யாராவது பார்த்தால் தேசிய இன முரண்பாட்டின் அடிப்படைகளை மறுத்து தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினையையும் இருப்பையும் எதிர்காலத்தையும் குறுக்கிப்பதாகும். இன்றும் கூட அதாவது யுத்தம் முடிவுற்று புலிகள் இயக்கத்தலைமை அழிக்கப்பட்ட பின்பும் கூட இப்பிரதான முரண்பாடு என்பது நீடித்துவரவே செய்கின்றது. இது இன்றைய அரசியல் யதார்த்தமாகவே உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு அரசியல் அமைப்பு வாயிலாகவும் நடைமுறை வழிகளிலும் செயல்படுத்தப்படும் சூழலிலேயே தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடு என்ற இடத்திலிருந்து கீழிறங்கி தாழ்நிலைக்கு வர முடியும். அப்போதே அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு முனைப்படைந்து அனைத்து உழைக்கும் மக்களும் தமது வர்க்க ஐக்கியத்தின் மூலம் வெகுஜனப் போராட்டப் பாதையில் முன்சென்று கொள்ள முடியும்.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பிரதான முரண்பாடாகவும் யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் வளர்ச்சிபெற மூன்று சக்திகள் காரணமாக நின்றன பற்றி நீங்கள் முன்னைய அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதுபற்றி சிறிது கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை கடந்த முப்பது ஆண்டுகளாகக் கொடிய யுத்தமாகவும் அழிகரமான ஆயுதப் போராட்டமாகவும் நீடித்து வந்ததில் மூன்று தரப்பினர் முக்கிய பங்குதாரர்கள் ஆவர். 1 – இலங்கையின் நிலவுடைமை வழிவந்த பௌத்த சிங்களப் பேரினவாத முதலாளித்துவ மேட்டுக்குடி உயர்வர்க்க ஆளும் வர்க்க சக்திகள். 2 – தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தொடர்ந்து முன்னெடுத்து வந்த குறுந்தேசியவாத நிலைப்பாடு. 3 – இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் அமெரிக்க – மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும் பின்னால் இருந்து செயற்பட்டு வந்தமையாகும். அதன் மூலம் இம் மூன்று தரப்பினரும் தத்தமது வர்க்க நலன்கள் தேவைகள் தத்தமக்குரிய இருப்பு எதிர்காலம் என்பனவற்றைப் பேணிப்பாதுகாத்தும் கொண்டனர். அதேநேரம் கடந்த முப்பது வருடகால யுத்தத்ம் போரட்டத்தில் ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் மக்களே இழப்புக்களையும் அழிவுகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையானது பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் முரண்பாடுகளை மேலும் வளர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் முஸ்லீம் உறவுகள் சீர்குலைந்துள்ளன. இவற்றுக்கான காரணங்களை எவ்வாறு இனம் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கைத்தீவில் ஏற்கனவே இனமுரண்பாட்டின் தீவிரத்தாலும் பேரினவா ஒடுக்குமுறையாலும் அதை எதிர்ப்பதாகக் கூறி நின்ற தமிழ்த் தேசியத்தின் குறுநிலைக் நிலைப்பாடுகளாலும் தமிழ் சிங்கள உறவுகள் உடைந்து பகைநிலையாக்கப்பட்டன. அதன்பின் தமிழ் முஸ்லீம் உறவு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. இதில் பிரித்தாளும் ஆளும் வர்க்க சூழ்ச்சி ஒருபுறம் என்றால் தமிழ்த் தேசியத்தின் குறுந்தேசிய நிலைப்பாடு குறிப்பாக தமிழீழப் புலிகளின் செயற்பாட்டால் அந்த உறவு உடைக்கப்பட்டது. பலை நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதே உண்மை நிலையாகும். மேலும் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையகத் தேசியங்கள் ஒவ்வொன்றும் தம்முள் கொண்டுள்ள பிற்போக்கான கூறுகளை முன் தள்ளியவாறே தேசிய இனப்பிரச்சினையில் கொள்கை வகுத்து நிற்கின்றன. அத்தகைய கொள்கைகள் உயர்வர்க்க வசதிபடைத்தவர்களின் பதவிகளுக்கும் சொத்து சுகபோக வாழ்வுக்குமே வசதியளிப்பனவாக உள்ளனவே அன்றி அனைத்து மக்களினதும் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அல்ல என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களின் ஊடாகத் தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் சாதிய வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது?

தோழர் செந்திவேல் : தமிழீழக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தியவர்களின் பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக வேகமான இன உணர்வை முறுக்கிக் கொண்ட வசதி வாய்ப்புகள் பெற்றவர்களும் “ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளவேண்டும்” என முழக்கமிட்டவர்களும் வேளைக்கே புலம்பெயர்ந்து கொண்டனர். அவர்களுக்கென்ன போய்விட்டார்கள் அகப்பட்டவர்கள் நாங்களல்லோ என்ற நிலைக்கே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளானார்கள். அவர்களே தமிழீழப் போராட்டத்தின் இடி தாங்கிகளாகுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அழிவுகளையும் இழப்புக்களையும் அதிகளவிற்கு அம்மக்களே பெற வேண்டியதாயிற்று. இதனை தழிழ்த் தேசியவாதத்தின் போலி முழக்கங்களுக்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று சாதிய வர்க்க நிலைகளின் ஊடே காண்கின்றனர்.

இனியொரு : நீங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் கூறினீர்கள். அப்படியானால் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகின்றீர்களா? அப்படி இல்லையெனில் புலம் பெயர்ந்ததன் மூலம் ஏற்பட்ட சாதக பாதக நிலை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே கூறிய பிரிவினர் தமிழர்கள் மத்தியிலிருந்து சென்ற வசதி வாய்ப்புக்கள் கொண்ட மேட்டுக்குடித் தமிழர்கள் பற்றியே அன்றி நாட்டின் ஒடுக்கு முறையினாலும் குடும்ப சூழலாலும் பல்வேறு துன்ப துயரங்களுடன் புலம் பெயர்ந்த தமிழர்களை அல்ல என்பது புரியப்பட வேண்டும். கடந்த முப்பது வருடகால யுத்த சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் உறவுகளுக்கும் பொது நன்மைகளுக்கும் தாராளமாக உதவி வந்தனர். அதன் மூலம் பட்டினிச் சாவு ஏற்படும் சூழல்கள் தவிர்க்கப்பட்டமை சாதகமான அச்சமேயாகும். அதேவேளை போராட்டத்தின் பெயரால் புலப்பெயர்ந்த மக்களிடமிருந்து நிர்ப்பந்தப்படுத்திப் பெறப்பட்ட பெருந்தொகையான பணம் தேவையற்ற வழிகளில் சமூகப் பயன்பாடற்ற விதத்தில் அழிவுகரமான செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டமை பாதகமான அம்சமாகும். புலம்பெயர்வு தனிப்பட்ட குடும்பங்களின் உயர்சிக்கு உதவிய அதேவேளை தமிழ்த்தேசிய இனத்தின் இழப்புக்கும் எதிர்காலத்திற்குமான வேர்களை அறுபடவைத்துள்ளமை பாதகமானதாகும்.

இனியொரு : இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறைக்கு முகம்கொடுத்து வரும் முஸ்லீம் மலையக மக்களின் விடுதலைக்குத் தீர்வாக நீங்கள் எதனை முன்வைக்கின்றீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறை காரணமான தேசிய இனப்பிரச்சினை என்பது தனியே தமிழ்த்தேசிய இனத்திற்குரிய பிரச்சினையாக மட்டும் நாம் பார்க்கவில்லை. முஸ்லீம் தேசிய இனத்தையும் மலையகத் தேசிய இனத்தையும் உள்ளடக்கியுள்ள பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. எனவே தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு என்பது அவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; என்பது தீர்வின் முன்நிபந்தனையாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். அத்தீர்வு நிச்சயம் சுயநிர்ணய உரிமைக்குட்பட்ட சுயாட்சித் தீர்வாகவே இருக்க வேண்டும்.

இனியொரு : சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் பேரினவாத மாயைக்குள் சிக்கியிருப்பதால் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்கிற கருத்து நிலைபற்றி உங்கள் கண்ணோட்டம் எத்தகையது?

தோழர் செந்திவேல் : சிங்கள மக்கள் அவ்வாறு பேரினவாத மாயைக்குள் சிக்குண்டு இருப்பதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் பிரதான காரணம். புவிசார் அரசியல் காரணங்களும் அவற்றை ஊதிப் பெருப்பித்து வரும் பேரினவாத சக்திகளின் பரப்புரைகளும் அடுத்த காரணமாகவுள்ளன. இந்நிலையில் இன மத மொழி நிலைகள் சார்ந்த கொள்கை நடைமுறைகளுக்கு அப்பாலான அனைவரும் இலங்கை மக்கள் இலங்கையின் சுபீட்சமும் எதிர்காலம் என்னும் அடிப்படையிலான கொள்கையினை முன்னெடுக்க வேண்டும். இது கடினமான காரியமாகிலும் சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் புதிய அடித்தளம் பழைய பட்டறிவுகள் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது பல்லினத் தேசியமாகவும் அதனை ஏற்றுக் கொண்ட நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையும் முயற்சியும் அவசியம்.

இனியொரு : நீங்கள் கடந்த முப்பது வருட யுத்தத்திற்கு பங்களித்த மூன்று சக்திகள் பற்றி ஏலவே கூறியிருந்தீர்கள். அதில் ஒன்றான இந்திய அமெரிக்க மேற்குலக சக்திகளின் பாத்திரம் பற்றிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : அன்று 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக தமிழ் ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே அதனை வென்றெடுக்கும் பிரதான நம்பிக்கையாக இந்தியாவே கொள்ளப்பட்டது. அத்துடன் அமெரிக்க மேற்குலக ஆதரவும் அரவணைப்பும் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இக்கோரிக்கையையும் அதற்கு பின்னால் இளைஞர் சக்தி ஆயுதம் தூக்கி நிற்பதையும் வெகுவாக ஆனால் மறைமுகமாக ஆதரித்தன. அதன் மூலம் தமது நீண்டகால உட்கிடக்கைகளை நடைமுறையாக்கி அறுவடையாக்கிக் கொண்டனர். 1. தமிழர்கள் மத்தியில் அறுபதுகளில் உருவாகி வந்த இடதுசாரிப் புரட்சிகரப் போராட்ட சிந்தனையில் இருந்து தமிழ் இளைஞர்களைத் திசை திருப்புவது. 2. தூர நோக்கில் புரட்சிகர சக்திகளாக வளரக்கூடிய தமிழ் மக்களிடையேயான இளந் தலைமுறையினரை அழிவுகளுக்கு உள்ளாக்குவது. 3. இனமோதலை உக்கிரப்படுத்தி அதன் ஊடாகத் தத்தமது பொருளாதார அரசியல் பண்பாட்டு ஆதிக்கங்களை நிலை நிறுத்துதல். 4 ஆயுத விற்பனையை அதிகரித்தல் முப்பது வருடகால யுத்தத்தை ஒருவர், சமூக நிலைசார்ந்தும் வரலாற்று நோக்கில் காண்பாரானால் மேற்கூறியவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்காது.

இனியொரு: சீனாவின் பங்களிப்பு அல்லது உள்நுழைதல் பற்றி என்ன கூறுகிறீர்கள்.

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையின் முப்பது வருட யுத்தத்தில் இந்திய அமெரிக்க மேற்குலக ஆதிக்கப் போட்டியே முக்கியமானதாகும். அதே வேளை சீனா தடம்மாறிய சோஷலிசப் பொருளாதாரப் பிறள்வுகளுக்கு ஏற்ப தனது பங்கிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாகத் தன்னை வலுப்படுத்தி ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த இடத்தைத் தக்கவைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டது என்பது ஏற்கக் கூடியதாகும். ஆயுத விற்பனை முதல் அபிவிருத்தித் திட்டங்கள் வரை ஒரு தொடர்ச்சியைச் சீனா கொண்டிருந்தது. அவை இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளின் நோக்கையும் போக்கையும் கொண்டிருந்த அளவுக்கு அல்ல என்பதே இதுவரையான மதிப்பீடாகும். ஆனால் மேற்கூறிய சீனப் பூச்சாண்டியைப் பெரிதாகக் காட்டியே தத்தமது கால்களை மிக உறுதியாக இலங்கையில் பதித்து வருகின்றன என்பது காணக் கூடியதேயாகும். எம்மைப் பொறுத்தவரை எத்தகைய அந்நிய ஆதிக்க சக்திகளும் எந்த வடிவில் இலங்கைக்குள் ஊடுருவல் செய்தாலும் அதனை நிராகரிப்பதும் எதிர்ப்பதுமே எமது நிலைப்பாடாகும். அதற்கு சீனாவோ அன்றி பாகிஸ்தானோ எவ்வகையிலும் விதிவிலக்காக இருக்க முடியாது.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் மாக்சிச லெனினிச அடிப்படையிலான கொள்கையும் நடைமுறையும் பற்றிக் கூறுங்கள்.

தோழர் செந்திவேல் : இவ்விடயத்தை எமது கட்சி ஏற்கனவே தனது மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்குரிய மார்க்கத்தையும் வகுத்து முன்வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையான தமிழர் போராட்ட வரலாற்றை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தி நான்காவது கால கட்டத்திற்கான பாதையையும் சுட்டிக் காட்டியுள்ளது. 1. பொன்னம்பலம் சகோதரர்களின் காலம் முதல் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைக்கப்பட்டு வெற்றிபெற முடியாது போன காலம்வரை முதலாவது காலகட்டமாகும். 2. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அது வெற்றியளிக்காது தமிழீழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலம் வரை இரண்டாவது காலகட்டமாகும். 3. தமிழீழக் கோரிக்கையை தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஆயுதம் போராட்டம் மூலம் வென்றெடுக்க முற்பட்டு இறுதியில் வே.பிரபாகரன் தலைமையில் போராடி அண்மையில் அழிவுற்றது வரையான முப்பது ஆண்டுகள் மூன்றாவது கால கட்டமாகும். 4. எனவே நான்காவது காலகட்டமாக அமைய வேண்டியதும் செல்ல வேண்டியதும் தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் தலைமையிலான கொள்கையும் வெகுஜனப் போராட்ட மார்க்கமுமேயாகும். இப்போராட்டத்தின் இலக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சியை வென்றெடுக்க மக்களை ஐக்கியப்படுத்தி முன் செல்வதாகவே அமைய முடியும். தமது சொந்தத் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் இவ் நான்காம் கட்டப்போராட்ட மார்க்கத்தில் சுயாட்சி என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் பிரிவினை அல்ல. அவை சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் முழு இலங்கையின் சுதந்திரத்தையும் சுபீட்சத்தையும் அடி ஆதாரமாகக் கொண்டவை என்பதை சிங்கள மக்கள் மத்தியில் விளக்கிப் பதியவைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் வாழ்வுரிமைகளையும் அபிலாஷைகளையும் உள்ளடக்கி நிற்பதனையும் விளங்க வைக்க வேண்டும். இதில் சிங்கள மக்கள் மத்தியிலான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் முக்கிய பாத்திரம் வகிக்குமாறு இணைத்துச் செல்லப்பட வேண்டும். இதனையே எமது கட்சி தேசிய இனப்பிரச்சினைக்குரியதும் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டியதுமான அரசியல் பாதை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

இனியொரு : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் “நாடு கடந்த தமிழீழ அரசு ” பற்றி முன்வைக்கப்படும் கொள்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் “நாடு கடந்த தமிழீழ அரசு “உருவாக்குவது என்ற எண்ணக்கரு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரினதும் விருப்பம் அன்று. அது அங்கு வாழும் மேட்டுக்குடி ஆண்ட பரம்பரையினராகத் தம்மைக் கருதும் உயர் வர்க்கத்தினரின் ஆழ்மன விருப்பேயாகும். இது யூத சியோனிச வழியில் இஸ்ரேலை உருவாக்கிய சிந்தனை மரபுக்கு உட்பட்டதாகும். அவ்வாறாயின் அத்தகைய எண்ணக் கருவிற்கு ஏகாதிபத்திய அரவணைப்பும் உள்ளார்ந்த சதி ஆலோசனைகளும் இருக்கவே செய்யும். இத்தகைய போக்கு இலங்கைத் தமிழர்களை அபாயகரமான நிலைக்கு மீண்டும் தள்ளிக் கொள்வதாக அமைவதுடன் நியாயமான அவர்களது சுயாட்சிக்கான போராட்டத்தையும் அதன் மூலமாகக் கிடைக்கக் கூடிய நியாயமான அரசியல் தீர்வையும் இல்லாமல் செய்யக் கூடியதுமாகும். தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான எதிர்காலக் கொள்கையையும் போராட்ட மார்க்கத்தினையும் தமது சொந்த மண்ணில் கடந்த காலப் பட்டறிவின் ஊடாகத் தீர்மானிக்க வேண்டுமே தவிர புலம் பெயர்ந்த மேட்டுக்குடித் தமிழ்க் கனவான்களும் கனவாட்டிகளும் தீர்மானித்து திணிக்கக் கூடிய ஒன்றாக. இருக்க முடியாது. சாத்தியமற்ற தமிழீழக் கோரிக்கைக்காகத் தமிழ் மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் வரையான உயிர்களை இழந்துள்னர். சுமார் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் விடுதலையின் பெயரால் சகல இயக்கங்களினதும் போராளிகளாகி மடிந்து கொண்டனர். பல ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். ஐந்து லட்சம் பேர்வரை ஏற்கனவே இடம்பெயர்ந்து சொந்த இடங்களை இழந்துள்ளனர். தற்போது மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி முகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். முப்பது வருடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியுள்ள தமது வாழ்வாதாரச் சொத்துக்களை இழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் கணவன் மாரையும் பிள்ளைகளையும் இழந்து பெண்களின் அவலக்குரல்கள் இன்னும் வடக்கு கிழக்கில் கேட்ட வண்ணமே உள்ளன. அங்கவீனர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் பேராக உள்ளனர். இத்தனை அழிவுகளின் அவலங்களும் தாக்கங்களும் இரத்தக்கறைகளும் மாறவோ அல்லது மாறுவதற்கான எவ்வித தீர்வோ திட்டமோ ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த அழிவுக்கு வழிகோலும் ஒன்றாகவே “நாடுகடந்த தமிழீழ அரசை ” புலம்பெயர்ந்த சிலர் முன்வைக்கிறார்கள். இதனை இவர்கள் ஒருமுறை இந்த மண்ணில் வந்து வவுனியாவிலோ வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்கள் மத்தியில் முன் வைப்பார்களானால் என்ன இடம்பெறும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இனியொரு : இப்பேட்டியின் முடிவாக நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் கொள்கைகளை தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏற்று செயல்படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழர்கள் மத்தியில் இறுகிப்போன பழைமைவாதச் சூழலில் நிலவுடைமை வழிவந்த முதலாளித்துவ உயர் வர்க்கச் சிந்தனையின் தாக்கம் அரசியலிலும் இருந்து வருவது உண்மையேயாகும். இருப்பினும் அவர்கள் மத்தியில் சுரண்டப்படும் உழைக்கும் மக்களும் சாதியரீதியில் அடக்கப்படும் சமூக நீதி மறுக்கப்படும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். அத்தகைய மக்கள் மத்தியில் ஏற்கனவே எமது கட்சிக்கு பரவலான ஆதரவுத்தளம் இருந்து வருகிறது. அதனை விஸ்தரித்து எமது கொள்கைகளை அனைத்து மக்கள் மத்திக்கும் எடுத்துச் செல்வோம் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறது. எனினும் இது கடுமையான எதிர் நீச்சலும் சவாலுமாகும். சமூக முரண்பாடுகளை சரியான படி அடையாளம் கண்டு உரிய கொள்கைகள் மூலம் போராட்டமார்க்கத்தை முன்வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒரு மாக்சிச லெனினிசக் கட்சி என்ற நிலையில் எமக்குரியதாகும். அதனை ஏற்பதும் முன்னெடுத்துச் செல்ல முன்வருவதும் மக்களைப் பெறுத்த விடயமாகும் இதில் தமிழ் இளைஞர் இயக்கங்கள் போன்றோ புலிகள் இயக்கம் போன்றோ நாம் மக்களுடன் நடந்து கொள்ள முடியாது. அது நமது மாக்சிச லெனினிச வழிமுறையும் அல்ல நெறிமுறையும் ஆகாது. பொறுமையாகவும் நிதானமாகவும் மக்கள் மத்தியில் கடந்த கால அனுபவாயிலாகவும் பட்டறிவுகளின் ஊடாகவும் வெகுஜன அடிப்படையிலான அரசியல் வேலைகளை முன்னெடுத்துச் செல்வோம் இதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கைது:புதிய தகவல்கள்!

Comments 12

  1. cherankrish says:
    17 years ago

    கொங்சங்காலமாகவே இந்தக்கட்சியைப்பற்றிக்கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.உண்மையிலேயே சாதாரண இலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து விலகிநிற்கிறது.ஆனால் இவர்களின் கொள்கைகள்; இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இல்லை.மாக்சியம் லெனினிசம் என்பதெல்லாம் இப்பத்தய மக்களுக்குப்புரியுமோ தெரியவில்லை.புரியாத பதங்கள் புரியாத கொள்கைகள் எல்லாம் உங்களை சனங்களிடமிருந்து அப்புறப்படுத்திவிடும்.இவ்வளவுகாலம் கொள்கைபரப்பி நீங்கள் ஈர்த்த கூட்டத்தை நாளைக்கு பேஸ்புக்கில் ஒரு கணக்குத்தொடங்கி கொள்கை பரப்பும் ஒரு போலிக்கட்சிபெற்றுவிட முடியும்.

    உங்கள் கொள்கைகள் காலத்திற்கு ஏற்றாற்போல ஜனரஞ்சகமாக இல்லை.சாதராணமக்களுக்கு விளங்கக்கூடியதுமாதிரி இல்லை.”அதனை ஏற்பதும் முன்னெடுத்துச் செல்ல முன்வருவதும் மக்களைப் பெறுத்த விடயமாகும்” இப்படிச்சொல்லிவிட்டு போய்விட முடியாது.அது மக்களுக்கு இன்றியமையாததாயின் அவர்களுக்கு புரியவைக்கவும் ஏற்றுக்கொள்ளச்செய்யவும் நீங்கள் பாடுபடவேண்டும்.பாடசாலைச்சிறுவனுக்கு ‘உலகை உலுக்கிய பத்துநாட்கள்” எவ்வளவு கொடுமையாக இருக்குமோ அப்படி இருக்கும் உங்;களது கொள்கைகளை விளங்கிக்கொள்வது சாதாரணமக்களுக்கு

  2. shatthiyanathan says:
    17 years ago

    //அமிர்தலிங்கம் ஆயுதம் தரிக்காத பிரபாகரன். பிரபாகரனோ ஆயுதம் தரித்த அமிர்தலிங்கம் என்பதாகக் காண்பது பொருத்தமானதாகும் // செந்திவேல்.

    செந்தில்வேல் உங்கள் செவ்வி இலங்கை இனப்பிரச்சினையை சிக்கல்களை எதிர்காலத்தை தெளிவாக்கியுள்ளது. இவ் செவ்வியை இனியொரு பல்வேறு இடங்களுக்கு பரவலாக்கவேண்டும். செந்தில்வேல் நீங்கள் அமிர்தலிங்கம் பற்றி கூறியுள்ள விடயம் உண்மையானது. அமிர்தலிங்கத்தோடு சிலகாலம் பழகியுள்ளேன். புலிகளுடைய தவறான போக்குக்குஅமிர்தலிங்கம் முக்கிய காரணம். அமிர்தலிங்கம் நீங்கள் சொன்னதுபோல் ஆயுதம் த ரிக்காத பிரபாரன்தான். இதை இன்று எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆனால் அமிர்தலிங்கத்தோடு நெருங்கி பழகியவாகள் இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள்.

  3. Thiru says:
    17 years ago

    தோழர் செந்திவேல் வழங்கிய பேட்டி சிறப்பாக உள்ளது.

  4. Hariharan says:
    17 years ago

    இனியொரு தோழர்களே தோழர் செந்திவேல் அவர்களின் பேட்டிக்கு எனது எண்ண பகிர்வை பதிவிட சென்ற வாரம் முயன்றும் அப்பதிவை இப் பகுதியினுள் இடமுடியவில்லை. என்னைப்போல் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம். இன்றுதான் பதிவை ஏற்றுக்கொள்ளுகின்றது. ஏதாவது தொழில்நுட்ப கோளாறோ தெரியவில்லை தோழர்கள் அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளல் நல்லது.

  5. இனியொரு says:
    17 years ago

    இன்றுதான் தோழர் ஒருவர் தொலைபேசிவாயிலாக இங்கு பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதை தெரியப்படுத்தினார். தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. ஏற்பட்ட தவறுக்காக மனம் வருந்துகின்றோம்.

  6. manoharan says:
    17 years ago

    தோழர் செந்தில்வேல் அவர்களிடம் ஒரு கேள்வி, உலகமயமாதலின் உற்பத்தி உரவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும். தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு?

  7. mohan says:
    17 years ago

    தோழர் செந்திவேலின் பேட்டி இலங்கையின் இன்றைய நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒடுக்கும் பெளத்த சிங்கள பேரினவாதத்தையும் தமிழ் குறுந்தேசிய வாதத்தையும் அவற்றினால் இடம் பெற்ற 30வருட யுத்தம் போராட்டம் என்பன வற்றை காட்டமாக விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றோ கூறமுடியும் இப் பேட்டியினை விழங்க முடியாதவர்களுக்ககு தமிழ் நாட்டின் சினிமா வசனங்கள் மட்டுமே விழங்க முடியுமே தவிர சமுக அரசியல் விடையங்களை விளங்கிக் கொள்ள முடியாது.

  8. mathan says:
    17 years ago

    //தோழர் செந்தில்வேல் அவர்களிடம் ஒரு கேள்விஇ உலகமயமாதலின் உற்பத்தி உரவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும். தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு//

    மனோகரனின் கேள்வி ஆக்கபூர்வமானது. செந்தில்வேல் போன்றவர்கள் இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிப்பதனூடாக விவாதத்தை மேற்கொண்டு சாpயான வழியில் திசைப்படுத்த முடியும். எல்லாத் தளங்களையும் போல இனியொருவும் பின்னூட்டங்களைக் காணாது என்று நம்புகிறேன்.

    இந்த விவாதத்தை தொடர செந்தில்வேலிடமிருந்து பதிலைப் பெற்றுப் பிரசுரிக்க வேண்டிய பணி இனியொரு ஆசிரியருக்கு உண்டு.

  9. thiru says:
    17 years ago

    இன்னொரு கேள்வி:
    தமிழ் பேசும் மக்களின் விடுத்லைக்கு, தேசிய விடுத்லைப் போராடம் என்பது அவசியமானதா? தேசிய இயக்கங்கள் தேவையா??

  10. Yaathavan says:
    17 years ago

    தோழர் செந்தில்வேல் தெளிவான ஒரு நேர்காணலை வழங்கி உள்ளார் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய பாதை குறித்து நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். நானும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

    1. தமிழ் மக்களின் புதிய போராட்ட மார்க்கம் எது?

    2. 9/11 க்கு பிந்திய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டம் ‘பயங்கரவாதமாக’ பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாகுவது எப்படி?

    3. “கேணல் கருணா கிளர்ச்சித் தலைவன் இராணுவத்தளபதி முன்னணிப் போராளி, இப்படியான தரத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக்கட்சியில் தலைவர்களில் ஒருவராவதான நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும்” என்று சொல்கிறார் சுகன். இது குறித்து உங்கள் பார்வை என்ன?

    4. அதே வேளை ” புலிகளின் அரசியற் தோல்வி என்பது வளரும் ஆசிய நாடுகளின் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாள வர்க்கம் நாடு தழுவிய வகையில மீண்டும் ஒன்றிணைவதற்குக் கிடைத்த வாய்ப்பாகும்.” என்கிறார் தமிழரசன். இவர் தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக் கொள்பவர். இது குறித்து உங்களது பார்வை எப்படி இருக்கிறது?

    5. இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ. நாவில் வாக்களித்தது குறித்து கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது என தமிழ் தேசியவாதிகளால் விமர்சனம் வைக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன? அதேவேளை கியூப புரட்சியின் ஆதரவாளருமான பிரஞ்சு மார்க்சியர் ரெஜி ரெப்கே இனி தேசியத்துடன் இணையாத சோசலிசம் உயிர்வாழ முடியாது என்று குறிப்பிட்டதை முன்னிலைப்படுத்தி தேசியவாதத்தின் அவசியம் பற்றி பேசப்படுவது பற்றி சொல்லுங்கள்.

    6. “பிடெல் அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை, பிடெல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து நாம் நமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்” என்ற வாதம் பற்றி சர்வதேசியவாதியான உங்களின் மறுமொழி என்ன?

    7. “ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இந்திய மாவோயிஸ்ட் அமைப்பு அந்த தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் இருபது பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. என்னளவில் சொல்வேன் புலிகளின் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைக்கும் நடைமுறையை மாற்றி இந்திய சூழலுக்கு அமைவாக பிறிதொரு பெயரில் இயங்குவது அவசரமானது. இந்தியாவை பலவீனப்படுத்துவதை குறியாகக் கொண்டியங்கும் ஒரு நாட்டின் தலைவரான மாவோவின் சிந்தனைகளின் நீட்சியாக தம்மை அப்பட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒருபோதுமே அவர்களுக்கு இந்திய மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாவோவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்தியச் சூழலில் மாவோ ஒரு போதும் தலைவராக முடியாது. இவ்வாறான பார்வைகளை உள்ளடக்கி புதிய சிந்தனைகளே இன்று நமக்குத் தேவை” என்று எழுதுகிறார் யதீந்திரா. மேலும் “பிடெல் மற்றும் பல லத்தீனமெரிக்க அரசிலாளர்களுக்கு, தமிழர் அரசியல் பற்றி தெரியாது, அது குறித்து நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றவாறான அர்த்தமற்ற உரையாடல்கள் பயனற்றது” என்று சொல்கிறார், இவருக்கு உங்களின் பதில் என்ன?

  11. Irai Veanthan says:
    17 years ago

    மிகவும் ஆரோக்கியமான தளத்தை நோக்கியதாக பின்னூட்டங்கள் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் ஒரு விரிவான தளத்தினூடான இந்த கருத்துப் பரிமாறல்களை கொண்டுசெல்வது அவசியம். அவ்வகையில் இந்த நேர்காணல் தொடர்பாக போதுமானளவு பின்னூட்டங்கள் வரவில்லை என்பது வேதனையான விடயம். “இனியொரு” பரந்த தளத்திலான ஒரு கலந்துரையாடலுக்கு வழிசெய்வது அவசியம். தோழர் செந்திவேலிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

    தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வாக நீங்கள் கருதுவது எதை என்பது பற்றியும் அதற்கான நியாயங்கள் பற்றியும் சற்று விரிவாகக் கூற முடியுமா?

    வெளிநாட்டு உதவியில்லாமல் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியமில்லை என்று கூறப்படுவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

    மார்க்சிஸ்டுகள் பாரளுமன்ற அரசியலை எதிர்ப்பவர்கள். பாரளுமன்ற அரசியலுக்கு வெளியால் ஒரு தீர்வை பெற முடியுமா? தேர்தல்களில் பங்குபற்றுவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

    இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசிடம் சரணடைந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான நியாயமான மாற்று அரசியல் சக்திகள் உருவாவது சாத்தியமா? அதற்கான சூழ்நிலை இலங்கையில் இன்று நிலவுகின்றதா?

    தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் சாதியை இலங்கையில் ஒழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றதே. சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றியவர் என்ற வகையில் இது உண்மையா என்று சொல்ல முடியுமா?

    புலத்தில் பலர் இலங்கையில் தலித்தியம் பற்றிப் பேசிவருகிறார்கள். இந்த சொல்லாடல் சரியானதா? தலித்தியம் என்பது இலங்கையிலும் நடைமுறையில் உள்ளதா, சாதி அடுக்குகளுக்கு அப்பால் ‘தலித்’ என்ற அடையாளம் பேணப்படுகின்றதா? இந்த வி;டயத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு வேறுபாடு உண்டா இல்லையா?

    இந்தக் கேள்விகளுக்கான பதிலை தோழர் செந்திவேலிடம் எதிர்பார்க்கிறேன். “இனியொரு” உரிய வழிவகைகளை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

    • அ.கா.ஈஸ்வரன் says:
      14 years ago

      //மார்க்சிஸ்டுகள் பாரளுமன்ற அரசியலை எதிர்ப்பவர்கள். பாரளுமன்ற அரசியலுக்கு வெளியால் ஒரு தீர்வை பெற முடியுமா? தேர்தல்களில் பங்குபற்றுவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?//

      மார்க்ஸ். எங்கெல்ஸ். லெனின் ஆகியோர் பாராளுமன்ற அரசியலை எதிர்ப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் பாராளு மன்றத்தின் வலது தவறையும். அதாவது பாராளு மன்றமே அனைத்துக்கும் தீர்வை என்பதையும் இடது தவறான பாராளுமன்றத்தை புறக்கணிப்பையும் எதிர்த்தவர்க்ள். அதனால் வலது இடது தவறுகளைக் கொண்டு கம்யூனிஸ்டுகளின் நாடாளுமன்ற நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...