இனக்கொலைக் குற்றவாளியான பயங்கரவாத இலங்கை அரசின் அதிபர் ராஜபட்சே நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இச்சந்திப்பின் போது இந்திய பெரு நிறுவனங்கள் சார்ந்த ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் இச்சந்திப்பின் போது ஈழத் தமிழர்கள் தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையும் இந்தியத் தரப்பில் வைக்கப்படவில்லை. ராஜபட்சேவும் அது பற்றி பேசவில்லை. ஆனால் மன்மோகனும், ராஜபட்சேவும் ஏதோ தமிழர் பிரச்சனைக்காக சந்தித்தது போன்ற தோற்றத்தை சில தமிழக ஆளும் கட்சி ஊடகங்கள் தோற்று விக்கின்றன. தமிழர்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மட்டும் சம்பிரதாயமாக சந்தித்துப் பேசினர். இந்நிலையில் மத்திய அரசின் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும் எம்பியுமான டி.ராஜா கடுமையாகக் கண்டித்துள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை கூறியதாவது:
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு, இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால், அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தியா, இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதுபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இது, தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் மற்றொரு துரோகம் என்றார் டி. ராஜா.







