மடுமாதா தேவாலய அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் வரலாறு நெடுகிலும் சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களுக்காகவே தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துப் பேசுவதாக மடுமாதா தேவாலயத்தின் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் குற்றம் சாட்டுகின்றார்.
வடக்கில் உள்ள மக்கள் மனித உரிமைகளை அனுபவிப்பதை விட மனித உரிமைகள் தினத்தைக் கூட அனுஷ்டிக்க முடியாதவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டுகின்றார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு;ள்ளனர். அவர்களில் இருபதினாயிரம் பேர் யாழ்ப்பாணத்தவர்கள்.
உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம் மட்டுமே இருபதினாயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயினும் மனித உரிமை அமைப்புகளின் தகவல்களின் படி இதுவரை நாற்பதினாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றமும் ஒரு நாடகமாகவே நடாத்தப்படுகின்றது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு பத்து தகரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு உதவிகளை வழங்க வெளியாருக்கும் இடமளிக்கப்படுவதில்லை.
ஆனால் சிங்கள மக்கள் மட்டும் அரச ஆதரவுடன் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். சிங்களவர்கள் வடக்கில் மீள் குடியமர்த்தப்படுதலை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவுடன் மீள்குடியமர்த்தப்படுவதைத் தான் எதிர்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








வெள்ள அங்கிக்குள் இருந்து வேதனைக் குரல்.உலகை எட்ட வேண்டும் இந்த சமாதனத்த தேடும் குரல்.தமிழரும் மனிதர் உணர்வுள்ள ஜீவன் கள் எனபதை இலங்கைச் சிங்களவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.தம்மை மட்டும் முன்னுறூத்திச் சிந்திக்காது இலங்கைச் சமூக அய்க்கியம் நோக்கியும் சிந்திக்க வேண்டும்.