வடக்கு கிழக்குத் தமிழர்கள் கொழும்பிற்குப் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கொழும்பு மற்றும் தெற்குப் பிரதேசம் தமிழர்களுக்குப் பாதுகாப்பற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களினால் வடக்கு கிழக்கிலிருந்து தெற்கிற்குப் பயணம் செய்யும் அனைத்துத் தமிழர்களும் சந்தேகக் கண்களோடு நோக்கப்படுவதாகவும் இந்த நிலைமை தமிழர்களுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஊடகங்களின் மூலம் மணித்தியாலத்திற்கு ஒருமுறை இனவாதப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து கொழும்புக்குள் பிரவேசிக்கும் தமிழர்களுக்கான பாதுகாப்பை தங்களால் உத்தரவாதப் படுத்த முடியாதென அவர் கூறியுள்ளார். இதனால் மறு அறிவித்தல்வரை கொழும்பிற்குப் பயணம் செய்வதை வடக்கு கிழக்குத் தமிழர்கள் தவிர்த்துக் கொள்வது மிகவும் உசிதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பல தமிழர்கள் கைது செய்யப்படுவதுடன் சிலர் காணாமற் போகின்றனர். கடத்தல்கள் மற்றும் கைது செய்தல்களுக்கு இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் மனோ கணேசன், இவ்வாறு பாதிக்கப்பட்ட பல தாய்மார்களின் அவலக் குரல்களை தமது காரியாலத்தில் தினந்தோறும் கேட்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகம் கவலை வெளியிட்டுள்ளார். மொரட்டுவை மற்றும் கண்டியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு மேலக மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையிலான அதிகார போராட்டத்தின் பாதகமான விளைவே இந்த குண்டு வெடிப்புக்கள் எனவும் கொழும்பு மற்றும் வன்னியில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஓர் சங்கிலித் தொடராக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசேடமாக வன்னியில் இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் தெற்கிலும் தெற்கில் இடம்பெறும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வன்னியிலும் தாக்குதல் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமையினால் பெரிதும் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.