மார்க்ஸினுடைய மேற்கோள் என்று சொல்லாமல், மேற்கோள் குறிகள் இடாமல், நான் மார்க்ஸின் மேற்கோள்களைப் பாவிக்கிறேன். ஏனெனி்ல்,; பலரும் மார்க்ஸின் பனுவல்களைப் அடையாளம்காணும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள். நான் மார்க்ஸை மேற்கோள் காட்டாதவர்களில் ஒருவனாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். ஓரு பௌதிகவியலாளர் பௌதிகம் குறித்து எழதும்போது நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் மேற்கோள் காட்டுவது அவசியம் என அவர் கருதுகிறாரா என்ன?
மிசேல் ஃபூக்கோ
In Selected Interviews and Other Writings (1972-1977)
Page 52 : 1980
படிப்பினைகள்
‘தத்துவம் மக்களை சென்றடைந்தால் ஒரு பௌதீக சக்தியாக உருவெடுக்கிறது’ என்ற மார்க்ஸின் மேற்கோளுடன் இதனை துவங்குவோம். மேற்கண்ட ஒற்றைவரி பல சமூக அரசியல் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக உள்ளது.
ரஷ்யாவில் ஏன் சோஷலிஸம் தோற்றுப்போனது? சீனா ஏன் சந்தைப் பொருளாதாரத்திற்கு அடிமையானது? கம்யூனிஸ புரட்சியை உலக நாடுகளில் ஏன் சாத்தியப்படுத்த இயலாமல் இருக்கிறது? ஏன் இருநூறு ஆண்டுகளாகியும் உலகத் தொழிலாளர்களை ஒன்று படுத்த இயலவில்லை? இப்படி கம்யூனிஸம் சார்ந்த கேள்விகள் மட்டும் அல்லாது இதன் எதிர்நிலையில் ஒற்றை ஏகாதிபத்தியமாக வளர்ந்து உலகை அச்சுறுத்தும் அமெரிக்கா ஏன் கவர்ச்சிகரமானதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது? ஜனநாயகம் எனும் பூதம் ஏன் அறிவுலகை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது? சர்வாதிகார பாசிச அமைப்புகள் பதுங்கி நின்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏன் காத்திருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கும்கூட மார்க்ஸின் மேற்குறித்த ஒற்றை வரியே பதிலாக அமைகிறது.
எளிமையாகச் சொன்னால் கம்யூனிஸக் கருத்துக்கள் மக்களை சென்றடைந்து ஒரு பௌதீக சக்தியாக உருவாகவில்லை அல்லது முதலாளியக் கருத்துகள் மக்களை சென்றடைந்து ஒரு பௌதீக சக்தியாக உருவெடுத்திருக்கின்றன என்பதுதான். ‘பாசிசம்’ போன்ற கருத்தமைப்புகள் தீப்போலப் பரவி மக்களை பற்றிப் படர்ந்து ஒரு பெரும் சக்தியாக உருவாகி நிற்பதற்கு காரணம், அவை மக்களை சென்றடையும் வேகம் மட்டுமல்லாது வெகுசன உளவியலுடன் அவை வினைபடும் வேகமும்தான். இம்முரண்பாடு மக்களுக்கும் கருத்தியலுக்கும் இடையில் உருவாகும் வினைபாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
ரஷ்யா சீன சமூகங்களின் பின்னடைவு கம்யூனிஸத்தின் தோல்வியாகவும் காலாவதியாகவும் பெரும் அறிவிப்பையும் விளம்பரத்தையும் பரபரப்பையும் ஊட்டிக் கொண்டுள்ளன என்பதுடன் அவற்றுடன் சேர்ந்து மார்க்சியமும் காலாவதியாகிவிட்டது என்கிற பார்வையும் பரப்புரை செய்யப்பட்ட நிலையில் அவை பற்றிய மதிப்பீடுகளும்கூட அவசியமானதாகிறது.
மேற்குறித்த பிரச்சினைகளுக்கான சமூக பொருளியல் மற்றும் அரசியல் காரணங்களை விட்டுவிட்டு நாம் அவற்றை மறுக்கவில்லை என்பதுடன் அவை பற்றி பால்.எம்.ஸ்வீசி துவங்கி சமீர் அமீன் வரை எண்ணற்ற மார்க்சிய அறிஞர்களால் பொருளியல் சமூக காரணங்கள் சொல்லப்பட்டு விட்டதால் நாம் வேறு ஒரு கோணத்தில் அனுக முயற்சிக்கலாம்.
கம்யூனிஸம் மக்களிடம் சென்றடையவில்லை எனும்போது லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியும் மாவோ தலைமையிலான சீனப்புரட்சியும் மக்களிடம் கம்யூனிஸத்தை கொண்டு செல்லாமலா வெற்றியடைந்தன? என்கிற தர்க்கரீதியான கேள்வியும் கூட எழத்தான் செய்கிறது. இப்புரட்சிகள் பரந்துபட்ட மக்களிடம் ஒரு மாற்று அரசமைப்பை உருவாக்கும் முயற்சியாக அர்த்தமாயினவே தவிர ஒரு மாற்று சமூக அமைப்பை உருவாக்கும் திறனை உணர்த்தவில்லை. அதாவது, மக்கள் கம்யூனிஸத்தை ஒரு மாற்று அரசமைப்பாக ஏற்ற அளவிற்கு மாற்றுச் சமூக அமைப்பாக அல்லது ஒரு மாற்று வாழ்க்கை முறையாக ஏற்குமாறு இப்புரட்சிகள் அர்த்தமாகவில்லை.
இதன் பொருள் மார்க்சியம் ஒரு இடைக்கால அரசமைப்பின் வடிவத்தை முன்வைக்கிறதே ஒழிய அரசமைப்பே இறுதியானது என்றோ அது ஒன்றே தீர்வு என்றோ கூறவில்லை. ‘அரசின் தவிர்க்க இயலாத்தன்மை’ என்ற கண்ணோட்டத்தில் மார்க்சிய கருத்தாக்கங்கள் எச்சரிக்கையுடனே வடிவமைக்கப்பட்டன. இந்த இடைக்கால அரசு வடிவமானது ‘மக்கள் தங்களைத் தாங்களே ஆளப் பயின்ற பின் உலர்ந்து உதிர்ந்துவிடும்’ என்ற வளர்சசியடைந்த தொலைநோக்கிலான ஒரு பார்வையை லெனின் முன்வைத்தார். மக்களை பயிற்றுவித்து வளர்த்தெடுக்கப்படும் வண்ணம் நெகிழ்ச்சியான நிறுவன வடிவங்கள் பற்றிய முன் எச்சரிக்கை உணர்வு லெனினுக்கு இருந்ததையே இது உணர்த்துகிறது. அரசு எப்பொழுது உலர்ந்து உதிர்ந்த போகும்? பயிற்றுவிக்கப்பட்ட மக்கள் அல்லது தங்களை தாங்களே ஆளும் சுயத்தன்னிலை வளர்ச்சியடைந்த மக்களால்தான் அது சாத்தியமாகும். இது கம்யூனிஸ தன்னிலையின் அடிப்படைக் கூறுகளை நமக்கு அறிவுறுத்துகிறது.
இதை விரிவுப்படுத்தினால் கம்யூனிஸ உளவியல் ஒன்றிற்கான அடிப்படையாக கம்யூனிஸ தன்னிலை உருவாக்கத்தின் அவசியத்தை இக்கூற்றுக் கொண்டிருக்கிறது எனலாம்.
புரட்சிக்கு பின்பு அமைந்த சமூகங்களின் தன்னிலைச் செயல்பாடுகளுக்கு வருவேம். ஏகாதிபத்திய பொருளியல் போட்டியை சந்தித்த புரட்சிக்குப் பிந்தைய அரசுகள் சமூகங்கள் தங்களது பொருளியல் நிலைத்தன்மையை உருவாக்கும் பொருட்டு பொருளியல் காரணிகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கத் துவங்கின. இதன் மறுதலையாக உளவியல் காரணிகள் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்டன. ‘இறுதியில் வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது’ என்ற மார்க்சியக் கோடட்பாட்டின் அடிப்படையில் புரட்சிகர வாழ்நிலை ஒன்றை அச்சமூகங்கள் முன்வைக்காதபோது புரட்சிகர சிந்தனை என்பதற்கான சாத்தியமும் குறைந்து விடுகிறது. இச்சமூகங்களில் அரசின் கவனத்திற்கு அப்பால் மொழி மனித தன்னிலை ஆகியவற்றின் இயக்கம் முக்கியத்துவமான பங்கை வகித்தன. வேறுவிதமாகச் சொன்னால் பழைய வகைப்பட்ட சமூக உறவுகளால் கட்டமைக்கப்பட்ட மனிதத் தன்னிலைகள் இச்சமூகத்தில் ஏற்பட்டுவந்த மிகப்பெரும் மாற்றங்களை பழைய வகைப்பட்ட வறையறைகளால் அர்த்தப்படுத்தத் துவங்கின. நாம் யாரால் ஆளப்படகிறோம் என்பதைவிட எப்படி ஆளப்படுகிறோம் என்பதுவே வெகுசன உளவியலில் இயக்கமடைவதாக உள்ளது. சான்றாக இவ்வுளவியலுடன் சமரசப் போக்கைக் கையாண்டு இந்திய வெகுசன உளவியலின் அடிப்படை மத உணர்வுகளினை கிளறிய மதவாதம் இப்படியே ஒரு பிற்போக்கான மதஅடிப்படைவாத தன்னிலை அமைப்பை உருவாக்கியதும் இங்கு ஆய்விற்குரியது.
சமூகரீதியான அர்த்தங்களுக்குப் பதிலாகத் தனிமனிதரீதியான அர்த்தம் என்பது, ஒவ்வொரு தனிமனிதனும் சமூக அமைப்புடன் முரண்பட்டுப் போகும் நிலையை உருவாக்குகிறது. சமூகக் கூட்டுத்தன்னிலை மாற்றத்தை நோக்கிய அர்த்தங்களுடன் இயங்க தனிமனித தன்னிலையானது பழைய வகைப்பட்ட அர்த்தங்களால் அவற்றை எதிர்கொள்வதில் ஏற்படும் முரண்பாடு ஒருவகை உளவியல் வன்முறையாக புரட்சிக்கு பிந்தைய சமூகங்கள் அடித்தளத்தில் சலனமுறத் துவங்குகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது அடையாளம் இழந்து பொது தன்னிலைக்குள் கரைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதுடன் அது வன்முறையாகவும் உணரப்பட்டது. புரட்சிகர மாற்றம் எல்லாம் திருவிழாக் கொண்டாட்டம்போல திடீர் உணர்ச்சியாகத் தோன்றி மறைந்து பழையவகைப்பட்ட சுகம் இதம் சார்ந்த மகிழ்வு பற்றிய மதிப்பீடுகளுக்கு மனிதர்களைத் தள்ளத் துவங்கின. இங்கே தனிமனிதத் தன்னிலையானது புதிய சமூகத்துடன் முரண்பட்டு நின்றதின் விளைவு, உள்ளார்ந்த சமூக மாற்றத்தைப் புறக்கணிக்கத் துவங்கியது.
எந்த ஒரு பொருளும் மனித இருத்தலுடன் கொள்ளும் உறவிலேயே அதன் செயல்ரீதியான அர்த்தத்தைப் பெறுகிறது. மனிதத் தன்னிலையால் இதமாக உணரப்படுபவை இருத்தலாகவும், வதையாக உணரப்படுபவை இருத்தலை சிதைப்பதாகவும் அர்த்தமாகின்றது. இதம்-வதை என்கிற அடிப்படையான மனித தன்னிலையை கட்டமைக்கும் முரணானது ஒருவகையான பழைய சமூக மதிப்பீடுகளால் உருவமைக்கப்பட்டுள்ளதால் அதன் வினையின் தன்மையும் விளைவுகளும் பழைய சமூக நிலையின் தன்னிலையைக் கொண்டிருப்பது தவிர்க்க இயலாததாகிறது.
தெளிவாகச் சொன்னால் அர்த்தமாக்கலும் அதனால் ஏற்படும் மனித மகிழ்வு நிலைகளும் தன்னிலையில் உருவமைக்கப்பட்டுள்ள மொழிச் செயலாக உள்ளது. ஒரு வதைத்தல் (சாடிஸ) மனநிலை பிறரை வதைப்பதை மட்டுமே இதமாக உணர்கிறது. அதனுடன் தனிமனிதனின் சராசரித் தன்னிலையை ஒப்பிட்டால் இதம்-வதை ஆகியவற்றின் அர்த்தங்கள் முற்றிலும் வௌ;வேறானதாக இருப்பதை உணரலாம்.
புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக அர்த்தமானது. காரணம் இதம்-வதை இவற்றினாலான இருத்தல் பற்றிய அர்த்தம் சிதைந்து மறு ஒழுங்கமைப்புக்கு மாற்றியமைக்கப் பட்டிருக்கவில்லை. அல்லது புரட்சிகரத் தன்னிலை எனப்படும் வளர்ச்சியடைந்த அல்லது விரிவாக்கப்பட்ட தன்னிலைகளால் அர்த்தமாகும் தளம் ஒன்று உருவாகவில்லை. அச்சமூகங்களில் நிலவிய மகிழ்வு பற்றிய மதிப்பீடுகளும் இதம் சார்ந்த கருத்தமைவுகளும் பரிசீலனைக்குரியவையாக உள்ளன. அச்சமூகங்களின் அடிப்படை இருத்தல் கேள்விக்குள்ளாகியிருப்பதை உணர்ந்து சரி செய்யக்கூடிய நெகிழ்ச்சியான நிறுவன வடிவங்கள் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. அல்லது மக்களை பயிற்றுவிப்பதன் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கவில்லை என்பது ஆய்வுக்குரிய ஒரு புள்ளியாகும்.
அச்சமூக மக்களின் இருத்தலியற் பிரச்சினைகள் பரிசீலனைக்கு உரியவை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அச்சமூகங்களில் கலைஞர்களும் படைப்பாளிகளும் நடத்தப்பட்ட விதத்தை ஒரு களமாகக் கொண்டு தன்னிலை பற்றிய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்பது நமது அனுமானங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு கலை இலக்கியத்தின் சமூகச் செயல்பாடுகளை புரிந்து கொள்வது அவசியம். கலையும் இலக்கியமும் சமூக சலனத்தை மொழிவழியாக வெளிப்படுத்தக் கூடியவை என்பதுடன் சமூகத்திற்கான மொழியியல் வினைகளை உருவாக்கித் தருபவை. வேறுவார்த்தைகளில் சொன்னால் தன்னிலை உருவாக்க இயங்திரங்களாக செயல்படுபவை. கலைஇலக்கித்தை கூறுகாண் வாசிப்பிற்கு (symptomatic reading) உட்படுத்துவதன் மூலம் சமூக அரசியல் சலனத்தை வாசிக்க முடியும். இங்கு குறிப்பாக ஆதிக்கக் கலைவடிவத்திற்கு எதிரான ரஷ்ய உருவவாதம் அமைப்பியல் துவங்கி பின்நவீனத்துவம் வரை உருவாக ஒரு முக்கியத் துவக்கப் புள்ளியாக இருந்ததை இதனுடன் இனைத்துப் பார்க்கலாம். அப்பள்ளி ரஷ்ய அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவலாகவும் கடுமையான எதிர்ப்புகள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் முற்றிலுமாக மறைந்து போனதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.
இவற்றுடன் ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம் போன்ற பழகிவந்த முதலாளிய தன்னிலைக் காரணிகளால் புரட்சிகர மாற்றங்கள் ஒப்பிடப்பட்டு அர்த்தமானபோது புரட்சிகர சமூக விழுமியங்கள் நடைமுறைகள் ஆகியன ஒடுக்குமுறையாக மாறி மக்களின் பரந்துபட்ட சமூக வெறுப்புணர்வு வளரத் துவங்குகிறது. இதன் வளர்ச்சி அச்சமூகத்தை வீழ்த்துவதற்கான சக்திகளை அங்கீகரிக்கும் ஒரு செயலற்ற மௌன நிலையை உருவாக்கிவிட்டது. ஜனநாயகம் சுதந்திரம் போன்ற சார்பு நிலையிலான கருத்தாக்கங்கள் இதுவரை அர்த்த சிதைவுக்கு ஆளாக்கப்படாமல் புழங்கி வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. சமூக மாற்றத்தைவிட தன்னிலை மாற்றம் என்பது மெதுவாகவே நடைபெறக்கூடியது என்பதுடன் அதுவே கருத்துக்களை பௌதீக சக்தியாக மாற்றும் திறன் கொண்ட விசைக் காரணிகளாக இருக்கிறது. இதன்பொருள் தன்னிலைகளே மனிதனின் உணர்வுபூர்வமான செயல்களுக்கான ஆற்றல் களன்களாக உள்ளன. புரட்சிகர செயல்பாடுகள் மட்டுமின்றி வாழ்வின் அடிப்படைச் செயல்பாடுகளான பொருளியல் செயல்பாடுகள் அரசியல் செயல்பாடுகள் மற்றும் கருத்தியல் செயல்பாடுகள் என அனைத்திற்கும் தன்னிலை என்பதே அடிப்படை இயக்கப் புள்ளியாக உள்ளது.
மேற்குறித்த படிப்பினைகளின் தர்க்கம் கம்யூனிஸத் தன்னிலை துவங்கி கம்யூனிஸ உளவியல்வரை தேடி அடைய வேண்டிய புள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அல்லது இவ்வகை அரசுகளின் வீழ்ச்சியிலிருந்து நாம் படிக்க இப்படி ஒரு படிப்பினை கிடைத்திருக்கிறது எனலாம்.
மார்க்சும் மனிதனும்
தமது கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் முதலாளிய சமூகத்தின் உறவுகள் பற்றிப் பேசும் போது, ‘மனிதர்களுக்கிடையே நிலவும் உறவு வெறும் ரொக்கப் பட்டுவாடா உறவாக இருக்கிறது’ என்றார்கள். மனித உறவில் உள்ளார்ந்த பொருளியல் யதார்த்தத்தை மார்க்சியம்தான் அம்பலப்படுத்தியது. இவ்வாறான அம்பலப் படுத்தல்கள் கருத்துக்களை சிதைக்கும் முதல்நிலைச் செயலாகும். இவ்வாறு சிதைவுக்குள்ளான கருத்தாக்கங்கள் புதியவகை மனிதவியல் உறவுகளுக்கான அர்த்தங்களுடன் உருவாக்கப்படுகின்றன.
மார்க்சியம் முன்வைத்த வர்க்கம் என்கிற கருத்தாக்கம் அடிப்படையில் ஒரு பொது அடையாளத்தை முன்வைத்தது. இனம் சாதி பால் மதம் போன்ற அதிகாரத்தின் சாராம்சவாத முற்றொருமைகளால் ஆன அடையாளங்களை நீக்கி, அங்கு வர்க்கம் என்கிற அடையாளத்தை முன்வைத்தது. இங்கு மற்ற அடையாளங்களுக்கும் வர்க்கம் என்கிற அடையாளத்திற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. மற்ற அடையாளங்கள் தன்னிலைகளாக இயக்கமடைவதற்கான கருத்தியல் அடிப்படைகளைக் கொண்டிருந்தன என்பதுடன் அவை ஒரு உடலின் நுட்பமான கட்டமைப்பாக உள்ளிருத்தப்பட்டு உணரப்பட்டது. சான்றாக சாதி என்பது ஒரு உடலரசியற் கூறாக உள்ளது. அதில் பொருளியல் நலன் மட்டுமின்றி கருத்தியலான ஒரு உடலின் அடையாளச் சுகத்திற்கான அதாவது ‘தான்’என்பதற்கான இதம் உள்ளது. ஆனால் வர்க்கம் என்பது ஒரு அடையாளமாக இருக்கிறதே தவிர வாழ்தலுக்கான இதம் தரும் கூறு இல்லை. அதாவது அது மார்க்ஸியக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னிலையாக மாற்றம் பெறவில்லை. வர்க்கம் என்பது தன்னிலையாக மாறும்போது புரட்சி என்பதும் ஒரு வாழ்தல்தளமாகவும் புரட்சிக்கு பிந்திய சமூகத்தில் அத்தன்னிலைகள் புரட்சிகரமான மனிதாயத் தன்னிலைகளாக மாறுவதும் நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. வர்க்கத் திரட்சியை சாத்தியமற்றதாக்கும் பல அடையாளங்களினைக் கொண்டதாக இன்றைய தன்னிலைகள் இயக்கமடைவது அடையாள அரசியலின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இந்த அடையாள அரசியல் என்பது வேட்கைசார் வாழ்தலினை அடிப்பைடையாகக் கொண்டுள்ளது. ஆக இனம் சாதி பால் மதம் என்கிற பன்முக அடையாளத்தை உள்ளடக்கிய வர்க்கம் என்கிற அடையாளத்தை புரட்சிகரச் செயல்திட்டத்தில் இணைத்துக் கொண்டு செல்வதும் சவாலான பணியாகவே உள்ளது.
வர்க்கமற்ற மக்கள் சமூகம் என்கிற மார்க்சின் எதிர்பார்ப்பு ஒருவகையில் அடையாளத் தன்னிலைகள் அற்ற புதியவகை மனிதாயத் தன்னிலைக்கான அடிப்படையாகும். மார்க்சியம் முதலாளியம் உருவாக்கிய பொதுமக்கள் என்கிற நவீன தொண்மத்தை உடைத்தது. பொதுநலன் என்பதன் பின்னுள்ள ஆதிக்க நலனை முன்வைத்தது. அடிப்படையில் பொது என்கிற கருத்தாக்கமே ஒரு மாயை என்றும் அது முதலாளித்துவ கட்டமைவு என்றும் வெளிப்படுத்திக் காட்டியது. சுருக்கமாகச் சொன்னால் முதலாளித்துவத்தின் மறைவியக்க எந்திரவியலை வெளிப்படுத்தி அதன் உள்முரணை அம்பலப்படுத்தியதன் வழியாக முதன்முதலாக சமூகரீதியான ஒரு கட்டுடைப்பை செய்தது மார்க்சியமே. சமூக அமைப்பு தொடர்ச்சியாக சிதைவதும் கட்டமைவதுமான வரலாற்று இயக்கத்தில் உள்ள ஒரு ‘கட்டுடைப்பு இயங்கியலை’ முன்வைத்தது மார்க்சியம். மனிதனின் சாராம்ச அமைவை கேள்விக்கு உட்படுத்தியதுடன் மனிதன் என்கிற நவீன தொண்மத்தினை போட்டுடைத்து பாட்டாளி முதலாளி என்கிற வர்க்க அமைவை முன்வைத்தது. மனிதன் என்கிற பொது அமைப்பு காலங்காலமாக இல்லை என்றும் அது வர்க்கத்தை மறைப்பதற்கான ஒரு பொது அடையாளமாக உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியது. இதன் நீட்சியாக எல்லோருக்குமான ஒரு உலகம் சாத்தியமில்லை. இன்று பல உலகங்கள் ஒன்றன்மீது ஒன்றாக மடிக்கப்பட்டும் அடுக்கப்பட்டும் உள்ளதை வெளிப்படுத்தியது. ஒரு முதலாளியின் உலகம் பாட்டாளியின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறானது மட்டுமல்ல. அதனை உருவாக்குவதற்கான கட்டுப்படுத்தப்பட்ட உலகம் என்பதை வெளிப்படுத்தியது.
புரட்சிக்கு பிந்திய சமூகங்களில் இத்தகைய அம்பலப்படுத்தல்கள் நடைபெற்ற அளவிற்கு முன்மாதிரியான மனிதார்த்த உறவுகள் வளர்க்கப்பட்டிருக்கவில்லை. அங்கு வர்க்கங்கள் அரசு அதிகார படிநிலை அமைப்பின் வடிவில் செயல்படத் துவங்கின. வர்க்கம் என்பது மேல்நிர்ணய அடையாளமாக இருந்ததே தவிர அது பிற அடையாளங்களை அழித்தொழித்து ஒரு வர்க்கத் தன்னிலையாக மாறவில்லை. இதனைக் கோட்பாட்டளவில் கூறினால் ‘கம்யூனிஸத் தன்னிலை’ என்பதன் உருவாக்கமே நிகழவில்லை என்பதுடன் அதன் தேவையும்கூட குறைவாக மதிப்பிடப்பட்டது. காரணம் மனம் தன்னிலை போன்ற காரணிகள் பன்னெடுங்காலமாக கருத்துமுதல்வாதத் தன்மைகளால் கையாளப்பட்டு வந்ததின் விளைவே. இத்தகைய காரணிகளின் பொருண்மையான அமசங்களும் விஞ்ஞான அடிப்படைகளும் ஆய்வு செய்யப்பட்டு இவை பற்றிய பல நூற்றாண்டு பழமைவாத சிந்தனைப் போக்குகள் அழித்தொழிக்கப்படாமல் இக்காரணிகளை கையாளுவதே கருத்தியல் தன்மை வாய்ந்தது என்பதான ஒரு உணர்வு நிலவியதே ஆகும். பொருள்முதல்வாதம் என்று பேசப்படும்போது இத்தகைய கருத்தாக்கங்கள் கருத்தியலானவை என புறக்கணிக்கப்பட்டன அல்லது வாழ்நிலை பொருளியல் யதார்த்தம் போன்ற புறநிலைக் காரணிகளால் இவை மறக்கடிக்கவும் மறுதலிக்கவும் பட்டன. தன்னிலை என்பது கருத்தியலால் கட்டமைக்கப்பட்டாலும் அதன் செயலியக்கம் என்பது மனிதனின் நடைமுறை சார்ந்து அமைவதால் பொருண்மைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மனித உடல் தன்னிலை அற்ற நிலையில் சமூகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட செயல்களை செய்வதற்கான சாத்தியமற்றதாகவே இருக்கும்.
இன்று ஆளும் தன்னிலைகளாகவும் ஆளப்படும் தன்னிலைகளாகவும் பிளவுண்ட சமூகத்தில் தத்துவம் மக்களை சென்றடைந்து பௌதீகசக்தியாக உருவாகாததின் காரணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அது தத்துவம் மக்களுடன் எவ்வாறு வினைபடுகிறது? என்பது குறித்த சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அதற்கு முதன்மையாக கம்யூனிஸ உளவியல் என்ற ஒரு கருத்தமைப்பின் உருவாக்கத்திற்கு மனம் தன்னிலை ஆகியன பற்றிய அறிதலும் அர்த்தங்களும் செயல்பாடுகளும் அறிவார்ந்த தளத்தில் புரிந்துக் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளன. தன்னிலைகளின் கட்டமைவுக்குறித்து இங்கு நாம் விரிவாக பேசவில்லை என்றாலும் அதனை ஆய்விற்கான ஒரு முக்கியப் புள்ளியாக முன்வைக்க வேண்டி உள்ளது.
‘ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாடு கம்யூனிஸ சமூகத்தில்தான் நடைமுறை சாத்தியமாகும்’ என்றார் ஏங்கல்ஸ். நிர்பந்தங்களும் முன்முடிவுகளுமற்ற ஒரு மனித உறவு அதன் அடிப்படையில் அமையும் காதல் அவை உருவாக்கும் மன ஒப்பந்தம் குடும்பம் ஆகியனவே கம்யூனிஸ சமூக வாழ்நிலையின் அடிப்படைகளாக அவரால் முன்வைக்கப்பட்டது. உளவியல்ரீதியாக சுதந்திரமாக முடிவெடுத்து வாழக்கூடிய நிலை கம்யூனிஸ சமூகத்தில்தான் சாத்தியம். இவை நமக்கு கூறுபவை என்ன? மனிதனின் சுயதன்னிலை சுதந்திரமான சமூக சாத்தியமான முடிவுகளை எடுக்குமாறு கம்யூனிஸ சமூகங்கள் உருவமைக்கப்பட வேண்டும் என்பதுதானே? கம்யூனிஸ சமூகங்களின் தன்னிலைக் கட்டமைப்பு என்பது அதிகாரத்திலிருந்து விடுபட்ட சுயத்துவம் அடைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதானே? கம்யூனிஸ உளவியல் கட்டமைப்பின் அவசியத்தையின்றி வேறு எதை இவை நமக்கு வலியுறுத்துகின்றன?
‘இந்தக் கடவுள் சிலைகள் விவசாயிகளால் உருவாக்கப்பட்டவை. அதை அவர்களே ஒருகாலத்தில் தூக்கி எறிவார்கள். கம்யூனிஸ்டுகளாகிய நமது பணி அதை அவர்களே தூக்கி எறியுமாறு செய்வதுதான்’ என்கிற மாவோவின் புகழ்பெற்ற உரை நமக்கு உணர்த்துவது கம்யூனிஸ தன்னிலை என்பது எவ்வகையிலும் வன்முறை சார்ந்ததாக இல்லாமல் முழுமையான முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்குவதாக இருக்கவேண்டும். முடிவெடுக்கும் அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்குவது மட்டுமல்ல, மக்களே புரட்சிகரமான முடிவுகளை எடுக்குமாறு சூழல்களிலும் சிந்தனைமுறையிலும் மாற்றங்களை உருவாக்குமாறு பயிற்றுவிப்பதும் ஒரு கம்யூனிஸ்டின் கடமையாகிறது. தேர்வு விதிகளை மட்டுமல்ல தேர்ந்தெடுக்கும் சூழலையும்கூட உருவாக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகிறது.
அதாவது ஒரு உற்பத்தி நிலவ அதற்கு சாதகமான உற்பத்திநிலமை ஒரு முன்நிபந்தனையாகும். அந்த உற்பத்திநிலமைதான் தன்னிலைகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகும். அதாவது முதலாளித்தவப் பொருளுற்பத்தி நிலவவேண்டும் என்றால் அதற்குச் சாதகமான உற்பத்திநிலைமை அல்லது முதலாளித்து தன்னிலைகளினைக் கொண்ட ஒரு சமூகம் அவசியமாகும். அந்தச் சமூகத்தை காப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதே அரசு. அந்தக் காத்தலை அரசு தனது வன்முறைக் கருவியைக் கொண்டு மட்டும் செய்வது சாத்தியமற்றது என்பதுடன் தனது ஆளுகைக்கான தன்னிலைகளை தனது ஆதிக்கக் கருத்தியலைக் கொண்டும் மறுகட்டமைப்பு செய்துகொண்டே உள்ளது. சோஷலிஸ பொருளுற்பத்திக்கான சமூகத் தன்னிலைகள் என்பது கட்டமைக்கப்படாமல் முதலாளித்துவ தன்னிலைகளைக் கொண்ட ஒரு உற்பத்தி நிலமையையே புரட்சிக்கு பிந்தைய அரசுகள் நடைமுறைப்படுத்தியதை வரலாறு நமக்குச் சொல்கிறது. சர்வாதிகாரம் ஒடுக்குமுறை என்பதன் ஒரு சமூக வடிவமாகவே அந்த அரசுகள் செயல்பட்டு வந்தன என்பதை பல ஆய்வுகள் முன்வைப்பதை அறியமுடிகிறது.
‘நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்’ என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்த மாவோ கட்சியையும் அரசையும் எப்பொழுதும் மக்களின் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். ‘கட்சி மக்களுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் கட்சியை உடைத்தெறியுங்கள்’ என்றார். இறுதிவரை ஒரு கம்யூனிஸத் தன்னிலை மையத்தில் இறுகிவிடாமல் இயக்கத்தில் அல்லது மாறிக்கொண்டே இருக்கும் இயக்கத் தன்னிலையாக இருப்பதன் அவசியத்தையே இவை வலியுறுத்துவதை காணமுடிகிறது. இனம் சாதி பால் மதம் போன்ற பல அடையாளத் தன்னிலைகள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு உடலிற்குள் ஒரு குறிப்பிட்ட தன்னிலையானது புறச்சூழலின் கருத்தியல் ஆதிக்கத்தால் நங்கூரமிடப்பட்டு நிற்பதால் அந்த அடையாளத் தன்னிலையாக அவ்வுடல் அந்த குறிப்பிட்ட சூழலில் மாறிவிடுவதையே இனவெறி சாதிவெறி மதவெறி ஆணாதிக்க வெறி என்பதான உடல்களாக சமூகத்தில் இயக்கமடவைதைப் பார்க்கிறோம். அதாவது மனம் பிறழ்ந்த ஒரு நிலை அது. தன்னிலை என்பது இந்த பிறழ்ச்சிக்கும் இயல்புக்கும் இடையிலான ஊடாட்டத்தை கருத்தியல் வழியாகவே பெறுகிறது. கம்யூனிஸத் தன்னிலை என்பது இந்த மிதவைக்கான அல்லது இயக்கத்தன்மைக் கொண்டதாக இருப்பதற்கான நெகிழ்ச்சியான கருத்தியல்தளத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது படைப்பூக்கமிக்க தன்னிலையாக இருக்கவேண்டும்.
‘ஒரு கம்யூனிஸ்ட் கனவு காண்பவனாக இருக்கிறான்’ எதிர்காலம் பற்றிய கற்பனைகள் ஒரு கம்யூனிஸ்டுக்கு அவசியமானவை என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு தேவையான கற்பனார்த்தம் பற்றி லெனின் வலியுறுத்தினார். ஒரு கம்யூனிஸ்டின் அகம் நிகழ்வுச் சாத்தியமான எதிர்காலம் பற்றிய கற்பனையில் திளைத்தால்தான் புரட்சிக்கரச் செயல்பாட்டை அவனால் முன்னெடுத்துச் செல்லமுடியும். கம்யூனிஸ தன்னிலையின் மற்றொரு கூறை இக்கூற்று விளக்குகிறது. கம்யூனிஸ்டு என்பவன் உளவியல் வறட்சியற்றவனாய் படைப்பாற்றலும் கற்பனார்த்தமும் கொண்டவனாய் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வேறுவிதமாகச் சொன்னால் புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான உளவியல் ஆற்றலை மறு உருவாக்கம் செய்வது எதிர்காலம் பற்றிய கற்பனார்த்தமான மற்றும் படைப்பாற்றல் மிக்க இந்த கற்பனைகள்தான். ஆனால் இவை வெறுமனே அடிப்படைகள் அற்றதாக ஆகும்போது வறட்டு கற்பனையாக மிஞ்சி செயலற்றதாகி விடுகிறது என்கிற எச்சரிக்கை உணர்வு அவசியம்.
இவ்வாறாக பல கோட்பாட்டுத் திறன்மிக்க அடிப்படைகளை மார்க்சியர்களின் எழுத்துக்களிலிருந்து தொகுப்பது இத்துறை ஆய்வை வளப்படுத்துவதாக அமையும். அது கடுமையான பணி என்ற போதிலும் அவசியமானது என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் பற்றி மார்க்சீயர்கள் கூறிவிட்டார்கள் என்பது போன்ற ‘ஏகத்துவக் கண்ணோட்டம்’ நமக்கு இல்லை. ஆயினும் சமூகம் மனிதன் மனித வாழ்வு என்பது பற்றிய நிகழ்வுச் சாத்தியமான அறிவார்ந்த விதிமுறைகளைக் கண்டடைந்த ஒரு முறையியலாக மார்க்சியம் உள்ளது. நியூட்டனின் விதிகள் பிரபஞ்சத்தின் அடிப்படைகளை பற்றிய பார்வையை திறந்து விட்டிருக்காவிட்டால் ஐன்ஸ்டினின் பிரபஞ்சம் பற்றிய சார்பியல் கோட்பாடுகளின் சாத்தியமே இருந்திருக்காது. அதைப்போலத்தான் மார்க்சியமும் சமூகத்தின் மிக அடிப்படையான இயக்கம் பற்றிய ஒரு பார்வையை முன்வைக்கிறது. மார்க்சியம் ‘காலாவதியாகிவிட்டது’ என்கிற கூச்சல் சமூகத்தின் அடிப்படையான இயக்கத்திலும் மனிதவாழ்விலும் பொறுப்புணர்ச்சியற்றவர்களின் குரலாகத்தான் இருக்கும். இது ஒருவகை ‘துவேஷம்’ (prejuidice) தான். அல்லது சாராம்சத்தை முன்வைக்கும் ஒருவகை மார்க்சிய எதிர்ப்பு அடிப்படைவாதமே (anti-marxist fundamentalism).
மார்க்சியம் என்ற கோட்பாடு தவிர்க்க இயலாமல் சமூகத்திற்குள் நுழைந்தபின் சமூகத்தின் ஒட்டுமொத்த மொழியமைப்பிலும் ஒரு அர்த்தமாக்கலை செய்துவிட்டது. அல்லது இன்று நாம் பயன்படுத்தும் கோட்பாட்டளவிலான எந்த ஒரு சொல்லுக்கும் மற்றறொரு அர்த்தத்தை மார்க்சியம் சாத்தியமாக்கி இருக்கிறது. இன்று எந்த தத்தவார்த்த சமூக கோட்பாடுகள் பேசப்பட்டாலும் அவை தவிர்க்க இயலாமல் மார்க்சியத்துடன் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ உறவைக் கொண்டிருக்கிறது. மார்க்சியத்திற்கு எதிராக பேசுபவரும்கூட மார்க்சியத்தின் இருத்தலை முதலில் அங்கீகரிப்பது அவசியமாகிறது. இல்லாவிட்டால் மார்க்சீயத்திலிருந்து எவ்வளவு தூரம் வித்தியாசப்படுகிறார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மார்க்சியம் இன்றைக்கான சமூகச் சொல்லாடல்களத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சமூக மற்றும் அரசியல் நனவிலியாக (poltical unconcious) உள்ளது.
மேலும் மார்க்சியம் இன்றைய மொழிக்குள் ஒரு அர்த்தமாக்கும் சாத்தியத்தையும் இன்றைய மொழியின் அர்த்தத்தில் இயக்கத்தில் ஒரு கூடுதல் விசையையும் செலுத்தியிருக்கிறது. மொழியின் கோணம் இடம் ஆகியவற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. உலகையும் பிரபஞ்சத்தையும் பழைய கோணங்களில் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. மொழிக்கு முழுமுதலான அர்த்தம் என்பது சாத்தியமில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. மொழியின் அர்த்தம் என்பதன்பின் உள்ள தன்னிலைகளின் செயல்பாட்டை அம்பலப்படுத்தி இருக்கிறது. மனித தன்னிலைக்குள் ஒரு வர்க்கரீதியான அடையாளத்தை உருவாக்கி உள்ளது. இந்த அடையாளம் ஒரு தன்னிலையாக மாறும் நிலையிலேலே புரட்சி என்பது வெடிக்கும் என்பதைச் சொல்லி உள்ளது. அதற்கான நிறுவனங்களாகவே தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சி போன்ற அமைப்புக்களை உருவாக்குவதைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் இச்சங்கங்களோ கட்சிகளோ தன்னிலையைவிட அடையாளத்தையே முதன்மையானதாகக் கொண்டு செயல்படுவதால் தொடர்ந்து மார்க்சியக் கருத்தியலிலிருந்து மாறிச் செல்வதாக அமைந்துவிடுகிறது.
‘கட்சி என்பது வர்க்க உணர்வு பெற்ற முண்ணனிப் படை’ என்றார் லெனின். இதன் பொருள் வர்க்கத் தன்னிலைகளைக் கொண்டதாகக் கட்சி அமையவேண்டும் என்பதே. ஆளப்படும் தன்னிலைகளை தங்களது ஆளுகைக்கான இணக்கத் தன்னிலைகளாக கட்டமைப்பது ஆளும் கருத்தியலே. ஆக ஆளும் கருத்தியலை எதிர்க்கும் ஒரு சிறு வடிவமும் கவனத்தில் கொண்டு கணக்கில் எடுக்கப்பட்டு ஆளப்படும் தன்னிலைகளை வர்க்கத் தன்னிலைகளாக மாற்றவேண்டும். அரசு அல்லது சமூக அதிகாரத்தின் வாழ்தல் தளத்தில் நிகழும் எதிர்ப்பின் சிறு சிறு கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தளத்திலான முன்னணி ஒன்றை அமைப்பது அவசியமாகிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதையும்விட அதிகமாகி அதை இயல்பானதாக ஏற்று மனித உடல்கள் ஆளுகைக்கான இணக்கத் தன்னிலைகளாக கட்டமைக்கப்பட்டு கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு இயல்பான வாழ்நிலையாக மாறி உள்ள நிலையில் ‘மார்கஸியம் காலாவதியாகிவிட்டது’ என்பதான கூச்சல் அடிப்படையில் சத்தமிடுபவனின் அர்த்தமின்மையையும் பொறுப்புணர்ச்சியையும் கேள்விக்குள்ளாக்கும் விஷயம்தான். விஞ்ஞான விதிகள் எல்லாச் சோதனைச் சாலைகளிலும் நிறைவான முடிவைத் தரவில்லை என்பதால் விதிகளை குறை கூறிவிட முடியாது. செயல்பாடுகள்தான் இங்கு விமர்சிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஏனெனில் விதிகளின் அடிப்படை தர்க்கத்தைக் கொண்டே ஒரு விதி பற்றிய நேர்மையான முடிவிற்கு வரமுடியும். மார்க்சியம் ஒரு சமூக அவசியத்தின் பொருட்டு உருவாகியது. அதற்கான அவசியம் ஒழியும்வரை மார்க்சியமும் ஒழிந்துவிடாது.
சமூக வாழ்தலில் மார்க்சியம் ஏற்படுத்திய அடிப்படையான கேள்விகளுக்கு நடைமுறை சாத்தியமான ஒரு பதிலின் மூலம் பிறிதொரு வளர்ச்சியடைந்த சிந்தனையில் மார்க்சியச் சொல்லாடல்கள் சிதைத்து அழிக்கப்படாதவரை மார்க்சியத்தின் இருத்தலும் தவிர்க்க முடியாததே என்பது மொழியியல் சமூகவியல் போன்ற அறிவுத் துறைகளில் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கும்கூட தெரிந்த ஒன்று.
மார்க்சியத்தை சூத்திர விதிகளாக பார்ப்பதில் நமக்கு உடன்பாடில்லை. உலகை பொருள்களை அனுகும் கோணமும் அர்த்தமாக்கும் விதமுமே மார்க்சியத்தின் மிக அடிப்படையான செயலாகவும் விதியாகவும் நாம் கொள்கிறோம். பண்டம் உழைப்பு உற்பத்தி உறவு உபரி மதிப்பு போன்றவற்றின் பழைய முதலாளித்துவ அர்த்தங்களைச் சிதைத்து மார்க்ஸ் முன்வைத்த புதிய அர்த்தங்கள் நமக்கு மார்க்சியப் பார்வை ஒன்றை விளக்குகின்றன. முதலில் பொருளின் உள்முரணை வெளிப்படுத்தி அதன் அர்த்தங்களை அம்பலப்படுத்துதல் அந்த முரணின் ஒடுக்கப்பட்ட கூறை வெளிப்படுத்துவதன் வழியாக பழைய அர்த்தங்களை சிதைத்தல் அதனின்று ஒடுக்கப்பட்ட கூறை முதன்மைக் கூறாக்குவதன்மூலம் புதிய அர்த்தங்களை உருவாக்குதல். இத்தகைய வளர்ச்சியடைந்த ஒரு பார்வையை மார்க்சியமே முன்வைத்துள்ளது.
இப்பார்வை குடும்பம். பாலுறவு விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏங்கல்ஸாலும். அரசு புரட்சி போன்றவற்றில் லெனினானுலும் நடைமுறை முரண்பாடுகள் ஜனநாயகம் போன்றவற்றில் மாவோவாலும் தனித்துவமிக்க வகையில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. மாவோ கூறியதுபோல மார்க்சியம் என்பது அடிப்படையில் முரண்பாடுகள் பற்றிய விதிமுறைதான். பல்முரண்பாடுகளும் முரண்பாட்டின் எதிர்மறைக் கூறுகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவதும் ஒன்றை ஒன்றை வெல்வதற்கான போராட்டமும் இடையறாது நடக்கிறது. முரண்பாடுகளின் உள்ளார்ந்த போராட்டமே வளர்ச்சிக்கான அடிப்படை. இப்பார்வைகளின் அடிப்படைகளைக் கொண்டே நாம் கம்யூனிஸ தன்னிலைப் பற்றிய பேச்சைத் துவங்குகிறோம் என்பதைச் சொல்லிவிடுவது சிலவேளை விமர்சனம் என்ற பெயரில் நடைபெறும் விபத்தைத் தவிர்க்கலாம் என்பதால்தான்.
இறுதியாக கம்யூனிஸ உளவியல் மற்றும் தன்னிலைக் குறித்த ஆய்வுகளின் கவனத்தில் கொள்ள வேண்டிய மேற்கூறிய கருத்துக்களுடன் புரட்சிக்கு பிந்தைய சமூகம் பற்றிய உளவியல் அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். புரட்சிகரத் தத்துவமும் அரசியலும் இன்றி புரட்சி சாத்தியமில்லை. ஆனால் அதைச் சாத்தயப்படுத்தும் மக்களுடன் அத்தத்துவமும் அரசியலும் புரியும் வினைபாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. இக்கவனம் தத்துவம் மக்களுடன் புரியும் வினையின் முக்கிய காரணிகளாக மனம். மொழி தன்னிலை ஆகியன பற்றிய ஒரு அறிவார்ந்த புரிதலை உருவாக்க வேண்டியதின் அவசியத்தை நோக்கி நம்மைக் கொண்டுச் செல்கிறது. அதற்கான நமது புரிதல்கள் அனுமானங்கள் ஆகியவற்றைத் தொகுக்கும் முயற்சியே இங்கு எழுத்தாகியுள்ளது.
—————————–:பின்குறிப்பு : இவ்வெழுத்துக்குள் கிராம்சி அல்தூஸர் ஜேம்சன் போன்றவர்கள் சொற்களையோ வாக்கியங்களையோ எதிர்கொண்டால் நீங்கள் ‘சகபயணி’ என்கிற கௌரவத்தைப் பெறுகிறீர்கள்.
தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைப் போராட்டத்திற்கு மார்க்சிச தத்துவத்திறகுள் ஒன்றுமேயில்லையா? அல்லது தமிழ்த்தேசியம் அதற்குள் உள்ளனவற்றைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டதா?
ஜமாலன் அவர்களுக்கு இ உங்கள் கட்டுரை மார்க்சியம் என்ற கோட்பாட்டை பல்வேறுவகையில் அனுகி அதன் பலபட்ட பரிமாணங்களை பேசுகிறது. சமீபத்தில் படித்த பிரயோசனமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இங்கு நான் இருக்கும் பிரதேசத்தில் (இலங்கை ) இணைய வசதி மிகக்குறைவு. எனினும் இக்கட்டுரையை பிரதி பண்ணி பல நண்பர்களுக்கு கொடுத்துள்ளேன். மார்க்சியம் பற்றிய இவ்வாறான புதிய பார்வை புதிய தேடல் தற்கால சூழலில் அவசியம். தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். உங்களின் இணைய வலைத்தளத்தையும் நான் வாசிக்கிறேன். நன்றி.
//மார்க்சியம் இன்றைக்கான சமூகச் சொல்லாடல்களத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சமூக மற்றும் அரசியல் நனவிலியாக உள்ளது.//
சுவாரசியமான அவதானிப்பு ஜமாலன். 🙂
படிக்கும் போது இப்படி வித்தியாசமாய் இது உறுத்தவில்லை. ஏனெனில், அது மிகவும் இயல்பானதொரு நனவிலி!
—-
ட்ரான்ஸ்லிட்டரேஷன் செயலியை இணைத்தமைக்கு இனியொருவுக்கு நன்றிகள். பின்னூட்டங்களைத் தமிழில் இட இலகுவாயிருக்கிறது. 🙂 ஆனால், கட்டுரையை நல்ல விதமாக ஃபோர்மற் பண்ணி இட்டிருக்கலாம், பந்திகளும் வாக்கியங்களும் ஒன்றொடொன்று நெருக்கிக் கொண்டு அவ்வளவு இதமாக இல்லை. நான் ரீடரில்தான் வாசித்து முடித்தேன்.
//கட்டுரையை நல்ல விதமாக ஃபோர்மற் பண்ணி இட்டிருக்கலாம்இ பந்திகளும் வாக்கியங்களும் ஒன்றொடொன்று நெருக்கிக் கொண்டு அவ்வளவு இதமாக இல்லை. நான் ரீடரில்தான் வாசித்து முடித்தேன்.//ஹரி
தோழமையுடன் ஹரி சிலவேளைகளில் எங்களின் கவனக் குறைவினால் இவ்வாறான தவறுகள் நடந்துவிடுகின்றன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிவரும் காலங்களில் கவனம் கொள்வோம். உங்கள் வாசிப்புக்கு ஏற்பட்ட அசெளகரியத்திக்காக மன்னிக்கவும்.
மெய்யியலில் அவரது பார்வையில், இயற்கை மனித இயல்புகளால் மாறக்கூடியது என்றும் , அதை மாற்றும் திறமையை உழைப்பு என்றும் மாற்றத்தை உழைப்பு சக்தி எனவும் கூறுகிறார்.மனிதனை விடவும் திறமையாக நெய்யும சிலந்தியும், கூடு கட்டும் தேனியும் செய்ய முடியாத காரியம் , செயலை முடிக்கும் முன்னரே மனிதன் தன் கற்ப்பனையில் கட்டி முடித்து விடுவதுதான்.எவ்வளவு எளிதான விளக்கம்.
விளக்கங்கள் எளிமையாக இருந்தால் தவறு இல்லை எனநினைக்கிறேன்.அனைவருக்கும் சென்று சேரும் அல்லவா?அருமையான பதிவு.