ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இந்தியர்கள் மீது கடந்த சில தினங்களாக இன வெளித்தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் கனடா நாட்டிலும் இந்தியர்கள் மீது இன வெறித்தாக்குதல் நடந்துள்ளது.
கனடா நாட்டில் அப்பாட்ஸ்போர்டு எனும் நகரில் சுமார் 1 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அந்த நகரின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் உள்ளனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 6 சீக்கியர்கள் வான்கோவர் புறநகர் பகுதியில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கனடாவை சேர்ந்த 4 பேர் அங்கு வந்தனர். டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த இந்தியர்களை அவர்கள் திட்டினார்கள். டென்னிஸ் விளையாட விடாமல் தடுத்து தகராறு செய்தனர். டென்னிஸ் பொருட்களை அள்ளி வீசினார்கள்.
இந்த சம்பவத்தில் இந்தியர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி இந்தியர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் 4 வெள்ளைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்







