ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இன்று திங்கட்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் போதே பிரதமர் மன்மோகன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறதென்றும், இலங்கைத் தமிழர்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவலைகளையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி வரைவு அறிக்கை தமக்கு இன்னும் கிடைக்கவில்லை எனினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகார மட்டத்தில் காய்நகர்த்தும் அரசியலாகவே அமைந்திருப்பதால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு இலங்கைப் பேரினவாதத்திற்கோ பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது என்ற நிலையில் தீர்மானத்தை ஆதரிக்கும்நிலைக்கு இந்திய அரசு இனங்கியிருக்கிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் தலமை ஒன்று அற்றுப் போயுள்ள நிலையில் அமரிக்கா மற்றும் இந்தியா போன்றநாடுகளே இத்தீர்மானங்களைப் பயன்படுத்தி மொத்த தெற்காசியாவிற்கும் எதிரான அழிவு அரசியலை முன்னெடுக்கும் அவலநிலை காணப்படுகிறது.







