இலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது.
இலங்கை மோதல்களின் போது அனைத்து தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முழுமையான விசாரணை தேவை என்று மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள் கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்த சர்வதேச விசாரணைகள் தேவை என்று கூறிய அவர், அதற்கான ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவின் உதவிகளை தான் ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், அவரது இந்த கோரிக்கையை ஐ. நாவின் இலங்கைக்கான தூதுவர் தயான் ஜயதிலக நிராகரித்திருக்கிறார்.
உலகில் பல பாகங்களில் முன்னைய போர்களின் போது தோல்வியடைந்தவர்களே இப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய தயான் ஜயதிலக, அதேவேளை இலங்கைப் படையினர், தமது நாட்டு எல்லைக்குள், அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மாத்திரமே போரிட்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.