தோழர் சண்முகலிங்கம் அவர்கள் 1993ல் தேடகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காய் மறைந்த தோழர் சிவம் அவர்களால் அழைத்து வரப்பட்டிருந்த…ார். அதுவே தோழர் சண் அவர்களுக்கும் தேடகத்திற்குமான உறவின் தொடக்கமாயிருந்தது.
பின்னர், தேடகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு எதிரான அவரது செயற்பாடும், தேடகத்தை மீள் நிர்மாணிப்பதில் அவரின் பங்களிப்பும் தேடகத்தின் முழுநேர செயற்பாட்டாளராக்கியது. தேடகத்தினால் தயாரிக்கப்பட்ட இருமொழி நாடகமான ‘The D.M.O’ நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்து அனைவராலும் கவரப்பட்டார். ரொரன்டோவில் சர்வதேச தமிழ் குறும்பட விழாவை ஆரம்பித்து வைத்து தமிழ் குறும்படத்திற்கான களத்தை தோற்றுவித்தவர்களில் தோழர் சண் முக்கியமானவர். தேடகத்தின் உறுப்பினராக இருக்கும் வரை மானிட மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பன்முகச் செயற்பாடுகள் தேடகத்தின் வரலாற்று சுவட்டில் எப்போதும் பதியப்பட்டிருக்கும்.
இளைய பராயத்திலேயே சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிராக குரல் கொடுத்த தோழர் சண், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1977ல் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மலையக மக்களின் நலன் கருதி காந்தியத்தோடு இணைந்து பணியாற்றிய வேளையில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட இடதுசாரி முன்னோடியாகவும் திகழ்ந்தார். அவரது அரசியல் செயற்பாடுகளுக்காக 1983ல் இலங்கை அரசினால் கைதாகி கடும் சிறைவாசத்தை அனுபவித்தவர். சிறையில் அனுபவித்த சித்திரவதைகளினால் அவரது உடல் நலம் பெரிதும் பாதிப்புற்றிருந்தது. இந்தியாவில் இருந்த
வேளையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சி ஜனநாயகத்திற்காக போராடியவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். அவரின் வாழ்நாளில் பெரும் பங்கை மானிட மேன்மைக்காய் அர்ப்பணித்தவர்.
அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தேடகமும் தனது துயரை பகிர்ந்து கொள்கிறது. தோழர் சண்முகலிங்கம் அவர்களின் ஒப்பற்ற சமூக செயற்பாட்டுக்காய் சிரம் தாழ்;த்தி தேடகம் தனது தோழமை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
28.02.2013
ரொரன்டோ, கனடா