ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஈழத் தாய் என புலம்பெயர் அரசியல் பிழைப்பு வாதிகளும் சீமான் போன்ற கோமாளிகளும் புகழாரம் சூட்டினார்கள். போராடும் மக்களைப் பகைத்துக்கொண்டு ஈழப் போராட்ட நியாயங்களை மேலும் அழித்துத் தனிமைப்படுத்தினார்கள். நகடுகடந்த தமிழீழ அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை போன்றன வாழ்த்துச் செய்திகளை அனுப்பின. இன்று சீமான் கூட்டம் போடுவதற்குக் கூட ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
இப்போது எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட தடைவிதிக்கும் சிறப்புத் தீர்மானம் ஒன்று ஜெயலலிதா கொண்டுவந்துள்ளார். இத்தடைக்கு எதிராக கருணாநிதி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது:
தருமபுரியில் 3 மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கு அதிமுக ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழக மக்களும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, இந்த ஆட்சியினர் தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகளின் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். காவல்துறையினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் நடத்த இருந்த கூட்டத்திற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றும், அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன. கரூர் மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி அன்று திருமண விழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டபோது, அதற்காக விளம்பரத்தட்டிகளை வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சியிலே இருக்கும்போது, கடந்த காலத்தில் தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது என்னென்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டு செயல்படுவது நல்லதல்ல. ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல. அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம். இது எச்சரிக்கை அல்ல. எண்ணிப்பார்ப்பதற்காக என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.








