Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் : புன்னியாமீன்

இனியொரு... by இனியொரு...
11/29/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
world-aids-day20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.
 
உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் ‘சிகப்பு நாடா சின்னம்” அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்” ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நாளில் எய்ட்ஸ் நோய் பற்றியும், அதன் கொடிய விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு திட்டமிடப்படுகின்றது.
 
1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் (U.S.A.)கண்டுபிடிக்கப்பட்டார். முதலாம் நோயாளி இனங்காணப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபன (W.H.O.)  அறிக்கையின்படி,  119, 818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. இம்மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாதம் முதலாம் திகதி இத்தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.  இதையடுத்து அரசுகளும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவது வழக்கம். 1988-2004 வரை  எய்ட்ஸ் தினம்,  ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1988ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் ‘தொடர்பாடல்” என்பதாகும். தொடர்ந்து 1989 – ‘எய்ட்சும் இளைஞர்களும்’, 1990 – ‘எய்ட்சும் பெண்களும்’,  1991 – ‘சவாலை பகிர்ந்து கொள்ளல்’,  1992 – ‘சமூகத்தின் ஈடுபாடு’,  1993 – ‘செயலாற்றுதல்’, 1994 – ‘எய்ட்சும் குடும்பமும்’, 1995 – ‘உரிமைகளையும்,  பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்’, 1996 – ‘ஒரு உலகம் ஒரு நம்பிக்கை’, 1997 – ‘எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்’,  1998 – ‘மாற்றத்துக்கான சக்தி’,  1999 -‘செவிகொடு,  கற்றுக்கொள்,  வாழ்’. 2000 – ‘எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்’,  2001 – ‘நான் பாதுகாப்புடன் – நீ?’,  2002,  2003 – ‘தழும்புகளும். சாதக பாதகத்தை வித்தியாசம்காண்’,  2004 – ‘பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்’ ஆகிய தலைப்புகளில் அனுஸ்டிக்கப்பட்டது.  2005 முதல் இப்பொறுப்பு “உலக எய்ட்ஸ் பிரசாரம்” (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2005 முதல் 2010ஆம் ஆண்டுவரை இதன் கருப்பொருள் ‘எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று’ (Stop AIDS. Keep the Promise.” என்பதாகும்.
 
பல மில்லியன் உயிர்களை காவுகொண்டுள்ள இக்கொடிய நோயைப் பற்றிய முழு விவரங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு முழுமையாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே எய்ட்ஸ் அரக்கனை வெல்ல முடியும். ‘ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி” எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS- Acquired – (பெற்ற) Immuno – (நிர்பீடக்,  ) Deficiency – (குறைபாட்டுச்) Syndrome- (சிக்கல்) ) என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் வைரஸினால் பரவும் நோய்.
எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்டீரியா  (Bacteria),    பங்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது.  இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் நுணுக்குக்காட்டி  (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும். தற்போது இலங்கையில் மிக வேகமாகப்பரவி வரும் பன்றிக் காய்ச்சலும்,  A H1N1 வைரஸ் தொற்றின் காரணமாகவே பரவுகின்றது.
வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து,   பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell)  தேவை. அது பெருகும் போது,  தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.
எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது.  நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (T-helper Cell)  இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ்  தொற்றியிருக்கும்  கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால்,  அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.
எயிட்ஸின் வரலாறு
ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில்  (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது  இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus)  என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில்  உள்ள ”தேசிய புற்று நோய் நிறுவனம்”  இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது  இதற்கு  H.I.V  – type III  வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும்  HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency  (நீர்ப் பீடனக்  குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை  HIV-I  என்றும்,  பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV – II என அழைக்கிறார்கள்.
 
எயிட்ஸ் பரவுதல்
உலக சுகாதார அமைப்பின் 2006 கணக்கெடுப்பின்படி உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் தொடர்புடைய நோயின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியனாக அதிகரித்திருந்தது.  39.5 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4.3 மில்லியன் மக்கள் புதிதாக நோய் காவப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவின் சகாராப் பாலைவனப்பகுதியை அண்மித்த பகுதி எய்ட்ஸ் நோயினால்  மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். 2007-ல் அப்பகுதியில் எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 % ஐயும், எயிட்ஸினால் மரணமடைந்தவர்களில் 76% ஐயும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பின்பு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் உள்ளடக்கியிருந்தது. ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் சகாராவை அண்மித்த பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61% பேர் பெண்களாவர். தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன.
 
பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுறுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. எனவே ஆண் பெண் உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.
 
மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும்,  HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.
பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போது
கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது. எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே  இந்நோய் தாக்கக்கூடும்.  அதே நேரம் கொனரியா (Gonorrohoea),  சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes)  போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,  பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம்.
HIV  தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல், புகையிரதம்  மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணீர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ,  நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல்,  கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகுகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
 
எயிட்ஸ் அறிகுறிகள்
அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது “ஃப்ளு சுரமாக” (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு,  காய்ச்சல்,  தலைவலி,  உடல்சோர்வு,  குமட்டல்,  வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம்,  வயிற்றுப்போக்கு,  நெறிகட்டுதல் (அக்குள்,  கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று,  பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
“எய்ட்ஸ்” வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
 
எச் ஐ. வீ இரத்தச் சோதனை. 
HIV தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ்வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே புறத்தே தென்படும் பண்புகளை கொண்டு அவர்களை இனம்காண முடியாது. HIV தொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள HIV பிறபொருளெதிரிகளை  இனம்காண்பதாகும்.  இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை. ELISA TEST எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை (screening test) எனப்படுகிறது. ELISA சோதனையானது HIV தொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு.
Western blot test  வெஸ்டர்ன் புலொட் சோதனை. இது உறுதிப்படுத்தும் சோதனையாகும் (Conformation test).   ELISA  சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் Western blot சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் HIV பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.
ELISA சோதனை, Western blot  சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் (+ ) வகை பெறுபேறு காணப்பட்டால் HIV பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது HIV தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.
இவ்விடத்தில் யார் HIV குருதிப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. குறிப்பாக தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு  HIV  தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தால், மேலும்  வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது 
இரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் HIV தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.  இத்தகைய இரத்த சோதனைகள் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க,  தனியார் வைத்தியசாலைகளிலும்,  இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்களிலும்,  விசேட இரத்த பரிசோதனைக் கூடங்களிலும் இச்சோதனைகளை செய்து கொள்ளலாம்.
 
HIV தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இரத்தச்சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனைப் பெறுபேறு வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒருவரினதும் பொறுப்பாகும். நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக HIV  சோதனை நடத்துதல். இச் சோதனைப் பெறுபேறு அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங்கத் தன்மையைப் பேணக்கடமைப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது. இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு உண்டு.
 
HIV யைக் கட்டுப்படுத்தும்  மருந்துகள் பொதுவாக  “ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்” (Antireteoviral Drugs) என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக “ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
 
‘ஆன்டி ரெட்ரோ வைரஸ்” மருந்துகளை பயன்படுத்துபவர்கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். HIV க்காக மாத்திரமல்லாமல் அபாயகரமான வைரஸ் தொடர்பாக எத்தகைய தொற்றுக்களுக்கும் இது பொருந்தும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மாத்திரமன்றி வைத்தியர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்தை உரியநேரத்தில் உட்கொள்ளுதல் அவசியமானதாகும். மாறாக தான் நினைத்தவாறு மருந்துகளை உட்கொண்டால் அதன் பலன் குறைவாகவே இருக்கும். மேலும்,  தொடர்ச்சியாக மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து ஆலோசயைப் பெறுவதினூடாக,  தான் உட்கொள்ளும் மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கிக் கொள்ளவும் முடியுமானதாக இருக்கும். ஒரு முறை ‘ஆன்டி ரெட்ரோ வைரஸ்” மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை பயன்படுத்த  வேண்டும். எனினும் இம்மருந்து வகைகளுக்கு அதிக பணம் செலுத்தவேண்டியதால் சிலர்  தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் தற்போது இம்மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.
 
அதேநேரம்,   HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்  HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.
 
HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகைகளே பயன்படுத்தப்படுகின்றன.
!. Nucleoside analogues          
2. NonNucleoside reverse trancriptasinhibirors              
3.Protese inhibitors
இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.
 
ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்
ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta)  விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM 22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com ல் வெளியாகியுள்ளது. இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் வைரஸ் தொற்றை அழிக்கும் முறையை இன்னும் அவர்கள் கண்டறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸ{க்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.
தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி -1 தடுப்பூசி தயாரிப்பதென்பது கடினமான இலக்காகவே உள்ளது.
தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும்.
எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது – ஐ நா தெரிவிப்பு
கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது. எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐ.நா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆபிரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சமாகக் குறைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரணமாக இருந்ததாக ஐநா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப்பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னை தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடைமுறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருக்கிறார்.
HIV தொற்று வராமல் இருக்க…
எய்ட்ஸ் பாதுகாப்பு HIV  தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV  தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும். பிரதானமாக உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தலுக்கான பூரண முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.
ஒருவருக்கொருவர். உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் அவசியமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும்.  மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.  இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக்  கொள்ளல் வேண்டும்
 
பிற பாதுகாப்பு முறைகளிலும் அவதானம் செலுத்துதல் வேண்டும்.  ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கருவுற்ற பெண்கள்,  “தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை” அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV  தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும். ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV  தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!
எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப்படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தவறு. ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும்கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும்,  சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. எயிட்ஸ் ஆல்  பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தெரிந்து தெளிவடைதல்,  ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர்,  அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். 
மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும்.  எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ என்று வைத்தியர் முடிவெடுக்க வேண்டும். எயிட்ஸ் பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். தெரிவித்த பின் வேறு ஒரு பரிசோதனையை மேற்கொள்ளல் கூடாது. இது நோயாளிகளின் உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நோயாளிகளினால் நீதி மன்றத்தை அணுக முடியும். ஆனால் HIV . மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர்.  ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர். 
வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை எனும் போது ‘எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும்.” இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படுவது குறைவு. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, அல்லது தனியார் துறையோ தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும்.
தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம்.
அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV  நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் HIV உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது.  அப்படிச் செய்தால், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே HIV  எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பழங்குடி மக்களின் இன உரிமைக்கான அடையாளங்களும் - போராட்டங்களும் :குட்டிரேவதி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...