Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உலகளாவிய நிதி நெருக்கடியும் சர்வதேச நாணய நிதியமும் : ஜயதிலக டி சில்வா

இனியொரு... by இனியொரு...
01/19/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

சாராம்சம்

ஐக்கிய அமெரிக்காவில் நிகழ்ந்த உப-முதன்மை அடைமானத் திடீர் வீழ்ச்சியுடன் உலகளாவிய நிதி நெருக்கடியானது ஆரம்பித்தது. ஊக மூலதனம் பல் மடங்காக அதிகரித்திருந்தது. மெய்ப் பருப்பொருள் மூலதனத்திற்கும், உண்மையல்லாத மூலதனத்திற்கும் இடையிலான உறவு மேலும் மேலும் நெருக்கமற்றதாகியதுடன், பின்னர் குறிப்பிடப்பட்ட மூலதனமானது அனேகமாக சுதந்திரமான ஓர் இருப்பு நிலையின் வடிவத்தைப் பெற்றிருந்தது எனும் அளவிற்கு இந்த நெருக்கமற்ற தன்மை காணப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவில் முதன்முதலாக நிகழ்ந்த இந்த நெருக்கடியானது ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவாகப் பரவியது. இறுதியாக, அனைத்து நாடுகளும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தினுள் குறைந்தளவே மூழ்கிப்போன நாடுகள் கூட, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. தற்போதைய நிதி நெருக்கடியானது 1930களிலிருந்து ஏற்பட்டவற்றுள் மிக மோசமானதாக அமைந்துள்ளது எனும் ஒருமித்த அபிப்பிராயம் காணப்படுகின்றது. இப் பூலோகமானது அதிகளவிற்கு உலகமயமாகியுள்ளமையாலும், உலக சனத்தொகை மிகப் பெரிதாக வளர்ச்சியடைந்துள்ளமையாலும் அதன் விளைவு பாரியதாக உள்ளது.

இந்த நெருக்கடியின் பிரதான காரணி உண்மையல்லாத மூலதனத்தின் திடீர் வளர்ச்சி மற்றும் நிதிச் சந்தைகளின் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தல், குறிப்பாக மூலதனக் கணக்கின் தாராளமயமாக்கம், என்பவற்றின் விளைவாகத் தோற்றம் பெற்ற புதிய நிதிக் கட்டுக்கோப்பிலேயே காணப்பட்டது. பொருளாதார முகாமைத்துவத்திற்கு ஆதரவாக இருந்த முழுமையான சித்தாந்தமும் குறைபாடுடையதாக அமைந்திருந்தது. நவ தாராண்மைவாதமே இச் சித்தாந்தமாக அல்லது பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டு மாதிரியாக அமைந்திருந்ததன்றி வேறெதுவும் அல்ல.

இச் சித்தாந்தத்தில் உள்ள குறைபாட்டை பல வருடங்களுக்கு முன்னர், அதாவது கிழக்காசிய நெருக்கடிக் காலகட்டத்திலேயே தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. இக் கிழக்காசிய நெருக்கடிச் சூழ்நிலையானது சர்வதேச நாணய நிதியம் பற்றிய ஆழ்ந்த அவநம்பிக்கையாகக் காணப்பட்டது. உலகளாவிய இந்த நிதி நெருக்கடி சர்வதேச நாணய நிதியத்திற்குப் புதியதோர் சட்ட ரீதியான அங்கீகாரத்தைக் கொடுத்துதவியுள்ளதுடன், மிகை நிலையிலிருந்து அதைப் பாதுகாத்துமுள்ளது. இந்த நெருக்கடியானது ஓர் மீள்வரவுக்கு ஏற்பாடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது மாத்திரமன்றி, அண்மித்த கடந்த காலத்தில் உலக பொருளாதாரத்தின் வேகத்திற்கு இணையான வேகத்தின் அதன் நிதி வளங்கள் மாற்றமடையவில்லை என்பதனால், இது ஓர் சவாலாகக் கூட அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்கத்தக்க வளங்களை மூன்று மடங்கு அதிகரிப்பதற்கு 2009இல் இலண்டனில் நடைபெற்ற குழு – 20 மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்காக 500 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.

இம் மாற்றங்களாலும், அதிகரித்த நிதியளிப்பாலும் சர்வதேச நாணய நிதியத்தால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை இக்கட்டிலிருந்து காப்பற்றக்கூடியதாக இருக்குமா? இவ் வினாவுக்கு ஓர் பதிலைக் கண்டறிவதன் பொருட்டு அல்லது பதிலைக் கண்டறிவதற்கான ஓர் வழியைத் தேடிக் கணடுபிடிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தில் காணப்படும் நிருவாக முறைமையை ஒருவர் ஆராய வேண்டியுள்ளது. தனது சிறப்புரிமை நிலையைக் கைவிடுவதற்கு ஐக்கிய அமெரிக்க தயாராக உள்ளதா? என்பது விவாதத்திற்குரிய ஓர் விடயமாகும்.

கிறீன்ஸ்பன் அவர்கள் ஏற்றுகொண்டவாறு, அக் கோட்பாடு குறைபாடுடையதாக இருந்திருக்குமாயின், ஐக்கிய அமெரிக்காவினதும், மேலைத் தேசத்தின் ஏனைய தலைவர்களதும் உத்தரவின்படி சர்வதேச நாணய நிதியமானது நவ தாராண்மைவாதக் கோட்பாட்டை செயல் வெறியுடன் ஊக்குவித்து வந்தமையால், பழியை அது கூட பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான ஐக்கிய அமெரிக்காவின் இடத்தை சீனா நிரப்பவுள்ளது. மெய் உற்பத்தியாது அபிவிருத்தியடைந்த உலகில் இருந்து BRIC நாடுகளுக்கு (Brazil, Russia, India, China) ஏற்கனவே நகர்ந்துள்ளது. இப் புதிய நிகழ்வுகள் உலக நிதிக் கட்டுக்கோப்பு மீது தமது பின்விளைவுகளைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு. இந்த நெருக்கடியானது குழு – 7ஐ தற்காலத்திற்கு ஒவ்வாததாக ஏற்கனவே மாற்றியுள்ளது. இவ் வெற்றிடத்தை குழு – 20 மேலும் மேலும் நிரப்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இறுதியாக தலைமை ஸ்த்தானத்தில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது குழு – 192டேயாகும்.

குறுங் காலத்தில், கடன் பகிர்வில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை விதிப்புகளில் ஓர் தளர்வை எம்மால் காணக்கூடியதாக இருக்கும். புவிசார் அரசியலில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பலப்படுத்தல் மற்றும் உலக பொருளாதாரத்தில் காணப்படும் அவற்றிற்குரிய இடங்களுக்கான வளர்ந்து வரும் பலம் என்பவற்றிற்குச் சரி விகிதமாக இது அமைந்திருக்கும். நீண்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியமானது தனது நவ தாராண்மைவாதக் கொள்கைகளைத் தூக்கியெறியுமோ அல்லது இல்லையோ, அதன் இருப்பு உலகின் பொருளாதார, அரசியல் மாற்றங்களில் தங்கியிருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தமானது சலிப்பு உண்டாக்கக்கூடியதாகவும், தற்போதைய நெருக்கடியில் இருந்து உலக பொருளாதாரம் மீண்டெழுவதற்குத் தேவைப்படும் ஓர் நீண்ட காலச் செயல்முறையைப் போன்று, நீடித்ததாகவும் கூட இருக்கும்.

உலகளாவிய நிதி நெருக்கடி பற்றிய அறிமுகம்

ஐக்கிய அமெரிக்காவில் நிகழ்ந்த உப-முதன்மை அடைமானத் திடீர் வீழ்ச்சியுடன் உலகளாவிய நிதி நெருக்கடி ஆரம்பித்தது. 2007 மார்ச் தொடக்கம் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான அடைமான மீட்புரிமைத் தடைகளால் இத் திடீர்  வீழ்ச்சியானது விரைவுபடுத்தப்பட்டது. நீண்ட கால உயர் முதலீட்டு வளர்ச்சி, நிதிச் சந்தையின் குறைந்தளவான நிலையுறுதியற்ற தன்மை என்பவற்றை தொடர்ந்து, நிதி முகாமையாளர்களாலும், முதலீட்டு வங்கியாளர்களாலும் பொறுப்பேற்கப்பட்ட, முன்னொருபோதும் இல்லாத உயர்வான நட்ட அச்சங்களின் ஓர் விளைவாக அமைந்ததே இவ் அடைமான மீட்புரிமைத் தடைகளாகும். புதிய கொடுகடன் கருவிகள் உருவாக்கப்பட்டன. எதிர்பாராத இழப்பீட்டு நிதியம், சொத்துவழிப் பெறுமதி நிதிச் சொத்துக்கள் (derivatives) முதலானவற்றை இவை உள்ளடக்கியுள்ளன.

ஓர் விசைப் பொத்தானை அழுத்துவதன் மூலம், பெருந்தொகைப் பணத்தின் உலகு கடந்த இலத்திரனியல் ரீதியான மாற்றல்களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியானது  சாத்தியமாக்கியது. ஊக மூலதனம் பல மடங்காக அதிகரித்தது. மெய்ப் பருப்பொருள் மூலதனத்திற்கும் உண்மையல்லாத மூலதனத்திற்கும் இடையிலான உறவு மேலும் மேலும் நெருக்கமற்றதாகியதுடன், பின்னர் குறிப்பிடப்பட்ட மூலதனமானது அனேகமாக சுதந்திரமான ஓர் இருப்பு நிலையின் வடித்தைப் பெற்றிருந்தது எனும் அளவிற்கு இந்த நெருக்கமற்ற தன்மை காணப்பட்டது. பணத்தின் திடீர்த் தேவை நெருக்கடி ஒன்று காணப்பட்டதுடன், உண்மையல்லாத மூலதனத்தின் பெரும் பகுதி அதாவது மாற்றுண்டியல்கள், சொத்துவழிப் பெறுமதி நிதிச் சொத்துக்கள் முதலானவை மீட்க முடியாதவையாகி, முற்றிலுமாக மறைந்துவிடும் நெருக்கடி மிக்க காலங்களில் இவை இரண்டுக்கும் இடையிலான மிக முக்கியமான, ஆனால் மறைபொருளாகவுள்ள உறவானது, தெளிவாகக் காணக்கூடிய இடர்காப்புதவி கிடைக்கக்கூடிய நிலையில் இருப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடியின் வருகையுடன் முற்றிலும் நேர்ந்த நிகழ்வே இதுவாகும்.

எதிர்வு கூறல்கள்

முன்னர், அதாவது 1993இல், சோவியத் சோசலியக் குடியரசுகளின் ஒன்றியத்தினுடைய தோல்வியையும், வரலாற்றின் (அல்லது குறைந்தபட்சம் பொதுவுடைமைக் கோட்பாட்டின்) முடிவையும் முதலாளிகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, எச். மின்ஸ்கி என்பவர் தீர்க்கதரிசனத்துடன் பின்வருமாறு கூறினார். ‘….. உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் இருந்து இலாபங்களை உழைப்பது, பாரிய கம்பனிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களது பிரதான நோக்கமாக இனிமேலும் அமைந்திருக்காது. ஆனால் நிதிச் சந்தையில் தமது கம்பனிகளின் பொறுப்புக்களுக்கு முழுமையான விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கும்……. 1929 தொடக்கம் 1933 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்தவற்றைப் போன்ற, ஓர் திடீர் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் படுகடன் ஏற்புத் தன்மைக்கான காசுப் பாய்ச்சலின் பெரும் பகுதிக்கு உறுதிமொழி வழங்குகின்ற நிதிக் கட்டமைப்பானது, தற்போது ஓர் திறந்த விவாதத்தி;குரியதாக இருக்கின்றதா என்பதைப் பற்றிய பிரச்சினையானது…… அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில், முதலாளிகள் பொருளாதாரத்தின் எபோர்ஸ்களாகச்  (-ephors) என்னும் கிரேக்க மொழிச் சொல்லானது பண்டைய கிரேக்க தேசத்தின் ஸ்பாட்டா நகரத்தில் இருந்த மிகவும் உயர் மதிப்புடைய நீதிபதிகளின் பதிவிப் பெயரைக் குறிக்கிறது. மன்னனுடன் இவர்கள் ஐவரும் இணைந்தே அரசின் பிரதான நிறைவேற்றுத் துறையை நிறுவினர்.)ழூ செயற்படவில்லை என்பதுடன், நிகழும் நிதியளிப்பைத் திருத்தியமைக்கின்றனர். அதனால், பொருளாதாரத்தின் மூலதன விருத்தி ஊக்கிவிக்கப்படுகின்றது. இன்றைய பண முகாமையாளர்கள் பொருளாதாரம் ஒன்றின் மூலதனச் சொத்து விருத்தியில் மிகக் குறைந்தளவே அக்கறை கொண்டுள்ளனர். இன்றைய நிதிக் கட்டமைப்பானது ஒரு கசினோவாக (ஓர் சூதுச் சீட்டாட்டம்), வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் நிதி ஏற்பாடுகள் பற்றிய கெயின்ஸின் பண்புரு வருணனைக்கு மிகவும் ஒத்த இயல்பைக் கொண்டதாக அமைந்துள்ளது.’ (மின்ஸ்கி, 1993)ஒன்றரைத் தசாப்பதங்களுக்கு முன்னர், மின்ஸ்கி அழுத்தமான முறையில் எதைத் தனது மனதில் உருப்படுத்திக் கண்டாரோ அதையே கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஒன்றேகால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோட்பாட்டு ரீதியாக உணர்ந்தறிந்தார். மூலதனம் : பாகம் 3 இல் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘மீள் உற்பத்திச் செயல்முறையின் முழுமையான தொடர் நிகழ்வானது கடன் மீது சார்ந்திருக்கும் ஓர் உற்பத்தி முறைமையில் ஓர் நெருக்கடி வெளிப்படையாக நிகழ வேண்டும் – கடன் திடீரென முடிவுறுவதுடன், பணக் கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் சட்டப்படியான செல்லுபடியாகக் கூடிய தன்மை உள்ளபோது, கொடுப்பனவு முறைக்கான மிகவும் அதிகமான ஓர் பரபரப்பு நிலை……. அத்துடன் உண்மையில், மாற்றுண்டியல்களைப் பணமாக மாற்றுவது பற்றிய ஓர் பிரச்சினையே அதுவாகும். ஆனால், இம் மாற்றுண்டியல்களில் பெரும்பாலானவை உண்மையான விற்பனைகளதும், கொள்வனவுகளதும் விளைவாக அமைந்துள்ளன. எதிர்பார்த்ததற்கு மாறாக, இவை இரண்டினதும் விரிவாக்கம் சமூகத்தின் தேவைகளை விட மிகுதியாக இருத்தல் முழுமையான நெருக்கடிக்கு அடிப்படையாக அமைகின்றது. அதேசமயம், இம் மாற்றுண்டியல்களில் மிகப் பெரும் எண்ணிக்கையானவை தற்போது வெளிப்படுத்தப்படுவதும், முற்றிலுமாக வீழ்ச்சியடைவதுமான தெளிவான பண மோசடியாகவே அமைந்துள்ளன’. (மார்க்ஸ், 1894)

நிதிச் சந்தைகளின் நாளாந்த மொத்த விற்பனை 3 றில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக இருந்தது. நிதி மூலதனம் முன்னொருபோதும் இல்லாத ஓர் நகர்வுக்கு இடமளித்தது. படுகடன் பங்குரிமைச் சான்றிதழ்கள் நான்கில் ஒன்றையும், உரிமைப் பங்குகள் ஐந்தில் ஒன்றையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருப்பதை உள்ளடக்கியதாக, உலகளாவிய ரீதியில் நாடு கடந்த மூலதனப் பாய்ச்சலானது 2002 இற்கும் 2007 இற்கும் இடையில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்தது. (பிளங்கன்பேக்கும், பாமாவும் -2009).

இச் சூழமைவிலேயே உப-முதன்மை நெருக்கடி நிகழ்ந்தது. இந்த நெருக்கடியானது முழுமையான வங்கியல்லா நிதித் துறைக்கு அல்லது திரைமறைவு நிதித் துறைக்கு விரைவில் பரவியது. முறைசார்ந்த வங்கித் துறை கூட ஊறுபாடு அற்றதாக எஞ்சியிருக்கவில்லை. லேமன் பிறதர்ஸின்  வீழ்ச்சி, மெறில் லின்ஞ்சின்  முறிவு முதலானவை வரலாற்றின் ஓர் பாகமாக மாறியது. இத் தொற்றுநோயின் தாக்கமானது முன்னொருபோதும் இல்லாத வங்கித் தொழில் நெருக்கடி ஒன்றிற்குக் காரணமாக அமைந்நது. 

ஐக்கிய அமெரிக்காவில் முதன்முதலாக நிகழ்ந்த இந்த நெருக்கடியானது ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவாகப் பரவியது. இறுதியாக, அனைத்து நாடுகளும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தினுள் குறைந்தளவே மூழ்கிப்போன நாடுகள் கூட, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. 

நச்சுத் தன்மைவாய்ந்த படுகடனின் திரட்சியானது மிகப் பெரியதாக அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க நிதி நிறுவனங்கள் 1 றில்லியன் அமெரிக்க டொலர்களை மீட்க முடியாதவையாகத் தள்ளுபடி செய்துள்ளதுடன், மேலும் 3 – 5 றில்லியன் அமெரிக்க டொலர்களை மீட்க முடியாதவையாகத் தள்ளுபடி செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது (ரெட், 2009). அலன் கிறீன்ஸ்பனின் கூற்றுப்படி, நிதி மற்றும் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட கம்பனித் துறை பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத கம்பனிகளும் கூட்டு முயற்சியல்லாத வியாபார அமைப்புகளும், வீட்டுத் துறை என்பவற்றின் மொத்த உரிமைப் பங்கு இழப்பானது 40 றில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமானதாக இருக்கும் என்பதுடன், இத் தொகையானது 2008இன் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமமானதாகும்.

2007 – 2009 காலப்பகுதியில் உலக வேலையின்மையானது குறைந்த பட்சம் 30 மில்லியன் மக்களால் அதிகரிக்கக் கூடும் என்பதுடன், நிலைமைகள் படுமோசமான நிலையை அடையுமாயின், அது 50 மில்லியனாகக் கூட அதிகரிக்கக்கூடும் என சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் மதிப்பிடது.

இந்த நெருக்கடியின் பிரதான காரணியானது உண்மையல்லாத மூலதனத்தின் திடீர் வளர்ச்சி மற்றும் நிதிச் சந்தைகளின் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தல், குறிப்பாக மூலதனக் கணக்கின் தாராளமயமாக்கம், என்பவற்றின் விளைவாகத் தோற்றம்பெற்ற புதிய நிதிக் கட்டுக்கோப்பில் காணப்பட்டது. இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் உட்பட பிரதான அபிவிருத்தியடைந்த நாடுகள் வேறு வழியின்றி, வங்கி முறைமையின் மிக அதிகமான கூறுகளைப் பாதிக்கின்ற கட்டுப்பாட்டு விதியைத் துணையாக நாடின. இவ்வாறாக, இந்த நெருக்கடிக்கான ஓர் காரணியாக கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தலானது அமைந்திருந்தது என்பது அதேவகையில் எதிரீடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவற்றை விட மேலும் அதிகமான விடயங்கள் இருந்தன. பொருளாதார முகாமைத்துவத்திற்கு ஆதரவாக இருந்த முழுமையான சித்தாந்தமும் குறைபாடுடையதாகக் காணப்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் தனது கருத்தைக் கூறுவதற்கான வாய்ப்பின்போது, தான் உறுதியாக நம்பிய சித்தாந்தம், அதாவது தான் கருதிய பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டு மாதிரி குறைபாடுடையதாக இருந்தது என்பதை மத்திய நாணயப் பரிவர்த்தனை நிலையத்தின் முன்னாள் தலைவரான அலன் கிறின்ஸ்பன் ஒப்புக் கொண்டார். இச் சித்தாந்தம் அல்லது பின்பற்றத்தக்க இவ் எடுத்துக்காட்டு மாதிரி எதுவெனில் நவ தாராளவாதமேயன்றி வேறெதுவும் அல்ல. இது முதன்முதலாக மார்கிறட் தட்சராலும், றொனால்ட் றீகனாலும் மிகுந்த எக்காள முழக்கத்துடன் (பகட்டு ஆரவாரத்துடன்) அறிமுகப்படுத்தபட்டது. 

பொருளாதாரத் தாராளமயமாக்கம்

பொருளாதாரக் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துதல், அரச தொழில் முயற்சிகளைத் தனியார் மயப்படுத்தல், சந்தைச் சக்திகளின் சுதந்திரமான செயற்பாடும், மூலதனம், உற்பத்திப் பொருட்கள், சேவைகள் என்பவற்றின் சுதந்திரமான நகர்வும், மூலதனத்திற்குச் சாதகமாக தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துதல், சமூக சேமநலச் செயற்பாடுகளைக் குறைத்தல், பொதுமக்களுக்கான பொருட்களுக்குப் பதிலாக தனியாட்களுக்கான பொருட்கள் மீது கவனஞ் செலுத்துதல், பண்டமயமாக்க இயல்பை அதிகரித்தல் என்பன பொருளாதார நவ தாராளவாதத்திற்கு தேவைப்படுகின்றன. சந்தையானது அனைத்தையும் தீர்மானிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதுடன், அரசின் செயற்பாடு மிகக் குறைந்த அளவிற்கு குறைக்கப்பட வேண்டும். பல்தேசியக் கம்பனிகளுக்கும், ஏனைய முயற்சியாளர்களுக்கும் அதிக பட்ச இலாபங்களுக்கு உத்தரவாதமளிக்கும் நோக்கத்துடன், தனியார் சொத்துக்களின் பாதுகாவலனாக அதன் செயற்பாடானது ஐயத்துக்கு இடமின்றி பழுதுபடாதாக விடப்பட்டுள்ளது. முறிவடைந்த தனியார் வியாபார முயற்சிகளை அரச நிதியங்கள் ஊடாக இக்கட்டிலிருந்து காப்பாற்றுதலையும் இது உள்ளடக்குகின்றது.

இம் மூலக் கோட்பாடுகள் வோஷங்டன் உடன்பாட்டின் ஓர் அங்கமாக அமைந்துள்ளன. சந்தைகள் மீதான மிக அதிகளவாகச் சார்ந்திருக்கும் நிலை காரணமாக,  நவ தாராளவாதத்திற்கு ‘சந்தை அடிப்படைவாதம்’ எனும் பெயர் கூட வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில், இச் சித்தாந்தத்தில் உள்ள குறைபாடானது பல வருடங்களுக்கு முன்னரே அதாவது கிழக்காசிய நெருக்கடிக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. வெளிநாட்டு மூலதன உட்பாய்ச்சல் ஒன்று நிகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிய மூலதனக் கணக்கை கிழக்காசிய நாடுகள் தாராளமயமாக்க வேண்டுமென அவற்றை சர்வதேச நாணய நிதியம் கட்டாயப்படுத்தியது. ஆனால், மூலதனப் பாய்ச்சல்களை நிருவகிப்பதற்கான ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் எதுவும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்திருக்கவில்லை. வாயில்கள் அகலத் திறந்ததும், நிதி உறுதிப்பாடின்மையின் முதலாவது அறிகுறிகள் தென்பட்டவுடனேயே வெளிநாட்டு மூலதனமானது அதிவேகமாக வெளியே சென்றுவிட்டது. ஓர் சுதந்திரமான சந்தைக்காக கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தலானது, எல்லா நாடுகளிலும் காணப்படும் அனைத்து நோய்களுக்குமான சஞ்சீவியாக (சர்வ ரோக நிவாரணியாக) அமையவில்லை என்பதை கிழக்காசியா வெளிப்படுத்தியது. ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் துல்லியமான நிலைமைகளை கவனத்தில் எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தவறிவிட்டதென, ‘ஒரே அளவு அனைவருக்கும் பொருத்தமானதாகும்’ எனும் விதியமைப்பை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் அணுகுமுறையை விமர்சிக்கும் உலக வங்கியின் முன்னாள் பிரதம பொருளியலாளரான ஜோசப் ஸ்ரிக்கிளிற்ஸ் கூறுகின்றார். அவ்வாறே ஆஜன்ரீனச் சூழ்நிலையிலும் சர்வதேச நாணய நிதிய விதியமைப்புகள் கேடு விளைப்பவையாக அமைந்திருந்தன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வீழ்ச்சி

கிழக்காசிய நெருக்கடிச் சூழ்நிலையானது இப் பிராந்தியத்தில் காணப்பட்ட சர்வதேச நாணய நிதியம் பற்றிய ஓர் அழுத்தமான அவநம்பிக்கையாக அமைந்திருந்தது. கடன்களுக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை அனேகமாக எல்லா நாடுகளுமே நிறுத்தியிருந்தன. அதன் பரவலான சமூக ரீதியான இன்னாத பின்விளைவுகளைக் கொண்டதாக ஆர்ஜென்ரீனாவில் காணப்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் இதை ஒத்த ஓர் சூழ்நிலை தோன்றியது.

2007இல் வெனிசூலா, பிரேசில், இந்தியா ஆகியன தமது கடன்களை மீளச் செலுத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி தேவைப்படாதவையாகக் காணப்பட்டன. சர்வதேச நாணய நிதியம் கூட ஓர் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியதுடன், பெரும்பாலும் ஆட்குறைப்புச் செய்தது. 2005இன் இறுதியில் கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த (பெரும்பாலும் வருட இறுதி அடிப்படையில்) சர்வதேச நாணயக் கொடுகடன் மீதியானது 2008 செப்டெம்பரில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (90 சதவீத வீழ்ச்சி) குறைவடைந்தது. (சர்வதேசப் பொருளியலுக்கான பீற்றர்சன் நிறுவனத்தைச் சேர்ந்த எட்வின் எம். றூமன் என்பவரால் ஜனவரி 22, 2009இல் அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய ரூலா குழுவுக்கும், ஜனவரி 23, 2009இல் வெளிநாட்டு உறவுகள் பற்றிய டலஸ் குழுவுக்கும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்) சர்வதேச நாணய நிதியத்தின் வருமானத்திற்கான பிரதான மூலமாக கடன்கள் மீதான வட்டி அமைகின்றது.

இக் கடன்களுக்கான தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்லும் கேள்வியின் விளைவாக அதற்கான வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமையால், அதன் நிருவாக வரவு – செலவுத் திட்டத்தைச் சுருக்க வேண்டியேற்பட்டது. 2007 – 2008 காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களை அது 20 சதவீதம் அளவில் குறைப்பதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

அவசரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக நிதியளிப்பதற்கான குறைநிரப்பு அல்லது மாற்று மூலங்களை மூன்றாம் உலக நாடுகள் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. உதாரணமாக, கிழக்காசிய நெருக்கடியின் பின்னர் ஆசிய நாணய நிதியம் ஒன்றை அமைப்பதற்கான ஓர் முன்மொழிவு கவனத்தில் எடுக்கப்பட்டது. அம் முன்மொழிவானது அமுலாக்கல் கட்டத்தை இன்னும் அடையாது விட்டாலும் கூட, தென் கிழக்காசிய நாடுகளின் அமைப்பு  மற்றும் சீனா, யப்பான், கொரியக் குடியரசு ஆகியவற்றால் 2000மாம் ஆண்டில் சியாங் மாய்  என அழைக்கப்படும் அதனிலும் சற்றுக் குறைவான ஓர் அடியெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத நிலையில், நாடொன்றால் 20 சதவீதம் வரை மாத்திரமே கடனாகப் பெறமுடியும் என்பதால், இது ஓர் குறைநிரப்பு வழிமுறையாகவே அமைந்துள்ளது. மறுபுறத்தில் லத்தீன் அமெரிக்காவில் காணப்படும் தெற்கு வங்கி  போன்ற அடியெடுப்புகள் சர்வதேச நாணய நிதியத்திற்கான மாற்று ஏற்பாடு ஒன்றை விருத்தி செய்வதற்கான ஓர் முயற்சியாக அமைந்துள்ளன.

புதிய சட்ட ரீதியாக ஏற்பை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்குதல்

உலகளாவிய நிதி நெருக்கடியானது சர்வதேச நாணய நிதியத்திற்கு சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் நிலையை வழங்கியுள்ளதுடன், மிகையான நிலையிலிருந்து அதைக் காப்பாற்றியும் உள்ளது. சர்வதேச நாணய நிதிய உதவியை நாடுவதற்குத் தயங்கிய நாடுகள் கூட தமது சென்மதி நிலுவைச் சிக்கல்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கும், தமது சர்வதேச ஒதுக்குகளை அதிகரிப்பதற்கும் சர்வதேச நாணய உதவியை ஆவலுடன் எதிர்பாத்திருக்கின்றன.

நெருக்கடியானது ஓர் மீள்வரவை அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது மாத்திரமன்றி, அண்மித்த கடந்த காலங்களில் அதன் நிதி வளங்கள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகப் பெருகவில்லை என்பதால், அதுவொரு சவாலாகக் கூட அமைந்துள்ளது. உண்மையில் அந்த நிதி வளங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆசிய நிதி நெருக்கடிக் காலகட்டத்தில், உலக வெளியீட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவை அது எட்டக்கூடியதாக இருந்திருப்பின், அதன் ஒதுக்குகள் அண்ணளவாக 55 சதவீதமாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. 

2009ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற குழு – 20 மகாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்திற்குக் கிடைக்கத்தக்க வளங்களை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இந் நோக்கத்திற்காக 500 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அவர்கள் தீர்மானித்தனர். சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது நிதியளிப்பை 75 மில்லியன் யூரோவிலிருந்து 125 மில்லியன் யூரோவாக (178 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக செப்ரெம்பர் 2009இல் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தமையால், இத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும். 50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய விசேட எடுப்பனவு உரிமையை சர்வதேச நாணய நிதியத் தாள்களில் கொள்வனவு செய்வதற்காக சீனா 2009 செப்ரெம்பர் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

2009 பெப்ரவரியில் யப்பான் 100 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியது. பிரேசிலும், இந்தியாவும் முறையே 20 மற்றும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திற்குக் கடனாக வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ளன. கனடா, சுவிற்சர்லாந்து, ரஷயா, கொரியா என்பன கூட ஒவ்வொன்றும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளன.

நெருக்கடிக்குத் துலங்குவதில் அது நிலைமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது. நெருக்கடிக்கான கடன் வழங்கலை அது அதிகரித்துள்ளது. 2009 செப்ரெம்பர் அளவில் கடன் வழங்கல் உறுதிமொழிகள் 160 மில்லியன் அமெரிக்க டொலரை நெருங்கியிருந்தது.

கடன் நிபந்தனைகளைச் சீரமைப்பதன் மூலம் அது மேலும் நெகிழ்ச்சியுடையதாக மாறியுள்ளதெனக் கூட அது கூறுகின்றது. நிதிய வளங்களை அங்கத்துவ நாடுகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அது தற்போது இரட்டிப்பாக்கியுள்ளதுடன், 2009 மே 1 இலிருந்து அனைத்துக் கடன்களுக்குமான கட்டமைப்புச் செயற்பாட்டு நிபந்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓர் நாட்டின் மீட்சிக்கு மிக முக்கியமானதாகக் காணப்படும் சூழ்நிலைகளில் மாத்திரம் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் பேணப்படும். சிறப்பு எடுப்பனவு உரிமை ஒதுக்கீடானது 250 பில்லியன் அமெரிக்க டொலருக்குச் சமமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு எடுப்பனவு உரிமையில் காணப்படும் அண்ணளவாகப் பத்து மடங்கு அதிகரிப்பாகும்.

சர்வதேச நாணய நிதியம் வெற்றியடையுமா?

இது தொடர்பாக மத்திய கிழக்குத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அரச அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் செயல்முறைத் திட்டத்தைச் சேர்ந்த யொங்கா ஒஸ்டெமிர்  என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, சர்வதேச நாணய நிதிய நெருக்கடித் தடுப்பு உபாயம் பற்றிய ஆர்வத்திற்குரிய சில நுண்ணோக்குகளை வழங்குவதுடன், வாடிக்கையாளரான அரசு மீதான அதன் குறுங் கால, நீண்ட கால விளைவுகளை மதிப்பிடுகின்றது. 2001ம் ஆண்டில் ஆர்ஜென்ரீனாவிலும், துருக்கியிலும் காணப்பட்ட நிதி நெருக்கடிகளை சர்வதேச நாணய நிதியம் கையாண்டமை பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வில் நெருக்கடிகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வினையானது இவ் இரு சூழ்நிலைகளையும் பொறுத்தவரை வேறுபட்டதாக அமைந்திருந்ததென அவர் வெளிப்படுத்துகின்றார். ‘நெருக்கடியின் பின்னர், உடனடியாகவே சர்வதேச நாணய நிதிய உதவியில் பெருந்தொகையை துருக்கி பெற்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதிய உதவி இறுதியாக வந்தடைவதற்கு முன்னர், மேலும் மோசமடைவதற்காக ஆர்ஜென்ரீன நெருக்கடி விட்டுவைக்கப்பட்டிருந்தது. ஆர்ஜென்ரீனா ஓர் முறையான தற்காலிகச் செயல்முடக்கத்தை பிரகடனப்படுத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்திற்கும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் தொடர்ந்து சவால்விடுத்தபோது, துருக்கி அரசாங்கமோ தனது பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்த ஓர் செயல்முறைத் திட்டத்தை முழுமையாகப் பின்பற்றியது.

குறுங் காலத்தில் துருக்கியின் மீட்சியானது விரைவாக நிகழ்வதாகக் காணப்பட்டபோதும், இந்த நெருக்கடிகள் ஏற்பட்டு ஏழு வருடங்களின் பின்னர், இவ் இரு வேறுபட்ட உபாயங்களினதும் பொருளாதார ரீதியான விளைவுகளை நாம் மதிப்பிடும்போது, துருக்கியைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியமானது நிவாரணம் என்பதை விட ஓர் சாபக்கேடாக அமைந்திருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. போற்றத்தக்க வளர்ச்சி வீதங்களுக்கு எதிர்மாறாக அதன் வர்த்தக நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளின் நீடித்திருக்கச் செய்ய முடியாத அளவுகளுடன் கூடியதாக துருக்கியானது இடர்வாய்ப்புகள் நிறைந்த வளர்ந்து வரும் சந்தைகள் மத்தியில் மீண்டும் இடம்பிடித்துள்ளது.’ (ஒஸ்டெமிர், 2009)

2001 இற்கு முன்னர் இவ் இரு நாடுகளுமே வழக்கமுறையாக சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற்றுவந்தன எனும் மேலதிகமான ஓர் விடயத்தையும் இங்கே நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, 2001இல் நெருக்கடி திடீரெனத் தொடங்குவதற்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்துடனான 17 அவசர நிலைப் பதில் ஏற்பாடுகளிலிருந்து பயன்பெற்ற நாடாகிய துருக்கிக்கு இன்னுமொரு இக்கட்டிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய நிலைமையை இது இன்றியமையாததாக்கியது. ஆர்ஜென்ரீனச் சூழலில் 1991 தொடக்கம் 2001 வரையான காலப்பகுதியில் தீவிரமான நவ தாராளவாத மீள் கட்டமைப்புச் செயல்முறைத் திட்டம் ஒன்றை அது அமுல்படுத்தியது. இச் செயல்முறைத் திட்டமானது வரிச் சீர்திருத்தம், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை தனியார்மயமாக்குதல், வர்த்தகத் தாராளமயமாக்கம், கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தல், நாணய சபை ஒன்றை ஏற்றுப் பயன்கொள்ளல் ஆகியவற்றுடன் ஏனையவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

ஆர்ஜென்ரீன பெசோவானது மாற்றத்தக்க ஓர் நாணயமாக ஆக்கப்பட்துடன், ஒரு பெசோவின் நாணயமாற்று வீதம் ஒரு டொலருக்குச் சமம் என நிர்ணயிக்கப்ட்டது. அமெரிக்க டொலரின் பெறுமதியேற்றத்துடன் ஆர்ஜென்ரீன பெசோவும் பெறுமதியேற்றம் அடைந்தது. இது நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையை படுமோசமான நிலைக்கு இட்டுச் சென்றதோடு, பொதுப் படுகடனையும் அதிகரித்தது. 2001ம் ஆண்டின் நெருக்கடிக்கான அடித்தளத்தை இட்ட ஒன்றாக இந்த நாணயப் பெறுமதியேற்றமே அமைந்திருந்தது. 2001ஒக்ரோபர் 31ம் திகதியன்று உலகின் நிதி ரீதியாக மிகவும் நட்ட அச்சம் நிறைந்த நாடாக ஆர்ஜென்ரீனா மாறியது. ஒரு மாதத்தின் பின்னர், அதாவது 2001 நவம்பர் 30ஆம் திகதி, ஒரே நாளில் மத்திய வங்கி ஒதுக்குகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சி ஏற்படுவதற்கு, வங்கிகளுககான ஓர் பாரிய திடீர்த் தேவை நெருக்கடியானது காரணமாக அமைந்திருந்தது.

நெருக்கடியின் பிரமாண்டமான வடிவத்தைப் பொருட்டுபடுத்தாது, சர்வதேச நாணய நிதியம் மௌனமாக இருந்ததுடன், ஆர்ஜென்ரீனாவுக்கு உதவுவதற்கு முன்வரவும் இல்லை. 2003 ஜனவரியிலேயே 6.78 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய எட்டுமாத கால கடன் உதவியுடன் ஆர்ஜென்ரீனாவுக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன் வந்தது. அக் காலகட்டத்தினுள் ஆர்ஜென்ரீனாவானது பல அரசாங்கங்களின் வீழ்ச்சியைச் சந்தித்திருந்ததுடன், மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைகளை அனுபவித்தும் இருந்தது.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையானது ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்குச் சாதகமானதாகவும், ஏனைய நாடுகளைக் கைவிட்டுவிடுவதாகவும் அமைந்துள்ளதென்பதை இவ்விரு நாடுகளிலும் காணப்பட்ட நெருக்கடிகளுக்கான வேறுபட்ட அணுகுமுறைகள் வெளிப்படுத்துகின்றன. நவ தாராளவாத நெறிமுறையிலிருந்து ஆர்ஜென்ரீனா விலகிச் சென்று கொண்டிருந்தபோது, துருக்கியானது செப்ரெம்பர் 11 இற்குப் பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் உபாய ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பாத்திரத்தை வகித்தது.

சர்வதேச நாணய நிதிய நெறிப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகள்

சர்வதேச நாணய நிதியமானது ஐ.நா. முறைமையுடன் மறைமுகமாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளபோதும், உண்மையில் அது சுதந்திரமானதாகவும், ஐ.நாவிற்கு நேர் எதிர்மாறானதாகவும் அமைந்துள்ளது. ஐ.நா. முறைமையானது ‘ஒரு அங்கத்து நாட்டுக்கு ஒரு வாக்கு’ எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள அதேவேளை, சர்வதேச நாணய நிதியமோ முழுமையாக வேறுபட்ட ஓர் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இங்கே, அங்கத்துவ நாடுகளின் வாக்குகள், அவற்றின் சந்தாப் பங்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன. உலக பொருளாதாரத்தில் உள்ள அவற்றின் பருமனுக்கு ஏற்ப இப் பங்கு வீதங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஆகையால், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவுள்ள அதன் அங்கத்துவ நாடுகளில் பெரும்பாலானவற்றிற்கு இவ் வாக்களிப்பு முறைமையானது பாதகமாக அமைந்துள்ளது. 2009 செப்ரெம்பரில் காணப்பட்டவாறு, அதன் முதன்மையான அங்கத்துவ நாடுகளின் பங்கு வீதங்கள் பின்வருமாறு:-  ஐக்கிய அமெரிக்கா – 16.77, யப்பான் – 6.02, ஜேர்மனி – 5.88, ஐக்கிய

இராச்சியம் – 4.85, பிரான்ஸ் – 4.85, சீனா – 3.66, இத்தாலி – 3.19 என அமைந்துள்ளன. முக்கியமான தீர்மானங்களுக்கு 85 சதவீதமான பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படுவதால், ஐக்கிய அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட ஓர் தனித் தடுப்பு உரிமை  உண்டு என்பது இதன் அர்த்தமாகும். ஒப்பீட்டு அடிப்படையில், இலங்கை (இதற்கு 0.2 சதவீத வாக்குகளே உண்டு) போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முடிவுசெய்வதற்கான அதிகாரம் அறவே இல்லை.

ஆதலால், ஐக்கிய அமெரிக்கா, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் துணையாதரவை நாடுவதற்கு இந்த நாடுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இது, சர்வதேச நாணய நிதியத்தின் (மற்றும் ஏனைய பிறட்டன் வூட்ஸ் நிறுவனங்கள் முதலானவற்றின்) ஜனநாயக ரீதியான மிகப் பெரும் குறைபாடாக அமைந்துள்ளது. 

தனது சிறப்புரிமை நிலையை கைவிடுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தயாராக இருக்குமா என்பது மீண்டும் வாதத்திற்குரிய ஓர் விடயமாக அமைந்துள்ளது. அமெரிக்காவானது மிகைப்படியாகக் கடன்பட்டுள்ளதுடன், மிகத் தீவிரமான ஓர் நெருக்கடியை எதிர்கொள்கின்றபோதும், உலகின் ஒரேயொரு வல்லரசான அதன் புவிசார் அரசியற் பலமும், நிகரில்லாததும் ஈடு இணையற்றதுமான இராணுவப் பலமும் அது தனது நிலையைத் துறப்பதைத் தவிர்ப்பதற்கான ஆற்றலை அதற்கு வழங்குகின்றது.

2009 ஜீலையில், அமெரிக்கக் காங்கிரஸ் ஆய்வுச் சேவையானது ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகி;ன்றது. ‘ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப் பலம், பரந்தகன்ற பொருளாதார மற்றும் நிதிப் பலம், இராஜதந்திர ரீதியான செல்வாக்கு, சர்வதேச நாணய நிதியத்தில் அதற்கு உள்ள தனித் தடுப்பு உரிமை என்பவற்றின் கூட்டுச் சேர்க்கையானது உலகளாவிய நிதி சம்பந்தப்பட்ட பெருங்குழப்ப நிலைக்கான தீர்வுகாணல் செயற்பாடுகள் எதிலும் ஐக்கிய அமெரிக்காவை முக்கிய இடத்தில் வைக்கின்றது’ (நன்ரோ,2009) எனினும், ‘அமெரிக்கக் குறிக்கோள்களுக்காக ஏனைய நாடுகளை அனைத்துப் பக்கங்களிலும் இருந்து ஒன்றிணைப்பதற்காக அந்த நாடுகளை இணங்கச் செய்வதற்கான அமெரிக்காவின் ஆற்றலாக மென் சக்தியின் (அல்லது சிலவேளைகளில் ஷதுடிப்பான சக்திஷ எனப் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படும் ஒன்றின்) உபயோகத்தை நோக்கி மேலும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.’ என்பதையும் அதே அறிக்கை எடுத்துக் கூறுகின்றது.

BRIC அல்லது டீசுஐஊளு  BRICS (Brazil, Russia, India, China mj;Jld; South Africa)

எனும் குழுவாக ஒன்று சேர்ந்துள்ளவற்றைப் போன்ற புதிதாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்திகளும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்தில் அதிகளவான உரிமையைக் கோருவதற்கான வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்கின்றது. 

சர்வதேச நாணய நிதியச் சீர்திருத்தம் தொடர்பான ஓர் உடன்பாட்டை விருத்தி செய்வதற்குச் சாதகமாக அமைந்துள்ள இன்னுமொரு நியாயம் எதுவெனில், நிதி சம்பந்தப்பட்ட பெருங்குழப்பத்தால் ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். ‘பயங்கரவாதத்தை விட உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் புவிசார் அரசியல் விளைவுகள் என்பவற்றின் காரணமாக, உலகம் பூராவும் உள்ள நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள உறுதிப்பாடின்மையானது ஐக்கிய அமெரிக்காவுக்கு முதன்மையானதும், எதிர்காலத்தில் உடனடியாக நிகழக்கூடியதுமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென தேசியப் புலனாய்வுக்கான அமெரிக்கப் பணிப்பாளரான டெனிஸ் பிளேயர் 2009 பெப்ரவரி 12ம் திகதியன்று காங்கிரஸிற்குக் கூறினார்.’ என்பதைக் கூட மேலே குறிப்பிட்ட அதே அறிக்கை தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியச் சீர்திருத்தம் பற்றிய இன்னுமொரு அம்சமும் உண்டு. அது கொள்கைத் துறையிலேயே காணப்படுகின்றது. உண்மையில், சர்வதேச நிதிக் கட்டுக்கோப்பை நெறிப்படுத்துகின்ற பிரதான கருவி அதுவேயாகும். நவ தாராளவாத உலகமயமாதலுக்கான பணி மூவர் தொகுதியை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு (றுவுழு) ஆகியனவே ஒன்றாகச் சேர்த்து நிறுவியுள்ளன. 

நவ தாராளவாத உலகமயமாதலைத் தொடர்ந்து, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் முட்டாள்த்தனத்தை உலகளாவிய நிதி நெருக்கடி தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. வறியவர்களின் வாழ்க்கைத் தரங்கள் குறைவடைதல், செல்வம் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களிடம் இடம் மாறுதல் என்பவற்றுடன் பின்னர் குறிப்பிட்டவை (அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்) இணைந்துள்ளன. சர்வதேச அரங்கில் செல்வமானது வறிய நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு இடம்மாறுவதை ஒத்த ஓர் செயல்முறையாக அது அமைந்திருந்தது. ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைவதை இந்த நெருக்கடியானது சாத்தியப்பாடு குறைந்ததாக ஆக்கியுள்ளது. அது மேலதிகமான மில்லியன்களை வறுமைக்கும், கதியற்ற நிலைமைக்கும் செலவிட்டுள்ளது.

மானுட நோய் எதிர்ப்புக் குறைபாட்டை உண்டாக்கும் நுண்ணங்கி  எய்ட்ஸ் (AIDS) என்பவற்றிற்கு எதிரான கடுமுயற்சி கூட அதிகளவில் பாதிக்கப்படும்.  

இப் புதிய நிகழ்வுகளுக்கு அவசியமானதோர் தொடர்பயன் எதுவெனில், சர்வதேச நாணய நிதியத்தின் மரபு ரீதியான கொள்கைக் கட்டமைப்பிலிருந்து அப்பால் நகர்வதற்கான தேவையாகும். அதன் வாக்களிப்புக் கட்டமைப்பிலான ஒரு மாற்றத்திற்கு மேலாக, ஐக்கிய அமெரிக்காவால் அனுபவிக்கப்படும் தனித் தடுப்பு உரிமையையும் , சர்வதேச நாணய நிதியத்தில் காணப்படும் நேரடி அமெரிக்கத் தொடர்பையும் இல்லாதொழிக்க வேண்டிய தேவையுண்டு. எனினும், வாக்களிப்புக் கட்டமைப்பிலான மாற்றத்திற்கு சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் ஏற்கனவே உள்ள உறுப்புரைகளிலான திருத்தம் தேவைப்படுகின்றது. இதற்கு அமெரிக்கக் காங்கிரஸின் அனுமதி தேவை. ஐக்கிய அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டாவிடில் அது சாத்தியமற்றது என்பது இதன் அர்த்தமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள பணியாளர்களின் ஒழுங்கமைவு முறையிலான ஓர் மாற்றமானது இன்னுமொரு நிபந்தனையாகக் காணப்படுகின்றது. நவ தாராளவாதத்தின் கோட்பாட்டுக் கூறுகளை கொள்கைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கின்றவர்களாக அதன் உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் உள்ளனர். முனைப்பான சித்தாந்தமாக அது இருந்து வந்துள்ளமையால், நிதியத்தினுள் விவாதிக்கப்படுகின்ற விடயங்களில் பெரும்பாலானவை குறித்த அமெரிக்காவின் தொலை நோக்கு ஆற்றலையே, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள செயல் ஈடுபாடு உடைய சிரேஷ;ட அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் கூடப் பகிர்ந்து கொள்கின்றனர். ஏனைய தனிமுறைச் சிந்தனைகளுக்கு உரியவர்களையும் நிதியத்தில் பணிக்கு அமர்த்துவது அவசியமானதாகும். 

தவிரவும், தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் போன்ற நிறைவேற்றுக் குழுவில் உள்ள முதன்மையான உறுப்பினர்கள், தகுதியை அடிப்படையாகக் கொண்ட ஓர் முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அனைத்து அங்கத்துவ நாடுகளின் குடிமக்களுக்கும் அவ் வாய்ப்புகள் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

உலகில் நிதி உறுதிப்பாட்டினைக் கண்காணிப்பதற்கும், நிச்சயபபடுத்திக் கொள்வதற்குமான ஓர் வழிமுறையாக அதன் தொடக்க காலத்திற்குரிய தொழிற்பாட்டுடன் சர்வதேச நாணய நிதியத்தை மட்டுப்படுத்துவது இன்னுமொரு விரும்பத்தக்க சீர்திருத்தமாக அமைந்துள்ளது. நவ தாராளவாத விதியமைப்புகளுடன், உதவி பெறும் நாடுகளில் அரசியல், பொருளாதார அபிவிருத்தியை நெறிப்படுத்தும் அதன் அரசியல் ரீதியான தொழிற்பாட்டை அது நீக்கிவிட வேண்டும். 

ஐக்கிய அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ள நாடுகளுக்கு கடன்களைப் பெறுவது இலகுவாக உள்ளதென சர்வதேச நாணய நிதியக் கடன் பகிர்வுகள் பற்றிய ஓர் ஆய்வு வெளிப்படுத்துகின்றது. நிதியத்தில் அது கொண்டுள்ள மேலாண்மை செலுத்துகின்ற இருப்பு நிலை காரணமாக, இது நிகழக்கூடும். அங்கத்துவ நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதிய உதவிகளைப் பெற அனுமதி மறுப்பதற்கு மனித உரிமைகள் போன்ற அரசியல் விடயங்களை அபிவிருத்தியடைந்த நாடுகள் பல சமயங்களில் கவனத்திற்கு எடுத்துக் கொள்கின்றன. ஆயினும், பினோசேயின் சிலி போன்ற ஜனநாயக ஆட்சியின் அனைத்து நியமங்களையும் வெளிப்படையாக மீறியுள்ளதோடு, மக்களை மிகவும் கொடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்துவதில் ஈடுபட்ட சர்வாதிகார ஆட்சிமுறைகள் கூட சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற்றுள்ளன என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. கடன் பகிர்வுக்கான அடிப்படையாக அத்தகைய அரசியல் முக்கியத்துவங்கள் அமையக் கூடாது. 

புவிசார் அரசயில் யதார்த்தங்களும் சர்வதேச நாணய நிதியச் சீர்திருத்தமும்

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற பிறட்டன் வூட்ஸ் மகாநாட்டில், மனதில் கருக்கொண்ட சர்வதேச நாணய நிதியமானது 1945ல் முறைப்படி நிறுவப்பட்டது. ஐக்கிய இராச்சியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆலோசனைகளின் ஓர் விளைவாகத் தோன்றியபோதும், சர்வதேச நாணய நிதியமானது பெரும்பாலும் ஓர் அமெரிக்கச் செயற்திட்டமாகவே அமைந்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உலகின் மிகவும் பலம்வாய்ந்த அரசாக ஐக்கிய அமெரிக்கா தோற்றம் பெற்ற காலமாகிய இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதியில் காணப்பட்ட புவிசார் அரசியல் யதார்த்தத்தை அது பிரதிபலித்தது. 

இன்று உள்ள புவிசார் அரசியல் யதார்த்தம் அதிகளவு வேறுபாடுடையது. இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலிருந்து தோற்றம் பெற்ற இரு துருவ உலகம் வழக்கற்றுப் போய்விட்டது. சோவியத் ஒன்றியம் மற்றும் ஏனைய சோசலிச நாடுகளின் வீழ்ச்சியின் பின்னர், தோற்றம் பெற்ற ஒரு துருவ உலகம் கூட குறிப்பிடத்தக்களவு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. புதிய இராட்சதர்களாக சீனாவும், இந்தியாவும் தோற்றம் பெறுகின்ற ஓர் பல துருவ உலகமே இன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. அடுத்த இரு தசாப்தங்களுக்குள் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக உள்ள ஐக்கிய அமெரிக்காவின் இடத்தை சீனா நிரப்பவுள்ளது. மெய் உற்பத்தியானது அபிவிருத்தியடைந்த  உலகில் இருந்து டீசுஐஊ நாடுகளுக்கு ஏற்கனவே நகர்ந்துள்ளது. இறுதியாக, உலக பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையமானது, சக்திகளின் உலக சமநிலையில் காணப்படும் புவின் மேற்பரப்மைப்பு தொடர்பான மாற்றங்களை உருவாக்கவுள்ள நாடாகிய சீனாவிற்கு நகரும். 

சூழ்நிலையை மாற்றும் இப் புதிய நிகழ்வுகள் உலக நிதிக் கட்டுக்கோப்பு மீதான தமது பின்விளைவுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நெருக்கடியானது குழு – 7ஐ தற்காலத்திற்கு ஒவ்வாததாக ஏற்கனவே மாற்றியுள்ளது. இவ் வெற்றிடத்தை குழு – 20 மேலும் மேலும் நிரப்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இறுதியாக தலைமை ஸ்த்தானத்தில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது குழு – 192டேயாகும்.

குறுங் காலத்தில், கடன் பகிர்வில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை விதிப்புகளில் ஓர் தளர்வை எம்மால் காணக்கூடியதாக இருக்கும். புவிசார் அரசியலில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பலப்படுத்தல் மற்றும் உலக பொருளாதாரத்தில் காணப்படும் அவற்றிற்குரிய இடங்களுக்கான வளர்ந்து வரும் பலம் என்பவற்றிற்குச் சரி விகிதமாக இது அமைந்திருக்கும். 

நீண்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியமானது தனது நவ தாராண்மைவாதக் கொள்கைகளைத் தூக்கியெறியுமோ அல்லது இல்லையோ, அதன் இருப்பு உலகின் பொருளாதார, அரசியல் மாற்றங்களில் தங்கியிருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தமானது சலிப்பு உண்டாக்கக்கூடியதாகவும், தற்போதைய நெருக்கடியில் இருந்து உலக பொருளாதாரம் மீண்டெழுவதற்குத் தேவைப்படும் ஓர் நீண்ட காலச் செயல்முறையைப் போன்று, நீடித்ததாகவும் கூட இருக்கும். 

மொழிபெர்ப்பாளரின் குறிப்பு

நன்றி : பொருளியல் நோக்கு, மக்கள் வங்கி வெளியீடு, இலங்கை

மொழியாக்கம் :  பொன் சிவா

உலகப் பொருளாதார நெருக்கடி குறித்த பயனுள்ள புள்ளிவிபரங்களைத் தரும் இக்கட்டுரை பொருளியல் நோக்கிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள் :

புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சோதிடரின் அறிவுரை : ராஜபக்ச அமரிக்கா பயணம்

Comments 6

  1. Shiva says:
    16 years ago

    நன்றி. பலரும் படித்துப் பயன் பெறுவராக.

    • amirthananthasarma mathura says:
      14 years ago

      எனக்கு உதவியாக இருந்தது

  2. baskar says:
    16 years ago

    மிகவும் புரியாத வார்தைகலை பயன்படுத்தி எழுதி புரிந்துகொல்ல சிரமபடுதி விட்டெர்கல் சட்ரு எலிமை படுதி எலுதினால்நலம்.

  3. Shiva says:
    16 years ago

    மொழி பெயர்ப்பில், சொற்களின் தெரிவு இரண்டு பிரச்சனைகளைக் கொண்டது. ஒன்று பரிச்சயமற்ற தமிழ்க் கலைச் சொல். மற்றது பரிச்சயமற்ற கோட்பாடு.
    எவ்வளவு எளிமைப் படுத்தினாலும் சிறிது சிரமம் இருக்கும்.
    வாசிக்கும் நாங்களும் கொஞ்சம் முயற்சி எடுப்பது நல்லது.

  4. THAMILMARAN says:
    15 years ago

    நல்லூர் பருத்தித்துறவீதியில் சிவன் கோயிலுக்கு எதிரில் இருந்த நூலகத்தில் பொருளீயல்நோக்கு படித்தது நினைவுக்கு வருகிறது.பொருளாதாரம்,விஞ்ஞானத்தை விளக்கும் தமிழ் எப்போதும் வேறூபட்டது புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பதே காரணம் என நினைக்கிறேன்.இந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது.நன்றீ.

  5. amirthananthasarma mathura says:
    14 years ago

    என்னுடைய கல்விக்கு துணையாக உங்கள் கட்டுரை உள்ளது. மிக்க நன்றி, மேலும் இவ்வாறான கட்டுரைகளை எழுதும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...