செங்கல்பட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களுக்குள் நேற்று இரவு காவல் துறையினர் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 முகாம்வாசிகள் படுகாயமுற்றுள்ளனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 38 ஈழத் தமிழர்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிணையில் விடுதலை பெறக்கூடிய சாதாரண குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பிணையில் வெளிவர முடியாதபடி தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் தடுத்து வருவதாக முகாம்வாசிகள் கூறுகின்றனர்.
தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் இவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதாகவும், அப்போது முகாம்வாசிகள் சிலர் மரத்தில் ஏறிக்கொண்டு, காவல் துறையினர் உள்ளே வந்தால் மரத்தில் இருந்து குதித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல முகாம்வாசிகள் தங்கள் இருப்பிடத்தின் கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு வெளியே வர மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு முகாமிற்குள் புகுந்த காவல் துறையினர், முகாம்வாசிகளின் இருப்பிடக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவர்களை கண்மூடித்தனமாக கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகாம்வாசிகள் 18 பேர் படுகாயமுற்றதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
முகாம்வாசிகளைத் தாக்கியதோடு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி ஏதும் அளிக்காமல், அவர்களை செங்கல்பட்டு முகாமிலிருந்து வெளியேற்றி, வேலூர் சிறைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்காக சட்ட உதவி அளித்துவரும் வழக்கறிஞர்கள், இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலி வழக்குகள் என்று கூறுகின்றனர். வழக்கின் தன்மை எதுவாயினும் அவர்களுக்கு சட்ட ரீதியான நிவாரணம் பெற காவல் துறையினர் தடையாய் நிற்பதேன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்துப் பல தமிழக மக்களமைபுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காட்டுமிராண்டித்தனமான காவல்துரையை ஸ்கொட்லாந்தொடு ஒப்பிட்டு பெருமை வேறூ.லன்சமும்.ஊழ்லும்,கட்டுப்பாடும் அற்ற தமிழக் காவல்துடை விலங்கினங்கலை வேலைக்கு வைத்திருப்பது வேடிக்கையும், வேதனையும்.