இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனத்தை ஐக்கிய நாடுகள் சபை செலுத்தவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இடம் பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுகொண்டுள்ளது.
இது குறித்து மன்னிப்புச் சபை விடுத்துள்ளஅறிக்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்க வைப்பதை வலியுறுத்த சர்வதேச சமூகம் தொடர்ந்தும் தவறிவருகின்றமை, இலங்கையில் ஆட்சியாளர்கள் சர்வதேச நியமங்களையும் ஜ.நா.வின் கட்டமைப்பையும் உதாசீனம் செய்வதையே ஊக்குவிக்கும்.சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தத் தாழ்த்த இலங்கையின் சமூக கட்டமைப்பின் அடித்தளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பு நீடிக்கவே செய்யும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஆணைக்குழுவின் 2010 ஆம் ஆண்டு அமர்வுக்கு முன்னரான சம்பவங்களுக்குப் புறமாக, இலங்கையில் புதிதாக பல மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகின்றது. வடக்கே அண்மைக்காலங்களில் புதிதாக இடம்பெற்றுள்ள கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில், சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றிய விசாரணைகளிலும் இலங்கை அக்கறை செலுத்தவில்லை இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா. சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வரை உலகம் காத்திருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது







