பயங்கரவாதத்திற்கெதிரான அதுவும் தமிழர்களை மீட்பதற்கான போர் முடிவடைந்து விட்டது என்பதை பல வழிகளாலும் சொல்லி வருகிறார்கள்.
சிறிலங்காவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் “நாடெங்கும்” நடைபெறும் கொண்டாட்டங்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரதும் நாட்டின் தலைவரதும் புகழ் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. புலிகள் இது வரை மேற்கொண்ட படுகொலைகள் ஒளிபரப்பப் பட்டும் வருகிறது. (இதற்கான பதிலை தமிழர்தரப்பிலிருந்து எப்போதும் கூறமுடியாதுதான் )
சில இடங்களில் தமிழர்களுக்கு எதிரான கொச்சைத்தனமான கோசங்கள் எழுப்பப்பட்டாலும் எல்லாம் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
இனி என்ன..? இனி என்ன நடக்கம்..? என்ற வகையில் எல்லாத் தமிழர்களும் (பொது சனத்தைக் கூறுகிறேன்) அரசியல் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழர்கள் (பொது சனத்தைக் கூறுகிறேன்) தங்களின் அரசியல் குரலாகப் புலிகளைக்; கருதி வந்திருக்கிறார்கள் என்பது வியப்படையவே செய்கிறது. தமிழர்கள் எதிர்நோக்கி வந்திருக்கிற இன ஒடுக்குமுறை அவர்களைப் புலிகளின் அரசியலோடு இணைக்கச் செய்திருக்கிறது போலும்.
சிறிலங்காவில் சிங்களவர்கள் கொடிய யுத்தத்தினது அழிவுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. தமிழர்கள் புலிகளின் படுகொலைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பதுவும் வியப்படைய வைக்கிறது.
இங்கு இறந்து போன அப்பாவிகளிற்கான ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவாரைக் காணவில்லை. தமிழர்கள், பாதிக்கப்பட்ட உறவினர்கள் கண்ணீர் விடுவதற்கான சூழலும் இல்லை.
உறவினர் இல்லை, உற்றார் வரமடியாது. அயலார் கூடமுடியாது, ஐயர் இல்லை. இரகசியம் இரகசியமாய் கிரியைகள் நடக்கின்றன.
தமிழர்கள் (பொது சனத்தைக் கூறுகிறேன்) நேற்று ஓன்றுமே நடக்காத மாதிரி அலைந்தார்கள். இன்று தேசியக் கொடியை வாங்கித் தொங்க விட்டுக் கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கியிருக்கிறார்கள்.
துக்கத்தை வெளிப்படுத்த – அவலத்தை வெளிப்படுத்த தேசியக் கொடியைத்தான் தொங்க விடவேண்டியிருக்கிறது !!
நாளை பாடசாலைகளில் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. நாளை மறுதினம் கிராமங்களை நோக்கி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் யாத்திரை நடைபெறவுள்ளது. ஓன்றுமே நடக்காத மாதிரி வாழவேண்டிய நிலை தொடரும்.
·
தமிழர்கள் தரப்பிலிருந்து யாரும் யுத்த மொன்றினைக் கோரியதாக நானறியவில்லை. சர்வதேச ரீதியாக சனநாயக வாதிகளும் இவ்வாறு கோரியதாக நானறியேன்.!!
ஆயினும் பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை மீட்பதற்கான போர் நடாத்தப்பட்டு முடிவடைந்து விட்டது!!!
ஆனால் இன்று போர் முடிவின் பின் வலியுறுத்தப்படுகின்ற விடயங்களும் தமிழர்கள் நலனுக்கு சாதகமாக அமையக் கூடியவையாகத் தெரியவில்லை. வடக்கிலிருந்து தெற்கு வரை ஒரு தேசம் என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஓராட்சி, ஓரினம் இன்னும் பல்வேறு விடயங்களை கூறுகிறார்கள்.
ஒரு கோர யுத்தத்தின் முடிவில் அம்மக்கள் அடைந்த பாதிப்புக்கள் – அதன் அவலங்கள் பற்றி எந்தப் புரிதலுமற்று இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு சற்று உரத்த தொணியில் வலுயுறுத்தப்பட்டு வருகிறது. ஓரினம் என்பது சிங்களவர் பெறும் உணர்வையும் தமிழர் பெறவேண்டும் என்பதாய் இன்று வலியுறுத்தப்படுகிறது. இது மிகக் கொடுமை !
இன்று சிறிலங்காவில் தமிழர் ஓரினம், ஓராட்சி, யுத்த வெற்றிக்களிப்பு என்பவற்றில் சிங்களவருடன் ஒன்றுபட்டு நின்று தமது வாழ்க்கையை வாழ வேண்டும்.
இவை விமர்சனத்திற்கப்பாற்பட்டவை !
அரச தலைவர், தமழிர்களைப் பாதுகாப்பது தனது கடமை எனவும், தமிழர்களுக்கு எல்லா வசதிகளையும் வழங்கப்போதாகக் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டும் உள்ளன. இருந்தும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பலரும் பேசுகிறார்கள்.
·
வன்னியில் மக்களுக்கு என்ன நடந்தது என்பதுவும் மூடிமறைக்கப்பட்டு விட்டது எனக்கூறுமளவிற்கு நிலைமைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
மக்களுக்கு எல்லா வசதிகளையும் தருவோம் என்கிறது அரசு. ஆனால் இதுவரை சொற்கம் இருக்கிறது வாருங்கள் எனக்கூறப்பட்ட வன்னி மக்கள் அவல வாழ்வு தொடர்கிறது. மேலும் மேலும் அவலங்கள் பெருகுகிறது.
சர்வதேச சமூகங்கள் வாழ்த்துக்களுடன் நிவாரணங்களையும் வழங்கத் தொடங்கியுள்ளன. வரவிருக்கும் பான் கீ மூன் அகதிகள் பராமரிப்புப் பற்றி அதிகம் அக்கறை கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இறந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் – கொலை செய்தவர்கள் பற்றிக் கதைப்பது “இருப்பவர்களின்” நல்வாழ்விற்குப் பாதகமாக அமையும் என்றே கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இ;றந்தால்தான் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று புலிகள் கூறியதாய் அறிய முடிகிறது. அவ்விறப்புக்களை மறந்தால்தான் வாழ்வு என்ற நிலை தோன்றி வருகிறது.
·
“தமிழர் அரசியல் செலவநாயகம் கைவிட்ட இடத்திலே இருக்கிறது” எனக்கூறக் கேட்டிருக்கிறேன். இன்றைய நிலையில் அவ்வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன. இது புலிகளின் அரசியல் பலவீனத்தை விமர்சித்து சொல்லப்பட்டது. ஆனால் இன்றை சிறிலங்காவின் சமூக அரசியல் நிலையானது, பேரினவாத ஒடுக்குமுறையானது தமிழர்களை செல்வாநாயகம் அவர்களின் அரசியல் முடிவுகளுக்கே – தமீழத்திற்கே – இட்டுச்செல்ல வைக்கும் போலுள்ளது.
இனவாதம் மேலும் புதிதாய் வளரச் செழிப்பான பூமி இது.
சிறுபாண்மை இனம் என்ற வகையில் தமது வாழ்விற்காக – விடுதலைக்காக தமிழர்கள் கொடுத்த வையும், கொடுக்க வேண்டியவையும் ……….!!!
நட்புடன்
வியார்







