இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளந்துறை தோட்டத்தில் நடைபெறும் இப்பழிவாங்கல் நிறுத்தப்பட வேண்டும் எனவும்
இவ் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தன்னுடன் கை கோர்க்குமாறு ஏனைய தமிழ் அமைப்புக்களின் தலைமைகளுக்கு அழைப்பு விடுப்பதாக சப்ரகமுவ தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இன மோதல்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை நகரத்தை அண்மித்த வெள்ளந்துறை தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை (2012.01.16) இரவு 7.00 மணியளவில் தோட்ட இளைஞர்களுக்கும் பெரும்பான்மை இளைஞர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் தமிழ் இளைஞர்களின் வியாபார ஸ்தலங்கள் இரண்டும் முன்பள்ளி கட்டிடமொன்றும் வீடொன்றும் பெரும்பாண்மை இனத்தவரொருவருக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் சில வீதி மின் விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
முதலில் பெரும்பாண்மை இன இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாகவும் தம்முடன் சண்டைக்கு வருமாறு அரை கூவலிட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்திற்கு மூல காரணம் கே. லோகநாதன் என்ற இளைஞனை தனிப்பட்ட விரோதம் காரணமாக பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு அவரைத் தாக்கி பலத்த காயங்களுடன் தோட்ட மடுவத்தில் இட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, இவர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவ்வேளை, மீண்டும் கல் வீச்சுக்கள் தோட்ட குடியிருப்புக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. அத்துடன் ஆத்திரமடைந்த தோட்ட இளைஞர்களுக்கும் பெரும்பாண்மை இன இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக உருமாறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் முதலில் காயமடைந்த கே.லோகநாதன் என்ற இளைஞனை தவிர இன்னும் மூன்று இளைஞர்கள் காயத்திற்குள்ளாகியுள்ளனர். இவர்களில் ஒருவரின் உடலில் (காலில்) துப்பாக்கியால் ஏற்பட்ட சூட்டுக்காயமும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கணேசன் புண்ணியராஜா என்ற இவ்விளைஞன் தற்போது கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக 2012.01.16 ஆந் திகதி இரவு 8.00 மணியளவில் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் கேள்வியுற்ற சப்ரகமுவ தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் அன்றிரவே மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி , சிரேஷ்ட பிரதி பொறுப்பதிகாரி கஹவத்தை பொலிஸ் அதிகாரி மற்றும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அறிவித்து விசேட அதிரடி படையினரதும் பொலிஸாரின் உதவியுடனும் தேவையான பாதுகாப்பினை ஒழுங்கமைத்துக் கொடுத்தார்.
அதேவேளை தலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் மறுநாள் அதிகாலை 5.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து தாக்கப்பட்டவர்களையும் தோட்ட மக்களையும் நேரில் சந்தித்தார்.
அப்போது இவ்வாறான தனிப்பட்ட காரணங்களால் ஏற்படும் இன மோதல்களுக்கு தாம் தொடர்ந்து முகங்கொடுத்து வருவதாகவும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி தமிழ் பாடசாலையின் காணிப் பிரச்சினையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் தோட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.
இதனைக் கவனத்திற் கொண்ட தலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் ஸ்தலத்திலிருந்த இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க அவர்களுடனும் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியுடனும் வெள்ளந்துறை பௌத்த விகாராதிபதியுடனும் கலந்து ஆலோசித்து முற்பகல் 10.30 மணியளவில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் கிறிஸ்தவ மதகுரு கிராம உத்தியோகத்தர் தோட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் உதயகுமார் ஆகியோருக்கும் மற்றும் பிரதி தோட்ட அதிகாரிக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி கூட்டம் உரிய நேரத்தில் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது இரு சாராரும் கருத்து தெரிவித்ததோடு இனிமேலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறக் கூடாது என பொலிஸ் பொறுப்பதிகாரி கருத்து தெரிவித்தார். அதன்படி கூட்டம் சுமுகமாக நிறைவு பெற்றது.
இதனையடுத்து 2010.01.18 ஆந் திகதி துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளாகிய கணேசன் புண்ணியராஜா எனும் இளைஞனை தலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் நலம் விசாரிக்க கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்குச் சென்றார்.
அப்போது காலில் உள்ள துப்பாக்கி குண்டை அகற்ற முடியாது என வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் உரிய துப்பாக்கி பிரயோகம் நிகழும் சந்தர்ப்பத்தில் பொலிஸார் ஸ்தலத்தில் இருக்கவில்லை எனவும் சிவில் ஒருவரால் சுடப்பட்டுள்ளதாகவும் காயத்திற்கு உள்ளானவர் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
அதன்படி இவ்விடயம் தொடர்பாக தலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் மனித உரிமைகள் இல்லத்திற்கு முறைபாடு செய்துள்ளார்.
நிலைமை இவ்வாறு காணப்படும் சந்தர்ப்பத்தில் 2012.01.19 ஆந் திகதி மாலை பெரும்பான்மை இனத்தவர்களால் தனிப்பட்ட ரீதியாக முறைபாடுகள் செய்யப்பட்டது எனக் கூறி கஹவத்தை பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் தோட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்களைக் கொண்ட முறைபாடுகள் சகிதம் தோட்டத்திற்கு வந்து குறித்த சம்பவத்தில் தொடர்புபற்ற இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இதனை தொலைபேசி வாயிலாக அறிந்த ரூபன் பெருமாள் அவர்கள் ஸ்தலத்திற்கு செல்லும் வேளையில் பொலிஸார் அங்கிருந்து புறப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை குடும்பத்தாரிடம் பெற்றுக் கொண்டதோடு அத்தினத்தில் காலை வேளையில் பெரும்பாண்மை இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இவ்விபரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்பந்தப்படாத இரு இளைஞர்களை விடுதலை செய்வித்தார்.
அதேவேளை இன்று காலை மேலும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி இன்னுமொருவரையுமம் மீட்டுக் கொடுத்தார். ஏனைய ஐந்து இளைஞர்களையும் விடுவிக்க பொலிஸ் அதிகாரி மறுத்ததால் மீண்டும் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் கலந்து ஆலோசித்துள்ளார்.
அதன்படி பெல்மதுளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 2.00 மணியளவில் நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பெல்மதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இவ் ஐந்து பேரில் ஒருவரான கே.லோகநாதன் எனும் இளைஞன் குறித்த சம்பவம் நடைபெற்ற போது அதாவது 2012.01.16 ஆந் திகதி இரவு 7.00 மணியளவில் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று மாலை விஜயராஜா மாரியம்மா ஆகியோரின் இரண்டு ஏக்கர் தேயிலை காணி சிங்கள குடியிருப்புக்களுக்கு அண்மித்த பிரதேசத்தில் இருப்பதாகவும் குறித்த காணியில் ஒரு ஏக்கர் தேயிலை கன்றுகள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.








I am extremely sad to see that no Tamils sent any comments. It shows that they are, including so called 71 intelectuals, not interested in up countryTamils.