இலங்கை பிரச்சினை முடிவுக்கு வந்ததும், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் பதவி ஏற்றதும் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியின்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அப்போது அவர், விடுதலைப்புலிகள், கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது. தமிழக அரசும் அதுபற்றி முழுமையாக உணர்ந்து இருக்கும் என்று கருதுகிறேன். விடுதலைப்புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 17ஆம் திகதி காலையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அவர் மீது உள்ள ராஜீவ் படுகொலை உள்ளிட்ட நிலுவையில் உள்ள எந்த வழக்குகளும் நடைபெறாது.
பிரபாகரனின் மரணச்செய்தி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், என்னை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற பேச்சு விவரம் குறித்து தெரிவித்தார். அதன் விவரங்களை தெரிவிக்க முடியாது என்றார்







