விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும் வாகனம் மூலம் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது.
“அவரும் மேலும் இருவரும் வானத்திற்குள் கொல்லப்பட்டனர். உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் மேற்கொள்ளப்படும்” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
அவர்கள் தப்பிச்சென்ற வாகனம் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற முற்பட்டபோதும், இராணுவத்தினர் அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவ்வாகனம் தீப்பிடித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமையைத் தொடர்ந்து கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டன.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் மகன் சார்ள்ஸ் அன்டனி, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், தளபதிகளில் ஒருவரான ரமேஷ், புலனாய்வுப் பிரிவின் துணைத்தலைவர் கபில் அம்மான் ஆகியோரும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.








கேள்வி ஞானத்தில் இருந்து பலரும பலவிதம் சொல்கின்றார்கள்! ஆனால் உண்மைநிலை………..