வன்னி : இடம் பெயரும் வைத்தியசாலைகள்.

வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் வைத்தியசாலையும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வன்னிப்பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கைகளினால் இடம் பெயர்ந்துள்ள ஒன்றரை லட்சம் பேருடன் இந்த வைத்தியசாலைகளும் இடம்பெயர்ந்து வசதியீனங்களுககு மத்தியில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து தற்போது உருத்திரபுரம் வைத்தியசாலையில் இயங்கி வருகின்றன. வவுனியா மாவட்டத்தி்ல் புளியங்குளம் வைத்தியசாலை இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையில் இயங்கி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலை இடம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் ஒரு பகுதியும் கிளிநொசசி பழைய வைத்தியசாலையில் மறு பகுதியுமாக இயங்கி வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் முழஙகாவில் வைத்தியசாலையும் இடம்பெயர்ந்துள்ளது.

அது தற்போது வட்டக்கச்சி வைத்தியசாலையில் இயங்குகின்றது எனவும் கிளிநொச்சி பிராநதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்