23.12.2008.
சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, சர்வதேச பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்களில் உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே இன்றைய உலக பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
பேராசிரியர் க. கைலாசபதியின் 26 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளும் என்னும் தலைப்பில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் ஞாயிறு மாலை இடம்பெற்ற நினைவுப் பேருரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையும், கைலாசபதி நினைவுக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
உலக சோஷலிச அமைப்பின் நகர்வைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, விரிவுரையாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து உரையாற்றுகையில்;
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் கணிசமான பொருளாதார மாற்றங்களை எம்மால் அவதானிக்க முடியும்.
சோவியத் ஒன்றிய நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பிளவானது, சோவியத் யூனியனைச் சார்ந்து, தமது பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து வந்த இந்தியாவும் சீனாவும் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறைக்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
உலகின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை கொண்ட இவ்விரு நாடுகளும், தமது பொருளுற்பத்தி நடவடிக்கைகளுக்காக மேற்குலக முதலாளித்துவ நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதாரத்துக்கான பாரிய சந்தைக்கு வழிசமைப்பதாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகள் மத்தியில், உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டமையும் இவற்றைச் சார்ந்து ஒவ்வொரு நாளும் தத்தமது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமையும் இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மேற்குலக முதலாளித்துவ நாடுகள் வழங்கிய கடன் மற்றும் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைகள் கவனத்துக்குரியன.
சுய தேவைப் பூர்த்திக்கான பொருளுற்பத்தியை பரந்தளவில் முன்னெடுப்பதற்கும் அதனூடான பொருளாதார வளர்ச்சிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்காத இந்த உலகப்படுகடன் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்ட நாடுகள் தம்மைச் சொந்தக்காலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில், மேற்குலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி மிகவும் படிப்பினைக்குரிய ஒன்றாகும்.
வீடமைப்பு, நிவாரணம் வழங்கல் போன்ற உற்பத்திசாரா கடனுதவி சார்ந்து வளர்ச்சிபெற்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள், உலக நாடுகளைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டிய மாற்று பொருளாதார நடவடிக்கை குறித்து சிந்திக்க வைத்துள்ளன.
இன்று ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி, இதுதான் முதற்தடவை அல்ல. 1929 33 காலப்பகுதியிலும் இவ்வாறான ஒரு மந்தநிலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டது. 1929 இற்கு முன்னர் பொருளாதார உற்பத்தி நடவடிக்கையில் தலையிடாக் கொள்கையே இருந்துவந்தது.
அதாவது, பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு தலையிடத் தேவையில்லை. சுதந்திரமான சந்தையின் கேள்வி நிரம்பல் நிலைமைகளுக்கேற்ப உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் தன்னியக்கமாக நடைபெறும் என்ற கொள்கையே அது.
192933 உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, தலையிடாக் கொள்கைக்கு பதிலாக அரசு இதுவிடயத்தில் தலையிட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டதையடுத்தே முதலாளித்துவ பொருளாதார அரசுகள் தோற்றம் பெற்றன. பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து நாடுகள் தரம்பிரிக்கப்பட்டன. உலகப் பொருளாதாரத்துக்கான சர்வதேச நிதி மூலதனத்தின் அவசியமும் அதற்கான அமைப்புகளும் இதன் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றன என்றார்.
செல்வி திருச்சந்திரனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.