பிரித்தானியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வறுமையின் விழிம்புகளை நோக்கி நகர்த்தப்படுக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ நவ-தாராளவாத அரசு சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் உழைக்கும் மக்களிடமிருக்கும் சொற்ப பணத்தையும் பறித்துக்கொள்கிற அதே வேளை பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கிவருகிறது. பல்வேறு பல் தேசிய நிறுவனங்கள் வரி கொடுக்காமல் தப்பித்துக்கொள்ளும் வகையில் சட்டங்கள் திருத்டப்படுகின்றன.
இதற்கு மாற்றான சில திட்டங்களை ஜெரமி கோபின் என்ற தொழிற்கட்சித் தலைவர் முன்வைத்து தொழிற்கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
ஜெரமி கோபின் கடந்த வாரம் லண்டனில் தனது ஆதரவாளர்களுக்காக நடத்திய கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். நாடு முழுவதும் ஜெரமிக்கு ஆதரவு பெருகிவருகிறது. மக்கள் தமது அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் அறிமுகப்படுத்தும் ஜெரமி கோபின் இன் ஆதாரவு தளம் பிரித்தானியா முழுவதும் விரிவடைகிறது. இன்று வரை ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து ஊடகங்கள் ஈறாக அரசியல்வாதிகள் வரை மார்க்சியம் என்பது அழிவு அரசியல் என்று பிரச்சாரப்படுத்தின.
இன்று மக்கள் மார்கிசியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவம் என மக்கள் உணர ஆரம்பித்திருப்பதையே ஜெரமி கோபினுக்குக் கிடைக்கும் ஆதரவு தெளிவுபடுத்துகிறது.
கிரேக்கத்தில் பாராளுமன்ற அரசியல் சாத்தியமற்றது என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். ஜெரமி கோபின் என்ற தனிமனிதானல் பாராளுமன்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அவருக்கான ஆதரவு என்பது மக்கள் மத்தியில் தோன்றியுள்ள மாற்றமே.
இவ்வாறான மாற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் அரச மட்டத்தில் நிறவாதமும் தீவிர தேசியவாதமும் தூண்டிவிடப்படுகின்றது. பிரன்ஸ்-பிரித்தானிய எல்லையில் குவிந்திருக்கும் அகதிகளை மையமாக வைத்து பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
கடந்தவாரம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், காலே இல் நிலைகொண்டுள்ள அகதிகள் பூச்சி புழுக்களுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டார். அதே வேளை இன்று பிரித்தானிய வெளியுறவுத் துறைச் செயலாளர் பிலிப் ஹாமொன்ட் குறிப்பிடுகையில் காலேயிலுள்ள அகதிகள் எமது நாளாந்த வாழ்க்கையையும் வாழ்க்கைத் தரத்தையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.