மலேசியாவிலுள்ள போர்க்குற்ற நீதிமன்றம் முன்னை நாள் அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் முன்னைய பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. ஏழு நீதிபதிகளைக் கொண்ட மலேசிய நீதிமன்றம் இவர்கள் இருவரையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
“இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் நாசிகளைத் தண்டிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்ட அதே சட்டங்களின் கீழ் புஷ் மற்றும் பிளேர் குற்றவாளிகளாக இனம் காணப்படுகின்றனர்.இதே அடிப்படையில் உலகின் எந்த அரசும் அவர்கள் பிரசன்னமாகும் போது கைது செய்து தண்டிக்க வேண்டும். புஷையும் பிளேரையும் தண்டிப்பதற்கு நாம் எம்மாலான அனைத்தையும் மேற்கொள்வோம்” என நீதிபதிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
ஈராக் குறித்த பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து அழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அந்த நாட்டை ஆக்கிரமித்து மக்கள் மீது குண்டுவீசிக் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
தவிர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் இவர்கள் இருவரையும் தண்டிக்கக் கோரப்போவதாகவும் கோலாலம்பூர் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.







