சோசலிச மறுசீரமைப்புப் பாதையில் வியட்நாம் – டிரான் டாக் லாய்

பல ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நாங்கள் வீறுகொண்டு போராடிய பொழுது உலகில்’வியட்நாம் என்ற சொல் மிகவும் பிரபலமானது. இருப்பினும் கடந்த சில பத்தாண்டுகளாக வெளி உலகிற்கு வியட்நாம் குறித்து மிகக் குறைந்த தகவல்களே கிடைத்திருப்பதால் உலக நண்பர்களிடையே வியட்நாம் பற்றிய புரிதல் போதுமான அளவுக்கு இல்லை. இந்நிலைமையில் வியட்நாம் வரலாறு குறித்து குறிப்பாக கடந்த முப்பது ஆண்டு கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு விரிவான கண்ணோட்டத்தை அளித்திட கிடைத்த வாய்ப்பாக இதனை நான் கருதுகின்றேன்.
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தேசத்தின் பாதுகாப்புக்காகவும் தேசிய கட்டுமானத்துக்காகவும் நடத்திய போராட்ட வரலாற்றில் வியட்நாம் அளவிடற்கரிய துன்பதுயரங்களையும் சவால்களையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது.
1858 இல் பிரெஞ்சுப் படையினர் வியட்நாமுக்குள் நுழைந்து அனைத்து எதிர்ப்பு சக்திகளையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து படிப்படியாக நாட்டை ஆக்கிரமித்து இறுதியில் வியட்நாம் மக்கள் மீது தங்கள் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.ஆட்சியாளர்கள் என்ற வகையில் நாகரீகத்தையும் விடுதலையையும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் நமது நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு பதிலாக பிரெஞ்சுக் காலனி ஆதிக்கவாதிகள் எங்கள் இயற்கைவளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டியதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. கல்விக்கூடங்களைக் காட்டிலும் கூடுதல் சிறைச்சாலைகளை தான் அவர்கள் க ட்டினார்கள். நெல்லைக்காட்டிலும் கூடுதல் மதுபானத்தையும் போதைமருந்துகளையும் தான் அவர்கள் உற்பத்தி செய்தார்கள். இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் ஜப்பான் பாசிஸ்டுகள் வியட்நாமில் நுழைந்து இங்கு இருந்து வந்த பிரெஞ்சு ஆட்சியாளர்களுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் வியட்நாம் மக்கள் இரட்டை அடிமைத்தனத்துக்கு உள்ளாயினர். 1945-ல் மட்டும் 2.2 கோடியாக இருந்த வியட்நாம் மக்களில் 20 லட்சம் பேர் பட்டினியால் மரணமடைந்தனர். 95 சதவீதம் பேர் கல்லாதவர்களாக இருந்தனர். வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் தலைவர் ஹோசிமின் தலைமையில் 1945 ஆகஸ்டில் நாங்கள் புரட்சி நடத்தி ஜப்பான் மற்றும் பிரெஞ்சு காலனி ஆதிக்க சக்திகளிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினோம்.
1945 செப்டம்பர் 2 ல் ஜனாதிபதி ஹோசிமின் நாட்டின் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டு வியட்நாம் ஜனநாயகக் குடியரசை நிறுவினார்.பிரெஞ்சுக் காலனி ஆதிக்க சக்திகள் மீண்டும் திரும்பி வந்துவிடக்கூடிய அச்சுறுத்தல் இருந்த சூழ்நிலையில்,புதிதாக பிறந்த இந்த புரட்சிகர அரசாங்கம் பட்டினிக்கும் கல்லாமைக்கும் அந்நிய ஆதிக்கத்துக்கும் எதிரான போரைப் பிரகடனப்படுத்திய அதேசமயம் தேச வரலாற்றில் முதன் முறையாக தேர்தலையும் நடத்தியது. 1946-1954 காலகட்டத்தில் இந்த இனம் குடியரசு மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் மீண்டும் போரைத் துவக்கிய பிரெஞ்சுக் காலனியவாதிகளை எதிர்த்து 9 ஆண்டுகள் நெடிய போர் புரிந்து இறுதியில் வரலாற்றுப் புகழ் மிக்க பையன் பியான் பூ
வெற்றியில் முடிந்தது. 1954 ஜூலையில் வியட்நாம் குறித்து நடைபெற்ற முதலாவது சர்வதேச மாநாட்டில் ஜெனீவா ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகம் சுதந்திர வியட்நாமை முறையாக அங்கீகரித்தது.தேசிய அளவிலான பொதுத்தேர்தல் தயாரிப்புக்கக எதிர்க்கட்சிகள் ஒன்று திரளும் என்றும் இரண்டாண்டு காலம் தற்காலிகமாக பிளவுபட்டிருந்த நாடு ஒருங்கிணையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது நடைபெறவில்லை. ஜெனீவா ஒப்பந்தத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் சீர்குலைந்து நாட்டின் தெற்குப் பிராந்தியத்திலிருந்த பிரெஞ்சு ஆட்சியை அகற்றிவிட்டு அங்கு ஒரு சர்வாதிகார ஆட்சியையும் பொம்மை இராணுவத்தையும் நிறுவியது. ‘சுதந்திரம்’, ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் ஒரு புறம். தெற்கு பிராந்தியத்தினரையும் அவர்களது புரட்சிகர சக்திகளைம் ஒடுக்கினர். மறுபுறம் வடக்கு பிராந்தியத்துக்கு எதிராக நாசகரமான வான்வழித் தாக்குதலை நடத்தினர். ‘வட வியட்நாம் மீது குண்டு வீசி அழித்து கற்காலத்துக்கு கொண்டு செல்லுங்கள்’, ‘கொல்லுங்கள்’, ‘தீக்கிரையாக்குங்கள்’,’அழித்தொழியுங்கள்’ என கூக்குரலிட்டுக் கொண்டு அமெரிக்க இராணுவம் வியட்நாம் மீது 1.43 கோடி தொன் எடையுள்ள வெடிகுண்டை வீசியது. இது 1945 இல் ஹிரோசி மா மீது வீசப்பட்ட நியுக்ளியர் குண்டுகளைப் போல 72 மடங்காகும். இரண்டாம் உலகப்போர் முழுமையிலும் பயன்படுத்தப்பட்டதைக் காட்டிலும் நான்கு மடங்கு எடை கொண்ட குண்டுகளாகும். அதேசமயம், இந்த மண்ணை அழித்தொழிட அமெரிக்க இராணுவத்துக்கு 5 கோடி லிட்டர் இரசாயனக் கலவை தேவைப்பட்டது. 366 கிலோ டையாக்சின் கலந்த 4.5 கோடி லிட்டர் ஆரஞ்சுக் கலவையை அவர்கள் தெளித்திருந்தினர். டையாக்சின் என்பது இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிக அதிக செறிவு கொண்ட இரசாயனமாகும். 80 கிராம டயாக்சினைக் கொண்டு நியோர்க் நகர மக்கள் அனைவரையும் கொன்று விடலாம். வியட்நாமில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய டையாக்சினைக் கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தையே அழித்துவிட முடியும் என்ப குறிப்பிடத்தக்கது. வியட்நாமில் 48 லட்சம் பேர் இத்தகைய டையாக்சின் ஆரஞ்சுக் கலவையினால் பாதிக்கப்பட்டனர். தீரா நோய்க்கும் உடல் ஊனமுற்ற நிலைக்கும் ஆளாயினர். தொடர்ந்த போரினால் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 லட்சம் பேர் காயமுற்றனர். நாட்டின் முக்கிய உள்கட்டுமான அமைப்புக்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. பல கிராமங்களில் சாதாரண அப்பாவி மக்களைக் கொல்ல மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் தொடர்ச்சியாகப் பல இடங்களில் பரவலாக கண்டெடுக்கப்பட்டன. இன்று போர் முடிந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் 3 லட்சம் வியட்நாமியர்களைக் காணவில்லை. அவர்களின் உறவினர்களால் அவர்களது உடல்களை எங்கும் கண்டறிய இயலவில்லை.
இருப்பினும் வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய சக்தியின் கொடும் தாக்குதலால் வியட்நாம் மக்களின் உறுதியைக் குலைக்க இயலவில்லை.’விடுதலையையும் சுதந்திரத்தயும் காட்டிலும் மேலானது ஏதுமில்லை’ என்ற உத்வேகத்தில் கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் ஹோசிமின் தலைமையின் கீழ் வியட்நாம் மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அவர்களது பொம்மை இராணுவத்தையும் எதிர்த்து மீண்டும் ஒரு முறை எழுச்சியுற்றுப் போராடினர். 1973 ஜனவரியில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானதன் விளைவாக அமெரிக்கப் படைகள் வியட்நாமிலிருந்து வாபசானதைத் தொடர்ந்து விடுதலைப் படைகள் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தி தெற்கு பிராந்தியத்தை முழுமையாக விடுதலை செய்து 1975 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோசிமின் இயக்கத்தின் பொழுது அவை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.
போரைத் தொடர்ந்து மிகக் கடினமான தொடர் விளைவுகளை வியட்நாம் சந்திக்க வேண்டியிருந்தது. போருக்கு முன் வியட்நாம் ஒரு ஏழை நாடாகவே இருந்து வந்தது. நாட்டின் சமூக பொருளாதார உள்கட்டுமானங்கள் வாழ்க்கை ஆதாரம் போன்றவற்றை நிலைகுலைத்து 30 லட்சம் சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, 45 லட்சம் பேர் படுகாயமுற்று இலட்சக்கணக்கானோர் டையாக்சின் ஆரஞ்சுக் கலவையினால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போரினால் நாட்டின் வளர்ச்சி உண்மையில் பெரிதும் தடைப்பட்டது. இவை சில விபரங்கள் மட்டுமே. ஆனால், இவை வியட்நாம் மீது அமெரிக்கப் போரின் போது ஏற்பட்ட நாசகரமான பெரும் பாதிப்புக்களையும் போர் முடிந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடரும் துன்ப துயரங்களையும் படம் பிடித்துக் காட்ட உதவும் என நம்புகின்றேன்.
போருக்குப் பிறகு ஒரு அமைதியான சூழ்நிலையும் ஆதார வளங்களும் மேம்பட, போரில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்திட ஆதரவும் உதவியும் கிடைத்திட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நாட்டை மறுகட்டுமானம் செய்திட எங்களுக்குப் பேருதவி தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை. வியட்நாம் போருக்குப் பின்னர் மற்றொரு நெருக்கடி காலகட்டத்தைச் சந்திக்கவேண்டியிருந்தது.
1994 வரை வியட்நாம் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையினால் உலக ஆதார வளத்தையும் சந்தையையும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் சோவியத் யுனியனும் இதர சோசலிஸ நாடுகளுமே ஓரளவுக்கு உதவி புரிந்து வந்தன. மேற்கு நாடுகளும் அவர்களின் கூட்டாளிகளும் வியட்நாமுக்கு எதிராக அனைத்து வித அரசியல், பொருளாதார சீர் குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். கெமர்ரோஜின் இனவெறி ஆட்சியிலிருந்து கம்போடியாக விடுதலை பெறவும் அதைத் தொடர்ந்து கெமர்ரோஜ் கம்போடியாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து முறியடித்திட நடைபெற்ற போராட்டத்திலும் வியட்நாம் பெரும் ஆட்சேதங்களுக்கும் பொருட்சேதங்களுக்கும் உள்ளானது. சீனாவுடனான எல்லைத் தகராறு எங்களுக்கு மேலும் ஒரு பிரச்னையானது.
தேசியப் பொருளாதாரத்தில் இருந்த பலவீனம் நிலைமையை மேலும் சிக்கலாக்கிய உள்ளுர் காரணியாகும். அரசு மற்றும் கூட்டமை அடிப்படையில் அமைந்திருந்த மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரதுறை வியட்நரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது சமூக சமத்துவத்தை நிலை நாட்டியது. ஆனால் இதனால் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படவில்லை. உள்நாட்டில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டது. தொழிலாளர் உற்பத்தித் திறன் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாக இருந்தபோதிலும் கடும் உணவுப் பற்றாக்குறையினால் பெரும் பாதிப்புக்குள்ளானோம். இதன் விளைவாக ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் தொன் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய நேரிட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 1980 களில் பணவீக்க விகிதம் பெரிதும் அதிகரித்து, உச்சக் கட்டமாக 774.4 சதவீதத்தை எட்டியது. உண்மையில் நாங்கள் கடும் சமூக – பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்திருந்தோம். வியட்நாமில் குறைவான வளர்ச்சி மட்டத்தில் இருந்த உற்பத்தி சக்திகளுக்கேற்ற உற்பத்தி உறவுகளை ஆக்காமல் பொருத்தமற்ற உற்பத்தி உறவுகளை உருவாக்க முயன்றதும் உற்பத்தித் திறனை மிஞ்சிய விநியோக முறையும் இதற்குக் காரண் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். சுருக்கமாகக் குறிப்பிட்டால் அங்கு விருப்பங்களுக்கும் நடைமுறை யதார்த்தத்துக்கும் இடையில் ஒரு குழப்பம் நிலவியது.
1986 இல் வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் 6 வது மாநாட்டில் ‘தோய்மோய்’ என அழைக்கப்படும் மறுசீரமைப்புக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போதைய உலகநிலைமையைக் கருத்திற் கொண்டு வியட்நாமில் சோசலிசத்தை நோக்கிய மாறுதல் காலகட்டத்தில் யதார்த்த நிலைமைக்கு ஏற்ப சோசலிசக் கட்டுமானத்தின் முதல் அடியை எடுத்து வைப்பதே ‘தோய்மோய்’ சீர்திருத்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.
மறுசீரமைப்பின் கீழ் பொருளாதாரக் கொள்கை பின்வரும் முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.
– பொருளாதாரத்தை முன்னேற்றவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ஆன பொருளாதாரத் திறனை அதிகரிப்பதன் அடிப்படையில் சோசலிச திசை வழியிலான சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது . நமது கண்ணோட்டத்தின்படி சந்தை தானாகவே ஒருபோதும் சமூகப் பிரச்னைகளைத் தீர்த்து விடாது. பொருளாதாரத்தில் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் செலுத்தி தொழிலாளர்களை மேலும் மேலும் சுரண்டி வரும். பெரும் மூலதன சக்திகளின் பொருளாதார வேட்டைக்காடாக உள்ள ‘சுதந்திரச் சந்தை’யை உண்மையில் நாம் ஏற்கவில்லை.மாறாக சந்தையானது அரசு நிர்வாகத்துக்கு உட்பட்டு சிறந்த பொருளாதார வளர்ச்சியையும் சமச்சீரான பிராந்திய வளர்ச்சியையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் கொள்கைகளை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். அது சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சந்தை என்பது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் ஒரு கருவி மட்டுமே. இந்தக் கருவியைப் பெரும்பாலும் யார் என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதன் அடிப்படையில் சந்தையின் செயற்பாடுகள் இருக்கும்.
உடைமை வடிவத்திலும் உற்பத்தி முறையிலும் பன்முகத் தன்மையும் அவற்றில் அரசுத்துறையின் முன்னணிப் பாத்திரமும் இருக்கும். இதன் மூலம் அனைத்து உற்பத்தி சக்திகளையும் விடுவித்து வளர்ச்சிக்கான சாத்தியமான அனைத்து வாய்ப்புக்களையும் மூலாதாரங்களையும் பயன்படுத்த முடியும். இத்தகைய பலமுனைப் பொருளாதாரத்தில் அரசுப் பொருளாதாரம் சாதகமான மற்றும் குறிப்பிடத்தக்க பங்குப் பணியாற்றும் தேசப் பாதுகாப்புக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் துறைகளை இது ஏகபோகமயப்படுத்தும்.
(தொடரும்..)

தமிழாக்கம் : இரா.சிசுபாலன்