சர்வதேசபொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நேற்று திங்கட்கிழமை நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனைக்கூறிய அவர் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் குற்றம் சாட்டும் நிலைமையை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில் பொருளாதார நெருக்கடியானது அந்நியர்கள் தொடர்பான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் “பிறப்பாக்கியாக’ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டதுடன் எந்தநாடு என்று எதனையும் அவர் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை.
அரசியல்வாதி என்ற முறையில் நான் பெற்ற அனுபவத்தின் பிரகாரம் நாடொன்றில் நிலைமை மோசமாக இருக்கும்போது இரு விடயங்கள் இலக்குவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. ஒன்று அரசு மற்றையது வெளிநாட்டவர்கள் என்று முன்னாள் போர்த்துக்கல் பிரதமரான அன்ரனியோ கூறியுள்ளார்.
பொருளாதார நிலைமை மோசமடையும் போது உலகின் பல பகுதிகளில் வெளிநாட்டவர் மீது வெறுப்புக்கொள்ளும் போக்கு தவிர்க்க முடியாதது என்று கட்டரஸ் கூறியுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியான மோதல்கள் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்றும் கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கங்கத்துடன் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள அன்ரனியோ கட்டரஸ் ஆசிய பசுபிக்பிராந்தியத்தில் புகலிடம் தேடுவோரை அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளை இந்தோனேஸியா போதிய அளவுக்கு தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.