29.01.2009.
இஸ்ரேல் தாக்குதலால் நொறுங்குண்ட காசா மக்களுக்கு மனித நேய உதவி அளிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை வெளியிட மறுத்த பிபிசி பிரிட்டிஷ் மக்களின் கடும் கோபத் துக்கு ஆளாகியுள்ளது.
பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் சுயாட்சி கொண்ட ஒளிபரப்பு அமைப்பு பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேசன் ஆகும். அரபு – இஸ்ரேல் யுத்தத்தில் சாய்மானம் இன்றி செயல்பட விரும்புவ தால் உதவி விளம்பரத்தை வெளியிடுவதில்லை என்று பிபிசி கூறுகிறது. ஆனால், அதனுடைய காசா குறித்த செய்திகளின் சாய்மானம் குறித்து இரு தரப்பும் கண்டனம் தெரிவித்தன.
இந்த முடிவு பற்றி அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன. இங்கிலாந்து திருச்சபை ஆயர்கள், செய்தியாளர்கள், கட்டுரையாளர்கள், அமைச்சர்கள் எனப் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லண்டன் தலைமையகத்தில் எதிர்ப்பாளர்கள் உள்ளே நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கிளாஸ்கோ ஒளிபரப்பு மையத்திலும் இது போல் நடந்தது. மத்திய லண்டனில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
11 நிவாரண முகமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரழிவு நெருக்கடி குழு தயாரித்துள்ள, மூன்று நிமிடம் ஓடும் வீடியோவை பிரிட்டனில் உள்ள பிற ஒளிபரப்புகள் ஒளிபரப்பியுள்ளன. பேரடி நெருக்கடி குழுவில் செஞ்சிலுவை, ஆக்ஸ்பாம், குழந்தைகளைக் காப்பீர், முதியோருக்கு உதவுவீர், கிறிஸ்தவ உதவி மற்றும் உலகக் கண்ணோட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன.
பேரழிவுக் குழுவால் திரட்டப்படும் நிதி உதவியைக் கொண்டு இஸ்ரேல் தாக்குதலால் சிதைக்கப்பட்ட காசா மக்களுக்கு உணவு, மருந்துமற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட இன்றி அமையா பொருட்களை வாங்கப் போவதாக அக்குழு கூறியுள்ளது. இந்த விளம்பரத்தை வெளியிடுமாறு குழு விடுத்த வேண்டுகோளை பிபிசி ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், ருவாண்டா, காங்கோ மற்றும் டார்பர் போன்றவற்றில் மனிதநேய வேண்டுகோளை பிபிசி வெளியிட்டுள்ளது.