கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியோடு திமுக தோழமையாக இருப்பதால் தான், திமுகவுடன் உறவு கொள்ள முடியாத நிலை உள்ளதாக இடதுசாரி நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெயலலிதா, மத்திய அரசை விமர்சிப்பதை தவிர்த்து இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில், ஜெயலலிதா இடதுசாரி நண்பர்களை ஏமாற்றுவது கூட பிறகு இருக்கட்டும், அவருடைய கட்சித் தொண்டர்களையே ஏமாற்றுவதற்காக கோவையில் பேசும் போது, கூட்டணியைப் பற்றி அவரே கவனத்துக் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியையும், மத்திய அரசையும் விமர்சிப்பதைத் தவிர்த்து இருக்கிறார். இப்படியெல்லாம் செய்து இடதுசாரிகளை ஏமாற்ற நினைக்கலாம்; கட்சித் தொண்டர்களை ஏமாற்றலாம். ஆனால், சோனியா குறித்து ஜெயலலிதா கூறிய விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் அவ்வளவு சுலபமாக மறந்து இருக்க மாட்டார்கள். வாங்கும் சக்தி பெருகுகிறது: அத்தியாவசியப் பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். விலைவாசி உயர்வு என்பது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள ஒன்றாகும். இந்த விலைவாசி உயர்வு தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏன் உலக அளவிலும் இருந்து கொண்டு தான் உள்ளது. விலைவாசி உயர்கின்ற அதே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியும் பெருகிக் கொண்டு வருகிறது. உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியன மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மலிவு விலையில் ரூ.50-க்கு 10 மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.அதிமுக ஆட்சியிலும்: அதிமுக ஆட்சியிலும் விலைவாசி ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டு போனது. அதைத் தவறு என்று சொல்லவில்லை. இவ்வாறு விலை உயர்ந்த போது, திமுக அரசு இப்போது எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏதாவது எடுக்கப்பட்டதா?