20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பிரதமரிடம் கூடங்குளம் பிரச்சனை பற்றி பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கூடங்குளம் பிரச்சனையில் அங்கே வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதிபட பாடுபட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன் என்றார்.
மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன் என்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன் என்றும் கருணாநிதி கூறினார்.
இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.








joke