பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து
நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை
சுதந்திரப்
பசியெழுந்தது பெரிதாய்…!
*****
அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால்
ஆயுதங்களுடன் உறவாடி-
ஆவேசத்துடன் போராடி-
இரத்தத்தில் நீராடி-
எதிரிகளைப் பந்தாடி
ஈற்றில்…
இலட்சியக் கோட்டை இடிந்துவிழ-
தோற்றுத் துவண்டு சரணடைந்து-
இன்றோர் மொட்டைத் திரியாய்-
பட்ட கொடியாய்
கெட்ட குடியாய்-
ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு…!
*****
சீராட்டி வளர்த்த சின்னக்கா,
சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த
சினேகிதிகள்,
அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார்
அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள்
இன்னும்…
உற்றார் உறவினர் ஊராரென
அத்தனை பேரும் விட்டோட-
அவளை விட்டும் வெருண்டோட-
அபலையாய்…அனாதையாய்…!
*****
கண்காணிப்புப் போர்வை போர்த்துக் காரிருளில்
கதவு தட்டும் கருநாகங்கள்
விசாரணைப் போதுகளில்
விஷம் பாய்ச்சி வெளியேறும்!
*****
ஒரு பசியும் இல்லாப் போது கூட
‘உண்ணுக…பருகுக’ என்றுபசரித்த கடைக்காரரெல்லாம்
உறு பசியென வந்தின்று உதவி கேட்டால்
‘ஓடிப்போ’ வென விரட்டுகின்றார்…!
*****
இவள் முதுகுத் துப்பாக்கி கண்டு
எச்சில் கூட்டி விழுங்கியோரெல்லாமின்று
முகத்தின் முன்னாலேயே
துப்புகின்றார் தைரியமாய்…!
*****
நடு வகிடெடுத்த இரட்டைப் பின்னலில்
நடுநடுங்கியோரெல்லாம் இன்றிவளின்
பரட்டைத் தலை பார்த்துப்
பரிகாசம் புரிகின்றார்…!
*****
முன்னொரு போதிலிவள்
சீருடை தந்த அச்சத்தில்
சிறுநீர் கழித்த
கள்ளுத் தவறணைக் கண்ணுச்சாமியின்று
கண்ணடித்து சைகை காட்டும்
கர்மமும் நடக்கிறது…!
*****
புனர் வாழ்வு தருவதாய்த்தான் சொன்னார்கள்..
சில அதிகாரிகளோவதனைப்
புணர் வாழ்வெனப் புரிந்து கொண்டு
இவளையணுகும்
புதிரும்தான் நிகழ்கிறது….!
*****
ஒரு கவளச் சோற்றுக்காய்
ஊர் முழுதும் இவள் அலைய…
மகிந்தர் மாளிகையின்
விருந்துக்காய் நம்மவர்கள்…!
*****
அட-காதலிலும் போரினிலும் மட்டுமல்ல-
அரசியலிலும் எல்லாமே
அழகுதானோ…?
Very confusing. Very troubling. Very Sad.
உண்மைதான்… “Very confusing. Very troubling. Very Sad” ஆனால் எம்மவர்கள் சிலரின் நிஜம் இது… எல்லாவற்றிற்கும் காரனமாவர்களும் எம்மவர்களில் சிலர் தான்…
0ரூ சிலரின் குறுகிய நோக்கால் பாதிப்படைவது பலர்…