அமெரிக்க அயல்துறையில் பணியாற்றிய ஒரு தம்பதியர் கியூபாவுக்காக 30 ஆண்டுகள் உளவு பார்த்தனர் என்று அமெரிக்கா கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு என்று கூறிய பிடல் காஸ்ட்ரோ இந்த வழக்கு ஒரு நகைச்சுவை துப்பறியும் கதை என்று கிண்டலும் அடித்தார்.
அமெரிக்க அயல் துறையில் வேலைபார்த்த 72 வயதான வால்டர் கென்டல் மையர்சும் அவருடைய 71 வயது மனைவி குவன் டோலின் மையர்சும் தங்களுக்கு அலுவல் ரீதியாகக் கிடைத்த உயர்மட்ட ரகசியப் பாதுகாப்பு விலக்கினைப் பயன்படுத்தி ரகசியத் தகவல்களை கியூபாவுடன் பகிர்ந்து கொண்டனர் என்று அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டை காஸ்ட்ரோ உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
அமெரிக்க நீதித்துறை கூறுவது போல் மையர்ஸ் தம்பதியரை 1995-ல் சந்தித்ததாகத் தமக்கு நினைவில்லை என்று கியூபா மற்றும் உலக விவகாரங்கள் குறித்து அவர் எழுதி வரும் இணையதளக் கட்டுரையில் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். அக்கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான வட அமெரிக்கர்களைத் தனியாகவும், குழுக்களாகவும் சந்தித்து வந்ததால் இவ்விருவரைப் பற்றி தமக்கு நினைவில்லை என்று கட்டுரையில் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுக் குற்றச்சாட்டு பற்றி கியூபாவிலிருந்து வெளியான முதல் கருத்தாக காஸ்ட்ரோவின் கருத்து அமைந்துள்ளது. கியூபா உளவு பற்றிய இந்த அபத்தமான குற்றச்சாட்டு ஒரு நகைச்சுவை துப்பறியும் தொடர் போல் இல்லையா என்று காஸ்ட்ரோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எந்தவொரு தகவலையும் பெறுவதற்காக கியூபா யாருக்கும் கையூட்டு கொடுக்கவோ யாரையும் துன்புறுத்தவோ இல்லை என்றும் அவர் கட்டுரையில் சொல்லியுள்ளார்.
அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு நடத்த முயன்ற பல்வேறு கொலை முயற்சி மற்றும் பயங்கரவாதச் செயல்களிலிருந்து கியூப மக்களைப் பாதுகாக்க ஏதாவதொரு வழியில் முயன்ற வர்கள் அனைவரும் தங்களது சொந்த மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டார்கள். என்னுடைய மதிப்பீட்டின்படி அவர்களுக்கு உலகில் உள்ள அனைத்து கவுர வங்களும் அளிக்கப்படவேண்டும் என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.
இரு தரப்பு நலன்கள் குறித்தவற்றில் கியூபாவும், அமெரிக்காவும் அண்மையில் உருவாக்கி வரும் தொடர்புகளைச் சீர்குலைக்கும் முயற்சியில் கிளப்பி விடப்பட்ட கட்டுக்கதை இது என்றும் அவர் கூறியுள்ளார்.







