Tag Archives: இன்றைய செய்தி

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.

இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில்

தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’ இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.

வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.

அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.

அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.

குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.

தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.

திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.

தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அநன்றி : நக்கீரன்,  வினவுவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

நன்றி :  வினவு,   நக்கீரன்

மகிந்தவைச் இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் சிவ்சங்கர் மேனன்

கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று இல‌‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்டமுக்கியஸ்தர்களை மேனன் சந்திக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்குஆதரவளித்ததன் பின்னர் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதனால் இந்த விஜயம்முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசின் நலன்களை உறுதிப்படுத்தவே இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. இந்திய அரச ஆதரவுடன் வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று வருடங்களின் இந்திய அரசியல் வர்த்தக நலன்களை உறுதிப்படுத்வே இந்த அவசர சந்திப்பு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடும் வட கிழக்கில் சனத்தொகைக் குறைப்பும்

சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியை தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஒருகோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக இருந்தது. 2012 மார்ச் 20 ஆம் நடத்தப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் அறிக்கை நேற்று (26) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு இருந்த மொத்த சனத் தொகையுடன் ஒப்பிடும் போது, தற்போது இலங்கையின் சனத் தொகையானது 7.9 வீதமாக அதிகரித்துள்ளது.
30 வருடங்களின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் தற்போதைய சனத்தொகை 20,227,597 என குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை குறைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட – கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் பல்தேசிய நிறுவனங்களின் திட்டமிட்ட நிலப்பறிப்பும் நிகழும் நிலையில் சனத்தொகை மதிப்பீடு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன.

பிள்ளையான் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உடைகிறது

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால், கட்சிக்குள் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா தரப்பினரின் அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. கருணா இந்த கட்சியின் ஆரம்ப தலைவராக செயற்பட்டார். எனினும், பின்னர், கருணா தரப்பிற்கும், பிள்ளையான் தரப்பிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதை அடுத்து கருணா அந்த கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அபு ஹம்சா கைதானார் : போலிஸ் கூறுகிறது

2008, நவம்பர் 26ம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உட்பட சில முக்கிய இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் அதாவது, தாஜ் ஹோட்டல் எங்கிருக்கிறது, சிவாஜி ரயில் நிலையம் எங்கிருக்கிறது என தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அபு ஹம்சாவை என்பவரைக் கைது செய்ததாக இந்தியப் போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையித்தில் வைத்து அபு ஹம்சா என்று அழைக்க்கப்படு ஜபியத்தீன்கைதானதாக போலிஸ் தெரிவிக்கிறது.

பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை.

புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பணக் கொடுப்பனவு மீதும், தமிழகத்தில் இனவெறியைத் தூண்டி வாக்குக்களைப் பெற்றுக்கொளும் செயற்பாட்டின் மீதும் மட்டுமே அக்கறை கொண்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அகதிகளுக்காக மேற்கொண்டதில்லை. செங்கல்பட்டிலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டப்படாத மிருகங்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் ஆரம்பமாகிறது, ராஜபக்ச தூக்கில் தொங்கப்போகிறார் போன்ற கோமாளித் தனமான உணர்ச்சியூட்டும் அரசியல் நடத்தும் இந்தச் சந்தர்ப்பவாத கோமாளிகளின் அருவருப்பான அரசியல் அகதிகளை 20 வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கவும் உதவியிருக்கிறது.
மரணத்தின் விழிம்பில் மனித உரிமைக்காகப் போராடும் அகதிகளின் போராட்டத்தை மனிதாபிமானமுள்ள ஒவ்வோர் மனிதனும் ஆதரிக்க வேண்டும்.

நிலப்பறிப்பிற்கு எதிராக முறிகண்டியில் போராட்டம் : அரசியல் திட்டத்தின் அவசியம்

எமது மக்கள் தமது நிலங்கைளையே கேட்கின்றனர் அதற்காகவே போராட்டங்களையும் நடத்துகின்றனர் எங்களுடைய போராட்டம் நியாயமானது. எமது போராட்டம் யாழில் நடைபெற்றது. தற்போது திருமுறிகண்டியில் நடைபெறப் போகின்றது. இப்போராட்டங்களை தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் சிங்கள இராணுவமும் அரச புலனாய்வுப் படையினரும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருவெளிப்பாடே வலி.வடக்கில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலாகும். இவற்றுக்கு எல்லாம் பயந்து போகும் இனம் எமது இனமல்ல.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறிகண்டியில் நடைபெறவிருக்கும் போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு முஸ்லீம் காங்கிரசிம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அனைத்து முற்போக்கு ஜனநாயக் சக்திகளும் இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் அதே வேளை வடக்கு முஸ்லீம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம் நிழல் உலக அரசியல் நடத்தியவர்கள் மௌனம் சாதிக்கின்றனர்.
நிலப் பறிப்பு என்பது உலகளாவிய பிரச்சனையாக இன்று முன்னெழுந்துள்ளது. திட்டமிட்ட அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறன்றெனின் இது குறுகிய வட்டத்தினுள் முடகப்பட்டு அழிக்கப்படும் அபாயம் உருவாகும். முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களைப் பாதுகாக்க முடியாது போன அதே போராட்ட வழிமுறைகளை கைவிடவேண்டும். சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமது சுயலாபத்திற்காக ஒவ்வொரு போராட்டங்களையும் எதிரியிடமே ஒப்படைக்கின்றனர்.

தமிழக மீனவர் பிரச்னையை பிரதமர் விரைவில் தீர்ப்பார் : நாராயணசாமி

தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல்செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச குற்றம் சுமத்தினார்.
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் புதன்கிழமை பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்னையை, பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் தீர்ப்பார் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.டில்லியில் இருந்து நேற்று காலை, சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இக் கருத்தைத் தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் பெரு முதலாளிகள் நவீன மீன்பிடி முறைகளால் கடல்வளங்களைக் கொள்ளையிடுவதால் ஏழை மீனவர்கள் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பலியாகின்றனர். இலங்கையின் வடக்கு மீனவர்கள் வாழ்வாதரத்தை இழக்கின்றனர். ராஜபக்ச போன்ற இந்திய அரசால் பலப்படுத்தப்பட்ட இனக் கொலையாளிகள் இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்டுகின்றனர். தொழிலாளர்களை உயிர்ப்பலி கொடுக்கும் பல்தேசிய முதலைகளும், இனவாதிகளும், இந்திய அரசும் இந்தச் சிக்கலைத் தீர்த்துவைக்கப் போவதில்லை.