Tag Archives: இன்றைய செய்தி

கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நியமித்துள்ளார்.

ஜீவன் எப்படி வட்டி அறவிடுகின்றார் என்பது பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜீவனின் கந்துவட்டி அறவீட்டில் தர்மபுரப் பிரதேசத்தில் இயங்கிவந்த கரிணிகா நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

2009ஆம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கந்துவட்டி காரணமாக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகியுள்ளார் கந்துவட்டிக் காரரான ஜீவன்.

அத்துடன், தர்மபுரத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள், காவல்துறையிடம் சிக்கும் பட்சத்தில் ஜீவனைத் தொடர்புகொண்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விசுவமடுப் பகுதியில் ஜீவன் என்பவரிடம் கடன் பெற்ற பலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அண்மையில் இவ்வாறு தலைமறைவாகியிருந்த ஒருவரை அழைத்துவந்த ஜீவன் அவருக்காக சாட்சிநின்ற வர்த்தகர் ஒருவரின் வீட்டினை அபகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கந்துவட்டி அறவிடுபவரும், பல சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோகும் ஒருவருமான ஜீவன் என்பவரை சிறிதரன் தர்மபுர அமைப்பாளராக நியமித்தமை அப்பகுதி மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மக்களுக்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்படவேண்டிய அமைப்பாளர்களைத் தவிர்த்து சட்டவிரோத செயற்பாடுகளிலும், கந்துவட்டி அறவிடுபவர்களுமே தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவது மக்களின் சாபக்கேடே.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் ட்ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் முகமத் ரபீக் எனப்படும் குறித்த மாநகரசபை உறுப்பினர் 23,000ஆயிரம் மாத்திரைகளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் நுரானியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரமடோல் மாத்திரையானது வலி நிவாரணியாகும். தாங்கமுடியாத வலியுடன் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு வைத்தியர்களால் இம்மாத்திரை பரிந்துரை செய்யப்படுகின்றது.

இலங்கையில் 1100 மில்லிக்கிராம் கொண்டதும், ஒசுசலவில் மாத்திரம் வாங்குவதற்கும், வைத்தியரின் அனுமதிச்சிட்டையுடன் சென்றால் மாத்திரமே  இம்மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மாநகர சபை உறுப்பினரிடமிருந்து, 225மில்லிக்கிராம் கொண்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாத்திரையைப் பயன்படுத்தும் ஒருவர், போதைவஸ்துக்கு அடிமையான ஒருவரால் எவ்வாறு அதிலிருந்து மீளமுடியாதோ, அதேபோன்ற நிலமையே இம்மாத்திரையைப் பயன்படுத்துபவருக்கும் ஏற்படுகின்றது. இதன் பாவனையைக் கைவிடும் சந்தர்ப்பத்தில், போதைப் பொருளைக் கைவிட்டவருக்கு ஏற்படும் உடல் நடுக்கம், நெஞ்சு படபடத்தல் மற்றும் உடல் நோவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இம்மாத்திரை ஒன்றின் விலை 4 ரூபாய். ஆனால் தனியார் மருந்தகங்களில் தடைசெய்யப்பட்ட இம்மாத்திரையை 100 ரூபாவிற்கு விற்பதன்மூலம் அதிக இலாபம் ஈட்டமுடியும். ஆகவே, குறித்த நபர் இந்தியாவிலிருந்து கடல்வழியாகக் கொண்டுவரப்படும் இம்மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் மருந்தகங்களுக்கு விற்பனை செய்துவந்தமை தெரியவந்துள்ளது.

இவர்மீது அபாயகரமான ஒளடதங்கள் கடத்தல் சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும், சட்டத்தின் ஓட்டையை வைத்து இவர் விடுதலையாவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு உட்படும் போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுகிறது. இன்றைய இலங்கை அதிகாரவர்க்கத்தின் உள் முரண்பாடுகளைக் கையாளவும், இலங்கை முழுவதும் வெறுப்படைந்திருக்கும் சிங்கள உழைக்கும் மக்களைத் திசைதிருப்பவவும் பேரினவாதம் இழையோடும் அரச அதிகாரம் திடீரெனத் தீவிரமடைகிறது.

யாழ்ப்பாணத்தின் முற்றவெளிக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. 1977 ஆம் ஆண்டு முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கார்னிவெல் நிகழ்வில் பொதுமக்களால் அத்துமீறிய சிங்கள போலிஸ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்தியதில் 4 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

1974 ஆம் ஆண்டு முற்றவெளிக்கு அருகில் தமிழாராச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட மக்கள் தேசிய இனப்பிரச்சனையின் மற்றொரு குறியீடு.

இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் முற்றவெளியைச் சமூக அக்கறையுள்ளவர்களின் ஈர்ர்பு மையமாக மாறியுள்ளது.

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் நாள் கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா். யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் கடந்த 19ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இவரின் பூதவுடல் விசேட உலங்குவானூர்திமூலம் விகாரைக்கு எடுத்துவரப்பட்டு, முற்றவெளியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது.

முற்றவெளி அலங்கரிக்கப்பட்டு மரணச்சடங்குகளுக்கான ஆரம்பவேலைகள் பூர்த்தியாக்கபட்டுள்ளது. முற்றவெளி மையனம் அல்ல. பௌத்த துறவியை அடக்கம் செய்த பின்னர், வரலாற்றுப் பெருமைகொண்ட முற்றவெளியின் ஒரு பகுதி பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக்கப்படும்.

பேரினவாதத்தை எவ்வாறு தமிழ் வாக்குகளாகவும் சிங்கள வாக்குகளாகவும் மாற்றிக்கொள்வது என தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிடுவதை மட்டுமே இன்றைய இலங்கையின் அரசியலின் அவலக்குரலாகக் காணலாம்.

தமிழ் இனவாதத்தை வாக்குகளை நோக்கமாகக் கொண்டு தூண்டாமலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு வாய்ப்பளிக்காமலும் இப் பிரச்சனையைத் தொலை நோக்கோடு அரசியல்வாதிகள் அணுகுவது மட்டுமல்ல, மக்களை அணிதிரட்டி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்தால் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான குரலை வலுவாக்க முடியும்.

சம்பந்தனைப் புறந்தள்ளிய சிறிதரன், கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளார்!

ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான ஆசனப் பங்கீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் வைத்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழரசுக் கட்சிக்கு 60வீதமும், ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு இருபது இருபது வீதமாகவும் ஆசனங்கள் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இதற்கு சிறிதரன் இணங்காத நிலையில், நேற்று முன்தினம் பங்காளிக் கட்சிகள் இன்றி தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை மாத்திரம் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலை சிறிதரன் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து, பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள்  மீண்டும் மாவை சேனாதிராஜாவின் கவனத்திற்குக் கொண்டுசென்றதனையடுத்து, மாவை சேனாதிராஜா சிறிதரனை தொடர்புகொண்டு பங்காளிக் கட்சிகளுக்குரிய ஒதுக்கீட்டை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் பங்காளிக் கட்சிகளுக்கு அவர்களின் ஒதுக்கீட்டை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், சிறிதரன் பங்காளிக் கட்சிகளை நிராகரித்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார்.

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவர் வலிகாமம் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளார். வலிகாமம் பிரதேசத்திலிருந்து வலிகாமப் பிரதேச தவிசாளர் சுகிர்தன், உபதவிசாளர் சஜீவன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வடக்கில் தமிழ் அரசியல் வாதிகள் தாம் பதவிகளை வகிக்கும்போதே தமது பிள்ளைகளையும் அரசியலில் களமிறக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் கல்வி கற்றுவந்த மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது யாழிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், யாழின் வலிகாமப் பிரதேசத்தில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அத்தொகுதியில் மாவை சேனாதிராஜாவின் மகனை போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே களமிறக்கியுள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறுமிடத்து வலிகாமம் பிரதேசத்து உப தவிசாளராகப் பதவி வகிக்கும் சஜீவன் அப்பதவியிலிருந்து அகற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், அண்மையில் யாழிற்கு வருகை தந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் மாவை சேனாதிராஜா வெளிவிவகார அமைச்சில் வேலையொன்றை ஒழுங்குபடுத்தித் தருமாறு கோரியிருந்த நிலையில், அவருக்கு தான் வேலை பெற்றுத் தருவதாக மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றபின்னர் மக்களைப் பற்றிச்சிந்திப்பதேயில்லை. இவர்களை தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது மக்களின் சாபக்கேடன்றி வேறல்ல.

மன்னாரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இராணுவம்!

மன்னார் மடு வீதிச் சந்தியில் இராணுவத்தினரால் பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டு, அதற்கு ‘மக்கள் உணவகம்’ எனப் பெயரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பிரதேசத்து சிறிய உணவு விடுதிகளை நடத்தும் மக்கள் தமது வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக அம்மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த எட்டு வருடங்களாக இராணுவத்தினர் இச்சந்தியில் ‘மக்கள் உணவகம்’ என்றபெயரில் இவ்வுணவகத்தை நடத்தி வருகின்றனர். இவ்வுணவகத்தில் எமது கடைகளை விட உணவுகள் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இதனால் எமது கடைகளுக்கு மக்கள் உணவு உண்ண வருவதில்லை. இதனால் எங்களது இரண்டுகடைகள் மூடப்பட்டுவிட்டன எனத் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏ9 வீதியோரங்களில் இராணுவம் உணவகங்களை நடத்தி வருமானம் ஈட்டி வருகின்றது. அத்துடன், நகர்ப்புறங்களில் தையலகம், முடி திருத்தும் கடைகள் என பலவற்றை நிறுவி மக்களின் கடைகளைவிட அவர்களது கடைகளில் விலைகளைக் குறைத்து தொழில் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினரால் மீண்டும் பொருளாதாரச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்கம், மீண்டும் மீண்டும் இராணுவ இருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றது.

தேயிலைத் தடையை நீக்க ஆட்கொல்லி அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளுக்கு இணக்கம்!

சிறிலங்காவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்திருந்த அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை மீண்டும் இறக்குமதி செய்யவேண்டுமென ரஷ்யா அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளைப் பாவிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதாக சிறிலங்கா அரசாங்கம் தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

இதில் 2018ஆம் ஆண்டு அஸ்பெஸ்ரஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முற்றாகத் தடைசெய்வதாகவும், 2024ஆம் ஆண்டுக்குள் அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தது.

சிறிலங்காவுக்குத் தேவையான அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை ரஷ்யாவே ஏற்றுமதி செய்து வந்தது.

இந்நிலையிலேயே, கடந்த வாரம் சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையில் வண்டுகள் இருப்பதாகத் தெரிவித்து, சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு ரஷ்யா இடைக்காலத் தடை விதித்தது.

ரஷ்யாவின், 23 வீதமான 18மில்லியன் தொன் தேயிலையை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுமதி செய்து வந்தது.

சிறிலங்கா, கடனில் மூழ்கியுள்ள இந்நிலையில், ரஷ்யா தேயிலைக்கான தடையை விதித்ததால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அவசரமாக கடிதம் எழுதியுள்ளதுடன், அடுத்த வாரம் அமைச்சர்கள் குழுவொன்றையும் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.

இதன்போது அஸ்பெஸ்ரஸ் கூரைத்தகடுகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்காவுக்கு ரஷ்யா அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் அழுத்தத்திற்கு சிறிலங்கா இணங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி காடையர்களால் அச்சுறுத்தல்!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் புளொட் அமைப்பிலிருந்து போட்டியிடவிருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பெண் வேட்பாளர் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் ரௌவுடிக் கும்மலால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ கட்சிகளுக்கிடையில் ஆசனப் பங்கீட்டில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளது.

இம்மோதல்கள் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

அண்மையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புளொட் அமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை புளொட் அமைப்பைச் சேர்ந்த  பெண் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையிலான குழுவினர், ‘தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், அதை மீறி தேர்தலில் போட்டியிட்டால் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் அச்சமடைந்த,  குறித்த பெண் வேட்பாளர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.