எழுக தமிழா : அரசியல் வியாபாரிகளின் புதிய கூட்டணியில்!

us-imperialismஅமெரிக்காவின் தெற்காசிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் பிரதான மையமாக மாறிவரும் இலங்கையைச் சுற்றிச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் படையெடுக்கின்றனர். இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் இன்னும் தமது உரிமைகளுக்காக அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பியிருப்பதாக நாடகமாடுகின்றன. அணிதிரட்டப்படாமல் உதிரிகளாகவிருக்கும் மக்களை எழுக தமிழா என்ற ஆர்பாட்டத்திற்கு அழைத்துத் தமது வாக்குகளை மட்டுமல்ல தமது ஏகாதிபத்திய விசுவாசத்தையும் உறுதி செய்துகொள்கின்றனர்.

இவ்வளவு நடைபெற்ற பின்னரும் அமெரிக்காவிடம் பேரம்பேசப் போவதாகப் படம் காட்ட ஆரம்பித்துவிட்டனர். இதன் பின்னணியில் இந்திய அரசின் கூலி சுரேஷ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் கப்ப அரசியல் நடத்திய சித்தார்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற வாக்குவங்கி அரசியல்வாதிகள் மக்களை எழுக தமிழா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக் கோருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழரசுக் கட்சியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இணைந்து அழைப்புவிடுத்துள்ளது.

மக்களை அணிதிரட்டுவது தொடர்பாகவோ அதனை எதிர்காலத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியாக கட்டியெழுப்புவது தொடர்பாகவோ இந்த வாக்குவங்கி வியாபாரிகள் சிந்திக்கவில்லை. முன்னை நாள் மகிந்த ராஜபக்சவின் செயலாளரும், மண்டையன் குழுத் தலைவருமான இந்திய அரசின் கைக்கூலி சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மக்கள் மீது ‘பற்று’ ஏற்படுவது ஆபத்தானது.

இலங்கை அரசு பேரினவாதத்தைப் பேணுவதற்கும் அதனூடான அச்சம் கலந்த சிறுபான்மைத் தேசிய இனங்களது சமூகத்தை உருவாக்குவதற்கும் தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கிவருகிறது.

ராஜபக்ச விழுத்தப்படுவதற்கு முன்பதாக அமெரிக்காவின் எம்.ஐ.ரி பல்கலைக் கழகத்தில் அமெரிக்க அரசினால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது என பயிற்சியைப் பெற்றுகொண்ட ரனில், நேற்று அமெரிக்க அரசின் துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.

இப் பேச்சுவார்த்தையில் இந்துசமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சுக்கள் முக்கிட இடம் வகித்ததாகக் கூறப்படுகின்றது.

இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு எதிராகவும் அவற்றின் ஆதரவில் இயங்கும் இலங்கை அரசிற்கு எதிராகவும் தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களின் பெரும்பகுதியினரையும் இணைத்து இலங்கை அரசைப் பலவீனப்படுத்தும் அத்தனை சாத்தியங்களும் காணப்பட்டும், குடா நாட்டினுள் தமது வாக்குப் பொறுக்கும் எல்லைக்குள் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் முழக்கங்களோடு இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல.

இன்று புதிய அரசியல் தலைமையின் தோற்றமே இலங்கை அரசைற்கும் அதன் பின்னணியில் இயங்கும் ஏகாதிபத்தித்திற்கும் எதிரான மக்கள் போராட்டத்தை வழி நடத்தும் வலிமைகொண்டதாக அமையும்.

MIT இல் ரனில்