முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.
பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:
முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”
என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.
இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.
மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.
ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.
இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.
இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.
கந்த புராணத்தின் முரண்கள்:
கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).
முருக வழிபாட்டின் இன்றைய நிலை:
பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை
அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.
முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:
இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.
துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)
Very thought provoking article.
One small issue with the article: I believe different cultures have different definitions for God. it is the Christian influence which brings the definition that God is the creator & protector of the universe, Almighty (or with supreme power) and author of all. If you read the bible you can clearly see it. That is what reflected in Oxford dictionary. So driving from that definition is an issue.
However, according to Hinduism the definition is quite complex. There is no evidence of creation. There are multiple gods. they do fight with each other; sometimes they got cheated by each other and by lesser beings too (for example Sivaperuman was running to safeguard himself from his devotees in the story of Iyappan)
According to Hinduism all gods (except Siva?) have beginning and end…
Since Hinduism is a collection of many religions, they have their own conflicts too.
I think the phrase ‘Tamil god’ comes from the belief that he was not worshiped by any one else. I too think so. But now popular Buddhism too started worshiping Murugan (like “Katharagama theyyo”)
One of the great questions they need answer is how come all cultures have something to call as god. (including tribes vanished 4000 – 5000 years ago and tribes no one reached so far in the African jungles)
The word ‘god’ reveals the following: The earliest written form of the Germanic word god comes from the 6th century Christian Codex Argenteus. The English word itself is derived from the Proto-Germanic * ǥuđan. The tamil word “Kadavul” comes after Sangam period.
அருமையான கட்டுரை. இன்னும் கொஞ்சம் விரிவாக சுப்பிரமணிய சுவாமி உருவாகினதை விவரித்திருக்கலாம்.
மற்றையது கடவுள் என்ற சொல்லே சங்க இலக்கியங்களில் கூட இல்லை,மாறாக இறைவன்,தெய்வம் என்ற சொற்களே பாவிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ் கடவுள் என்பது தவறு,மாறாக இயற்கையுடன் இணைந்த வழிபாட்டுமுறைகளே காணப்பட்டன.