கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை.. கொலையாளிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புலிகளின் கட்டாய ஆட்சேர்பின் கோரங்களின் வலியை இன்னும் எமது சமூகம் அனுபவித்துக்கொண்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கண்தாசனுக்காக இன்று கண்ணீர்வடிப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயாரில்லை. இனப்படுகொலை நடைபெற்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் மக்களைச் சாரிசாரியாகக் கொன்றொழித்த ஒரு இராணுவச் சிப்பாய் கூடத் தண்ண்டிக்கப்படவில்லை. கொலை வெறிகொண்ட ஒரு இராணுவத்தினராவது புனர் வாழ்விற்கோ விசாரணைக்கோ உட்படுத்தப்படாமல் மக்கள் மத்தியில் உலாவர விடப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணகான ஆதாரங்கள் இராணுவத்தினரக்கு எதிராகக் குவிந்து கிடக்க, இலங்கை அரசு நல்லிணக்கம் என்ற தலையங்கத்தில் நாகரீகமற்ற அருவருக்கத்தக்க அரசியல் நாடகத்தை நடத்திவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிமை அரசான ரனில் – மத்திரி கூட்டாட்சியும் நடத்தும் பேரினவாத அரசியலின் தமிழ் ஊது குழலான சுமந்திரன், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுகொண்டு சில மாதங்களுக்கு உள்ளாகவே கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையின் சூத்திரதாரிகளும், அதனை நிறைவேற்றிய கூலிகளும் சுமந்திரன் உட்பட பேரினவாத அடிவருகளால் கேள்வி கேட்கப்படாமலிருக்க, கண்ணதாசன் போன்ற சில்லரைக் குற்றவாளிகள் தமிழர்கள் என்பதால் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.