முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

tamil-director-ramமுத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

 

ஜனவரி 29 வியாழக் கிழமை

நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).

அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.

மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்)

ஈகா திரையரங்க சிக்னலில் இருந்து சிறிய சந்திற்குள் நுழைந்த பின் தலைவர்கள் தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ள வேகமாய் ஊர்வலத்தை நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.

மாலை 6 மணியளவில் கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்கு அருகில் இருந்த சாலையில் முத்துக்குமாரனின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார்.

நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.

”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.

2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.

4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.

திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.

முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.

ஜனவரி 30

வெள்ளிக் கிழமை

மெல்ல அந்த இரவு விடிந்தது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி,

தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

புரட்சிகர இளைஞர் முன்னணி

பெரியார் தி.க

தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி

மக்கள் கலை இலக்கியக் கழகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)

புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம்

போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.

ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” – திரு.பழ.நெடுமாறன்.

திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.

திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.

“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ்

”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட – திரு.திருமாவளவன்.

திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”, தலைவர்களை.

இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார். திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர். பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை.

திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார்.

”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.

”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார்.

மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.

மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.

கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.

முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.

தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.

வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.

ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.

இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .

ஜனவரி 31

சனிக்கிழமை

மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.

நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.

3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.

3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார். அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.

ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.

பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.

முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.

மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.

நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.

அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ” புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது. புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார். அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார்.

எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.

நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.

முத்துக்குமார் மன்னித்துவிடு.. சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! : வெண்மணி

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

கனகரத்தினம் கொலை முயற்சி நடைபெற்ற சில நாட்களின் பின்னதாக கணேஸ் வாத்தி கொழும்பில் பொலீசாரால் கைது செய்யப்படுகிறார்.வழமைபோல அவரும் பஸ்தியாம்பிள்ளை என்ற காவல்துறை அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருந்தோம் கணேஸ் வாத்தி கைதானது தொலைத் தொடர்புகள் அரிதான அந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

bastisampillai11978 பெப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பமாக இருக்கலாம். அப்போது தான் கணேஸ் வாத்தி கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவர் எமது மத்திய குழு உறுப்பினர் என்பது தவிர முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். வார இறுதிகளில் கொழும்பு சென்று மேலதிக வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. இதனால் எமக்கு அவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை.

கணேஸ் வாத்தி சித்திரவதைகளின் கோரத்தில் எம்மைப்பற்றி தகவல்களைச் சொல்லிவிடுகிறார். பொலிசார் எமது பலம், நாம் வைத்திருந்த ஆயுதங்கள், உறுப்பினர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்துக்கொள்கின்றனர்.

தேடப்பட்டவர்கள்,முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் மடுப் பண்ணையிலேயே வாழ்ந்தார்கள். அங்குதான் எமது முக்கிய முடிவுகளும், பிரதான தொடர்புகளும் பேணப்பட்டன.

நான் நிரந்தரமாக ஒரு குறித்த பண்ணையில் தங்குவதில்லை. பண்ணைகளின் நிர்வாகம் எனது பொறுப்பிற்கு உட்பட்டிருந்ததால் நான் நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. சந்தர்ப்பவசமாக அன்று நானும் மடுப்பண்ணையில் தங்கவேண்டியதாயிற்று.

பொழுது இன்னும் முழுதாகப் புலராத நேரம். அதிகாலை ஐந்து மணியிருக்கும். அடர்ந்த காட்டில் சேவல் கூவவில்லை. பறவைகள் மட்டும் அங்கும் இங்குமாய் சோம்பல் முறித்து மெல்லிய மொழியில் பேசிக்கொண்டன.

பண்ணையின் அமைப்பு முறை ஓரளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கூடியதாகவே அமைந்திருந்தது. மரங்களுக்கு மேலே நான்கு பேர் தங்கியிருக்கக் கூடிய வகையிலான பரண் அமைக்கப்பட்டிருந்தது. தவிர ஒரு குடிசையும் அமைத்திருந்தோம். பரணில் நானும், உமாமகேஸ்வரனும், நாகராஜாவும் உறங்கிக் கொண்டிருந்தோம். நான் அப்போது சற்று கண்விழித்திருந்தேன்.

கீழே கொட்டிலில் செல்லக்கிளி, ராகவன், நிர்மலன்,ரவி, சித்தப்பா,யோன் ஆகியோர் இருந்தனர். பரணுக்கும் கொட்டிலுக்கும் இடையே அரைக் கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. இதே வேளை அந்தக் காலை நேரத்தில் பொலீஸ் வாகனத்தில் அதன் சாரதியோடு கைது செய்யப்பட்ட கணேஸ் வாத்தியையும் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்தியாம்பிள்ளை தனது உதவியாளர்களுடன் குடிசையை நோக்கி நடந்துவருகிறார்.

அவரோடு இன்னும் இரு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். பேரம்பலம், பாலசிங்கம் ஆகிய அந்த இருவரும் கூட தமிழ் இளைஞர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறியப்பட்டவர்கள் தான்.

மூவரும் குடிசைக்கு வந்தவுடன் உறக்கத்திலிருந்த அனைவரையும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். பொலீசாரின் சந்தடியில் விழித்துக்கொண்ட அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். அதிர்ச்சியில் எழுந்த அவர்கள் பஸ்தியாம்பிள்ளை குழுவினருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.

பஸ்தியாம்பிள்ளை திறமைமிக்க அதிகாரி. அந்த நேரத்தில் தீவிரவாத அரசியலில் ஈடுப்படுள்ளவர்களின் தரவுகள் பல அவரின் மூளைக்குள்ளேயே பதியப்பட்டிருந்தது. ஆக செல்லக்கிளி போன்ற தேடப்படுகின்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என்பது எமது எல்லோரதும் ஊகம்.

அங்கிருந்த போராளிகள் தாம் வந்திருப்பது விவசாயம் செய்வதற்காகத் தான் என்று பொலீசாருக்குச் சொல்கின்றனர். அக்காலப்பகுதியில் இளைஞர்கள் காடுகளைச் சுத்திகரித்து விவசாயம் செய்வது வழமையன நிகழ்வு என்பதால் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பஸ்தியாம் பிள்ளை குழுவினர் இவர்கள் கூறியதை நம்பினார்களோ என்னவோ நம்புவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் ஏனைய பண்ணைகளுக்குச் சென்று வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் வழமையாகவே நேரத்துடன் எழுந்துவிடுவேன். அன்றும் பாதி உறக்கத்தில் என்னோடு பரணில் இருந்த உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றப்பண்ணைகளுக்குச் செல்லும் வழியில் குடிசையை நோக்கி நடக்கிறேன். அங்கு நிலைமைகள் வழமைக்கு மாறானவையாக இருப்பதை சற்று அண்மித்ததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதிகாலையில் அமைதியாக இருக்கும் பண்ணையில் ஆள் அரவமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. இவற்றை அவதானித்த நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக எண்ணி மிக அவதானமாக ஓசை படாமல் அருகே சென்ற போது அன்னியர்களின் பேச்சுக் குரல்களை அவதானிக்கின்றேன். உடனே பரணுக்குத் திரும்பிச் சென்று உமாமகேஸ்வரனையும், நாகராஜாவையும் உசார்படுத்துகிறேன்.

உறக்கம் கலைந்த அவர்கள், பரணைவிட்டு இறங்கி மூவருமாக குடிசையை நோக்கிச் செல்கிறோம்.

நாங்கள் மூவரும் மெதுவாக அடர்ந்த காட்டு வழியில் வேறு வேறு திசைகளில் சென்று குடிசையைச் சுற்றி வளைத்துக்கொள்கிறோம். நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அருகே சென்றதும் அங்கிருப்பது பொலீஸ் என்பது எமக்குத் தெரியவருகிறது. நாம் மூவரும் நகரவில்லை நடப்பதை மறைவிலிருந்தே அவதானிக்கிறோம்.
இதற்கிடையில் குடிசையிலிருந்த எம்மவர்கள் பஸ்தியாம் பிள்ளை குழுவினருடன் சாதரணமாக பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பஸ்தியாபிள்ளை குழுவினருக்கு அவர்கள் அனைவரையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கமும் இருந்தது.

பொலீஸ் அதிகாரிகளைத் தேனீர் தயாரித்து அருந்த அழைத்ததும் அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வேளையில் அங்கே இருந்த குறி சுடும் துப்பாக்கியைக் கண்ட பஸ்தியாம்பிள்ளை அது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார். யானைகள் அதிகமான காடு என்பதால் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறோம் எனக் கூறி எம்மவர்கள் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர்.

தேனிர் தயாரித்தாயிற்று. குடிசையைச் சூழ மரக் குற்றிகள் இருந்தன. அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறியபடியே தேனீர் அருந்துகின்றனர்.

பரணிலிருந்து இறங்கிவந்து குடிசையைச் சுற்றி மறைவிடங்களிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த எமக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்துக் குழப்பமடைந்திருந்தோம்.

மரக் குற்றிகளில் அமர்ந்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை கொண்டு வந்திருந்த இயந்திரத் துப்பாகியை தனக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். எம்மில் அனைவரும் இயந்திரத் துப்பாக்கி பற்றி அறிந்திருந்தோம் ஆனால் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கியக் கைப்பற்றினால் தப்பித்துவிடலாம் என அங்கிருந்த எம்மவர் மௌனமாகத் திட்டமிட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் பொலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் திட்டமிடுகிறார்கள்.

இவ்வேளையில் பேரம்பலம் முகம் கழுவிக்கொள்ள கிணற்றுக்கு அருகே அழைத்துச் செல்லப்படுகிறார். கிணறும் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் குடிசைக்கு மறைவாகவே இருந்தது.

யோனும், சித்தப்பாவும் பேரம்பலத்தைக் கிணற்றிற்குக் கூட்டிச் செல்கின்றனர். அவர் போக மற்றைய இருவரும் இன்னும் உரையாடலில் இருந்தனர். ஆக இரண்டு பொலீசார் நான்கு போராளிகள் அங்கு எஞ்சியிருந்தனர்.

நாகராஜாவும் தொலைவிலிருந்தே என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக்கொண்டதால் குறிசுடும் துப்பாகியோடு குடிசையை மேலும் அண்மிக்கிறார்.

இவ்வேளையில் தான் திகில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரவி பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரத்துப்பாகியை எடுத்துவிடுகிறார். பதட்டம் பரபப்பு எல்லாம் ஒருங்கு சேர ரவிக்கு அதனை இயக்கத் தெரியவில்லை. அங்கும் இங்குமாக பல தடவை இயக்குவதற்கு முனைகிறார்.

ரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.

இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.

ரவி இயந்திரத் துப்பாகியை இயக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் விரைந்து செய்ற்பட்ட செல்லக்கிளி பஸ்தியாம் பிள்ளையின் தலையில் குறிசுடும் துப்பாக்கியால் அடித்துவிடுகிறார். அடிவிழுந்ததும் பஸ்தியாம்பிள்ளை நினைவு குலைந்த நிலையிலேயே ராகவனோடு கட்டிப்புரழ்கிறார்.

இது நடந்துகொண்டிருந்த வேளையில் பேரம்பலம் என்பவர் கிணற்றுக்கு முகம்கழுவச் சென்றவரை அவரோடு சென்ற யோனும் சித்தப்பாவும் கிணற்றுகுள் தள்ளிவிடுகின்றனர். இவ்வேளை ஒரு எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்தது. அவரைத் தள்ளி விழுத்தும் போது யோனும் சேர்ந்து கிணற்றினுள் விழுந்துவிடுகிறார். அதிஷ்டவசமாக யோனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் நீந்திக்கொண்டிருக்க பேரம்பலம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டுருந்தார்.

அனைத்துமே திகில் நிறைந்த திரைப்பட்ம் போல் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துள் அனைத்தும் தலை கீழ் நிகழ்வுகளாகிவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே எம்மவர்கள் யாரும் சரணடைவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ தயாராக இருக்கவில்லை. இறுதிவரை போராடுவதாகவே தீர்மானித்திருந்தனர்.

ரவியிடமிருந்து இயந்திரத் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட செல்லக்கிளி சில கணங்களுள் அதனை எவ்வாறு இயக்குவது என்று கற்றுக்கொள்கிறார். உற்சாகமாகிவிட்ட அவர் விழுந்துகிடந்த பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுக்கொல்கிறார். உடனடியாகவே கிணறு இருந்த திசையை நோக்கி ஓடிய செல்லக்கிளி அங்கு கிணற்றினுள் தத்தளித்துக் கொண்டிருந்த பேரம்பலத்தையும் சுட்டுக்கொல்கிறார்.

மூன்று பொலீசாரும் திகில் நிறைந்த சில கண நேரத்துள் மரணித்து விடுகின்றனர்.

ஆர்ப்பாட்டமில்லாத இராணுவ வெற்றி நிலைநாட்டப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் எங்கிருந்தாலும் பஸ்தியாம்பிள்ளையை அறிந்திருந்தனர். இலங்கையில் இருதயப்பகுதியில்,பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்த கனகரத்தினம் கொலை முயற்சி ஜெயவர்தன அரசை உலுக்கியிருந்ததது.

அதன் பின்னர் இலங்கையின் உளவுத்துறையில் பஸ்தியாம்பிள்ளையின் செல்வாக்கு உச்சமடைந்திருந்தது. அவர் இப்போது எமது குடிசைக்கு முன்னால் உயிரற்ற உடலாக… எல்லாம் ஒரு கனவுபோல நடந்து முடிந்தது.

செல்லக்கிளி ஒரு உணர்ச்சிப் பிழம்புபோல. எதையும் உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் ஈடுபாட்டோடு செய்யவல்லவர். இயந்திரத் துப்பாக்கியை இயக்கி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டதும் உரத்த குரலில் ‘வாழ்க தமிழீழம்’ எனச் சத்தமிட்டது காடுமுழுவதும் மறுபடி மறுபடி எதிரொலித்தது. செல்லக்கிளியின் குதூகலத்தோடு மறைந்திருந்த நான்,உமாமகேஸ்வரன். நாகராஜா ஆகியோரும் கலந்து கொள்கிறோம். எம்மையே எம்மால் நம்ப முடியவில்லை. இளைஞர்களுக்கும், தமிழ்த் தேசியக் குரலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த பஸ்தியாம் பிள்ளையை அவரது துப்பாக்கியாலேயே சுட்டுக் கொலை செய்த சம்பவம் எமக்கெல்லாம் ஒரு பெரும் சாதனை.

07ம் திகதி ஏப்பிரல் மாதம் 1978 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பல குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன.

அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்தப் பலமான இராணுவத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கொலைகள் ஒரு மைற்கல்லாகவே எமக்குத் தெரிந்தன.
அன்று மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை. எத்தனை மனித் உயிர்கள் எத்தனை இராணுவ வெற்றிகள் !

இதன் பின்னர்தான் இவர்கள் வந்த வாகனம் பற்றியும் அதில் வேறு யராவது இருக்கலாம் என்ற நினைவும் வருகிறது.செல்லகிளியும் வேறு இருவரும் பாதை வழியே பதுங்கியபடி செல்கின்றனர். இவர்கள் காரை நோக்கி ஒடிச்செல்லும் போது சாரதி காரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கி ஓட முனைகிறார். அவரை சிறிது தூரம் துரத்திச் சென்ற செல்லக்கிளி இறுதியில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்.

சிறிவெர்தன என்ற அந்தச் சாரதியைக் கொலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மாற்றும் இருக்கவில்லை. அவர் அங்கேயே கொலை செய்யப்படுகிறார்.

கொலைகளின் பின்னால்,அது எந்த வடிவில் அமைந்திருந்தாலும்,தனிமனித வக்கிர உணர்வுகள் மட்டும் தான் காரணம் என்பது வரட்டுத்தனமான வாதம். அதன் பின்புலமாக அமைந்த அரசியல் தான் மாற்று வழிமுறையற்ற கொலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது. நாம் மக்கள் என்ற கடலில் மீன்கள் போல வாழ்ந்த கெரில்லாப் போராளிகளல்ல, மக்களிலிருந்து அன்னியமாக வாழ்ந்த வெறும் தலைமறைவுப் போராளிகள் தான்.

நிலைமையை புரிந்துகொண்ட கணேஸ் வாத்தி கையை மேலே தூக்கிக் கொண்டு இறங்கி வருகிறார். பின் அவரையும் ஏற்றிக் கொண்டு குடிசையை நோக்கி வாகனத்தை செல்லக்கிளி ஓட்டி வருகிறார்.

எமக்கு அதன் பின்னர்தான் இவை அனைத்துமே கணேஸ் வாத்தி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தான் நிகழ்ந்தது என்பது தெரியவருகிறது. அதிர்ச்சிக்கு மேலாக அனைவருக்கும் அவர் மீதான ஆத்திர உணர்வு மேலிடுகிறது. அப்போது ராகவன் கணேஸ் வாத்தியைச் சுடவேண்டும் என்று துரத்திக்கொண்டு வரும் போது கணேஸ் வாத்தி எனக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்கிறார். நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்படியிருந்தும் ராகவன் ரவி ஆகியோர் அவரை தாக்கிவிட்டார்கள். கணேஸ் வாத்தியோ எனக்குப்பின்னால் ஒரு குழந்தை போல பயத்தில் பதுங்கிக் கொண்டார்.
இப்போது சூடு பட்டடதில் நிர்மலனுக்கு கையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முதலில் நாம் அனைவரும் அங்கிருந்து தப்பித்துகொள்ள வேண்டும். அதுதான் எமது அடுத்த திட்டம். எங்கே போவது என்பதெல்லாம் பின்னர் முடிவெடுக்க வேண்டும் ஆனால் தப்பித்தாக வேண்டும்.அது தான் பிரதான நோக்கம்.

கிணற்றினுள் இறந்து கிடந்த பேரம்பலத்தை வெளியே எடுத்து எரிப்பதற்கு எமக்கு நேரமிருக்கவில்லை. அவரை அப்படியே விட்டுவிடுகிறோம். பாலசிங்கத்தினதும் பஸ்தியாம் பிள்ளையினதும் உடல்களைத் தூக்கி குடிசைக்குள் போட்டுவிட்டு, கிடைத்த காய்ந்த மரங்களையும் சருகுகளையும் அவற்றின் மீது போட்டுவிட்டு தீவைத்து விடுகிறோம்.

அவ்வேளையில் அங்கே தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சைக்கிள் போன்றன இருந்தன. அவற்றையும் அங்கேயே வைத்து எரிக்கிறோம்.
ஆக, தடயங்களையும் உடல்களையும் அழிப்பதற்கான வேலையை ஓரளவு செய்து முடித்து விடுகிறோம்.

இப்போது எவ்வளவு விரைவாகத் தப்பிச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் என்பது தான் அடுத்த நோக்கம். அதற்கு முன்பதாக நிர்மலனின் கையிலிருந்து இரத்தப்பெருக்கு அதிகமாக, அவரை மன்னாருக்குக் கூட்டிச் சென்று சிகிச்சையளிப்பது என்பதும் முடிவாகிறது. அப்போது எமக்கு பொலிசார் வந்த கார் கைவசம் இருந்ததால் அதே காரில் மன்னாரை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, நாகராஜாவும், ராகவனும், நிர்மலனும் செல்ல செல்லக்கிளி காரைச் செலுத்துகிறார். அவர் ஒரு திறமையான வாகன ஓட்டுனரும் கூட.

மன்னாருக்குச் சென்று அங்கிருந்த தெரிந்த வைத்தியரின் உதவியோடு நிர்மலனுக்கு மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ராகவனும்,நிர்மலனும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

செல்லக்கிளி திரும்பி வந்து சேர்வதற்குள் நாங்கள் எம்மால் முடிந்த அளவிற்குத் தடயங்களை அழித்துவிட்டோம். அந்த இடைவெளியில் கணேஸ் வாத்திக்கு மரண தண்டனை வழங்குவதில்லை எனவும் முடிவெடுக்கிறோம். ஆனாலும் அவர் தொடர்ந்தும் இயக்கத்தில் இணைந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை எனவும் கூடவே மற்;றொரு முடிவையும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தே மேற்கொள்கிறோம்.

பின்னர் முகாமிலிருந்து புறப்பட்ட அனைவரும் வவுனியா வரை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் பயன்படுத்திய காரிலேயே வருகிறோம். செல்லக்கிளி தான் காரின் சாரதி. எங்களை எல்லாம் பொலீசார் எப்போதும் கைது செய்யலாம், சித்திரவதைக்கு உட்படலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் பொலீஸ் வாகனமொன்றில் முழுச் சுதந்திரத்தோடு பிரயாணம் செய்வோம் என நாம் எதிர்பார்த்ததில்லை.
எல்லோரும் வெற்றியின் பெருமிதத்தில் இருந்தோம். கணேஸ் வாத்தியைத் தவிர. கணேஸ் வாத்தியை வவுனியாவில் இறக்கிவிட்டு இனிமேல் இயக்கத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அவர் அங்கு இறங்கி எம்மோடு எதுவும் பேசாமலே சென்றுவிடுகிறார்.

இன்று உச்சமடைந்திருக்கும் இனப்படுகொலையின் கோரம் அப்போதும் பண்பியல் மாற்றமின்றி இருந்தது. அப்போது கூட நட்பு சக்திகளுக்கும், எதிரிகளுக்கும் இடையேயான இடைவெளி கூட மிக நெருக்கமானதாகத் தான் இருந்தது. சில மணி நேரங்களில் கணேஸ் வாத்தி என்ற மத்திய குழு உறுப்பினர் துரோகியாகிப் போய் மயிரிழையில் உயிர் பிழைத்த நிகழ்வு, ஆயுதப் போராட்டத்தில் ஆய்வுகளினதும் அரசியலினதும் தேவையை உணர்த்தி நிற்கிறது.

எம்மால் உருவாக்கப்பட்ட துரோகிகளை அழிக்கும் செயன்முறை மறுபடி மறுபடி வேறு வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் போராட்டங்களிலெல்லாம் நீதிக்கும் தீர்ப்பு வழங்கலுக்கும் புதிய வடிவங்களைக் காண்கிறோம். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தும் அவற்றின் நடைமுறை குறித்தும் நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. தனிமனிதர்களின் முடிவுகளே தீர்ப்புகளாயிருந்தன. அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனர். புலிகளுக்கு மட்டுமல்ல சிறுகச் சிறுக ஈழத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உருவான இயக்கங்கள் அனைத்திற்கு இது பொருந்தும்
கணேஸ் வாத்தியை கொலை செய்வதற்கு என்னோடு இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் உமாமகேஸ்வரனும் ஒருவர். அவர் மற்றவர்களோடு வாத்தியை மன்னித்து விடவேண்டும் என்று விவாதித்தார்.

இந்தச் சம்பவங்கள் எதுவுமே பிரபாகரனுக்குத் தெரியாது. அவர் அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

இப்போது எனது வேலைகள் கடினமானவையாக அமைகின்றன. நான் ஏனைய பண்ணைகளுக்குச் செல்லவேண்டும். அவர்களின் இடங்களை மாற்ற வேண்டும். இலங்கை அரசின் உளவுப்படை அவை குறித்தெல்லாம் தகவல்கள் வைத்திருக்கின்றனவா என்பதெல்லாம் எமக்கு உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆக, நான் பண்ணைகளை மீழமைப்புச் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன்.

இதனால் நான் புளியங்குளம் பண்ணைக்கு அருகாமையில் இறங்கிக் கொள்கிறேன். ரவி, நாகராஜா போன்றோர் ஏனைய பண்ணைகளை நோக்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க விரைகிறார்கள்.

உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் முறிகண்டிக் காட்டினுள் சென்று காரை எரித்துவிட்டு கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கியையும் மறைத்து வைத்துவிட்டு பிரபாகரனிடம் தகவல் சொல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறார்கள் .எல்லாவற்றிற்கும் மேலாக ஆயுதங்கள் மட்டுமே விடுதலை பெற்றுத்தரும் என முழுமையாக நம்பியிருந்த எம் வசம் இப்போது ஒரு இயந்திரத் துப்பாக்கி இருக்கிறது. போராட்டம் என்பது அடுத்த நிலையை நோக்கி வளர்ச்சியடைந்து விட்டதான பிரமையில் அனைவரும் உற்சாகத்திலிருக்க அந்த மக்ழ்ச்சியைப் பிரபாகரனோடு பகிர்ந்துகொள்ள உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர்.

இன்னும் வரும்…

 ———————————————————————————————–

இன்னும் சிலரின் இனிய நினைவுகள்..

நந்தன் : வடமராட்சியைச் சேர்ந்த இவர். அரசியல் ஆர்வம்மிக்க ஒரு போராளி.மார்க்சிய,லெனிய, மாவோயிசக் கருத்துக்களோடு பரிட்சயமான நந்தன்,மனோ மாஸ்டரோடு காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவார். ஏனைய போராளிகளோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்த நந்தன் அதிகமாகப் புத்தகங்களையும் அரசியல் தேடலையும் நேசித்தவர். பின்னாளில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)யின் மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்தவர்.

டானியல்: கிழக்கைச் சேர்ந்த இவர், உற்சாகமான உணர்வுபூர்வமான போராளி. கிழக்கின் கோரமான இராணுவ ஒடுக்குமுறை இவர்களின் உணர்வுகளில் தேசிய இரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. மிக நிதானமான பண்பு கொண்ட இவர், நேர்மையானவரும் கூட. டானியல் கிழக்குப் பண்ணைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

பொன்னம்மான் : யோகரத்தினம் குகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கலட்டி என்ற யாழ்ப்பாணப் புறநகர்ப்பகுதியைச் சேர்ந்தவர். இராணுவத் தாக்குதல் தயாரிப்புச் சம்பவம் ஒன்றில் மரணித்துப் போன பொன்னம்மான், பண்ணைகளில் வாழ்ந்திராவிட்டாலும், யாழ்ப்பாணத்திலிருந்தே பல முக்கிய பணிகளில் ஈடுபட்டார். உயர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இவர், உறுதிமிக்க போராளி. பின்னாளில் இவரின் சகோதரரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்டார். பொன்னம்மான் யாழ்ப்பாணப்பகுதியில் பல தொடர்புகளைப் பேணுவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.

கே.பீ : இன்று இலங்கையிலிருக்கும் இவர், எம்மிடம் முதலில் இருந்த விசைப்படகுக்குப் பொறுப்பாக இருந்தார். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் வேளையிலேயே இயக்கப் பணிகளையும் மேற்கொண்டார்.

லாலா ரஞ்சன் : ஞானேந்திரமோகன் கனகநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஞ்சன், பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் போராளி. இராணுவப் பயிற்சிகளிலும் பண்ணை வேலைகளிலும் ஆர்வமுடைய இவர் இலங்கை அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 1984 ஆம் ஆண்டு தொண்டமனாறில் கொலை செய்யப்பட்டார்.

அன்ரன்: இன்னுமொரு பல்கலைக்கழக மாணவன். எம்மோடு உறுதியான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான போர்க்குணம் மிக்க போராளி.

கணேஸ் வாத்தி : எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே புலிகளில் பங்களித்த போராளி. பகுதி நேரமாக மட்டும் தான் எம்மோடு இணைந்திருந்தார். பண்ணைகளை உருவாக்கத்தில், அதன் ஆரம்பப் பணிகளில் பங்களித்தவர்.

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

அவர்கள் வரித்துக்கொண்ட வழியும்இ புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை.

ஒரு புறத்தில் இலங்கை அரசின் பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை அத்தனை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரையும் பாதித்தது. இன்று உருவாகியிருப்பது போல் அந்த ஒடுக்குமுறை வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஒடுக்குமுறையாக இல்லாதிருப்பினும் அதன் நச்சுவேர்கள் அனைத்துத் தளத்திலும் பரந்திருந்தது. பண்பாடு,கலாச்சாரம், கல்வி, சமூக உறவு, அரசியல்,பொருளாதாரம் என்ற அனைத்து சமூகம் சார்ந்த அம்சங்களுள்ளும் பேரினவாதம் புகுந்து கோரத் தாண்டவமாடியது.

இலங்கை என்ற குட்டித் தீவு தமிழ்ப் பேசுகின்ற சிறுபான்மையினர் வாழ முடியாத நிலப் பகுதி என்பதை பெருந்தேசிய வாதிகள் தமது துப்பாக்கிகளை உயரே தூக்கிக் குரல் கொடுத்த போது சிரம் தாழ்த்தியவர்களா இவர்கள்? நாமும் வாழ்ந்து காட்டவேண்டிய நமது சொந்த நிலம் என தன்னம்பிக்கையோடு முன்வந்தவர்கள்.

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் இனிவரும் பதிவுகள் எங்கும் குறிப்பான சந்தர்ப்பங்களில் வெளிவருமாயினும் அவர்கள் தொடர்பான ஆரம்பக் குறிப்புகளைச் சுருக்கமாக தருகிறேன்.

பிரபாகரன் : துரையப்பா கொலைச் சம்பவத்திலிருந்து எமக்கெல்லாம் ஒரு கதாநாயகன் போன்று உருவாகியிருந்த பிரபாகரன் தனது பதினேழாவது வயதுமுதல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகள், சரணடைவுகள் இன்றிப் போராட வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்டிருந்த இவர் தூய இராணுவ வழிமுறைக்கு அப்பால் எதையும் சிந்திததில்லை. சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது.

இராணுவ நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார். ஆங்கில நூல்களைக் கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஊடாக வாசித்து அறிந்து கொள்வார். ஆயுதங்களைக் கையாள்வதில் திறமைபெற்றவர். தாக்குதல் சம்வங்கள் நிகழும் போது துணிகரமாகச் செயற்படுபவர். உமாமகேஸ்வரன் தலைவராக இருந்த வேளையிலும் கூட முடிவுகளை முன்வைக்கும் தலைமைத்துவம் பிரபாகரனிடமே இருந்தது. அனைத்தையுமே இராணுவ ஒழுக்கப் பிரச்சனையாக முன்வைக்கும் பிரபாகரன் இவ்வெhழுக்க முறைகளை மீறுவோரை துரோகிகளாகக் கருதினார். இராணுவ ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள். தனது சொந்த நலனுக்கான அழிப்பு என்பதைவிட இராணுவ ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான செயலாகத் தான் இவற்றைக் கருத முடியும். முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த பிரபாகரன் அரசியல் வழிமுறைகள், மக்கள் அமைப்புக்கள், வெகுஜன முன்னணி போன்ற எந்த வழிமுறைகள் ஊடாகவும் போராட்டத்தை உருவமைப்பது குறித்துச் சிந்தித்ததில்லை.

பிரபாகரனின் இலகுவான சமன்பாடு என்பது தமிழ் மக்கள் இராணுவ ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள் பலமான ஒழுக்கமான இராணுவத்தைக் கட்டமைத்து மட்டுமே விடுதலையடைய முடியும் என்ற வரையறைக்குள்ளே அமைந்தது.

செல்லக்கிளி: செல்லக்கிளி ஒரு நல்ல உழைப்பாளி. மத்தியதர வர்க்கத்தின் கீழணியைச் சார்ந்த இவர் உடலுழைப்பில் உறுதிவாய்ந்தவர். ஆயுதங்களைக் கையாள்வதில் மிகத்திறமையானவர். பெருமளவில் படித்திராத செல்லக்கிளி ஆயுதங்கள் தொடர்பான நல்ல அறிவைப் பெற்றிருந்தார்.வேட்டையாடும் திறமை கொண்ட செல்லக்கிளி செட்டியின் உறவினராவார். குறும்புத்தனம் மிக்கவர். எம்மத்தியில் இருந்தவர்களுள் பிரபாகரனை ஒருமையில் அழைப்பவர் செல்லக்கிளி ஒருவர்மட்டுமே. சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்துகொண்டாலும் செல்லக்கிளி மீது அனைவரும் அன்பு வைத்திருந்தோம். உரம்மிக்க இன்னொரு போராளி. கல்வியங்காடு இவரது சொந்த இடமாயினும் உடையார்கட்டிலேயே தோட்டம் செய்து வாழ்ந்தவர் செல்லக்கிளி. இலங்கை அரச படைகளுக்கு எதிரான தாக்குதலின் போது 1983 ஆம் ஆண்டு யுலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் மரணமடைந்தார். இவரது மரணம் தொடர்பாக வேறுபட்ட குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.

பேபி சுப்பிரமணியம்: தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து அரசியலுக்கு வந்தவர். புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவர். தீவிர எம்.ஜீ.ஆர் ரசிகன். இயக்கம் பிளவுப்பட்ட காலத்தில் கூட பிரபாகரனோடு இருந்தவர். மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளைச் சேர்ந்த இவர் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

குலம்: குலம் எனது பால்ய நண்பனும் எனது ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் ஆரம்ப்பத்திலிருந்தே எம்மோடு பங்களித்தவர். அவ்ரோ விமானக் குண்டு வெடிப்பின் பின்னர் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். மிக நேர்மையான போராளி.இன்றும் கூட இயக்கத்திற்காக கடனாளியாகிப் போன ஒருவர் இவராகத் தான் இருக்கமுடியும். இன்றுவரை தனக்காக எதையுமே சேர்த்துக்கொள்ளாத அர்ப்பண உணர்வு மிக்கவர். தன்னை முழுமையாக இயக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்தவர். மத்தியதர வர்க்க குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இயக்கத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று ஆரம்பத்தில் மேற்கொண்ட முடிவிற்கு இணங்க இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்த கொள்கைப் பிடிப்பாளன். பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட போது கூட கடுமையாக விமர்சித்தவர். உறுதிமிக்க போராளி. ஏனையோருக்கும் நம்பிக்கை தரவல்ல மனோவலிமையுள்ளவர்.

நாகராஜா: காங்கேசந்துறையைச் சேர்ந்தவர். துரையப்பா கொலை மேற்கொள்ளப்பட்ட வேளையில் இவரது ரியூசன் நிலையத்திலேயே பிரபாகரன் உள்பட பலரும் தங்கியிருந்தனர். அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் மிகுந்த இராணுவ அடக்குமுறைகளின் மத்தியில் மேற்கொண்ட நாகராஜா உற்சாகமான போராளி. மத்தியதர வர்க்கக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நாகராஜா பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை பார்தவர். பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பியவர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தவர் நாகராஜா. வீ.பொன்னம்பலம் என்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் பின்னாளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டவருடைய அனுதாபி ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமுடையவாராயிருந்தார். தந்தையற்ற குடும்பத்தைச் சார்ந்த இவரின் உழைப்பிலேயே முழுக்குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய நிலையிலிருந்தாலும் போராட்ட உணர்வோடு எம்முடன் தீவிரமாக உழைத்தவர்.

விச்சு : லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்து கொண்டவர். எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் பேசத்தெரிந்த போராளிகளுள் இவரும் ஒருவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னதாக லண்டனிலிருந்து செயற்பட்ட சார்ல்ஸ் போன்றோரின் கருத்துக்களோடு உடன்பாடுகொண்டு இயக்கச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டவர்.

ராகவன்: ஆரம்ப காலத்திலிருந்தே புலிகளோடு தொடர்பு நிலையிலும். உறுப்பினராகவும். தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்தவர். காலத்திற்குக் காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்து பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்த இவர் மிகுந்த மனிதாபிமானி. மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் எனது ஊரைச் சேர்ந்தவர். முதலில் பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். என்னோடு இவரும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் இவர் கல்விகற்றுக்கொண்டிருந்தார்.

ஜோன் என்ற சற்குணா : வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் பிரபாகரனின் தூரத்து உறவினர். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். புளியம் குளம் பண்ணை இருந்த இடம் இவருக்குச் சொந்தமானதே. அரசியல் ரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் என்பதை விட ஆரம்பத்தில் பிரபாகரனின் தனிப்பட்ட தொடர்புகளூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்திலிருந்து பண்ணைகளில் தன்னை அர்ப்பணித்து வேலைசெய்த இவர் மிகவும் உறுதியான போராளி.

கறுப்பி என்ற நிர்மலன்: முதல் முதலில் பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்காக நான் பலருக்காகக் காத்திருந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்த ஒரே ஒருவர் நிர்மலன் தான். சற்றுக் கருமை நிறம் உடையவராதலால் செல்லக்கிளி தான் இவருக்குக் கறுப்பி என்று பெயர்வைக்கிறார். யாழ்ப்பாண நகரத்தைச் சேர்ந்த நிர்மலன் மிகுந்த விழிம்புனிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பேரவையுடன் முன்னதாக இவருக்குத் தொடர்புகள் இருந்தது. அர்ப்பண உணர்வுமிக்க போராளி இவர். இன்று வாழ்விழந்து பரிதாபகரமான நிலையிலிருப்பவர்களுள் இவரும் ஒருவர்.

சித்தப்பா : லொறி ஒன்றில் சாரதியின் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னதாக இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே எம்மோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்தவர். பற்குணம் ஊடாக பிரபாகரனிற்கு பழக்கமானவர். அவரூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பற்குணம் கொலையுண்ட செய்தி இவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சுதுமலையைச் சேர்ந்த இவர் அன்னிய நாடொன்றில் இப்போது வாழ்கிறார். பெரிதாக எழுத வாசிக்கத் தெரியாதவராயினும் கிளித்தட்டு விளையாட்டில் மிகத் திறமை வாய்ந்தவர். தொலைக் கிராமங்களில் இருந்து கூடக் கிளித் தட்டு விளையாட்டிற்காக இவரைத் தேடி வந்து அழைப்பவர்கள பலர்.

தங்கா : கூட்டணியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளராக இருந்து இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கூட்டணியின் மிக முக்கிய உறுப்பினரின் சகோதரர் இயக்கம் பெரிதாகிச் சுய செயற்பாடுகள் அதிகரிக்க இயக்கத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

நிர்மலன். சித்தப்பா. சற்குணா போன்ற மூவரினதும் பங்கும் அர்ப்பணிப்பும் இன்றும் எனது எண்ணங்களைத் துரத்துகிறது. பண்ணைகளில் இருண்ட காடுகளின் மத்தியில் தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். கொடிய வன விலங்குகள் தனிமை வறுமை அனைத்துக்கும் மத்தியில் போராட்ட உணர்வோடு உறுதியாக வாழ்ந்திருக்கிறார்கள். சுகாதாரம் மருத்துவம் போன்ற வசதிகளின்றி பல நாட்கள் நோயால் வாடியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தால் போராட்டத்தை வழிநடத்தும் பெரும் தலைவர்களாகியிருக்க முடியும்.

மாணவர்பேரவை தீவிரமாக உருவான வேளையில் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்தவர்கள் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஆங்கிலம் பேசும் கனவான்கள் என்று ஒரு பெரிய கல்விகற்ற இளைஞர் கூட்டமே பங்களித்திருந்தது.

அவர்களின் சட்டரீதியான உணர்ச்சிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட போது இந்தப் படித்த இளைஞர்கள் எவரையுமே காண முடிவதில்லை. தான் தனது குடும்பம் தாம் சார்ந்த சமூகமும் அதன் மத்தியிலான அந்தஸ்து என்ற சமூக வரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

சற்குணா. நிர்மலன். சித்தப்பா போன்ற இளைஞர்கள் தமது ஒவ்வொரு அசைவையும் இளைஞர் பேரவையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாக்கிய உணர்ச்சித் தீக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

பண்ணைகள் பெருகி இயக்கம் ஓர் அமைப்பு வடிவை தகவமைத்துக் கொண்ட வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான தொடர்பு முற்றாகவே அற்றுப் போயிருந்தது.

பாலா : உரும்பிராயைச் சேர்ந்த இவர் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக சிறிய கடை ஒன்றை வைத்திருந்தவர். கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். உரும்பிராய் கொலைச் சம்பவத்தின் பின்னர் எம்மோடு முழுமையாக இணைந்து கொண்டவர்.

உமாமகேஸ்வரன் : தெல்லிப்ப்ளையைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுள் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த மிகச் சிலருள் இவரும் ஒருவர். நேர்மை மிக்க இவர் தாக்குதல்களில் முன்நிற்கும் துணிச்சல் நிறைந்த போராளி. நில அளவையாளராகச் தொழில் பார்த்துக்கொண்டிருந்த உமாமகேஸ்வரன்இ தனது தேசிய அரசியலிலான ஆர்வத்தையும் செயற்பாட்டையும் மாணவனாக இருந்த காலப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார். தமிழ்ப் புதிய புலிகளாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் எம்மோடு இணைந்து கொண்ட உமாமகேஸ்வரன்இ இதற்கு முன்னதாக அகதிகளுக்கு உதவும் மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். புலிகளில் இணைந்து கொண்ட சில காலங்களிலேயே பிரபாகரனின் சிபார்சின் அடிப்படையில் மத்திய குழுவில் அமைப்பின் தலைவராகத் தெரிவுசெய்யப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சாந்தன் : கொழும்பில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டவர் படித்த மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர் இவர். இயல்பாக ஆங்கிலம் பேசக் கூடிய இவர் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்கள் குறித்த ஆங்கிலப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைமைப் பண்புடைய ஒருவர். ஓரளவிற்கு வசதியான நகர்புறக் குடும்பச் சூழலிலிருந்து எம்மோடு இணைந்து கொண்ட சாந்தன் பண்ணை வாழ்க்கைக்காக எப்போதுமே முகம் சுழித்ததில்லை. அனைவரோடும் உணர்ச்சிவயப்படாமல் அன்போடு பழகும் தன்மை படைத்தவர்.
எமது காலை உணவு மிளகாய்த் தூளோடு பிசையப்பட்ட தேங்காய்த் துருவலும் பாண் துண்டுகளும் மட்டும் தான். இதுவே பல மத்தியதர வர்க்க இளைஞர்களுக்குக் கசப்பான அனுபவமாக அமைந்திருந்தது. அதுவும் தட்டுப்பாடாகும் நாட்களும் இருந்ததுண்டு. சாந்தன் இந்த உணவை எந்ததத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார். மிகுந்த மனிதாபிமானி. அவ்ரோ விமானக்குண்டு வெடிப்பின் போது சிங்கள மக்கள் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று ராகவன் என்னோடு சேர்ந்து சாந்தனும் எதிர்த்தரர்.

குமணன் என்ற குணரத்தினம் : கோண்டாவிலைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிர்வாகத் திறனும் அர்ப்பணமும் மிக்க ஒரு போராளி. பண்ணைகளுக்குச் சென்றுவருதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் எனக்கு உதவியாகச் செயற்பட்டார். கோண்டாவிலில் பிரபாகரனுடைய தொடர்பாளர் ஒருவரின் ஊடாக இயகத்தில் இணைந்து கொண்டவர். இயக்கத்தில் இணைவதற்கு முன்னர் கல்விகற்றுக்கொண்டிருந்தவர்.

திருகோணமலைத் தொடர்புகளைக் கையாண்டவ்ர் குமணன் தான். திருகோணமலையில் பயஸ் மாஸ்டர் என்ற இடது சாரித் தத்துவங்களோடு ஈடுபாடுகொண்ட ஒருவரோடு குமணனுக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. திருகோணமலையில் இருந்தவர்களுக்கு பயஸ்மாஸ்டர் தனது தத்துவார்த்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். புலிகள் பிளவுற்ற வேளையில் புதிய பாதையில் பிரதான பாத்திரம் வகித்தவர். குமணன் பாத்திரம் குறித்த தனியான பகுதியில் இவர் குறித்து மேலும் பேசலாம். இவர் புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

மாதி: இவர் கொழும்பிலிருந்து வந்து இணைந்து கொண்ட இன்னொருவர். பின்னர் பண்ணை ஒன்றிற்குப் பொறுப்பாக இருந்தவர்.

பண்டிதர் : கம்பர்மலையைச் சேர்ந்த இவர் மிகுந்த தமிழுணர்வு மிக்கவர். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேச வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வமுள்ளவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைப் பேச்சுக்களின் போது காசியானந்தனுக்கு இரத்தப் பொட்டு வைத்தவர். இவர் இணைந்து கொண்ட காலத்திலிருந்தே பண்ணைகளில் வாழ்ந்தவர். மிகுந்த பொறுப்புணர்வு படைத்தவர். இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டவர்.

 

சுந்தரம்: சுழிபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் எளிமையான போராளி. காந்தீயம் அமைப்பில் அகதிகளுக்கான வேலைகளில் ஈடுபட்டவர். எப்போதும் அரசியலுக்காகவும் புலிகள் அமைப்பிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்தவர். தனக்காக எந்த வசதியையும் எதிர்பார்ப்பவரல்ல. இடதுசாரியான எம்.சி.சுப்பிரமணியத்தோடு தொடர்புகொண்டிருந்த சுந்தரம் பின்னதாக தேசியப் போராட்ட உந்துதலால் புலிகளில் இணைந்து கொண்டார்.புலிகளிலிருந்து விலகிய பின்னர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை பதிப்பித்திக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டவர் தலைமைப் பண்பு மிக்க போராளியான சுந்தரம் ஆயுதப் பயிற்சியிலும் திறமை வாய்ந்தவர். 1982 தை 02ம் நாள் யாழ் சித்திரா அச்சகத்தினுள் வைத்து பின்னிருந்து சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 

ரவி அல்லது பரா : புலோலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவராக இருந்ததால் பொலிசாரால் தேடப்பட்ட ரவி பின்னதாகப் புலிகளோடு இணைந்து கொண்டார். தேடப்படுகின்ற காலப்பகுதிகளில் டொலர்.கென்ட் பாம் போன்ற காந்தியப் பண்ணைகளில் தலைமறைவாக இருந்தவர். முத்தயன் கட்டுக் பண்ணைக்குரிய நிலம் ரவியினுடையதே. சண்டிலிப்பாயைச் சேர்ந்த ரவி இப்போது அன்னிய நாடொன்றில் வாழ்கிறார். உமாமகேஸ்வரனின் தொடர்புகளூடாக புலிகளில் இணைந்து கொண்டவர்.

மாத்தையா அல்லது சிறி : மிகவும் வறிய மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மாத்தையா பொலிகண்டி மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர். வறுமை நிழலோடு தனது பிள்ளைப் பருவத்தைக் களித்தவர் தற்பெருமையற்ற அனைவரோடும் சகஜமாகப் பழகவல்ல போராளி. வல்வெட்டித் துறையில் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை.

கிட்டு, பிரபாகரன் போன்றோர் மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள ஆயினும் மீன்பிடித் தொழிலை வாழ்கையாக கொண்டவர்களாக இல்லை பிரபாகரனின் தொடர்புகளின் ஊடாகவே புலிகளில் இணைந்துகொண்ட மாத்தையா பிரபாகரனின் அதீத மரியாதை உடையவராகக் காணப்பட்டார். மிகவும் விசுவாசமான உறுதிமிக்க போராளி. மாத்தையா அல்லது சிறி குறித்த விரிவான பதிவுகள் இன்னும் தொடரின் ஏனைய சம்பவங்களோடு வரும்.விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக 80 இன் இறுதிப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மாத்தையா பின்னர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டார்.

கிட்டு : இந்தியக் கடற்பரப்பில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட கிட்டு எம்மோடு பண்ணைகளில் வேலை செய்த இன்னுமொரு போராளி. இவர் துடிப்பான இளைஞன். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மத்தியதர வர்க்க சமூகப் பின்னணியைக் கொன்டவராகும். இவரின் நடவடிக்கைகள் காரணமாக நான் இவர் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இவரப் பண்ணையிலிருந்து வெளியேற்றிய சம்பவமும் எனது நினைவுகளுக்கு வருகிறது. பண்ணைகளில் வழங்கப்படுகிற உணவின் தரக்குறைவிற்காக எனையவர்களுடன் மோதிக்கொள்வார். ஒரு கால அட்டவணைப் படி ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் சமையல் வேலைகளில் ஈடுபடுவார்கள். பண்ணைகளில் நபர்களின் தொகையைப் பொறுத்து சில சமயங்களில் மூன்றுபேர் கூடச் சமையலில் ஈடுபடுவார்கள். இந்த வேளைகளிலெல்லாம் போராளிகளிடையே பிரச்சனை எழுவதும் அதனை சமாதானப்படுத்துவதற்காக எனது நேரத்தின் ஒருபகுதியைச் செலவிடுவதும் வழமையாக இருந்தது.

குமரப்பா : புத்தகங்களை வாசிப்பதும் புதியவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம்மிகுந்த எம் மத்தியிலிருந்த சிலருள் இவரும் ஒருவர். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தை முன்வைக்கும் திறமையுள்ளவர். பிரபாகரனது அதே உரைச் சேர்ந்த இவர் அவரை தனது ஊர்க்காரார் என்று கூடப்பார்க்காமல் விமர்சிப்பவர். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட வறிய குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் சிறையில் சயனைட் வில்லைகளை உட்கொண்டு தற்கொலைசெய்து கொண்டவர். புலிகளில் பிளவு ஏற்பட்ட வேளையில் எந்தப்பக்கமும் சாராது விலகியிருந்த குமரப்பா 83 இனப்படுகொலையின் பின்னரே மறுபடி புலிகளில் இணைந்து கொண்டார்.

சங்கர் : பண்டிதரின் ஊரான வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர்மலையைச் சேர்ந்த சங்கர் பண்டிதராலேயே புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர். உறுதியான போராளி. புலிகள் மீதான மிகுந்த விசுவாசத்தோடு செயற்பட்டவர். நிர்மலாவின் வீட்டிற்கு தகவல் சொல்லச் சென்ற வேளையில் இராணுவத்தால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டவர். பின்னர் இந்தியாவிற்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு மரணமானவர்.

காத்தான் : உமாமகேஸ்வரனுடைய தொடர்புகளூடாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கராத்தே பயிற்சிபெற்ற இவர் உடல் உறுதியும் மனோவலிமையும் மிக்கவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னதாக உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் அமைப்பில் இணைந்து கொண்டவர் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டவர்.

பீரீஸ் : வடமராட்சியைச் சேர்ந்த இவர் வள்ளிபுரம் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்து நிர்வகித்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்த பீரீஸ் புலிகள் பிளவுபட்ட போது இயக்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டவர்.இப்போது எங்கு வாழ்கிறார் எனத் தெரியவில்லை.

இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் தேசிய உணர்வு மிக்க உறுதிமிக்க போராளிகளாகக் காணப்பட்டனர்.

யோகன்(பாசி) : பண்டிதர் தான் இவ்வாறான போர்குணம் மிக்க ஒருவர் மட்டக்களப்பில் இருப்பதாக எங்களுக்குத் தெரியப்படுத்தினார். காசியானந்தனோடு இவருக்குத் தொடர்புகள் இருந்தது. காசியானந்னைத் தொடர்புகொண்டால் யோகனைத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிந்து கொண்டு அவரூடாக யோகனைத் தொடர்புகொண்டு இணைத்துக் கொள்கிறோம். நாகராஜாவும் உமாமகேஸ்வரனும் மட்டக்களப்பிற்குச் சென்று யோகனோடு இன்னும்  இருவரை சேர்த்து எமது பண்ணைகளுக்கு அழைத்து வருகின்றனர். மரைக்காயர், பவானந்தன்  ஆகியோரும் எம்மோடு இணைந்து கொள்கின்றனர். யோகன் பின்னர் புலிகளோடு தீவிரமாகச் செயற்பட்டவர். பவானந்தன் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிப் போனவர். ஏனைய இருவர் குறித்த தகவல்கள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
இதன் பின்பதாக காந்தன் இந்திரன் என்ற வேறு இருவரும் கிழக்கிலிருந்து எம்மோடு இணைந்து கொண்டனர். காந்தன் மிக உற்சாகமான போராளி புலிகளின் பிளவின் போது ஒதுங்கியிருந்தாலும் 83 படுகொலைகள் ஏற்படுத்திய உணர்வலைகளின் தொடர்ச்சியாக மறுபடிசென்று புலிகளோடு இணைந்துகொண்டவர்.

மனோ மாஸ்டர் : பண்ணைகள் விரிவiடந்த காலப்பகுதியில் எம்மோடு இணைந்து கொண்டவர்களுள் மனோமாஸ்டர் குறிப்பிடத் தக்கவர். பின்னதாக இவரின் விரிவான பங்களிப்பு விபரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மனோ மாஸ்டர் உறுதியான பொறுப்புணர்வுள்ள போராளியாகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகப் படிப்பை தொடராமல் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பண்ணைகளை நிர்வகிப்பதில் என்னோடு இணைந்து செயற்பட்ட இவர் திருகோணமலை,மட்டக்களப்புப் பகுதிகளின் பண்ணைத் தொடர்புகளை பேணுவதில் முக்கிய பங்கு வகித்தவர். கம்பர்மலையைச் சேர்ந்தவர்.

இவர் புலிகளில் இணைந்து கொண்ட சில நாட்களிலேயே மார்க்சிய நூல்களைப் படிக்குமாறு எமக்கு முதலில் கூறியவர். ஆளுமை மிக்க மனோமாஸ்டர் ஜெயாமாஸ்டர், ஜான் மாஸ்டர் போன்றோரோடு மார்க்சிய விவாதங்களில் ஈடுபடுவதாகக் எனக்குக் கூறியிருந்தார். 84 நான்காம் ஆண்டளவில் பிரபாகரனின் உத்தரவின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்.
 

ஜான் மாஸ்டர் : குமணனுடன் ஆரம்பத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர் பின்னதாக மனோமாஸ்டர் திருகோணமலைக்குச் சென்றுவரும் காலகட்டத்தில் அவரோடு அரசியல் ரீதியாகவும், நடைமுறை விடயங்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஜான்மாஸ்டர் மிகவும் உறுதியான மார்க்சியக் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டிருந்த போராளி. வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த கொண்டிருந்ததாக குமணன் கூறியிருக்கிறார்.பின்னதாக உமாமகேஸ்வரன் தலைமையிலான புளட் அமைப்பில் இணைந்து கொண்டவர்.

ஜெயச்சந்திரன் என்ற பார்த்தன் : பயஸ் மாஸ்டரின் வழியாக மார்க்சியக் கருத்துக்களில் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். புளட் அமைப்பில் இணைந்து கொண்டு அரச படைகளால் கொலை செய்யப்பட்டவர். ஆளுமை மிக்கவரென குமணன் கூறியிருக்கிறார்.
தவிர மைக்கல் மகேஸ் போன்றோர் திருகோணமலையைச் சேர்ந்த தொடர்பாளர்களாக இருந்தனர். கிழக்கு மாகாணத்தோடு எனக்குத் நேரடியான தொடர்புகள் இன்மையால் முழுமைப் படுத்தப்பட விபரங்களை அனுபவங்களூடாகத் தொகுக்க முடியாதுள்ளது.

 

நெப்போலியன் : புலிகளின் பிளவிற்குப் பின்னர் உருவான பாதுகாப்புப் பேரவை என்ற விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர் மிகுந்த ஆர்வமுள்ள போராளி. மனோமாஸ்டரின் தொடர்புகளூடாக வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுள் ஒருவர். ஈரோஸ் இயகத்தால் மலையகப் பகுதிகளில் நெப்போலியன் கொலை செய்யப்பட்டார்.
அழகன் என்ற ஒருவரும் நெப்போலியனோடு இணைந்து அழகனும் பாதுகாப்புப் பேரவையில் இணைந்தார். பாதுகாப்புப் பேரவைக்கு முன்னதாக இயக்கம் பிளவடைந்த வேளையில் புதிய பாதையில் இணைந்து செயற்பட்டனர். பாதுகாபுப் பேரவை முதன் முதலில் கிழக்கில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியழித்தது என்பதைக் குறிப்பிடலாம்.

அழகன் : முத்தயன்கட்டுப் பண்ணையிலிருந்து விவசாயத்தில் ஈடுபட்டார். அழகன் பாதுகாப்புப் பேரவையின் ஆரம்பகாலங்களில் மார்க்சிய நூல்களோடு கொழும்பிற்குப் பயணம்செய்த வேளையில் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்களை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரச படைகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவே அனைவரும் கருதுகின்றனர்.

இன்னும் வரும்…

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்த்து.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.
2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.

துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள்  என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.

இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்(இரண்டாம் பகுதி)

முள்ளி வாய்க்காலில் இல்லாமல் போன புலிகளின் தலைமையை உருவாக்குவதில் வாழும் சாட்சியான ஐயர் இங்கு மனம் திறந்து பேசுகிறார். நூலாக வெளிவரவிருக்கும் இந்த ஆவணச் சாட்சி இனியொருவில் வெளியாகும் இரண்டாம் பதிவு.

பகுதி  ஒன்றை வாசிக்க..

prabhakaran70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.

மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.

இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:

1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.

எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.

அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.

அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.

கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.

இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.

எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.

துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.

அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.

எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.

இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.

இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.

என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.

இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.

காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.

இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.

இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.

இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.

இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.

இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.

இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.

மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.

துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.

அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.

அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.

இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.

மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.

அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.

அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.
தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……

(மூன்றாம் பதிவு  சில நாட்களில்..)

குறிப்பு : இதனை இனொயொருவில் இருந்து ஏனைய இணையங்களில் மீள் பதிவிடுபவர்கள் கட்டுரைக்கான பின்னூடங்களில் பொறுப்புணர்வுடன் கட்டுரையை மேலும் முழுமையான ஆவணமாகச் செழுமைப்படுத்துமாறும், ஆக்கபூர்வமற்ற, மன உழைச்சலைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்ர்குமாறும் வேண்டுகிறோம்.

(இன்னும் வரும்…)

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்புவோம்.

 நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.

எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.

இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.

இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.

இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.

குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.

இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.

இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.

அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.

இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.

இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.

செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.

அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.

இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.

சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.

தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.

அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.

இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.

இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.
அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.

இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.

இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.

பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.

ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.

இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.

இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.

அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.

அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.
பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.

அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.

அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.

வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.

எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.

ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார். அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.

இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.
அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.

1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஐயரின் வரலாறுச் சாட்சி ஒவ்வொரு வார இறுதியிலும் இனியொருவில் பதியப்படும்…