சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும்  காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக  அரசாங்கம்  அறிவித்திருந்தது.

இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அரசாங்கத்தினால் இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பாடசாலைகளிலிருந்து உணவுகள் வழங்கப்படமாட்டாது என பாடாசலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் யுத்தம் இடம்பெற்றதால் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இம்மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வீட்டில் ஒழுங்கான உணவு வழங்கப்படுவதில்லை. சில மாணவர்களுக்கு வீட்டில் உண்பதற்கு உணவிருக்காது.

இவ்வாறான நிலையில், பாடசாலைகளில் வழங்கப்படும் இலவச உணவானது நிறுத்தப்பட்டு அதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியே காப்புறுதித் திட்டமாக  மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான உணவை நிறுத்தி, மாணவர்கள் நோயாளியாகும் பட்சத்தில் அவர்களுக்கான வைத்தியச் செலவுக்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

உயிர்வாழ அவசியமான உணவையே நிறுத்தி காப்புறுதித் திட்டம் வழங்கும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவால் பெருமளவு பாடசாலை மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதை மறுக்கமுடியாது.

அத்துடன், மாணவர்களை அரசாங்கமே நோயாளிகளாக்கி, அதில் ஆதாயம் பெறுகின்றது. இலவசம் என்ற பெயரில், பெரியதொரு கொள்ளையை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 30 விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு அண்மையில் முன்னாள் விடுதலைப் புலிகள் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும், அவரது பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் பின்னர் தற்போது உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில், தனக்கு மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும், வேறுபல அமைச்சர்களுக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளதுடன், தனக்கு மக்களினால் உயிரச்சுறுத்தல் ஏற்படவில்லையெனவும், கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளாலேயே உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு தொண்டு செய்வதற்கு இதயசுத்தியுடன் செயற்படும் எந்தவொரு அரசியல்வாதியும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பைக் கோரமாட்டார்கள் என்பதே நிதர்சனம். இலங்கையைப் பொறுத்தமட்டில், எந்தவொரு அரசியல்வாதியும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் பதவிக்கு வருவதில்லை. மாறாக தம்மையும், தமது குடும்பத்தினரினதும் நலன் கருதி, பணம், புகழுக்காக மாத்திரமே அரசியலுக்கு வருகின்றமை கண்கூடே.

ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு?

உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது.

தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது.

வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மறுத்துவருகின்றார். இதனையடுத்து ஆனந்த சங்கரிக்கும், சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பேச்சு இடம்பெற்றது.

சிவசக்தி ஆனந்தன் இணக்கம் தெரிவிக்காத நிலையில், கோபமடைந்த ஆனந்த சங்கரி, மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எந்தப் பிரச்சனையால் ஈபிஆர்எல்எவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியதோ, அதையே தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து சுரேஸ்பிரேமச்சந்திரன் செய்து வருகின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தமது சுயலாபத்துக்காகவே போட்டியிடுகின்றனர். இதில் சம்பந்தனுக்கு விதிவிலக்காக செயற்படுபவர்கள் எவருமேயில்லையென்பதே யதார்த்தம்.

 

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது.

இதில், தமிழரசுக் கட்சி சார்பாக இம்மானுவேல் ஆர்னோல்ட் மாநகர முதல்வர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்களைப் பயமுறுத்தும் வகையில் சிவசேனை மற்றும் இந்து சயம அமைப்புக்கள்  அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

அவ்வறிக்கையில், மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளர் தெரிவின்போது இந்துக்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்ள வேண்டும் என இந்து சமயப் பேரவை அறிக்கை வெளியிட்டிருந்தது.

சிவசேனை அமைப்பு சைவத்தையும், தமிழையும் காக்கும் வேட்பாளர்களுக்கு சைவ வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று துண்டறிக்கை ஒட்டியிட்டிருந்தது.

இந்தச் சிவசேனை அமைப்பானது, மும்பையிலிருந்து தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடித்ததுடன், தமிழர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கக்கூடாது எனவும், தமிர்களின் கடைகளை அடித்துடைத்து பல அட்டூழியங்களைச் செய்திருந்ததை யாரும் எளிதில் மறக்கமுடியாது.

இந்நிலையில், இந்த அமைப்பானது 2016ஆம் ஆண்டளவில் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டி அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் இந்தியாவின் றோ அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இதற்காக தமிழ் அரசியல்வாதிகளான மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைக் களமிறக்கியுள்ளது.

இவர்களால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி மதவெறியைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நியமித்துள்ளார்.

ஜீவன் எப்படி வட்டி அறவிடுகின்றார் என்பது பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜீவனின் கந்துவட்டி அறவீட்டில் தர்மபுரப் பிரதேசத்தில் இயங்கிவந்த கரிணிகா நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

2009ஆம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கந்துவட்டி காரணமாக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகியுள்ளார் கந்துவட்டிக் காரரான ஜீவன்.

அத்துடன், தர்மபுரத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள், காவல்துறையிடம் சிக்கும் பட்சத்தில் ஜீவனைத் தொடர்புகொண்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விசுவமடுப் பகுதியில் ஜீவன் என்பவரிடம் கடன் பெற்ற பலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அண்மையில் இவ்வாறு தலைமறைவாகியிருந்த ஒருவரை அழைத்துவந்த ஜீவன் அவருக்காக சாட்சிநின்ற வர்த்தகர் ஒருவரின் வீட்டினை அபகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கந்துவட்டி அறவிடுபவரும், பல சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோகும் ஒருவருமான ஜீவன் என்பவரை சிறிதரன் தர்மபுர அமைப்பாளராக நியமித்தமை அப்பகுதி மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மக்களுக்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்படவேண்டிய அமைப்பாளர்களைத் தவிர்த்து சட்டவிரோத செயற்பாடுகளிலும், கந்துவட்டி அறவிடுபவர்களுமே தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவது மக்களின் சாபக்கேடே.

என்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் – கைதுசெய்யப்பட்ட புளொட் உறுப்பினர் நீதிமன்றில் தெரிவிப்பு!

கடந்த வாரம் யாழ் நகரின் மத்தியில், புளொட் அமைப்பினரால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வீட்டிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவ்வீட்டில் தங்கியிருந்த புளொட் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய சிவகுமார் (பவுண்) என அழைக்கப்படும் குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது தன்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனத் தெரியப்படுத்தியுள்ளார்.

சிவகுமாரின் வாக்குமூலமானது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பயப்பீதியையும் உருவாக்கியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில், இராணுவத்துடன் இணைந்து இயங்கிவந்த ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்படும் ரெலோ, ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

இவ்வொட்டுக் குழுக்களால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல குற்றச்செயல்கள் யாழ். நகரம் உட்பட வட கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

யுத்தம் நிறைவடைந்தபின்னர் இவ்வாறான ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மீளப் பெறப்பட்டன.

இந்நிலையில், புளொட் அமைப்பின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், சில ஆயுதங்கள் ஒப்படைக்கவில்லையெனவும், அவ்வாறான ஆயுதங்கள் அனைத்தும் தான் தங்கியிருந்த வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் சிவகுமார் எனப்படும் பவுண் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புளொட் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கும் பவுண் என அழைக்கப்படும் சிவகுமாருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும், இவர் யாழில் நடைபெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாகவே அவர் ஆயுதங்களை வெளிப்படையாக அலுமாரியில் பூட்டி வைத்திருந்ததாகவும், இந்த ஆயுதங்கள் தன்னிடமிருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

எனினும், சிவகுமாரிடம் நடத்தப்படும் முறையான விசாரணையின்மூலமே, யாழ். குடாநாடெங்கும் நடைபெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்கள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.

இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு உட்படும் போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுகிறது. இன்றைய இலங்கை அதிகாரவர்க்கத்தின் உள் முரண்பாடுகளைக் கையாளவும், இலங்கை முழுவதும் வெறுப்படைந்திருக்கும் சிங்கள உழைக்கும் மக்களைத் திசைதிருப்பவவும் பேரினவாதம் இழையோடும் அரச அதிகாரம் திடீரெனத் தீவிரமடைகிறது.

யாழ்ப்பாணத்தின் முற்றவெளிக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. 1977 ஆம் ஆண்டு முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கார்னிவெல் நிகழ்வில் பொதுமக்களால் அத்துமீறிய சிங்கள போலிஸ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்தியதில் 4 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

1974 ஆம் ஆண்டு முற்றவெளிக்கு அருகில் தமிழாராச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட மக்கள் தேசிய இனப்பிரச்சனையின் மற்றொரு குறியீடு.

இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் முற்றவெளியைச் சமூக அக்கறையுள்ளவர்களின் ஈர்ர்பு மையமாக மாறியுள்ளது.

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் நாள் கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா். யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் கடந்த 19ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இவரின் பூதவுடல் விசேட உலங்குவானூர்திமூலம் விகாரைக்கு எடுத்துவரப்பட்டு, முற்றவெளியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது.

முற்றவெளி அலங்கரிக்கப்பட்டு மரணச்சடங்குகளுக்கான ஆரம்பவேலைகள் பூர்த்தியாக்கபட்டுள்ளது. முற்றவெளி மையனம் அல்ல. பௌத்த துறவியை அடக்கம் செய்த பின்னர், வரலாற்றுப் பெருமைகொண்ட முற்றவெளியின் ஒரு பகுதி பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக்கப்படும்.

பேரினவாதத்தை எவ்வாறு தமிழ் வாக்குகளாகவும் சிங்கள வாக்குகளாகவும் மாற்றிக்கொள்வது என தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிடுவதை மட்டுமே இன்றைய இலங்கையின் அரசியலின் அவலக்குரலாகக் காணலாம்.

தமிழ் இனவாதத்தை வாக்குகளை நோக்கமாகக் கொண்டு தூண்டாமலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு வாய்ப்பளிக்காமலும் இப் பிரச்சனையைத் தொலை நோக்கோடு அரசியல்வாதிகள் அணுகுவது மட்டுமல்ல, மக்களை அணிதிரட்டி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்தால் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான குரலை வலுவாக்க முடியும்.

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவர் வலிகாமம் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளார். வலிகாமம் பிரதேசத்திலிருந்து வலிகாமப் பிரதேச தவிசாளர் சுகிர்தன், உபதவிசாளர் சஜீவன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வடக்கில் தமிழ் அரசியல் வாதிகள் தாம் பதவிகளை வகிக்கும்போதே தமது பிள்ளைகளையும் அரசியலில் களமிறக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் கல்வி கற்றுவந்த மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது யாழிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், யாழின் வலிகாமப் பிரதேசத்தில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அத்தொகுதியில் மாவை சேனாதிராஜாவின் மகனை போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே களமிறக்கியுள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறுமிடத்து வலிகாமம் பிரதேசத்து உப தவிசாளராகப் பதவி வகிக்கும் சஜீவன் அப்பதவியிலிருந்து அகற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், அண்மையில் யாழிற்கு வருகை தந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் மாவை சேனாதிராஜா வெளிவிவகார அமைச்சில் வேலையொன்றை ஒழுங்குபடுத்தித் தருமாறு கோரியிருந்த நிலையில், அவருக்கு தான் வேலை பெற்றுத் தருவதாக மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றபின்னர் மக்களைப் பற்றிச்சிந்திப்பதேயில்லை. இவர்களை தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது மக்களின் சாபக்கேடன்றி வேறல்ல.